– மதுரை முரளி
மீட்டிங்கிற்குத் தயாரான ‘அருணா’ குரூப் மில்ஸ் அதிபர் அருணாசலத்தை, அவரது ஒரே பையன் அரவிந்த் தடுத்தான்.
“டாடி, எங்கே.. எங்கே கார்? நான் என் ஃப்ரெண்டு பார்ட்டிக்குப் போகணும்”
‘குப்’-பெனத் தலைக்கேறிய பீ.பி-யைச் சிறிது குறைத்தவர்,
“வீட்டுக் கார் சர்வீசுக்குப் போயிருக்கு. பஸ்ல போ” முனகியவாறே நகர்ந்தவர்,
அரவிந்த் அகன்றதும்,
“என் ஃப்ரெண்டு கம்பெனியில மேனேஜர் ட்ரெய்னிங் போகச் சொன்னா, மாட்டேங்குறான். எப்படி திருத்த இந்த உதவாக்கர பயல?” உரக்கத் திட்டினார்.
“பாட்டி., உழவர் சந்தை ஸ்டாப். சீக்கிரம் இறங்கு” கண்டக்டரின் விசில்.
எழுந்து, நிற்கவே தெம்பு இல்லாத நிலையில், கூடை நிறைய ஆப்பிள் சகிதம் தடுமாறினாள் பாட்டி.
ஸ்டாப் வந்ததும் முதலில் இறங்கிய அரவிந்திடம்,
“தம்பீ.. கொஞ்சம் இறக்கிவிடப்பா.”
கூடையை இறக்கியவன், கூடவே நடந்தான் பாட்டியுடன்.
“ஏன் பாட்டி, இந்தத் தள்ளாத வயசுல திண்ணையில கிடந்து முடங்காம, தேவையா உனக்கு?”
“தம்பீ.. நீங்க மகராசனாயிருக்கணும். எதையுமே சுயமா செஞ்சாதான் சுதந்திரமாக இருக்க முடியும். உழைப்புக்கு உண்மையில வயது, வரம்பு கிடையாது.”
‘சுளீர்’ சாட்டையடி அரவிந்தனுக்கு.
மறுநாள் “டாடி, நான் மேனேஜர் ட்ரெய்னிங்-ல இன்னிக்கு சேர்றேன்”
ஃபைல் சகிதம் பொறுப்பாய்க் கிளம்பியவனைப் பார்த்து…
“எப்படி.. இப்படி? ஒருநாள் பஸ் பயணத்தின் பலனா? என அதிர்ந்து அருணாசலம் கேட்க,
“அதெல்லாம்.. ஆப்பிள் ரகசியம்” கண் சிமிட்டிக் கிளம்பினான் அரவிந்த்.
– கதைப் படிக்கலாம் – 109
இதையும் படியுங்கள் : “எது கலாச்சாரம்?”