அந்த ஊர் சென்ட்ரல் ஜெயிலின் காம்பௌண்டு சுவரில் உங்கள்
கட்டைவிரல் நுழையுமளவு ஒரு துவாரம் இருக்கிறது. ஆயுள் தண்டனை
அடைந்திருந்த நான்கு கைதிகளும் அதன் வழியாகத்தான் அந்த
ரேணுகாவை முதன்முதலில் பார்த்தார்கள்.
கடந்த ஏழு வருடங்களாக அந்தத் துவாரம் இருக்கும்
பகுதியில்தான் அவர்களுடைய வியர்வைக்கு நெல்லும், வாழையும்,
கரும்புமாக நிலமகள் திறை செலுத்தி வருகிறாள். ஐந்து
வருடங்களுக்கு முன் ஒருநாள் மத்திய வேளையில் அவர்களில் ஒருவன்
கொஞ்சம் ஓய்வாகக் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கொண்டிருந்தான்.
அதற்கு முந்திய நாளில் அவரது கணுக்காலில் விழித்திருந்த ஒரு
புண்ணில் புலி உருமிக் கொண்டிருக்கவே தொடர்ந்து வேலை செய்ய
அவனால் முடியாமல் போயிற்று. ஒரு குச்சியினால் நிலத்தில்
படிந்திருந்த தன்னுடைய நிழலின் தலையைக் குத்திக் கிளறிக்
கொண்டிருந்தான் அவர்களில் ஒருவன். அப்பொழுதுதான் சுவரில்
இருந்து துவாரம் ஒருவன் கண்ணில் பட்டது. அந்தத் துவாரத்தை ஒரு
சிறிய கல் அடைத்திருந்தது. குச்சியினால் அதை அகற்றி எடுத்து
அவன் அந்தத் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தபோது,
ரேணுகா தன்னுடைய பெட்டிக் கடையில் பொன்மயமான
கைகளால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த
கைதிக்குக் குஷி பிய்த்துக் கொண்டது. தன் தோழர்களிடம் ஓடினான்.
இடது புறத்தில் ஓலைத் தடுக்களால் ஆன குளியல் அறை,
வலதுபுறத்தில் ஒரு சின்ன மல்லிகைப்பந்தல். பெட்டிக்கடை. வீட்டின்
பக்கவாட்டில் பார்த்த போது வீட்டில் ஒரு கிழவி காவி நிறச்
சேலையொன்றில் சுருண்டு கிடந்ததை அவர்கள் பார்த்தார்கள்.
அந்தத்துணியும், கிழவியும் பிரிக்க முடியாத கந்தையாகக்
கலந்திருந்தார்கள். அந்தக் கிழவிதான் ரேணுகாவுக்கு ஒரு வயதான
துணையாக இருக்க வேண்டும் என்று சுவருக்கு இந்தப் புறத்தில் ஊகம்
பிறந்தது.
முதலில் சில சந்தர்ப்பங்களில் கிடைக்கும் ஓய்வு நேரத்தைச்
செலவழிக்க பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. அதன்பின்னர்
ஆறு மணிக்கு எழுந்தவுடன் அறையிலிருக்கும் சட்டையைச் சுத்தம்
செய்வதுபோல நசுங்கிப்போன ஈயத்தட்டில் களி உருண்டைகளை
வாங்கக் கியூவில் நிற்பதைப் போல சாயங்கால வேளைகளில் பெரிய
கடலை உருண்டைகளை அமைதியாகத் தின்று கொண்டே அறைக்குத்
திரும்புவதைப் போல பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை
மொட்டையடித்துக் கொள்வதைப்போல அந்தச் செயலும்
வாழ்க்கையின் இயற்கையான அத்தியாவசியமாகிப் போயிற்று
அவர்களுக்கு!
அவர்கள் பார்த்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே
ரேணுகாவுக்கு கல்யாணம் நடந்தது. அன்று காலை எட்டு மணி அளவில்
அவர்களில் ஒருவன் பார்த்தபோது அந்தச் சிறிய வீடு எளிய
உறவினர்கள் பத்துப் பதினைந்து பேரால் நிரம்பி வழிந்தது. அந்த
உறவினர்கள் உரக்கப்பேசி சிரித்தபோது தான் குட்டி கேரளாவைச்
சேர்ந்த பெண் என்று தெரிந்தது. துவாரம் வழியே நடக்கும்
நிகழ்ச்சிகளைக் கண்காணித்துக் கொண்டும் வேலை செய்யும் மற்ற
மூவருக்கும் அதை ஒலிபரப்பிக் கொண்டும் இருந்தான் அவர்களின்
ஒருவன்.
