அந்த குடியிருப்பு சங்க கூட்டத்தில் விவாதம் அனல் பறந்தது. சங்கத் தலைவர் பெரியசாமி எதுவும் பேசாமல் விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனம், போன வாரம் நகராட்சியில் கமிஷனர் மற்றும் சில கவுன்சிலர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து அசை போட்டது. துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்க தங்கள் ஏரியாவிற்கு ஒரு வாரமாக வரவில்லை என புகார் கொடுக்க சென்றவர்களுக்கு அதிரடியாக ஒரு செய்தியை அறிவித்தார் கமிஷனர்.
“உங்க ஏரியாவில் தான் இடம் தேர்வாகியிருக்கு” என்ற கமிஷனரிடம் “எதுக்கு சார் பூங்கா கட்டுவதற்கா?”எனக் கேட்டார் பெரியசாமி. கமிஷனர் சிரித்து கொண்டு ” இல்ல சார் எல்லா வார்டு குப்பைகளையும் அங்கு டம்ப் செய்துட்டு தரம் பிரித்து உரமாக்குதல் ரீசைக்கிளிங் போன்ற வேலைகளை செய்யப் போகிறோம் “என்றார்.பெரியசாமியுடன் கூட வந்தவர்களும் திகைத்துப் போய், ” சார் என்ன சொல்றீங்க? எங்க ஏரியாவில் இதுக்கு யாரும் சம்மதிக்க மாட்டோம் சார் “என படபடத்தனர்.
” சார் உங்க ஏரியாவில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்க, எதனால் உங்க ஏரியா தேர்வாகியிருக்கு குப்பையை டம்ப் செய்ய, நாங்க அங்க என்னென்ன செய்ய போகிறோம், அதனால் வரும் வணிக வாய்ப்பு, இப்படி எல்லாவற்றையும் நான் விபரமாக விளக்குகிறேன் என்ற கமிஷனரிடம், “சார் ஒரு வாரமா குப்பை எடுக்காததுக்கே ஏரியா நாறிப் போச்சு, இதுல ஊர் குப்பையெல்லாம் எங்க ஏரியாவில் டம்ப் செய்தா, நினைச்சே பார்க்க முடியலை சார், இதுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்க சார்” என்றார் பெரியசாமி கெஞ்சும் குரலில்.
அதற்குள் அங்கு இருந்த கவுன்சிலர்கள் சிலர் “தைரியமா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்க, உங்க வார்டு கவுன்சிலரும் வந்து விளக்குவாரு” என்றனர் சிரித்தபடி.
இது குறித்து விவாதிப்பதற்கே சங்கத்தின் இந்த அவசர கூட்டம். அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினர் . பாரதி தெருவில் குடியிருக்கும் பூங்காவனம் டீச்சர், “புகார் மனு ஒன்றை எழுதி அனைவரிடமும் கையெழுத்து வாங்கி கமிஷனரிடம் கொடுக்கலாம். அதில் ஒரு காப்பி சுகாதார அமைச்சருக்கும் , முதல்வருக்கும் அனுப்பலாம்” என்று கூறினார். சிலர் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்யலாம், அப்போது தான் மீடியாவுக்குத் தெரிய வரும். நம்ம பிரச்சினையின் தீவிரம் புரியும் என்றனர். “பேசாம கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து ஸ்டே வாங்கிடலாம் “_இது வக்கீல் கண்ணன்.
பொருளாளர் பாலு எழுந்து, நம்ம ஆளாளுக்கு எதையாவது பேசினா அதிகாரிங்க கேட்க மாட்டாங்க. இப்படி ஒவ்வொரு வார்டும் வேண்டாமென்று சொன்னா அப்புறம் அவங்க அவங்க ஏரியா குப்பையை அவங்க அவங்களே டிஸ்போஸ் செய்ய வேண்டியிருக்கும். அது முடியற காரியமா? ” என்றார் கோபமாக.
