
2022 களின் இறுதி.
மக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு மீண்டும் அதன் பூஸ்ட் ஊசிகளும் எந்தவித சிரமுமின்றி தங்களில் செலுத்திக்கொள்ள சிறார்களும் புதிய தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் காலத்தில்…
கொரானா அதன் எல்லா அலைகளும் முற்றிலும் ஒய்ந்து சர்வ சாதரணமாய் மக்கள் பயம் மறந்து எங்கும் எதிலும் சர்வா வியாபியாய் பயணிக்க..
அரசும் தனது அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, மக்கள் மிகச்சாதரணமானநாட்களாய் வாழும் ஒரு நாள் வியாழக்கிழமை..
OTT மக்களின் விருப்பமாக இருந்தாலும் வெண்திரையில் தன் இஷ்ட நாயகனை பாப்கார்ன் கொரித்துக் கொண்டே, நேரில் பார்த்து மகிழும் வெறிகொண்ட ரசிகர் கூட்டம்..
நாளை வெள்ளிக்கிழமை காலை அந்த சூப்பர் ஹீரோவின் திரைப்படம் உலகமெங்கும் ரீலிஸாக இருக்கிறது. ஸ்பெஷல் ஷோ காலை 5.30 மணிக்கு.
அவள்… வயிற்றில் ஒரு சூல் ..கையில் இரு வயது குழந்தை. அருகே அதன் அடுத்த மூத்த வாரிசு.
“அம்மா! பசிக்குதும்மா. திங்க ஏதாவது வாங்கி கொடும்மா?” இது ஐந்து வயதான அவளின் மூத்த வாரிசு.
“கழுத…எப்பப்பாரு தீனி. சரியான தீனி பண்டாரம்..” இது அம்மா.
“காலைல கஞ்சி தான் காய்ச்சு கொடுத்த.. பசிக்குதும்மா..”
“உங்கப்பன் வரட்டும். அப்புறம் பாக்கலாம். இந்தா சின்னவன் பாலை ரெண்டு பேரும் கீழே சிந்தாம குடிங்க…” இது அவர்களின் அம்மா.
கணவனின் வார்த்தைகளில் மயங்கி இரண்டை பெத்து மூன்றாவதை வயிற்றில் சுமப்பவள். மாதமாயிருப்பாதாலும் உடல் மெலிந்து நலிவுற்றிருப்பாதால் அருகிலுள்ள அரசு ஆரம்ப மருத்துவமனை டாக்டர்களின் அறிவுரையால் இரண்டு மூணு இடத்துல கூட்டி பெருக்கி பாத்திரம் தேய்த்து வயிற்றை கழுவியவளுக்கு அந்த வேளைகளையும் செய்ய முடியாத நிலமை.
இரண்டு மூன்று டப்பாக்களை அவள் நகர்த்தி எங்கோ மடக்கி எப்போதோ வைத்திருந்த ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டு. கிடைத்த சந்தோஷத்தில் மூத்ததிடம் வீட்டை ஒப்படைத்து விட்டு இரு பாத்திரங்களை கையில் எடுத்துக்கொண்டு மெதுவாய் கொளுத்தும் வெயிலில் அருகிலுள்ள அம்மா உணவகம் சென்றாள்.
பஜார்.
ஏராளமான சரக்குகளை ஏற்றி இறக்கும் லாரிகள் மற்றும் குட்டி யானைகள். ஜன நடமாட்டமிகு நகரின் மிக முக்கிய ஏரியா. உயிருக்கு பயந்த ஓரிருவர் இன்னும் மாஸ்க் போட்டுக்கொண்டு நடந்து செல்ல, அவன், நம்மவன் முறுக்கேறிய உடம்பு. கையில் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டாரின் பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கிறது.
அந்த சாக்குபோட்டு கட்டிய சதுர பேலை ஒருவன் லாரியிலிருந்து புரட்டி கொடுக்க, லாவகமாய் அதனை முதுகில் தாங்கி, நிமிர்ந்த தன் உடலை பாரம் தாங்க தற்காலிக கூனனாக்கி அந்த துணிக்கடை வாசலில் பலமுறை பாரத்தை இறக்கினான்.
கிறுகிறுக்கும் வெயிலில் வேர்த்த வேர்வையை தன் அழுக்கு துண்டை உதறி துடைத்து, அந்த பிரம்மாண்ட ஏசி துணிக்கடை வாசல் நுழைவில் வரும் ப்ரீஏரை சிறிது நிமிடம் அனுபவித்து, பின் இறக்கிய மூட்டைகளுக்கு கூலி வாங்கி கொண்டு அருகிலிருந்த கடையில் வெயிலுக்கு இதமாக ஜில்லென ஒரு பாதாம்பால் வாங்கி குடித்தான்.
அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், அதை பகிர்ந்து தன் குழந்தைகளுக்கு பரிமாறி, மீதமிருப்பதை தனக்கில்லா விட்டாலும் கருவில் வளரும் ஜீவனுக்காகவாவது அந்த பிடியளவை சாப்பிட்டு தண்ணீர் குடித்தாள்.
