அது தற்கொலைதான் என கடைசியாக புரிந்து கொண்டான் சின்னதுரை!
ரெட்டியார்பட்டி – திருநெல்வேலி மாவட்டத்தின் ஓரத்தில் உள்ள வெக்கை காற்று வீசும் ஒரு பஞ்சாயத்து கிராமம்! மாலை 5 மணி இருக்கும், அம்மோவ்! அம்மோவ்!! என பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்குள் ஓடி வந்தான் சின்னதுரை. ஏம்ல இப்படி கணைக்க என நெற்றியில் வடியும் வியர்வையை துடைத்தபடி அடுப்படி நிலை தட்டாதபடி குனிந்து வெளியே வந்தாள் சின்னதுரையின் தாய் பவுனுதாய்! எம்மோ நம்ம கோனார் மாமா போன வருசம் ஒரு மாடு வாங்கி வந்தாரு பாத்தியா அது சினையா இருக்குதாமோ!! சரில அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற! எம்மோ அது குட்டி போட்டா எனக்கு வாங்கி தாமோ என்றான் அரசு துவக்க பள்ளியில் மூன்றாம் ஆம் வகுப்பு படிக்கும் சின்னதுரை! அட அறுத பயல.. படிக்காம மாடு மேய்க்க போறனு சொல்றத பாரு, உன் அப்பன் மெட்ராஸ்ல இருந்து வரட்டும் உன் முதுகு தோல உரிக்க சொல்றன் என்றாள் பவுனு!
எம்மோவ் நான் மாடு மேய்க்கவா போறனு சொன்னன், நான் அத ஆசையா வளக்க தான போறன் அதுக்கு ஏன் நீ இப்படி கணைக்க என்றான் சின்னதுரை! நீ இப்ப உடனே வந்து கோனார் மாமாட்ட சொல்லு எனக்கு குட்டி போட்டா தர சொல்லுனு கீழ புரண்டு அழுதான்! அவன் தரையில் உருள அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையில் வீடு மொழுவிய மாட்டுச்சாண கரை பட்டு தூசி கிளம்பியது! சின்னதுரை அழுகையை நிப்பாட்டவில்லை, அவன் அழுகை அடங்கவும் இல்லை, சரில அழாத வா மாமா வீட்டுக்கு போகலாம் என செல்லையா கோனார் வீட்டுக்கு அவனை அழைத்து சென்றாள்!
இரண்டு வீடு தள்ளி இருந்தது செல்லையா கோனார் வீடு! அண்ணே அண்ணே என்று கூப்பிட்டபடி உள்ளே சென்றாள்!! என்ன பவுனு இந்த பக்கம் என்று கையில் வைக்கோலுடன் நின்று கொண்டிருந்தால் செல்லையா கோனாரின் மனைவி சிவகாமி! மைனி இந்த பயலுக்கு மாடு மேய்க்கனுமாம் குட்டி கிட்டி போட்டா இவனுக்கு வேணுமாம் அதான் அண்ணன பாத்து வியாபாரம் பேச வந்தனு சொல்லிட்டு சிரிக்க சிவகாமியும் சிரிக்க அப்படியே வீட்டின் பின்புறம் இருந்த தொழுவத்திற்க்கு வீட்டின் ஓரமாக பேசிக் கொண்டே நடந்து சென்றனர்!