திரு. வி. க தெருவில் குடியிருக்கும் சொர்ணா எழுந்து, அப்போ நீங்க நம்ம ஏரியாவில் எல்லா வார்டு குப்பைகளையும் கொட்டலாங்கிறீங்களா? “என்றாள் காட்டமாக. சங்க அங்கத்தினர் அனைவரும் வாயடைத்துத் தான் போனார்கள் சொர்ணாவின் பேச்சைக் கேட்டு. சற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர். செயலர் சுப்பு சொர்ணாவிடம், ” மேடம், பொம்பளைங்க எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேசக்கூடாது. அரசாங்க அதிகாரிகளை எல்லாம் நாம பகைச்சுக்க முடியாது”என்றார் சற்று கோபமாக. சொர்ணாவும் சளைக்காமல் அவரிடம், “நீங்க அதிகாரிகளை எல்லாம் பகைச்சுக்க வேண்டாம். ஆனா யார் என்ன சொன்னாலும் நம்ம ஏரியாவில் குப்பையை டம்ப் பண்ண நாம சம்மதிக்கக் கூடாது சார். நம்ம ஏரியா குப்பைகளை அவங்க எடுக்கலைன்னாலும் பரவாயில்லை, ஒரு ஆறு மாசம் டைம் கேளுங்க, நாங்க பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து நம்ம இடத்தை எப்படி மாத்தறோம்னு பாருங்க ” என்றாள் ஆர்வமாக.
“ம்.. இது ஊரு கூடி தேர் இழுத்த மாதிரி, போகாத ஊருக்கு வழி சொல்றது”என முணுமுணுத்தார் பொருளாளர் பாலு. தலைவர் பெரியசாமி அனைவரையும் அமைதிப்படுத்தி, நாளை மாலை பள்ளித் திடலில் அதிகாரிகளுடன் கூட்டம் நடக்கவிருக்கிறது. அங்கத்தினர் மட்டுமல்லாமல் அனைவருமே கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன் என்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
மறுநாள் அதிகாரிகளுடன் வந்த கமிஷனர், நாங்க நல்லா ஆலோசனை செய்து தான் உங்க ஏரியாவில் இடம் தேர்வு செய்தோம். ஏன்னா இங்கதான் குடியிருப்புகளை தவிர நிறைய அரசாங்க நிலங்கள் உள்ளன. ஆனால் குப்பைகளை டம்ப் செய்தாலும் அதை திறந்த வெளியாக விடாமல் சுற்றி தடுப்பு சுவர் எழுப்பி உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேலை நடக்கும். நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை “என்று ஆணித்தரமாக பேசினார்.
ஆனால் கூட்டத்தின் பெரும் பகுதியினர்” இதை நாங்க ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம். நீங்க ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்க ” என்று கத்தினர். “இப்படி ஒவ்வொரு வார்டு ஆளுங்களும் சொன்னா நாங்க என்ன செய்வது” என கமிஷனர் கூறி கொண்டிருக்கும் போதே, “கமிஷனர், டவுன் டவுன், கொட்டாதே கொட்டாதே ஊர் குப்பையை கொட்டாதே” என சில இளைஞர்கள் கோஷம் போட தொடங்கினர். கமிஷனர் ஒரு நிலையில் பொறுமை இழந்து, “அப்படின்னா உங்க வார்டு குப்பையை என்ன செய்யறது? எடுக்க வேண்டாமா? ” என்று கேட்டார்.
இதற்காகவே காத்திருந்தாற் போல் சொர்ணாவும், சில பெண்களும் எழுந்து “எங்க ஏரியா குப்பையை எடுக்கவும் வேண்டாம், ஊர் குப்பையை இங்கே கொட்டவும் வேண்டாம், ஆறு மாசத்துல எங்க ஏரியாவையே மாத்திக் காண்பிக்கிறோம் , பாருங்க சார்”, என்றனர் ஆவேசமாக.
” ம்.. சவால் விடறது ” ரொம்ப சுலபம், ஆனா அது நடைமுறைக்கு ஒத்து வராது”என்று கூறிய கமிஷனரிடம்”நீங்க சொல்ற அதே வேலையைத் தான் நாங்க செய்யப் போறோம். அதனால ஒரு ஆறு மாதம் பொறுத்து எங்க ஏரியாவிற்கு உள்ள வந்து பாருங்க ” என்றாள் சொர்ணா நம்பிக்கை யுடன்.
கமிஷனரும் அதிகாரிகளும் “எதுக்கும் ஒத்து வரலைன்னா மேலிடத்தின் உத்தரவு படி செய்துக்கறோம்” என்று கூறி எழுந்து சென்றனர்.