அவன் – நம்மவன் அடுத்தடுத்து காசு சம்பாதித்து அவன் தேவைக்கான டார்கெட் நிறைவேற அந்த மாலை நேரம் வீடு திரும்ப, சோமு அவன் நண்பன், “நாளைக்கு தலைவர் படம் ரீலிசுல்ல. காலைல ஸ்பெசல் சோ. பெரிய கட்அவுட் தியேட்டர்ல இறக்கி கட்டிக்கிட்டிருக்காங்க. நம்ப கிளை மன்றத்துல தலைவர பீர் அபிஷேகம் பண்றோம். தலைக்கு 2 பீர் வாங்கி கட்-அவுட்டுக்கு காலைல ஊத்தறோம். நாளைக்கு காலைல பீரோட வர்றே..”என ஆணையிட்டான்.
விதர்சித்து சிலிர்த்த நம்மவன் பையில் உள்ள சில்லறை பணங்களை எண்ண, கையில் பச்சையிலிருந்த. அந்த நடிகர் பெயர். அவன் மனதின் நிகழ்காலத்தை மறந்து நாளைய திரைப்படத்தில் பேப்பரில் அவன் படித்த பிரமிக்க வைக்கும் காட்சிகள் நினைவில் வீறு கொண்டு எழுந்தது. கூப்பிடும் தொலைவிலுள்ள அரசு மதுக்கடை பச்சை விளக்கில் கண்சிமிட்டி அழைத்தது. உள்ளே சென்றான் மூன்று பீர் பாட்டில்களை வாங்கினான். மிகக் குறைவான விலை மதுவை வாங்கி அப்படியே நீர் கலந்து தான் குடித்து விட்டு மிக பத்திரமாய் நாளை அவன் தலைவனுக்கு செய்ய வேண்டிய அபிஷேக பொருளை பயபக்தியோடு எடுத்துக்கொண்டு அவன் வீடு திரும்பினான்.
நிழல்கள் நிலைக்க நிஜம் மயங்கி போனது. இவன் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் மூவர். பாலுக்கு வைத்திருந்த பத்து ரூபாய் மதிய உணவுக்கானாது. உழைத்து வந்த காசோ, நுரை அடக்கி பாட்டிலாய் வந்தது. பசியோ கிள்ளியது.
அவளோடூ வயிற்றில் பிள்ளை..மற்றும் இரு குழந்தைகள் பசியோடு. அவனோ, அரைகுறை நினைவோடு..
அவனிடமுள்ள சிறு தொகையை எடுத்து அருகிலுள்ள டிபன் கடையில்
ஏதோ கிடைத்ததை அவள் வாங்கி வர அனைவரும் அதனை உண்டு உறங்கினர்.
மறுநாள் விழித்தவன் பையில் இல்லாத காசால் வெகுண்டு, அவளை அடித்து வார்த்தைகளால் துன்புறுத்தி வெறும் வயிற்றில் பசி மறைத்து தன் தலைவன் படம் வெளியாகும் தியேட்டர்க்கு நடந்து சென்றடைந்தான்.
எல்லாரும் அவன் சார்ந்த மன்றம் வாங்கி வந்த பீர்களை ஒன்றாக்கி வெள்ளை நுரையோடு வெள்ளித்திரை நாயகனுக்கு உயரமேறி அபிஷேகித்தனர்.
தியேட்டர் மணி அடிக்க துவங்க ஆங்காங்கே சிதறி இருந்த கூட்டம் ஒன்றாகி டிக்கெட் கிழிக்கும் இடத்தில் அந்த சிறப்பு காட்சிக்கு ஏற்கனவே முன்பதிவில் விற்பனையாகி இருக்க அனைவரும் உள்ளே சென்றனர்.
நாற்பது அடி கட்அவுட் சாராத்தில் இறங்கிய நம்மவன் கீழே இறங்க அவனுக்கு உதவியவன் ஏற்கனவே அவன் வைத்திருந்த டிக்கெட்டால் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தினர் குரல் கேட்டு இவனை கூட ஏதும் கேட்காமல் ஓடி அந்த பகலிலும் ஓர் இரவான திரை அரங்கினுள் மறைந்தான். வெளியே
நம்ப ஆள் படமும் பார்க்காமல் காசை குடும்பத்திற்க்கும் கொடுக்காமல் தலைவனின் கட்அவுட்டை பசியோடு வெறுத்துபார்த்துக் கொண்டிருக்க படம் தொடங்கி விட்டதால் தியேட்டர் ஆட்கள் அவனை வெளியே தள்ளி கதவை தாளிட்டனர். மாலையோடு கம்பீரமாய் இளமையோடு கைநீட்டி சிரிக்கும் கட்-அவுட் நாயகன் இவனை கெட்-அவுட் சொன்னது போல் இருந்தது




