– சினோஜ்
அவன் தனது வீட்டில் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.
பல பிரச்சனைகள் அவனுக்குள் பிரவாகம் எடுத்தாலும், அவன் ஒரே விஷயத்தை மட்டுமே பலமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
இன்னும் சொல்லப்போனால், பைத்தியத்திற்கு முந்தைய நிலையில் என்று அதை வைத்துக் கொள்ளலாம்.
தன் மனைவி இறந்து இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகிறது. தனது பத்து வயது மகளும், ஒரு தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இது கொரோனா காலக்கட்டம் என்பதால், அவளது பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைனில் பாடம் எடுப்பதைக் கேட்டுப் படிக்க, ஒரு ஸ்மார்ட் போன் கையில் இல்லையே என்பதைவிட, அதனை வாங்குவதற்குத் தன்னிடம் வசதி இல்லையே என்ற ஏக்கம் அவனிடம் மலிந்திருந்தது.
எத்தனையோ பேரை வளர்த்துவிட்ட இந்தச் சென்னையில், தனக்கு ஒரு டெய்லர் வேலை கிடைத்தது. அதுவும், அந்த ஐந்துக்கு ஆறு என்ற சிறிய சந்தில், சிங்கர் மெஷினைப் போட்டு அமர்ந்தால், அருகில் உள்ளப் பெரிய பெரிய ஜவுளிக் கடைகளில் இருந்து எல்லாம் துணி் எடுத்துத் தைக்க விரும்புபவர்களை மடக்கிப் பிடித்து, இவனிடம் கொண்டுவர ஒரு நபரை நியமித்திருந்தான். அவருக்கு ஒரு பேண்ட் ஆல்ட்ரேசனுக்கு ரூ. 100 என்றால் பத்து ரூபாய் கமிஷன்.
இப்படி ஒரு நாளைக்குச் சில நூறுகள் அவன் கைக்கு கிடைத்து வந்தாலும், அந்தக் கடைக்கு வாடகைக்கு என, சில நூறுகளை அவன் ஒதுக்கி வைத்தே ஆக வேண்டும். அதுபோக, தான் குடியிருக்கும் வீடு தன் மனைவியின் அக்காவுக்குச் சொந்தமானது என்பதால், அதற்கெனத் தினமும் பணம் ஒதுக்கி வைத்து, மாதாமாதம் அந்த ஆஸ்பெட்டாஸ் போட்ட வீட்டுக்கு வாடகை தரவேண்டும்.
இதெல்லாம் சரியாய்ப் போய் கொண்டிருந்த போது, ஒரு சூறாவளியாக, இந்தக் கொடூரக் கொரொனா, சீனாவில் இருந்து வந்து இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருவதால், இந்த நான்கு மாதம் ஊரடங்கில் தனக்குச் சரியாக வருமானம் இல்லாமலும், வீட்டிற்கு வாடகைக் கொடுக்க முடியாமலும், வீட்டிற்குச் சமையல் ஜாமான்கள், மளிகைப் பொருட்கள் என எதுவும் வாங்கமுடியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான்.
அத்துடன் பாப்பா அடுத்து ஆறாம் வகுப்பு செல்லவுள்ளதால், அவளுக்கு ஆகஸ்ட் மாதம் வந்ததும், உயர் நீதிமன்றம் அண்மையில் தனியார் பள்ளியில் 40% பீஸை இப்போது வசூலிக்கலாம் என்று கூறியிருந்தது. அதனால் அதற்கான பணத்தை தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு அழுத்தம், கிடுக்குப் பிடிபோல் அவனைப் பீடித்தது.
பாப்பா கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கத் தன்னிடம் திராணியில்லாததை, அவன் பெரும் குறையாக எடுத்துக்கொண்டாலும், அவளுக்குத் தாய் இல்லாத குறையை, அவளது பெரியம்மா தீர்த்து வருகிறார் என்பதை நினைத்து, அவன் சிறிது ஆறுதல்பட்டுக் கொண்டான்.
இந்தச் சந்தோஷமும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த மூன்றாவது மாதம்வரை தான் நீடித்தது.
