“என்ன மீனா நம்ம ஆஃபீஸ்_லயே நீதான் ரொம்ப fast_ ஆன type writer_ஆம்? அதிலேயும், டிவோர்ஸ் நோட்டிசிக்கு இன்னும் ஃபாஸ்டராமே, உனக்கு கூட நீயே தான் டைப் பண்ணிகிட்டியாமா…….!”என்று சுதா கிண்டலும் கேலியுமாக சொல்ல மீனாவுக்கு அவளை அறியாமலேயே கோவம் வருவதை கண்ட யமுனா, “இதோ பஸ் வந்துருச்சு, bye சுதா,மறக்காம நான் சொன்ன ஃபைல்_அ எடுத்துக்கிட்டு வந்துரு bye..”என்று கூறிவிட்டு யமுனாவும் மீனாவும் பேருந்தில் ஏறி கிளம்பினர்.
நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடனேயே,கைப்பையை வேகமாக அங்கிருந்த சாய்வு நாற்காலியின் மீது தூக்கி எறிந்துவிட்டு படுக்கை அறைக்கு சென்று விட்டாள், மீனா.
பழைய நினைவுகள் நெஞ்சோடு வந்து வந்து சென்றது.
“என்னங்க இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க….”
“என் அன்பு காதலனே,
மாலை சூடிய மணவாளனே,
ஈன்றவர்கள் பார்த்த ஐயனே,
இந்த மீனாவுக்கு ஏற்றவனே“.
என்று அடிக்கடி பேசி கொண்ட காதல் கவிதை நெஞ்சோடு உருண்டு கொண்டிருந்தது.இதை நினைக்கும் பொழுது அழுவதா இல்லை சிரிப்பதா என்று அவளுக்கே தெரியாமல் குழப்பத்துடன் இருந்தாள்.இரவு உணவு உண்ணாமல் அப்படியே உறங்கி விட்டாள் மீனா. ‘அலுவலம் விட்டா வீடு’,’வீடு விட்டா அலுவலகம்’ என்று இரண்டு மாதங்கள் ஓடியது.
ஒரு நாள், அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பியவள் அவள் அக்கா பவளம், மேசையின் மீது வைத்திருந்த மதிய உணவு டப்பாவை கூட எடுக்காமலேயே பேருந்து நிறுத்தத்துக்கு சென்று விட்டாள். நெஞ்சுக்குள் ஆனந்தத்தின் சத்தம், பக்கத்தில் கணவன் முத்துசெல்வன் இருந்ததனால். நீதிமன்றத்திற்குள் மிகுந்த அமைதி, நீதிபதி குமாரசாமி ஐயாவின் வருகையினால்.
நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பம் ஆனது. ஊழியர்,”வழக்கு எண் 20 கீழ் 10(20/10) மனுதாரர் மீனா,மீனா,மீனா” என்று மீனாவை அழைத்த பின்னர், முத்துசெல்வனையும் அழைக்கிறார்.
நீதிபதியின் முன் நின்றவர்கள்,” நீங்கள் இருவரும் இதற்கு முழு மனதாக தானே சம்மதம் தெரிவிக்கிறீர்கள்” என்று நீதிபதி கேட்க, “‘ஆமாம் ஐயா’, நாங்கள் இனி பிரியவே மாட்டோம்” என்று கூறி இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர்.
நீதிமன்றத்திற்க்கு வெளியே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.கண்கள் பேசின.
“இன்னிக்கு காலேஜ் முடிச்சதும் நாம தியேட்டருக்கு போகலாம்”.
“ஹம்ம்……சரி பாக்குறேன்”.
“அதலாம் தெரியாது என்ன கூட்டிட்டு போகணும் அவ்ளோதான் சொல்லுவேன் ஆமா….”
மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த முத்துசெல்வன்,தாயாரை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்றான். மீனாவுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது.”எதுக்குமா இப்ப சந்தைக்கு போரோம் ?”என்று அவன் கேட்க,”மீனாவுக்கு புடிச்ச காய் எதுவும் இல்ல, வீட்டுக்கும் மளிகை பொருட்களை எல்லாம் கையோட வாங்கிட்டு போயிடலாம்..” என்றாள், அவன் அம்மா.ஒரு நாள்,அவள் சமைத்த உணவை உண்ணாமல், தாயார் சமைத்த உணவை உண்டு கொண்டிருந்தான் முத்து. தன் கோவத்தை கட்டுபடுத்த முடியாமல், “‘உனக்கு நான் முக்கியமா இல்லை உங்க அம்மா முக்கியமா?‘,’நான் சொல்ற வேலைய நீ எனக்காக செஞ்சிருக்கியா?’ ‘உனக்கு உங்க அம்மா மட்டும் தான் முக்கியம் இல்லை?'” என்று தாறுமாரான கேள்விகளை விடுத்தாள். அவனும் ஆத்திரத்தில் திட்டி விட்டுட்டான். கோவத்தில் வீட்டை விட்டே மீனாவும் கிளம்பினாள்.
ஒரு மாதம் கழித்து விடுதலை பத்திரம் அனுப்பினாள்.அதற்கடுத்த வாரத்தில், முத்துசெல்வனும் அவன் தாயாரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவள் கேட்கவில்லை.இரண்டு முறை நீதிமன்றத்திலும் சம்மதம் தெரிவிக்கவில்லை.பின்பு,திடீரென்று ஞானோதயம் பிறந்தவலாக தன் தவறை உணர்ந்த பின்பு, ஒரு நல்ல முடிவை எடுத்தாள், மீனா.
“இனி நான் உனக்கு நல்ல கணவனாக இருப்பேன்,என்னை விட்டு போயிடாத மீனா”, என்று அவன் சொல்ல, “அப்படி சொல்லாதீங்க” என்று இவள் சொல்ல, இருவரும் அன்பை பரிமாறுகையில், அவன் தாயார் அருகில் வந்து ,கையில் இருந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை கொடுத்து இருவரையும் திரையரங்கத்திற்க்கு அனுப்பி வைத்தாள். செல்லும் வழியில் வெடி போன்ற சத்தம். மீனா,முத்து இருவரும் இரு திசைகளில் விழுந்து இருந்தனர்.முத்துவை கண்ட மீனா கதறுகிறாள்.எழுப்பி பார்க்கிறாள். அவன் கண் விழிக்கவுமில்லை, ஓசையுமில்லை,மூச்சும் இல்லை.மீனா உறைந்து போய் நின்றாள்.பக்கத்தில் ஒரு துண்டு பிரசங்கம்,
“நம்முடன் இருப்பவர்களை வாழும் பொழுதே புரிந்துகொண்டு வாழுங்கள்“.
*****
அவளுக்கு இறைவன் வழங்கிய விடுதலைப் பத்திரம்.