– பாலமுத்துக்குமார். பா

இன்னும் விடியவில்லை, இருள் அகலாப் பகல் அது. திடீரென தூக்கம் களைந்து விடவே, வீட்டின் முற்றத்தில் இருந்தp படியில் வந்து அமர்ந்தேன். முதல் நாள் இரவு பெய்த மழையால், எங்கள் வீட்டுத்தோட்டம் சில்லென ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கியிருந்தது.
இந்த நானூறு சதுர அடி வீட்டுத்தோட்டம் அபினவ்-ன் பரிந்துரைப்படி தான் அமைக்கப்பட்டது. இந்த இல்லத்திற்கு சாந்தி இல்லம் என்று என் பெயரை வைக்க வேண்டும் என்பதும், அபியின் விருப்பம் தான்.
புற்களின் மீது இருந்த மழைத்துளிகள், முற்றத்தில் அணைக்காமல் இருந்த விளக்கொளியால் மின்னிக்கொண்டு இருந்தன. நேற்று மொட்டாக இருந்த ரோஜாக்கள், இன்று பூத்து விட தயாராக இருந்தன. காட்டு மல்லிச்செடியில் மலர்ந்த பூக்களின் வாசம், என்னை அவைகளின் பக்கம் இழுத்து, தங்களைப்பறித்து சூடிக்கொள்ளத் தூண்டின. தவளைகள் இரவு முழுவதும் கத்தி விட்டு சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தன. பூச்சிகள் மின் விளக்குகளின் கீழே சில செத்தும், சில அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தன. கேட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் இருந்த மைனா குருவிகளின் குடும்பம் தங்கள் நனைந்த உடம்பை உலர்த்த சூரியனின் வருகைக்காக கத்திக்கொண்டு இருந்தன.
நானும் அபியும் இந்த வீட்டை எங்கள் இருவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறே வடிவமைத்தோம். ஏனென்றால் மூன்றாவதாக விருப்பத்தைச் சொல்ல, வேறு யாரும் எங்களுடன் இல்லை. இந்த வீட்டில் நாங்கள் குடிபுகுந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகின்றது. அதுவரை பக்கத்தில் இருக்கும் சர்ச்சுக்குப் பின்னாடி இருந்தப் புனித வளனார் தெருவில் தான் குடி இருந்தோம். இந்த நாளில் தான் குடியேற வேண்டும் என்பது முழுக்க முழுக்க என்னுடைய விருப்பம் மட்டும்தான். இந்த நாளை நான் தேர்வு செய்ததில் எந்த பஞ்சாங்க பின்புலமும் இல்லை, எனக்கு அவைகளில் நம்பிக்கையும் இல்லை. இந்த நாள் என் வாழ்வில் கொண்டாட்டத்திற்கான நாளும் இல்லை. ஆனாலும் துளி அளவும் வருத்தப்படாமல், என் வாழ்வை நான் எதிர் நோக்க முடிவு செய்திருந்த நாள்.
எப்போதும் இந்த நாளில் அபினவ்வும் நானும், புதிதாக சிறகு முளைத்தப் பறவை போல எந்த நோக்கமும், திட்டமிடலும் இல்லாமல் எங்கும் சுற்றித்திரிவோம்.
இந்த நாள் மட்டும் அல்ல, மாதம் ஒரு முறையோ, இரு முறையோ, எத்தனை முறை தோன்றினாலும் இவ்வாறு செல்வது வழக்கம். இருவரில் ஒருவர் முடிவு செய்தாலும் போதும், நான் என் அலுவலகத்திற்கும், அபி அவன் ஸ்கூல்க்கும் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம். வருடம் இருமுறை வெளியூருக்கும், மீத நாட்களில் உள்ளூரிலும் திட்டமிடுவது வழக்கம். வெளியூர் பயணங்களை அபினவும், உள்ளூர் பயணங்களை நானும் முடிவு செய்துக்கொள்வோம்.
