“நல்லா யோசிச்சு சொல்லுங்க, நான் நிச்சயமா உங்க காலேஜ் ரீயூனியனுக்கு வரணுமா?” என்றாள் விமலா.
ஞாயிறு மதியம் உணவு மேசை. விமலா சுடச்சுட செய்திருந்த அருமையான வெஜிடபிள் பிரியாணியும் சில்லென்ற வெங்காய பச்சடியும் உள்ளே போகப்போக ஒரு விதமான கிறக்கத்தில் இருந்தேன்.
“ஆமாம் விமலா. எல்லோருமே குடும்பத்தோட வரதாதானே பிளான் பண்ணி இருக்கோம். அப்புறம் அப்பதானே நான் உனக்கு…” குழந்தைகள் எதிரில் இருப்பதை உணர்ந்து கிறக்கம் தெளிந்து அப்படியே நிறுத்தி விட்டேன்.
“அப்பதானே நான் உனக்கு…, சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க?”
நான் என்ன சொல்ல வந்து இருப்பேன் என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள். அவள் குரலில் எட்டிப்பார்த்த கேலி அதை உணர்த்தியது. ராட்சசி. இருந்தாலும் நான் சமாளிக்க வேண்டுமே.
“இல்லம்மா, அப்பதானே உனக்கு என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்க முடியும்னு சொல்ல வந்தேன்”.
“அப்படியா, ஆனா உங்களுக்கு இருக்கறது அஞ்சு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எல்லாரும் இங்கதான் இருக்காங்க. மாசத்துக்கு ஒருமுறை ஏதாவது காரணம் வச்சு சந்திக்கிறீங்க. பிறகு வேற யாரை அறிமுகப்படுத்தி வைக்க போறீங்க?”
இப்போது அவள் குரலில் சர்வநிச்சயமாக என்னை சீண்டுவதற்கான எல்லா அறிகுறிகளும்
தெரிந்தன.
“என்ன விமலா இது? காலேஜ்ல அஞ்சு பேர்தானா? எவ்வளவு பேர் கூட படிச்சவங்க இருக்காங்க. வேற சில முக்கியமானவங்களை உனக்கு அறிமுகப்படுத்தலாம்தானே சொல்றேன்”.
நான் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு சொன்னாலும் அதில் என்ன ஒளிந்திருக்கிறது என்பது அவளுக்கா புரியாது? இருந்தாலும் முன் எச்சரிக்கையாக பேச்சை மாற்ற எண்ணி குழந்தைகளிடம் திரும்பினேன். வேலியில் போகிற ஓணான் கதை மறந்து விட்டது.
“ஸ்ருதி, ஹரி… சாப்பிடும்போது கையில புக், மொபைல் எதுக்கு? கீழே வச்சுட்டு தட்டை பார்த்து சாப்பிடுங்க. அம்மா எவ்வளவு நல்லா வெஜிடபிள் பிரியாணி செய்திருக்காங்க!”
இருவரும் கையில் இருந்ததை கீழே வைத்து விட்டு என்னை பார்த்த போதுதான் இவ்வளவு நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்ததை அவர்கள் கவனிக்கவே இல்லை என்று எனக்கு உறைத்தது.
“எனக்கு இன்னும் கொஞ்சம் பச்சடி வை”. வாய் பேசினாலும் மனது கல்லூரிக் காலத்திற்கு பறந்துதான் விட்டது.
“ஏங்க, உங்க ஷீலா, சுபத்ரா எல்லாம் வராங்களா?”
ஒரு வினாடி அதிர்ந்து விட்டேன். கணவன்-மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இந்த அளவுக்கா? மனதில் நினைப்பதை எல்லாம் புத்தகம் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறாள்.
நான் பதில் சொல்லுமுன் ஸ்ருதி கேட்டாள் .
“அம்மா, யாரு அவங்க? ஷீலா, சுபத்ரா?”
” அவங்க உங்க அப்பாவோட ஃபிரண்ட்ஸ்”.
“அப்பா, நீங்க படிக்கும்போது உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இருந்தாங்களா?”
அவளுக்கு புது உற்சாகம் வந்துவிட்டது. கல்லூரியில் படிக்கிறாள் அல்லவா. இந்த விஷயங்கள் எல்லாம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்.
“ஆமாண்டா, அவங்களும் என்னோட பிரெண்ட்ஸ்தான்” என்றேன்.
“வெறும் பிரண்ட்ஸா, இல்ல கேர்ள் ஃப்ரெண்ட்ஸா?” அம்மாவின் ஜீன் அப்படியே தப்பாமல் மகளுக்கும் வந்திருக்கிறது. எனக்குள் லேசாக சிறிது எரிச்சல் மண்ட ஆரம்பித்தது.
“அக்கா, கேர்ள்ஸ் ஃபிரண்டா இருக்கிறதுக்கும் கேர்ள் ஃப்ரண்டா இருக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?”