ரேணுகா ஏற்கனவே அழகி. ஒளிர்விடும் நட்சத்திரம் மாதிரி
இருந்தாள் அவள். கல்யாணம் நடந்துவிட்ட பின்னர் ரேணுகா இன்னும்
மெருகேறி ஜொலித்தாள். அடுத்த நாள் காலையில் அவர்கள்
பார்த்தபோது உறவினர்கள் எல்லாம் போயிருந்தனர். கிழவியையும்
காணோம். அதற்குப் பதிலாகச் சிவப்பாக ஒரு மெலிந்த இளைஞன்.
அவள் கணவன் திண்ணையின் தூணுக்கருகில் நின்று கொண்டிருந்த
ரேணுகாவிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான்.
அந்த நான்கு கைதிகளும் ஒரு வங்கி கொள்ளை வழக்கில்
கைதாகி சிறை புகுந்தார்கள். அயல்நாட்டு பத்திரிகைகளில் எல்லாம்
அவர்கள் நடத்திய திருட்டைப் பற்றி செய்தி வருமளவு ஒரு பெரிய
சாதனையையே திட்டம் போட்டு சாதித்துள்ளார்கள். ஆனால்
கடைசியில் அவர்கள் செய்த ஒரு சிறிய தவறினால் சிறைபட்ட போது
நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை அளித்தது என்று சொல்வதை
விடத் தங்களுடைய தவறுக்குத் தாங்களே தண்டனை அளித்துக்
கொண்டார்கள் என்று சொல்லலாம் என்கிற அளவுக்கு அவர்கள்
அவ்வளவு சுகமாக சிறைவாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்கள்.
காலை ஆறு மணிக்குச் சாப்பாடு முடிந்து, வேலை செய்யும்
இடத்திற்கு வந்தவுடன் அவர்களில் ஒருவன் துவாரத்தின் வழியாகக்
ரேணுகாவின் வீட்டைப் பார்ப்பான். கதவு திறந்திருக்கும் ஓலைத்
தடுப்புக்குப் பின்னால் ரேணுகா குளித்துக் கொண்டிருக்கும் சத்தம்
மெல்லியதாய்க் கேட்கும். அவள் குளித்து முடித்துவிட்டு ஈரச்
சேலையுடன் அறைக்குள்ளே நுழையும்போது அவளது கணவன்
எதிர்படுவான். மனைவியின் அழகை சுவைத்து ஒரு மெல்லிய
சிரிப்புடன் திண்ணைக்கு வந்து உட்காருவான்.
ஐந்து நிமிடங்களில் ரேணுகா காப்பியுடன் வெளியே வருவாள்.
அங்கே வந்து நீட்டும்போது அவன் எதிர்பாராதவிதமான அவளை
அணைத்துக் கொள்வான். காப்பி இருவர் மேலும் சிதறும். அவள்
அழகாகக் கோபித்துக் கொள்வாள். சிரித்தவாறே முதலில் அவளைக்
காப்பியை உறிஞ்ச வைத்துப் பிறகு அவன் குடிப்பான். அவள்
மலையாளத்தில் ஏதோ முணுமுணுப்பாள்.
அந்த அமைதியான குடும்ப வாழ்க்கையைத் தரிசித்துக்
கொண்டிருந்த கைதி அதை மற்ற மூன்று தோழர்களுக்கும் சொல்லித்
தன் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்வான். ரேணுகாவுக்குத்
தெரியாமலேயே அவளது வீட்டு வாழ்க்கையும், சிறைச்சுவருக்கு
அந்தப்புறத்தில் நீளமாக வளர்ந்து கொண்டிருந்தது. கைதிகள் நான்கு
பேரும் அமைதியானார்கள். அவர்கள் யாருடனும் சண்டை
போட்டுக்கொள்ளமாட்டார்கள்.