இன்றைய நாள் உள்ளூரில் ஊர் சுற்றுவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. என் மனதில் இருந்த அந்த விடயத்தை அபியிடம் சொல்லிவிடவேண்டும் என்றும் முடிவுசெய்து இருந்தேன். தூங்கி எழுந்த அபி பின்னால் வந்து என்னை கழுத்துடன் கட்டிப்பிடித்தப் போதுதான், நன்றாக விடிந்துவிட்டதை உணர்ந்தேன்.
“ஹாய் அபி, குட் மார்னிங்” என்று என் கழுத்தில் கோர்த்து இருந்த அவன் கைகளை பற்றிக்கொண்டே சொன்னேன்.
“மார்னிங் மா!… ஏம்மா, நேத்து நைட்டு செம மழை போல!!!” என்றான் அபி…
“ஆமா டா… நல்ல மழை!. அதான் நல்லா ஜில்லுனு இருக்குனு நானும் ரெம்ப நேரமா அப்படியே உக்காந்துட்டேன்.” என்றேன்.
“ஆமா மா, நைஸ் கிளைமேட்… அப்டியே எனக்கு ஒரு காபி கிடைக்குமா?”-னு கேட்டான் அபி.
“மறந்தே போயிட்டேன், இரு காபி போட்டுட்டு வாரேன்” என்று சமையல் கட்டுக்குள் சென்றேன்.
அங்கு காபி போடப்பட்டு, எங்கள் இருவரின் குவளையிழும் இருந்தது. அபினவ் தான் போட்டு வைத்து இருக்கிறான். இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். அபியின் காபி எப்போதும் எனக்கு மிக பிடித்தமான ஓன்று. இதுபோன்ற குறும்புத்தனங்களுக்கு எப்போதும் அபியிடம் பஞ்சம் இருக்காது.
காபியை எடுத்துக்கொண்டு போய் குடுத்தேன். அவனுக்கு ஒரு பெருமிதச் சிரிப்பு. எனக்கு அந்த சிரிப்பும் ரொம்பப் பிடிக்கும். மகன் எது செய்தாலும், அம்மாவுக்கு பிடிக்கத்தானேச் செய்யும்.
அதிலும் அபி மாதிரி ஒரு சமத்து பையன யாருக்குத் தான் பிடிக்காது.
இருவரும் காபியை தோட்டத்தில் இருந்த அந்த பெஞ்சில் அமர்ந்துக் கொண்டு குடித்தோம்.
“அபி, இன்னைக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்”னு சொன்னேனே.
“சொல்லு மா” என்றான்.
“இப்ப இல்ல டா, வெளிய போறப்ப சொல்றேன்” என்றேன்.
“அப்டி என்ன மேட்டர் மா?” என்றான் அபி.
“சொல்றேன் டா, நீ போயி குளிச்சிட்டு கிளம்பு…” என்றேன்.
“சரி…நோ ப்ராப்ளம்..” என்று நான் சொன்னதுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் கிளம்பச் சென்றான்.
ஒன்பது மணி இருக்கும், இருவரும் காரில் கிளம்பினோம்.
கார் சிறிது தூரம் சென்ற பின்பு, “அபி, நான் சொல்றத கொஞ்சம் பதட்டப்படாம கேக்கணும்…. ஓகேவா?”. என்றேன்.
“மா, நான் ஏன் பதட்டப்பட போறேன்…. நீ சொல்லு…” என்றான்.
“சரி சொல்றேன் டா, பட் வெயிட்” என்றேன்.
“என்னம்மா இது ஓவர் சஸ்பென்சா இருக்கு?” என்றான் அபி. ஒரு சிறு புன்னகையுடன் அந்தக் கேள்வியைக் கடந்தேன்.
அந்த சிரிப்புடனே காரை, நாங்கள் எப்போதும் வந்து அமர்ந்து பேசும் சர்ச் வளாகத்தில் இருந்த அந்தப் பெரிய மரத்தின் அடியில் கொண்டு சென்று நிறுத்தினேன்.