அன்றொருநாள், பாப்பாவின் பெரியம்மா முறைவாசல் பெருக்கிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து வீதியிலிருந்து ஒரு பெண்ணின் கழுத்துச் செயினைப் பறிந்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரு திருடர்கள், வாசலில் கோலம் போட்டுமுடித்து எழுந்த அவர் மீது, படார் என மோதிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
அவர் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால், இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில், அவர் முதுக்குப் பகுதியில் பலத்த அடிபட்டுவிட்டது. அவர் வலியால் அலறித்துடித்தார். அவரது கதறலைக் கேட்டு பதறியடித்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கான மருத்துவச் செலவுக்குப் பணம் அதிகளவு தேவைப்பட்டதால், அவர்கள் வாடக்கைக்கு விட்டுள்ள ஐந்து குடும்பத்தினரும், கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை; இவர்களும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களிடம் வாய் திறந்து வாடகைக் கேட்கவில்லை. ‘இயல்புநிலை திரும்பினால் கொடுத்தால் போகுது’ எனப் பெருந்தன்மையுடன், வள்ளல்போல் பரந்த மனப்பான்மையாக இருந்து விட்டனர்.
ஹவுஸ் ஓனர் அம்மாவை ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதித்து உள்ளதால், அவரது குடும்பத்தினர் பணம் திரட்டுவற்காக அலைந்து ஓடிக் கொண்டிருந்தனர்.
இப்போது அந்த வாடகைக்குக் குடித்தனமிருக்கும் ஐந்து குடும்பத்தினரும் ஒன்றுசேர்ந்து, தங்களிடம் உள்ள நகைகளைப் புரட்டி, அந்த ஹவுஸ் ஓனர் அம்மாவின் ஆபரேசனுக்குத் தங்களால் முடிந்தளவு உதவி செய்தனர்.
இந்த இக்கட்டான நிலையில், தனக்கும் தன் மகளுக்கும் அன்னமிட்ட அவருக்கு, தன்னால் பணமோ, பொருளோ கொடுத்து ஒன்றும் உதவ முடியவில்லையே! ஏன், நான்கு மாதங்களாக வருமானம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து, மேலே விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதும் வாடகையும் கொடுக்கவில்லை; வீட்டில் மளிகை ஜாமான்கள் வாங்க முடியாத நிலையிலும், ஹவுஸ் ஓனர் அம்மாதான் எங்கள் இருவருக்கும் தினமும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட்டுவந்தார்.
இன்று அவருக்கு இந்த நிலைமை என்றானபோது, எப்படி என்னால் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டாமல் இருக்க மனம் வந்தது என்று, தன் இயலாமையை நினைத்து அவன் உருகி வந்தான்.
ஹவுஸ் ஓனருக்கு அடிபட்டு இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றதால், பாப்பாவுக்கும் தனக்கும் அவனே சமைத்துக் கொண்டிருந்தான். அதுமட்டுமின்றி, அவர்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மற்ற உறவினர்களை மருத்துவமனைக்குள் கொரொனாவைக் காரணம் காட்டி அனுமதிக்கவில்லை என்பதால், இத்தனை சுகவீனத்தில் அடிபட்டவரை நேரில் சென்று பார்க்கவில்லை என்ற ஆதங்கம் அவனுக்கு ஏற்பட்டது.
வீட்டில் உள்ள கேஸ் அடுப்பில் பெரிய அடுப்பில் சாதமும், கடை அடுப்பில் தக்காளி ரசமும் வைத்துவிட்டு வந்துதான், இத்தனையும் அவன் யோசித்துக் கொண்டிருந்தான்..
பாப்பா வீட்டிற்குக் கீழே மற்றக் குழந்தைகளுடன் இணைந்துக் கவலையின்றி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தாள். இருவரும் காலையில் எதுவும் சாப்பிடவில்லை, வெறும் பட்டினியாய்க் கிடந்தார்கள். தன்னால் பசி தாங்கமுடியும் என்றாலும், பாப்பாவால் அது முடியாது. எனவே, அவளுக்காகவே அடுப்பைப் பற்றவைத்து மதியத்திற்குச் சமையல் செய்து கொண்டிருந்தான் அவன். இந்தச் சமையல் பொருட்கள் அனைத்தும், ஹவுஸ் ஓனரின் வீட்டினர் இனாமாய்க் கொடுத்தது. அதனால் வாய்கூசக் கடன் வாங்காமல் சுலபமாய்ப் பொழப்பு ஓடியது அவனுக்கு.
அதனால் மூன்று நாட்களும் அரிசி முதற்கொண்டு சாப்பாட்டிற்குப் பஞ்சம் இல்லை. ரசத்திற்கு வெங்காயம், தக்காளி, மிளகுதூள், பூண்டு ரசப்பொடி என அனைத்தும் போட்டவன், இந்த நினைப்பிலேயே அதை அடுப்பில் வைத்ததையே மறந்துவிட்டான்.