பத்து மாடுகள் வளர்க்க போதுமான இடம் இருந்தும் தொழுவம் முழுவதும் காலியாகவே இருந்தது! அதில் ஒரு ஓரம் செல்லையா கோனார் தன்னிடம் உள்ள ஒரே ஒரு பசுவிற்க்கு தண்ணீர் கலக்கி கொண்டிருந்தார்! இந்தாங்க உங்க மருமகனுக்கு என்ன வேணும்னு கேளுங்க என பவுனு சொல்ல, தண்ணீர் கலக்கி கொண்டிருந்தவர் தலை திருப்பி பவுனை பார்த்து சிரித்தபடி சின்னத்துரையிடம் என்ன மாப்பிள்ள வேணும்னு கேட்க! அதாங்க நம்ம லட்சுமி குட்டி போட்டா ஒன்னு வேணுமாம் அவன் வளக்கனுமாம்னு சிவகாமி சொல்ல, அட மாப்பிள்ளைக்கு இல்லாத குட்டியா லட்சுமி குட்டி போட்டதும் தூக்கிட்டு போய்டு சரியா மாப்பிள்ளனு செல்லையா கோனார் சொன்னதும் சின்னதுரை முகத்தில் மகிழ்ச்சி ரேகை தாண்டவமாடியது! பவுனு ” ஏலே அதான் மாமா சொல்லிட்டாருல்ல அப்பறம் என்ன சந்தோசமா” என கேட்க மகிழ்ச்சியுடன் தலை ஆட்டினான் சின்னதுரை! இடைமறித்த செல்லையா – மாப்பிள்ள நான் குட்டி கொடுக்குறது இருக்கட்டும் முதல்ல நம்ம லட்சுமிலா குட்டி கொடுக்கணும்! அதுக்கு நான் என்ன பண்ணனும் மாமா என்று அப்பாவியாக கேட்டான் சின்னதுரை! லட்சுமிகிட்ட போய் கேளு அவளுக்கு நல்லா புல்லு வெட்டி போடு அகத்திக்கீரை போடு அவளுக்கு புடிச்சத கொடு நல்லா பாத்துக்கோ அப்பறம் குட்டி போட்டதும் கேளு லட்சுமி அவளோட குட்டிய உனக்கு தந்துருவானு சொன்னதும் சிவகாமியும் பவுனும் சத்தமாக சிரிக்க இவ்வளவுதானனு வெளியே ஓடிச்சென்றான் சின்னதுரை!! ஏலே எங்கல ஓடுற என பவுனு கேட்க பதில் சொல்லாமல் ஒடிச்சென்றான் சின்னதுரை!
அவன் போனதும் பவுனு செல்லையா கோனாரிடம் அண்ணே இப்ப எப்படி போகுதுனு கேட்க, என்ன சொல்ல பவுனு பெரும் பாடு தான்! உனக்கு தெரியாதா என்ன, நாய் பொழப்பு தான், பெரு மூச்சி விட்ட படி. என்னோட தொழுவத்த பாத்தாலே தெரியலயா என கேட்டார் செல்லையா கோனார்! புரியுதண்ணே எல்லாத்துக்கும் நல்லா காலம் பொறக்கும் என பவுனு அவருக்கு ஆறுதலாக சொல்ல! சிவகாமி அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற சரிபுள்ள உன் வீட்டுக்காரரு பேசினாரா? எப்படி இருக்காராம்? என வழக்கமான கேள்விகள் மூலம் அந்த சூழ்நிலையை மாற்றினாள்! அவள் கேட்ட அனைத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டே நடுவில் “அண்ணே சின்னதுரை கேட்டது மனசில வச்சிக்காதீக” என்று பவுனு சொல்ல! அட நீ வேற! சின்ன பைய அவன் சந்தோசமா இருக்கட்டும், லட்சுமி கூட பேசட்டும், லட்சுமி குட்டி போட்டதும் அவனும் பாத்துகிரட்டும்! என செல்லையா கோனார் சொல்ல, சரி அண்ணி சரி அண்ணே நான் செத்த வீடு வர போய்ட்டு வாரன் என்று சொல்லி பவுனு தன் வீட்டிற்க்கு சென்றாள்! தன்னுடைய தினசரி வருமானத்திற்க்கு ஒரே வழியான லட்சுமியை பாசமுடன் தடவி கொடுத்தார் செல்லையா கோனார்!!
சிறிது நேரம் கழித்து வெளியே ஓடிச்சென்ற சின்னதுரை வேத கோயில் தெருவுல ஒரு வீட்ல முருங்கைகீரை பறிச்சிட்டு வந்திருந்தான். தொழுவத்தில் யாருமில்லை லட்சுமி மட்டும் படுத்திருக்க செல்லையா கோனாரும் சிவகாமியும் அங்கே இல்லை! மெதுவாக லட்சுமி அருகே நடந்து சென்று அதன் அருகே நின்றான் லட்சுமி விடும் மூச்சி காத்து நல்ல விசையுடன் வெளியே வந்து கொண்டுருக்க அப்ப..அப்ப லட்சுமி தன் நாக்கால் மூக்கின் உள் விட்டு எடுப்பதை திரும்ப திரும்ப பார்த்த சின்னதுரை அதே போல் தன் நாக்கை வைத்து மூக்கில் விட முயற்ச்சித்து தோல்வியடைந்து தனக்கு தானே சிரித்துக் கொண்டான்!!