மரத்தின் அடியில் இருந்தப் பென்ச் தான் எங்கள் உரையாடல்களின் ஒரே சாட்சி. நாங்கள் பேசிய, பக்கத்து வீடு ஆண்டி அந்த அங்கிளை அடக்க கையாளும் உத்திகளையும், நிகோலஸ் டெஸ்லா மாறுதிசை மின்னோட்டத்தை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும், வாழும் நல்லிணக்கம் புத்தகத்தில் சபா நக்வியின் கண்ணோட்டத்தையும், அந்த பென்ச்சும் கேட்டுக்கொள்ளும். பென்ச் மேலே இருந்த இழைகளை கைகளால் தள்ளி விட்டுவிட்டு இருவரும் உட்கார்ந்தோம்.
ஒரு சிறிய தயக்கத்துடன் நான் மெதுவாக ஆரம்பித்தேன்.
“அபி… உன் அப்பா இன்னும் சாகல., ஹி இஸ் ஸ்டில் அலைவ்… பட் எங்க டிவோர்ஸ்க்கு அப்புறம், வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார். இன்னையோட பதினாலு வருஷம் ஆயிடுச்சு…” என்றேன்.
ஒரு மௌனம் இருவரையும் சூழ்ந்துக் கொண்டது.
அப்போது தான் சர்ச்சில் ஞானஸ்நானம் செய்த பெண் குழந்தை ஒன்று வந்து, “இந்தாங்க ஆண்ட்டி கேக் எடுத்துக்கோங்க” என்று அந்த மௌனத்தை கலைத்தது.
“காட் பிளஸ் யு டா குட்டி,” என்று ஒரு கேக் மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறுமியின் நெற்றியில் முத்தம் இட்டேன். அந்தச் சிறுமி தன் அப்பாவுடன் அங்கு இருந்து நகர்ந்தாள். அந்தச் சிறுமியை பார்த்து சிரித்த மெல்லிய புன்னகையுடன், அபி என்னைப் பார்த்தான்.
அபினவ் அவன் உதட்டில் இருந்த அந்தப் புன்னகையை விட்டுவிடாமல். “மா…. உன்ன டிவோர்ஸ் பண்ண அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்றான்.
“என்ன அபி இந்தக் கேள்வியை முதல்ல கேக்குற, உன் அப்பா யாரு, எங்க இருக்காருனு கேக்க தோனலயா?” என்றேன்.
“மா, எனக்கு அப்படி ஏதும் தோனலையே… உன்ன டிவோர்ஸ் பண்ண எப்படி ஒருத்தருக்கு மனசு வந்துச்சுனு தான் தோனுது?” என்றான்.
எனக்கு என் மகனின் மீது ஒரு பெருமிதம் தொற்றிக்கொண்டு, என் முகத்தில் மெல்லிய சிரிப்பாக ஒளிர்ந்தது.
“மா, என்னமா சிரிக்குற?….” என்றான் அபினவ்.
“ஐ அம் ரியலி ப்ரௌட் ஆப் யூ அபி… நீ வேற மாதிரி ரியாக்ட் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்.” என்றேன்.
“மா, எனக்கு ரியாக்ட் பண்ண எதும் தோனல, பட் கொஞ்சம் ஷாக்கா தான் இருக்கு…. ஏன்மா, டிவோர்ஸ் ஆச்சு?…” என்றபோது அவனிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது.
நான் சொல்லிவிட துணிந்தேன்.
அபி, நாங்க ரெண்டு பேரும் ஐ.டி.-ல ஒர்க் பண்றப்ப, லவ் பண்ணி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க… வழக்கம் போல எல்லா பேரன்ட்ஸ் மாதிரியும், எங்க ரெண்டு பேரு பேரன்ட்ஸும் எங்களை ஏத்துக்கல… தனியாத்தான் கிண்டி-ல ஒரு ஃபிளாட் ஒன்னு சொந்தமா வாங்கி இருந்தோம். ரெம்ப சந்தோசமா தான் இருந்தோம்… லோன் வாங்கி தான் கார், ஃபிளாட் எல்லாம் வாங்கி இருந்தோம். முப்பத்தைந்து லட்சம் அப்போது லோன் இருந்துச்சு…. எங்கத் தகுதிக்கு சற்று அதிகம்னாலும், அப்ப அது எதும் ஆடம்பரமாக தெரியவில்லை. இருவரும் லண்டனுக்கு ஆன்சயிட் போயிட்டு வந்தா லோனை வேகமாக அடைச்சிடலாம்னு இருந்தோம். அப்பறம், ஒன்ற வருசத்துக்குப் பின்னால, எனக்கு மட்டும் ஆன்சயிட் ஆஃபர் வந்துச்சு.