நாளைக்கு என்ன செய்வது என்ற கவலையும், மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையும், அவளுக்குச் சில நாட்களில் பீஸ் கட்ட வேண்டுமெனக் கூறியிருந்த பள்ளி நிர்வாகத்தின் நிர்பந்தமும், தன் மனைவி இறந்தபோது, தான் பித்துக்குழியாகி ஐந்து வயதுக் குழந்தையுடன் நடுத்தெருவில் நின்றிருக்கையில், தனக்கு யாருமே ஆதரவுக் கரம் நீட்டவில்லை; ஆனால், இப்போது மருத்துவமனையில் முடியாமல் உள்ள தன் மனைவியின் அக்காதான், தன்னை மனிதனாக மதித்து அவர்கள் வீட்டில், ஒரு வீட்டில் குடியிருக்க வைத்துள்ளார். அதற்கு அவர்களது குடும்பத்தினரின் நல்ல உள்ளமும் ஒரு காரணம்.
இல்லையென்றால், இந்த ஐந்து வருடமாக இங்குச் சொந்த வீட்டில் இருப்பது போல் இருக்க முடியுமா? தன்னைப் புறக்கணித்த சொந்த பந்தத்தின் முன் கவுரவமாகத் தலைகாட்ட முடியுமா? இல்லை பெண்ணைப் பெற்றவன் என்ற முறையில் பொறுப்பில்லாமல் ஊரில் நடமாட முடியுமா?
வேறெங்காவது குடியிருந்தால், அதற்குக் கட்டாயமாக சரியாக வாடகைக் கொடுக்க வேண்டும்; சாப்பாட்டிற்கு என தனியாகப் பணம் செலவழிக்க வேண்டும். இங்கு இருப்பதால், ஹவுஸ் ஓனர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தன்னையும், பாப்பாவையும் கருதி அன்பால் அரவணைத்திருக்கிறார், எனக் கண்ணீர் சிந்தினான் அவன்.
அவர்போல் தனக்கு இனி யாரும் உதவி செய்ய முன்வருவார்களா? அதேபோல் செய்ய முடியுமா? இதுபோல் நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளதால் தான், உலகில் முன்போல் மும்மாரி இல்லையென்றாலும், ஆங்காங்கே மண்ணில் மனிதர்கள் வாழக் கடவுள் மழை அருட்பாளிக்கிறார்
ஹவுஸ் ஓனர் விரையில் பூரணக் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரவேண்டும்! ஆனால், இனிமேல் நான் அவருக்குச் செலுத்தும் நன்றியாக, நான் இந்த வீட்டிலிருந்து வேறு எங்காவது சென்று விடுவேன். இந்த வீட்டை, எனக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டால், நிச்சயம் அவர்களுக்கு மூன்றாயிரம் வாடகைப் பணம் கிடைக்கும்! அந்த வாடகைப் பணமாவது அவர்களுக்குக் கிடைக்கட்டுமே! நான் தெருவில் கூட படுத்துக் கொள்வேன். ஆனால் மகள் பெரியவள் ஆகின்றவரை இங்கேயே பாதுகாப்பாக வளரட்டும். அவளது படிப்பிற்காகப் பொருளீட்ட, நான் மூட்டை தூக்கியாவதும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, இதை அப்படியே ஒரு கடிதத்தில் எழுதிவைத்தான்.
தன் மனைவி போன இடத்திற்குத் தானும் செல்லச் சில காலங்கள் ஆகலாம்! அதுவரை தன் இயலாமை எனும் குற்ற உணர்ச்சியின் பிடியில் சிக்கியபடி, அடுத்தவர்கள் உதவியை வலிய நம்பியே, உயிருள்ள காலம்வரை ஒண்டிக் குடித்தனம் வாழக்கூடாது என்ற உறுதியான முடிவால், அன்று தன் மனைவி உயிரிழந்த நாளில் இடிந்துபோன அவன் மனம் அதே நாளில் இன்று தெளிந்தது.
அவனை அவனே உணர்வதற்கு நடப்புச் சூழல்களும் ஒரு காரணம் என்றாலும், இதனைத் தன்னிச்சையாய் உருவாக்கிவிட்டது, அந்தக் கொரோனா காலம் தான்.
அதனால் ‘கெட்டதிலும் ஒரு நல்லது உள்ளது’என்பது, அனுபவ ரீதியாக அவனுக்குப் புரிந்தது. அப்போது, அடுப்பில் வைத்த ரசம் தீய்ந்துபோன வாசம் அவனது மூக்கைக் குடைந்தது.
தீய்ந்தது ரசம் மட்டுமல்ல, இத்தனை நாட்கள் அவனை ஒருக்கிடையில் முடக்கி அமரவைத்த சோம்பேறித்தனமும், கையாலாகாத்தனமும் தான்.
அவன் ஒரு புதிய மனிதனாகப் புறப்பட்டுவிட்டான்.
கதைப் படிக்கலாம் – 1
இதையும் படியுங்கள்: மிதிவண்டி…