பிறகு தன் கையில் கொண்டு வந்திருந்த முருங்கைகீரையை லட்சுமியிடம் அதன் வாய் அருகே நீட்டி கொடுத்தான் சின்னதுரை, அதை சட்டை செய்யாமல் லட்சுமி இருக்கவே மெதுவாக பேசினான் சின்னதுரை! உனக்கு நிறைய கீரை கொண்டாந்து தாரன் எனக்கு உன் குட்டிய தருவியா? என கேட்டான் லட்சுமி ஒன்றும் செய்யவில்லை! மாமா நான் எது கேட்டாலும் தருவாரு உனக்கு புடிச்சதா தருவேன் என ஒன்னு ஒன்னா பேசிட்டே இருக்குறப்போ லட்சுமி திடீரென்று அவனுடைய முருங்கைகீரையை கடித்து சிறிது சிறிதாக தின்றது! சின்னதுரையின் மகிழ்ச்சிக்குக்கு அளவே இல்லை!! என்னமோ லட்சுமி அவள் குட்டியை இவனுக்கு தருவேன் என சொல்லியது போல நினைத்துக் கொண்டான்!
அதற்கு பிறகு தினமும் சிறிது நேரம் லட்சுமியிடம் செலவிடாமல் அவன் ஒரு நாளும் இருந்ததே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்ததும் எதாவது ஒரு கீரை எதாவது ஒரு புல்லு என கொண்டு வந்து கொடுப்பதே சின்னதுரையின் தினசரி வேலையாகி போனது!! லட்சுமியுடன் என்னலாமோ பேசுவான் சிரிப்பான்! அய்யாதுரை வாத்தியாரிடம் அடி வாங்குனத சொல்லுவான்! கருப்பசாமி கணக்குல பெயிலா போனத சொல்லுவான்! குளத்துல அயிர மீன புடிச்சத சொல்லுவான்! இப்படி எல்லாத்தையும் லட்சுமி கிட்ட சொல்லுவான்! லட்சுமி அவன் சொல்ல சொல்ல எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவன் கொண்டுவந்த கொடுத்தத தின்னுட்டு நிக்கும்! ஆனா சின்னத்துரைக்கோ எதுவும் லட்சுமியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை!
ஒருநாள்……..
எல எந்திருல எல எந்திரி என பவுனு சின்னதுரையை தூக்கத்தில் இருந்து எழுப்பிய நேரம் அதிகாலை ஐந்து மணி ! எல துரை நம்ம லட்சுமி குட்டி போட போகுதுல என பவுனு சொன்ன அடுத்த முப்பது நொடிகளில் சின்னதுரை துள்ளி எழுந்து செல்லையா கோனார் வீட்டு தொழுவத்தில் இருந்தான்! மார்கழி குளிரில் நாற்பது வாட்ஸ் பல்ப்பின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் செல்லையா கோனார் அரைக்கால் சட்டை அணிந்து வெறும் உடம்பில் , அமர்ந்திருந்த லட்சுமியின் பின்புறம் எதையோ இழுத்து கொண்டிருந்தார்! சின்னதுரை கண்ணை கசக்கி கொண்டு பார்க்கும் பொழுது குட்டியின் காலும் தலையும் வெளியே தெரிய மிகுந்த பயத்துடன் வெறிக்க வெறிக்க அதை பார்த்துக் கொண்டிருந்தான் சின்னதுரை! செல்லையா கோனார் பக்குவமாக அதை வெளியே எடுக்க முயன்று இறுதியாக அதில் வெற்றியும் பெற்றார்! சின்னதுரைக்காக பிறந்தது போல அழகான காளை கன்னுக்குட்டி பிறந்தது!! பிறந்த கன்னுக்குட்டியை லட்சுமி நக்கி கொண்டிருக்க வைக்கோலில் சின்ன மெத்தை போல் சிவகாமி செய்து அதில் பிறந்த குட்டியை போட்டனர்! அதன் கதகதப்பில் குட்டி சிறிது எழும்பியது, தடுமாறியது, பின்பு நின்றது சிறிது நேரத்தில் லட்சுமியின் முலை காம்பை பிடித்து இழுத்து சீம்பாலை குட்டி குடிக்க, பொழுதும் நன்றாக விடிய ஆரம்பித்த அந்த கணம்…….