அடுத்தநாளே நீ கருவுல இருக்குறதும் கன்ஃபார்ம் ஆச்சு. எனக்கு ரெம்ப சந்தோசம். ஆனா, டாக்டர்ட்ட போனப்ப, கருவோட வளர்ச்சி இன்னும் ஸ்டெபிளைஸ் ஆகல… அதுனால ஃபிளைட் ட்ராவல் நாட் அட்வைஸபெல் பார் பைவ் மந்த்ஸ்னு சொல்லிட்டாரு.
நான் உன்ன இலக்க ரெடியா இல்ல… சோ, ஆன்சயிட் ஆஃபர ரிஜெக்ட் பண்ணலாம்னு உங்க அப்பாட்ட சொன்னேன். பட் அவரு அத ஒத்துக்கல. உன்னக் கலைச்சிட்டு, லண்டன் போகச் சொன்னாரு. எனக்கு அதுல உடன்பாடு இல்ல… இந்த ஒரு விசயத்துல அவர் பேச்ச நான் கேக்காம இருந்தது, அவருக்குள்ள அவ்ளோ ஈகோவ உருவாக்கும்னு நெனைக்கல.
அதுக்கப்புறம், சின்ன சின்ன விசயத்துக்கு கூட வாக்குவாதம் பெருசாயிட்டே இருந்துஞ்சு. அது மாதுரி நடந்த ஏதோ ஒரு சின்ன சண்டைல கோவிச்சிட்டு, ஒரு நாள் வெளிய போய்ட்டாரு. எனக்கு நாளுக்கு நாள் சண்ட பெருசாயிட்டே இருந்தது பிடிக்கவே இல்ல. அதனால என் ஃபிரண்ட் வைஷு ரூமுக்கு கொஞ்சநாள் போயி இருக்கலாம்னு, அவர் ஃபோன்க்கு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு போய்ட்டேன். அப்புறம் நான் எப்ப ஃபோன் பண்ணுனாலும் எடுக்கவும் இல்ல அவரு.
ஒருநாள் வைஷு ஃபோன்கு அவர் ஃபோன் பண்ணி, எனக்கும் அவளுக்கும் செட் ஆகாதுனு சொல்லிட்டு கட் பண்ணிட்டாரு. நான் அவர் ஈகோ தான் இப்டிலா செய்யுது, குழந்தை பொறந்தா சரி ஆயிடுவார்னு நெனச்சேன்…
அடுத்த நாளே எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் வந்துச்சு. எனக்கு ஒண்ணுமே புரியல… அவரை ரீச் பண்ணவும் முடியல… அவர் ஃபிரண்ட்ஸுக்கும் ஒன்னும் தெரியலனு சொல்லிட்டாங்க.