கூட்டத்தில் இருந்த ஆண்களில் சிலர், “சொர்ணா சவால் விடுவா, அவளுக்கென்ன பிள்ளையா குட்டியா, 32வயசாகி இன்னும் கல்யாணமும் ஆகலை,அவ அம்மாயிருக்கா ஆக்கி போட, அவ செய்வா சமூக சேவை, நம்ம பொம்பளைங்க வீட்டு வேலையை செய்யவே சடைஞ்சு போறாங்க, இதுல ஏரியா குப்பையை என்ன செய்ய போறாங்க, மொத்தத்தில் நாறப் போகுது” என்று கூறியபடி கலைந்து சென்றனர்.
கூட்டம் முடிந்து மனக் குழப்பத்துடன் வந்து கொண்டிருந்த பெரியசாமி யிடம் “அண்ணா, நம்ம சங்கத்தின் முழு ஒத்துழைப்பு எங்களுக்கு , உங்க வீட்டுப் பெண்களுக்குத் தேவையா இருக்குது, கட்டாயம் நல்லதே நடக்கும் என நம்புங்க “என்றாள் சொர்ணா உற்சாகமாக. ” ஆதரவெல்லாம் கண்டிப்பாக உண்டு, ஆனா எதுக்கு இந்த சவால், இதை எப்படி ஜெயிக்கப் போறீங்கன்னு கொஞ்சம் கவலையா இருக்கும்மா” என்றார் பெரியசாமி
அடுத்த நாளிலிருந்து சொர்ணா சுறுசுறுப்பாக பணியாற்றினாள். அந்த ஏரியாவின் அனைத்து பெண்களையும் ஒன்று திரட்டி ஆக்க பூர்வமான தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டாள். “என்னடா, சொர்ணா நம்மை கேட்காமலே நம்மையும் சேர்த்துக்கிட்டு சவால் விட்டுட்டா இதை எப்படி செய்வதுன்னு நீங்க நினைக்கிறது புரியுது. நம்ம வீட்டு ஆண்களும் ம்.. இவங்க தான் ஏரியாவை மாத்தப் போறாங்களாம் அப்படின்னு நம்மை கேலி செய்துட்டு தான் போனாங்க.
இன்றளவும் இந்த உலகம் ஆண்களுக்கானது தான். ஆனால் நாம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. எல்லோரும் நல்லதே நடக்கும் என்று நம்புங்க. நம்மோட நேர்மறையான சிந்தனையும் முயற்சியும் கண்டிப்பாக நமக்கு வெற்றியை கொடுக்கும். நம் அனைவருக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் இருக்க வேண்டும். நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா? பெண்கள் நினைத்தால் எதையும் திறம்பட செய்ய முடியும் என நிரூபிக்க இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அது மட்டுமில்லாமல் குப்பை உரமாவதன் மூலம் நம் வீட்டுக்குத் தேவையான காய்கறி பழங்களையும் நாமே பயிர் செய்யலாம். இந்த வேலை சற்று கடினமானது தான், ஆனால் அதனால் கிடைக்கும் பலன் அளவிட முடியாதது “என்று கூறிய சொர்ணா கூட்டத்தில் இருந்து இளம் பெண்கள் பத்து பேரை தேர்வு செய்து ஐந்து பேரை மண்புழு உரம் தயாரிக்கவும் ஐந்து பேரை ஜீவாமிர்தம், செடிகளுக்கு தேவையான இயற்கை பூச்சி கொல்லிகளையும் தயாரிக்க கற்றுக் கொள்ள தோட்டக்கலை அலுவலகத்திற்கு அனுப்பினாள். பின்னர் அனைத்து வீடுகளிலும் தினசரி குப்பைகளை மட்கும் மட்காத என தரம் பிரித்து தனித்தனியாக சேகரிக்க வேண்டும். அதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தாள்.