திடீரென்று பிறந்த குட்டி தொப்பென்று விழுந்தது, செல்லையா கோனாரும் சிவகாமியும் பதறி அதன் அருகில் வந்தனர் அதற்கு சிறிது வலிப்பு வந்தது அந்த வலிப்பு அதிகரிக்க நிலைமை புரிந்த அனுபவசாலிகளான இருவரில் சிவகாமி கோயில் விபூதியை குட்டி மேல் பூச, செல்லையா கோனார் குட்டியின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு தனக்கு தெரிந்த மருத்துவ முறைகளை நீராக அதன் வாயில் செலுத்த அந்த மருந்து உட்செல்லாமல் திரும்ப வெளியே வர செல்லையா கோனார் கலங்கிய கண்களுடன் சிவகாமியை பார்க்க சிவகாமி அழுதபடி குட்டியின் தலை தன் கணவன் மடியில் இருந்து தொங்கியதை பார்த்தாள்!! இவை அனைத்தையும் பார்த்த சின்னதுரை பயத்தில் நடுங்கி விட்டான்! ஒரே ஓட்டமாக வீட்டிற்கு ஒடி வந்து போர்வையை எடுத்து மூடிக்கொண்டான், குட்டியை இழந்த லட்சுமியின் கதறல் மட்டும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தது! பவுனு லட்சுமியின் கதறல் கேட்டு அங்கே ஓடிச் சென்று நடந்ததை அறிந்துக் கொண்டாள்!!
இரண்டு நாட்களுக்கு பிறகு எல துரை ஒரு எட்டு போய் லட்சுமிய பாருல அது குட்டி செத்து போனதுல இருந்து சாப்பிடவே இல்லையாம் நீ போய் அகத்திக்கீரைய போட்டுட்டு என்னனு போய் பாருல! என்று சின்னத்துரையை பார்த்து பவுனு சொல்ல.. ரொம்ப பயந்து இருந்த சின்னதுரை இறுதியாக பயத்துடனே லட்சுமியை பார்க்க சென்றான்!
உடல் மெலிந்து இருந்த லட்சுமியை பார்த்ததும் சின்னதுரை அதிர்ச்சி ஆனான்! அதன் அருகில் இறந்த லட்சுமியின் குட்டியினுடைய தோலில் செய்யப்பட்ட பொய் பொம்மையை லட்சுமி நக்கி கொண்டிருந்தாள்! செல்லையா கோனார் இல்லை சிவகாமி வீட்டில் ஏதோ வேலையாக இருந்தாள்! இம்முறை லட்சுமி அருகே போகவே பயந்த சின்னத்துரை வீட்டிற்கே திரும்ப வந்து விட்டான்! மூன்று நாட்கள் பிறகு சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்ல தயாராகி கொண்டிருந்தான்! பவுனு கண்களில் நீர் வர அவனுக்கு சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தாள்! அம்மோவ் ஏன் அழுற என்றான் சின்னதுரை, பதில் எதுவும் சொல்லாமல் அவனுக்கு சாப்பாடு வைத்தாள் பவுனு! எதுவும் புரியாத சின்னதுரை சாப்பிட்டு விட்டு கிளம்பி செல்லும் போது செல்லையா கோனார் வீட்டின் முன் பஞ்சாயத்து வண்டி நின்றது, அதில் இறந்து போன லட்சுமி பிணமாக பத்து பேரால் தூக்கி போடப்பட்டு அந்த வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டாள்!
சின்னதுரை நடப்பது புரிந்துக் கொண்டு அப்படியே சிலையாக நின்றான்! இனிமே லட்சுமி வரப்போவதில்லை என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது! மெதுவாக செல்லையா கோனார் வீட்டு தொழுவத்திற்க்கு சென்றான். அங்கே முழு தொழுவமும் வெறிச்சோடியது, லட்சுமி இறுதிவரை தன் குட்டி என்று நம்பிய அந்த தோல் பொம்மை மட்டும் அங்கே கிடந்தது! அதை தன் பிஞ்சு கைகளால் தடவி கொடுத்தான் சின்னதுரை!
தன் குட்டி இறந்ததால் அதன் வலியை தாங்க முடியாமல் எதுவும் சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக் கொண்டு லட்சுமி அன்று தற்கொலைதான் செய்து கொண்டாள் என்பதை இன்று வளர்ந்து வங்கி பணியில் இருக்கும் சின்னதுரை புரிந்துக் கொண்டான்!!