ஒருநாள் தட்டுடன் கியூவில் நின்றிருந்தபோது பின்னால் சில
குறும்புக்காரர்கள் நெருக்கித்தள்ள முன்னால் நின்றிருந்த நான்கு
பேரில் ஒருவன் எலும்பும் தோலுமாய் வற்றிக் கிடந்த இன்னொரு
கைதியின் மேல் விழுந்துவிட்டான். அந்த வற்றிய கைதி ஆபாசமான
வார்த்தைகளால் திட்டிக் கொண்டே படாரென்று அவனை அறைந்து
விட்டான். மற்ற கைதிகள் எல்லார் வார்டரிடம் இதை புகார்
செய்யுங்கள் என்று சொன்னபோது அறை வாங்கியவனும், மற்ற
மூன்று பேரும் ஒன்றும் பேசாமல் தங்களுக்குள் மெலிந்த கைதிகளைப்
பார்த்தவாறு ஏதோ சொல்லி கர்த்தரே இவர்கள் அறியாமல் ஏதோ
செய்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள் என்னும் பாணியில்
சிரித்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
ரேணுகாவுக்குக் குழந்தை பிறந்தபோது சிறைச் சுவருக்குப்
பின்னால் ஒரு தூய்மையான சந்தோஷம் நான்காய்ப் பிரிந்து நாலு
இதயங்களிலும் படிந்தது. அன்றைக்கு இரவில் தங்கள் அறையில்
அந்தக் குழந்தைக்கு என்னபெயர் வைக்கலாம் என்று ஒவ்வொருவனும்
யோசித்து ஒன்றைச் சொன்னபோது மற்ற மூன்று பேரும் மெல்லிய
குரலில் அவனைக் கேலிசெய்து சிரித்தார்கள். அநேகமாக அவர்கள்
சிரிப்பது கிடையாது. அப்படிச் சிரித்தால் அந்தச் சந்தோஷம்
பிரம்மாண்டமாயிருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு சிரிப்புமே முதல்
வாயில் ஆரம்பித்து நாலாவது வாயில்தான் முடியும். ரேணுகா
குழந்தையைக் காலில் போட்டுக்கொள்வாள். அவள் கணவன்
தினந்தோறும் செம்பில் தண்ணீர் மொண்டு ஊற்ற, அவர்கள் இருவரும்
குழந்தையைக் குளிப்பாட்டுவார்கள். இரவு நேரங்களில் அந்த நான்கு
பேரில் இருவர் அந்தக் காட்சியை சிரிப்பை அடக்கிக்கொண்டு
அபிநயித்துக் காட்ட மற்றவர்கள் சிரித்துக் கொள்வார்கள். சில
இதயங்களுக்கு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கூட வாழ்க்கை
வெள்ளை வெளேரென்று தெரியும் போலும்.
அவர்கள் நால்வருமே 33 லிருந்து 37 வயதிற்குட்பட்டவர்கள்.
இருவருக்கும் முன்புறம் நரைத்திருந்தது. அவர்களுடைய மௌனமான
போக்கு, பல கைதிகளிடத்தில் அன்பையும் ஏற்படுத்தியிருந்தன.
வார்டர் 40 வயதான ஒரு ஜாலியான பேர்வழி. சில சமயங்களில்
அவருக்கு ஏதாவது மகிழ்ச்சிகள் ஏற்படும்போது, அவரது மூத்த மகன்
எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் ஆனபோது மகளுக்கு கல்யாணம் நிச்சயமான
போது, சீட்டுப் பணம் அவருக்கு கிடைத்தபோது அவர்கள் அறைக்கு
விரைந்து வந்து தன் மகிழ்ச்சியை விவரித்துவிட்டு இந்தாங்கடா
குடிச்சிட்டு போங்கடா என்று தாராளமாக ஒரே ஒரு பீடியை மட்டும்
எறிந்து விட்டுப்போவார். அவர்கள் நால்வரும் ஒரே பீடியை வாய்
மாற்றி மாற்றி சுவைத்துக் கொள்வார்கள். அங்கு நட்பு என்ற ஒற்றைச்
சொல்லுக்குக் கனம் அதிகமாகத் தெரியும். அந்த பீடி மாதிரியே எல்லா
உணர்ச்சிகளையும் நான்காகப் பங்குபோட்டே அவர்கள்
அனுபவித்தார்கள்.
மூன்று குழந்தைகளுக்குப் பின்னர் ரேணுகா விதவையானாள்.
அந்த நாள் அவர்கள் நினைவிலிருந்து என்றுமே அழியாது. ஒருவாரமாக
அவர்கள் வேறொரு பகுதியில் வேலை செய்ய நியமிக்கப்பட்டதால்
அந்த நாட்களில் ரேணுகாவை அவர்களால் பார்க்க இயலவில்லை. ஒரு
வாரம் கழித்து அவர்கள் ஆவலுடன் துவாரத்தின் வழியே பார்த்தபோது
ரேணுகாவின் வீடு எளிய பத்துப் பதினைந்து உறவினர்களால் மூன்று
வருடங்களுக்கு முன்னால் இருந்த மாதிரி நிறைந்திருந்தன. ஆனால்
இப்பொழுது அது சாவு வீடு. சோகம் அடித்துப் போட்டிருந்த முகங்கள்.
ரேணுகா கண்ணில் வந்தால்தான் கண்ணீரா? அதோ அவனது
தொண்டையில் விம்மி வழிகிறதே.
அவர்கள் அமைதியாக உள்அழுகை அழுதார்கள். சில நாட்களில்
ரேணுகா கைக் குழந்தையோடு தூணுக்கு அருகில் வந்து நின்றாள்.
துயரம் அவளைப் பிழிந்து கண்ணீரில் ரசமெடுத்தது. ரேணுகா
பழையபடி பெட்டிக்கடையில் அமர்ந்து வியாபாரம் செய்தாள். ஆனால்
இப்பொழுது வெள்ளையுடையும் வேதனை முகமாக இருந்தாள்.
