மும்பையில் நடைபெற்ற எல் & டி நிறுவனத்தின் நேர்முகத்
தேர்வில் வெற்றி பெற்றவுடன் வானில் மிதந்தேன்.
நான் மார்க்கெட்டிங் (M.B.A) படித்தவன். பொறியியல்
படித்தவனில்லை. என்னுடைய முதுநிலை படிப்பை
முடித்தவுடன் ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தேன்.
என்னுடைய இளநிலை படிப்பு கெமிஸ்ட்ரி என்பதால்
மருந்துப் பொருட்களின் சூட்சமத்தை என்னால் நன்கு
புரிந்து கொள்ள முடிந்தது. பணியில் சேர்ந்து 7
வருடங்களிலேயே கிடுகிடுவென முன்னேற முடிந்தது.
ஆங்கிலத்தில் the bolt from the blue என்பார்கள். அதுபோல,
சிறிதும் எதிர்பாராத விதமாக நான் பணிபுரிந்து வந்த
பன்னாட்டு நிறுவனத்தை, அதை விடப் பல மடங்கு
பெரிதான வேறொரு பன்னாட்டு நிறுவனம் உலக அளவில்
விலைபேசி வாங்கிவிட்டது.
வாங்கிய நிறுவனத்தின் மீது எனக்கு அவ்வளவு நல்ல
எண்ணம் கிடையாது. காரணம், நல்ல சம்பளம்
கொடுத்தாலும், ஊழியர்களை அடிமைகளைப் போல நடத்தி
வேலை வாங்குவதில் விற்பன்னர்கள் தான் அங்கு அதிகம்.
எனவே, வேறு வேலை முயற்சித்தேன்.
எதிர்பாராத விதமாக, இந்தியாவின் முன்னணி
நிறுவனமான எல் & டி (L & T) யில் சேல்ஸ் & மார்க்கெட்டிங்
பணியில் அனுபவம் வாய்ந்தவர்களை வேலைக்கு
எடுக்கிறார்கள் என்று ஹிந்துவில் வந்த விளம்பரத்தைப்
பார்த்த என் மனைவி சொல்லவே, உடனே என்னுடைய
விபரங்களை அனுப்பி வைத்தேன்.
ஒரு சில மாதங்கள் சென்று எதிர்பாராமல் எனக்கு நேர்முகத்
தேர்வு மும்பையில் நடப்பதாகத் தகவல் வந்தது.
எனக்கு இருந்த ஒரே உதறல் அந்த நிறுவனத்தில் தென்
இந்தியாவில் காலியிடம் இருக்க வேண்டுமே என்பதுதான்.
பள்ளி / கல்லூரி எல்லாவற்றிலும் தமிழையே முதல் பாடமாக
படித்திருந்தேன்.எனவே ஹிந்தி சுத்தமாகத் தெரியாது. எல் &
டி அலுவலகத்தில் வேலை கொடுத்தால் “ஹிந்தி தெரியாது
போடா” என்று சொல்ல முடியாது.