அதுக்கப்புறம் அவரை நான் கோர்ட்டுல தான் பாத்தேன்… கோர்ட்டுல எதுக்கு நீங்க டிவோர்ஸ் கேக்குறீங்கனு கேட்டதுக்கு… அவ கருவுல இருக்குறது என் குழந்தை இல்லனு சொல்லிட்டாரு… இதக் கேட்டதும் எனக்கு என் உடம்பே வேர்த்துப்போயி, கை, காலுலாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு…
ஜட்ஜ் என்கிட்டே, இதுக்கு நீ என்னமா சொல்றன்னு கேட்டப்ப… நான் பயங்கரமா அழுதுட்டேன்… நான் அழுததப் பாத்துட்டு ஜட்ஜ்… மிஸ்டர், நீங்க எத வச்சு இப்டி சொல்றிங்கனு கேட்டார்… எனக்குத் தெரியும் சார், “திஸ் இஸ் நாட் மை சைல்ட்”னு மீண்டும் அழுத்தமாக சொன்னாரு… நான் எதுவும் பேசாம அழுதுட்டே இருந்தேன்… ஆனா ஜட்ஜ், குழந்தைப் பிறந்த உடனே டி.என்.ஏ. டெஸ்ட் செய்துதான் முடிவு செய்யப்படும்னு சொல்லிட்டாரு…
உடனே உங்க அப்பா…., இல்ல சார், “திஸ் ஐஸ் நாட் மை சைல்ட், ஐ நோ இட்” னு திரும்பவும் சொன்னாரு… இது எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த என்னால பொருத்துக்க முடியல. “ஆமா சார் ”…. இது இவரு கொழந்த இல்ல சார்-னு கத்திட்டேன்…
என் வாயில அந்த வார்த்தை எப்படி வந்துச்சுனு எனக்கு இன்னும் தெர்ல… அடுத்த ஒரு வருசத்துல எங்களுக்கு டிவோர்ஸ் ஆயிருச்சு… அவருக்கும் அவங்க சொந்தத்துல கல்யாணம் ஆகிருச்சு. அந்த லோன் வீடும் அவங்க சொந்த வீடாகிருச்சுனு ஃபிரண்ட்ஸ் மூலமா கேள்விப்பட்டேன். அவரு இப்ப எங்க இருக்காருனு எனக்கு தெரியாது என்று சொல்லி முடித்தப்பின்பு, என் மனம் நீண்ட நாள் சுமந்தப் பாரத்தை இறக்கி வைத்ததுபோல லேசாகிப்போனது.
அபியின் முகம் சற்று கடுகடுவென தான் இருந்தது. அதோடு கோபமாக,. “மா… அவங்க எங்க இருந்தா நமக்கு என்னமா?… நான் தான் அவங்கப் புள்ள இல்லயே…. உன் புள்ள மட்டும் தான மா நான்… இதைப் பத்தி இனிமேல் ஏதும் பேச வேண்டாம் ப்ளீஸ்…”
இது தான் அபினவ் தன் அப்பா பற்றி கடைசியாக பேசியது… தன்னை ஒதுக்கியவர்களை தானும் ஒதுக்கிவிடுவது தானே நியாயம்… இதில் எந்த முட்டாள்தனமான உணர்வுகளுக்கும் இடம் இல்லை என்பதை அபி புரிந்து இருந்தான்.
அந்தக் குட்டிப்பொண்ணு குடுத்த கேக்கை இருவரும் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.
வழக்கம்போல அன்றும், உல்லாசமாக சுற்றி திரியும் இரு பறவைகளைப் போல நினைத்த இடத்திற்குச் சென்றோம். கோவிலுக்குச் சென்று வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி, தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து வெகு நேரமாக பேசினோம்.
பின்பு என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு, மதிய உணவிற்கு அழையா விருந்தாளியாகச் சென்றோம். அவர்கள் குடும்பத்துடன் ஒரு இனிமையான கலந்துரையாடலுக்குப் பின், இருவரும் கடற்கரைக்குச் சென்றோம். அங்கு மாலைப்பொழுதிற்கே உரிய ஆரஞ்சும், மஞ்சளும் கலந்த வானம் அனைவரையும் மெய்மறக்கச் செய்துவிடத் தயாராக இருந்தது. அவ்வளவு பேச்சிற்குப் பின்னும் எங்கள் இருவருக்கும் அந்தக் கடற்கரை நடைமேடையில், அந்த உப்புக்காற்றின் தொடுதலில் பேசிக்கொண்டே நடப்பதற்கு, இன்னும் ஏதோ இருக்கத்தான் செய்தது.
அப்போது அபி,” அம்மா எனக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்னு தோணுது” என்றான்.
அதைக்கேட்டதும் எனக்கு ஒருவித வெக்கம் கலந்தச் சிரிப்பு வந்தது….
– கதைப் படிக்கலாம் – 112
இதையும் படியுங்கள் : உச்சிதனை முகர்ந்தால்…