சிறைக்கு இந்தப் புறத்தில் அவளுக்குத் தெரியாமலேயே அவளது
சோகங்களும் கண்ணீர்த் துளிகளும் தெரித்து விழுந்தன.
வாழ்க்கை மௌனமான அழுகையானது. இரண்டு நாட்களுக்கு
முன் துவாரத்தின் வழியே ஓர் இடி விழுந்தது. கடந்த ஆறு
மாதங்களாகவே ரேணுகாவின் ஆதரவற்ற நிலையைப் புரிந்து
கொண்டோ என்னவோ, ஒரு வாலிபன் கட்டம்போட்ட பனியனோடும்
நீண்ட மெல்லிய மீசையோடும் வந்து அவளிடம் அடிக்கடி அவனது
பார்வையை இங்கிருந்து பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தன.
ரேணுகா அவனைத் தவிர்க்க முடியாமல் தவிர்த்தாள். நான்கு
கைதிகளுக்கும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் வெறுப்பும்,
கோபமும் அடிவயிற்றில் புறப்பட்டுக் கொண்டே மேலேவரும்.
ஒருவாரத்திற்கு முன் ஒருநாள் குழந்தைகள் கடைக்கு முன்னால்
விளையாடிக் கொண்டிருந்தார்கள். மத்தியானச் சாப்பாட்டை முடித்து
விட்டு ரேணுகா கதவை சாத்திக் கொண்டிருந்தபோது பின்புறத்தில்
அவன் வருவதை அவள் உணர்ந்தாள். அவன் சாராயம் குடித்திருப்பான்
போலிருக்கிறது. நடை தள்ளாடியது. முன்னேறிப் போய் ரேணுகாவின்
கையைப் பிடித்தான். அவள் முகத்தில் பீதி படர அலற முயன்றபோது
அவனது கைகள் அவளுடைய வாயை அடைத்தன. இத்தனையும்
அந்தத் துவாரத்தின் முன்னால்… அவர்கள் துடித்தார்கள், ஆத்மாவும்
கோபமும் எவ்வளவு நீளமாயிருந்து என்ன பயன், கை எட்ட
வேண்டுமே?
அவள் அறையின் உற்புறத்தில் ரேணுகாவைத் தள்ளினான்.
நான்கு பேரின் ஆவேசத்திற்கும் ஏற்றாற்போல் கைகள் இருந்திருந்தால்
அந்தச் சுவர் இடிந்து போயிருக்கும். உடலுக்கு கரங்கள்
கொடுத்திருப்பதற்குப் பதிலாக உணர்வுகளுக்கும் கரங்கள்
அளித்திருக்கக்கூடாதா அந்தப் பாழாய்ப்போன கடவுள்.
தங்களுக்கு முன்னாலேயே விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு
பெண்மை இன்று தங்களின் முன்னிலையிலேயே படிப்படியாக
அலங்கோலமாக்கப்படுவதை அவர்களால் சகித்துக் கொள்ள
முடியவில்லை. ஆனால் முடிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர்கள் காலையில்
பார்த்தபோது சிறிதே திறந்திருந்த கதவின் வழியே தொங்கிக்
கொண்டிருந்த ரேணுகாவின் கால்கள் மட்டும் வாடிப்போன பூக்கள்
மாதிரி தெரிந்தன. ஆமாம் உண்மையிலேயே ரேணுகா
அழகானவள்தான். செத்தபின்பும்கூட.
ஒரு வாரத்திற்குப் பின்னால் கட்டம் போட்ட பனியனோடும்
நீண்ட மெல்லிய மீசையோடும் பிக்பாக்கெட் வழக்கில் பிடிபட்டு ஒரு
வாலிபன் ஒரு போலீஸ்காரர்களுக்கிடையே ராஜா மாதிரி சிறை
பாதையில் நடந்து வந்தபோது நான்கு பெரிய கற்கள் பாதையின்
ஓரத்தில் இருந்த நெற்காட்டிலிருந்து புலிகள் மாதிரி பாய்ந்து வந்து
அவன் மண்டையைச் சரியான கோணத்தில் அடித்துப் பிளந்தன.
ரத்தமின்றி, சத்தமின்றி அவன் செத்துப் போனான்.
நான்கு கைதிகளும் அனாதைகள். அவர்களில் யாருக்கும்
குழந்தைகளோ, மனைவியோ, சகோதர, சகோதரியோ கிடையாது.
இப்பொழுதும் அவர்கள் பழையபடி அமைதியான போக்குடனேயே
இருக்கிறார்கள். ஆனால் ஆயுளை தண்டனை செல்லில் இருந்து
தூக்குத்தண்டனை செல்லுக்கு மாறியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.