பத்தாவது படிக்கும் பையன். ரொம்ப முக்கியமான சந்தேகம்.
இப்போது யோசித்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் அழகாக பேசி எடுத்துக்கொண்டு போய் இருக்கலாம்தான். ஆனால் அப்போது எனக்கு ஏதோ ஒரு தர்மசங்கடமும் கோபமும் வர ஆரம்பித்தது. விமலாவிடம் சொன்னதை எல்லாம் எதற்காக இந்த நேரத்தில் அவள் குழந்தைகள் முன்னால் பேசுகிறாள் என்று ஏதோ ஒரு எரிச்சல். குடும்பத்தில் மூத்தவன் என்கிற அதிகாரமும் பதவியும் இருக்கும்போது அதை பிரயோகிக்க வேண்டியதுதானே. நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஸ்ருதி அடுத்த கேள்வியை கேட்டாள்.
“அப்பா நீங்க காலேஜ்ல படிக்கும்போது யார் மேலயாவது கிரஷ் இருந்திருக்கா”?
அவ்வளவுதான். எனக்கு மொத்தமாக ஏறிவிட்டது .ஒரு சத்தம் போட்டேன் .
“இதெல்லாம் இப்ப ரொம்ப அவசியமா? யார்கிட்ட என்ன பேசணும்னு ஒரு வரைமுறை கிடையாது? எல்லாம் அதிகப்பிரசங்கித்தனம். உங்க அம்மா கொடுக்கற இடம். தட்ட பார்த்து சாப்பிட்டு எழுந்து போங்க” என்று கத்திவிட்டு அப்படியே பாதி சாப்பாட்டில் எழுந்து போய் விட்டேன்.
மாடியில் எனது அறைக்குச் சென்று ஒரு பத்து நிமிடம் அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் என் கோபம் தணிந்த பிறகு ஈசிசேரில் படுத்து கண்ணை மூடிக் கொண்டேன். எனக்கே என் தப்பு புரிய ஆரம்பித்தது. அப்படி கத்தி இருக்கவேண்டாம்தான். இந்த வயதில் குழந்தைகளுக்கு தோன்றும் இயற்கையான கேள்விகள்தானே. அப்பாவிடம் கேட்கலாம் என்கிற உரிமையையும் இடத்தையும் நான்தானே அவளுக்குக் கொடுத்து இருக்கிறேன். கேட்கும் போது எதற்காக இவ்வளவு கோபம்? ஒருவேளை அப்பா என்கிற எனது பிம்பம் இதெல்லாம் பற்றி பேசினால் மாறிவிடும் என்று பயமா? அல்லது எனது அந்தரங்கத்தை குழந்தைகள் தொடுவதை நான் விரும்பவில்லையோ? பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கி விட்டேன். கண் விழிக்கும்போது மணி நாலரை ஆகியிருந்தது. அப்போதுதான் விமலா சாப்பிட்டு இருப்பாளோ, தேனீர் நேரமாகிவிட்டது, கீழே போய் கொஞ்சம் சமாதானமாக பேசலாம் என்று நினைத்துக்கொண்டே இறங்கி வந்தேன்.
வீடு அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு வந்தால், மூவருமாக ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு ஒரே சிரிப்பும் சத்தமுமாக இருந்தது. எனக்குள் இறங்கியிருந்த வேதாளம் திரும்பவும் ஏற ஆரம்பித்தது. ஒருவன் கோபமாக கத்திவிட்டு போயிருக்கிறேன், ஒன்றுமே நடக்காதது போல் இவர்களெல்லாம் இருந்தால் பிறகு என் கோபத்திற்குதான் என்ன மதிப்பு என்று என் மேலேயே எனக்கு ஒரு சுயபச்சாதாபம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. என்னை பார்த்தவுடன் விமலா எழுந்தாள்.
“வாங்க, நேரமாச்சு, நானே வந்து எழுப்பலாம்னு இருந்தேன். வந்து உட்காருங்க. டீ போட்டுக் கொண்டு வரேன்” .
அமைதியாக வந்து உட்கார்ந்தேன். எழுந்த விமலாவை ஸ்ருதி உட்கார வைத்தாள்.
” அம்மா, நீங்க இருங்க. நான் எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வரேன். டேய் ஹரி, என் கூட வந்து ஹெல்ப் பண்ணுடா”.
தம்பியை தோளைப் பிடித்து எழுப்பி தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் விட்டாள்.
மெல்ல “சாப்பிட்டியா விமலா?” என்றேன். அவள் பதில் சொல்வதற்குள் அவள் கையில் இருந்த அலைபேசி ஒளிர அதை கையில் எடுத்துக் கொண்டு என்னை பார்த்து ஒரு நிமிடம் என்பது போல் கண்ணால் சைகை காட்டிவிட்டு பேச ஆரம்பித்துவிட்டாள்.
கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தேன். திடீரென்று என் வீட்டிலேயே நான் தனியாகி விட்டது போல் ஒரு உணர்வு. என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படியே ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும்.
“உங்கள் டீ ரெடி “என்று அறிவித்துக் கொண்டு ஸ்ருதி உள்ளே வந்தாள். நிமிர்ந்து பார்த்தேன். ஆச்சரியப்பட்டு போனேன். நான் ஒரு முறை ஜப்பான் சென்று இருந்த போது மிகுந்த வேலைப்பாடுடைய அழகான ஒரு பீங்கான் தேனீர்கோப்பை செட் வாங்கி வந்திருந்தேன். அதை வீட்டில் ஏதாவது முக்கிய நாட்களிலும் விசேஷங்களிலும் மட்டும் வெளியில் எடுத்து விமலா உபயோகப்படுத்துவது வழக்கம். இன்று ஸ்ருதி அதில் தேநீர் நிரப்பி கோப்பைகளையும் தட்டுகளில் ஏதோ தின்பண்டங்களுமாக அழகாக ட்ரேயில் அடுக்கி எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். யாருக்காவது பிறந்த நாளா அல்லது வேறு ஏதாவது முக்கியமான நாளா, எதையும் மறந்து விட்டேனா என்று ஒரு கணம் குழம்பினேன்.
பின் அவளிடமே “இன்னிக்கு என்ன விசேஷம் டா?” என்றேன்.
சிரித்துக்கொண்டே “எல்லா நாளும் ஒண்ணுதானேப்பா, நாமதான் சில நாளை சாதாரணமாகவும் சில நாளை ஸ்பெஷலாகவும் நினைச்சுக்கறோம் இல்லையா” என்றாள்.
ஆச்சரியமாக அவளை பார்த்தேன். என் குழந்தையா இப்படி பேசுகிறாள்?
“நீங்கதான் எனக்கு ஸ்பெஷல்” என்றபடி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
அப்படியே உள்ளுக்குள் உடைந்து லேசாகி போனேன். இந்த பெண் குழந்தைகளிடம் என்னதான் மாயம் இருக்கிறதோ? கண்களில் துளிர்த்த நீரை மறைத்துக்கொண்டு “ஸாரிடா ஸ்ருதி மா” என்றேன்.
“அப்பா, என்ன இது? கூல், ரிலாக்ஸ் . மதியத்தையே நினைச்சிட்டு இருக்கீங்களா? ஒண்ணு சொல்லட்டுமா? நீங்க சொன்னது தப்பு ஒண்ணும் இல்லைப்பா. நீங்க உங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் பத்தி சொல்லி இருந்தாலும் சொல்ல விருப்பம் இல்லாமல் இருந்தாலும் சரிதான். அது நேச்சுரல். ஒரு வேளை நீங்க அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லி இருந்தா கொஞ்சம் யோசிச்சு இருப்பேன். அப்பா பொய் சொல்றார் அப்படின்னு கூட தோணி இருக்குமோ என்னவோ..இப்ப நான் அந்த வயசுல இருக்குறதால கூட உங்களுக்கு சங்கடமா இருந்து இருக்கலாம். ஆனா நான் தெளிவா இருக்கேன்பா” என்றாள்.
பதில் ஒன்றும் சொல்ல தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
” ஒரு பையன் ஸ்மார்ட்டா இருந்தா பார்க்கணும், பேசணும்னு தோணுது. ஆனா அது எல்லாம் ஒரு பொதுவான ஈர்ப்புதான் அப்படிங்கிறதுல தெளிவா இருக்கேன். பசங்க கிட்ட பழகும்போது என்னோட லிமிட் எதுனு எனக்குத் தெரியும். அதையும் தாண்டி யாரையாவது புடிச்சிருந்தா நிச்சயமா தைரியமா வந்து உங்க கிட்ட சொல்லுவேன்.
நீங்க உங்க சின்ன வயசுல எப்படி இருந்தீங்கங்கறதை விட இப்போ நீங்களும் அம்மாவும் எவ்வளவு ஐடியலா இருக்கீங்க.. இதுதான் எனக்கு வேணும்” என்றவள் அவள் கைகளை என் தோளை சுற்றிப் போட்டுக் கொண்டாள். எதுவும் பேசாமல் மெல்ல அவளை அணைத்துக்கொண்டேன்.
“வாடா ஹரி, கொஞ்ச நேரம் பேட்மின்டன் விளையாடலாம். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க” என்றபடி தம்பியை இழுத்துக்கொண்டு தோட்டத்திற்கு ஒடி விட்டாள்.
நான் சொல்லி இருக்க வேண்டியது எல்லாம் பேசி விட்டுப் போகும் என் மகளை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.