சொர்ணாவின் பக்கத்து வீட்டுக்காரனான குமரன் தோட்டக்கலை அலுவலராக இருந்ததால் சொர்ணாவுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி அவளை உற்சாகப்படுத்தினான். அவர்கள் ஏரியாவில் இருக்கும் ரிசர்வ் சைட்டில் சங்கத்தின் அனுமதி பெற்று வேலி போட்டு ஓரங்களில் பழ மரங்களை சங்க அங்கத்தினர்களைக் கொண்டு நட வைத்து அதை பராமரிப்பதை அவர்கள் வீட்டு பெண்கள் பொறுப்பில் விட்டாள சொர்ணா. சைட்டின் உள்ளே பெரிய குழி ஒன்றை வெட்டி மண்புழு உரம் தயாரிப்பதற்கு வைத்தாள். ஏரியாவில் இருக்கும் பால்காரர்களின் வீடுகளில் சேகரமாகும் சாணம் கோமியம் அனைத்தையும் உரக்குழியில் கொட்டுமாறு பணித்தாள். குமரன் சொர்ணாவின் அனைத்து முயற்சிகளிலும் உறுதுணையாக நின்றான்.
இந்த வேலைகளில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் வேலை செய்தனர். குமரன் தனது அலுவலகத்தில் இருந்து கத்தரி வெண்டை கீரை தக்காளி போன்ற செடிகளின் விதைகளை வாங்கி வந்து அவனே அவற்றை பயிரிடவும்
ஊடுபயிராக பப்பாளி மரங்களை நடவும் உதவி செய்தான். செடிகளின் நீர் தேவைக்கு சொட்டு நீர் பாசன வசதியும் செய்து கொடுத்தான்.
அவ்வப்போது மாநகராட்சியின் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அதனால் ஊடகங்களின் வாயிலாக சொர்ணா மிகப் பிரபலமானாள். இதனிடையில் குமரன் சொர்ணாவின் நட்பில் காதல் மிளிர்வதை கண்டு அனைவரும் ரசித்து வரவேற்றனர். ஆறு மாதங்களில் அந்தப் பகுதி எழில் கொஞ்சும் சோலையானது.
அன்று அந்த ஏரியாவே விழாக்கோலம் பூண்டிருந்தது.அங்கு நகராட்சி கமிஷனர், அதிகாரிகள், கலெக்டர், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஆஜராகியிருந்தனர். சொர்ணா பேச வந்ததும் மக்களின் கரவொலியால் மேடையே அதிர்ந்தது. “இப்போ மேடையில் பேசின எல்லாப் பெரியவர்களும் இது சொர்ணாவால் தான் சாத்தியமாச்சுன்னாங்க, ஆனா இது ஒரு கூட்டு முயற்சி. நான் சும்மா ஒரு கோடு தான் போட்டேன். ஆனா எங்க ஏரியா பெண்கள் ரோடே போட்டுட்டாங்க. ஆமாங்க, இங்க போட்டிருக்கிற புதுரோடு ரிசைகிள் செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் போடப்பட்டது. இயற்கை உரத்தால் வீட்டுக்கு சத்தான காய்கறிகள் கிடைக்கிது. ரிசைகிள் பண்ண முடிந்த பொருட்களால் வரும் பணத்தை எங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.
இந்த உலகத்தில் முடியாதுன்னு எதுவுமேயில்லை. கொஞ்சம் சேவை மனப்பான்மையும், சமூக அக்கறையும் நமக்கு இருந்தால் எதையும் சாதிக்கலாம். இயற்கை வளங்கள் மனிதனின் பேராசையினால் அழிவின் விளிம்பில் உள்ளது. நம் இளைய சமுதாயத்திற்காக அதை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அக்கறையோடும், நெறியோடும் நாம் பின்பற்றினால் நம்நாடு முன்னேறிவிடும்.
இந்த முயற்சியில் நாங்கள் தெரிந்து கொண்டது ஒரு பெண் விழிப்புணர்ச்சியடைந்தால், அந்த குடும்பம் முழுமைக்கும் அது போய் சேர்கிறது என்பது தான். அதனால் தான் பெண் கல்வி மிக முக்கியம் என நம் அறிஞர்கள் சொல்லியிருக்காங்க. எங்க ஏரியா பெண்களின் திறமைகள் இதன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த முயற்சி இத்துடன் முடியப் போவதில்லை. இதை தொடர்ந்து செய்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல பெண்கள், நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்”என தன் உரையை முடித்தாள் சொர்ணா. அங்கே கரகோஷம் விண்ணை முட்டிற்று.