– ந.சிவநேசன்

சங்கரி இன்று அதீத சந்தோஷத்தில் இருந்தாள். கண்ணன் ஆலயத்தின் முன் நின்று ‘கிருஷ்ணா முகுந்தா.. முராரே..’ பாடினாள். கண்ணோரங்களில் நீர் கசிந்து வழிந்தது. அவளுக்கு இரண்டு சந்தோஷம்.
ஒன்று ரகுவுக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்திருக்கிறது. மற்றொன்று அவளை அழைத்துப் போக வரப்போகிறான்.
வழக்கத்தை விட இன்று அதிகாலையிலேயே விழித்து விட்டாள். அந்தப் பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்தாள். வழக்கமாக வரும் தும்மலோ, ஜலதோஷமோ இன்று இல்லை. அடக்க முடியாமல் வெளியேறும் சிறுநீர் பிரச்சினையும் இல்லை. அவளுக்கே இதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
மனது அமைதியாக… ஆற்று நீரிலோடும் இலையைப் போல உள்ளுக்குள் பயணம் போவதை உணர்ந்தப்படி, சன்னலோரம் அமர்ந்திருந்தாள். வெளியே அவள் வயதையொத்த பெண்கள் யோகா செய்துக் கொண்டிருந்தார்கள்.
“சங்கரியம்மா.. நீங்கப் பயிற்சிக்கு வரலையா?” பக்கத்து அறையிலிருக்கும் சம்பூர்ணா கேட்டாள்.
“இல்ல.. தீபாம்மா.. நான் வரல. என் பையன் வர்ற நேரமாச்சு” என சொன்னதும் சிரித்துவிட்டு அவள் நகர்ந்தாள்.
அந்த ஹோம் கேரில் அவளோடு சேர்த்து நூற்றைம்பது பெண்கள் இருக்கிறார்கள். அவளுக்குத் தெரிந்தவரை பெரும்பாலானோர் தங்களின் பிள்ளைகளின் பெயரில் தங்களை அழைப்பதையே விரும்புகிறார்கள். கவிதாம்மா, ராகுலம்மா, விஷாலம்மா.. என எத்தனை அம்மாக்கள்..
இவளை ரகு அம்மா என யாரோ ஓரிருவர் தான் கூப்பிடுவார்கள். அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் புன்னகையை சேர்த்து நறுக்கித் தருவாள்.
ரகுவுக்கு அவள் சிரிப்பு ரொம்பப் பிடிக்கும். சிறுவயதில் அவன் அழுதாலும் இவள் அவன் முகத்தைப் பார்த்து சும்மாவேனும் சிரித்துவிட்டால் போதும். அவன் அப்படியே அழுகையை நிறுத்திவிட்டு அவளைப் பார்ப்பான்.
வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. உட்கார்ந்தவாறே திரும்பிப் பார்த்தாள். ரகுதான்… சட்டென எழுந்து தயாராக வைத்திருந்த துணிப்பைகளை தூக்கிக் கொண்டு வராந்தாவை நோக்கி நடந்தாள்.
எல்லாமும் கனவு மாதிரி இருக்கிறது. சங்கரி தான் அவனுக்கு உமாவை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். ஒரே பையன் என்பதால் வரப்போகிறவள் தன்னையும் தன் பிள்ளையையும் பிரித்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்…
திருமணமாகி முதல் குழந்தை சஞ்சய் பிறக்கும் வரை கூட, சின்ன சின்ன உரசல்கள் இருந்தாலும் சரியாகத் தான் போய் கொண்டிருந்தது. என்னத்தான் இருந்தாலும் தன் பிள்ளை எங்கே தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்ற பயம் நாளுக்கு நாள் அவளுக்குள் அதிகரித்துக் கொண்டேப் போனது. அந்த பயம் தான் அவனையும், தன்னையும் பிரிக்கப் போகிறது என்பது அவளுக்குத் தெரியவில்லை.
தான் அவனுக்கு ஏதேனும் ஒரு வேலை வைத்தால், மருமகள் உமாவுக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டாள். அதிலிருந்து ஏதாவது கிசுகிசுப்பாக இருவரும் பேசிக் கொண்டால் தன்னை ஒதுக்கத்தான் இருவரும் பேசுவதாக கருதி, ஒட்டுக்கேட்க ஆரம்பித்தாள்.
இப்போது நினைத்தால் கூட அந்தப் பழக்கம் தனக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்படும் அளவுக்கு, அது அவளை மோசமாக ஆக்கிரமித்திருந்தது.
உமா முதலில் அமைதியாக இருந்தாலும், ரகுவுக்கு அம்மாவிடம் இருந்தப் பாசத்தையும் அவளது ஒட்டுக்கேட்கும் பழக்கத்தையும் முடிச்சுப்போட்டு, தன்னை ரகுவிடமிருந்து சங்கரி பிரித்துவிடுவாளோ என்று பயந்தாள். இப்படித்தான் அந்த வீட்டில் முதல் சண்டை தொடங்கியது. முற்றிய சண்டையின் முடிவில் ரகு மயங்கி விழுந்ததும் தான், சங்கரி வீட்டை விட்டு வெளியேறும் சூழல் வந்தது.
“என்னம்மா.. நானே வரமாட்டேனா? எதுக்கு இப்படி தூக்கிக்கிட்டு தடுமாறுற?” என்றபடியே வந்து பையை வாங்கிக் கொண்டான். ஒவ்வொரு முறை பார்க்க வரும்போதும், தன்னை ஓடிவந்து கட்டிக் கொள்ளும் பேரன் சஞ்சய், இந்த முறை கண்கள் சிவக்க விசும்பியபடி வாசலிலேயே நிற்பதைப் பார்த்தாள்.
“ஏன்டா கண்ணா அழற.. என்னாச்சுடா தங்கம்?”
“அவனுக்குப் பூனை வேணுமாம்மா.. ஒரே அடம்”
“நான் வாங்கித் தரேன் கண்ணு.. வா” என்றபடியே தூக்கிக் கொண்டாள்.
வீடு வரும்வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காரிலிருந்து இறங்கியதும் சஞ்சய் வேகமாக ஓடிப்போய், தெருவோர குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு பூனைக்குட்டியை தூக்கி வந்தான். கருப்பும், வெண்மையும் கலந்த நிறத்தில் மேலெல்லாம் குப்பைப் படிந்து, அந்த பூனை எலும்பும் தோலுமாக இருந்தது.
“டேய்.. உனக்கு எத்தன தடவ சொல்றது?” என்றபடியே பூனையைப் பறிக்கப் போன ரகுவை உமா தான் தடுத்தாள்.
“அதான்.. நம்ம வீட்ல எலித் தொல்ல நிறைய இருக்குல்ல.. இருந்துட்டுப் போகட்டுமே..”
வந்த முதல் நாளே பேத்தியை தலைக்கு குளிப்பாட்டி விட்டாள். கால்களை நீட்டிப்போட்டு கால் சந்தில் குழந்தையை படுக்க வைத்து தலைக்கு கடலைமாவு தேய்த்து நன்கு உருவிவிட்டாள். சஞ்சய் பக்கத்திலேயே அமர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் ஒரு வருடம் வரையிலும் சங்கரி தான் குளிப்பாட்டினாள்.
என்னத்தான் கொண்டுப்போய் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வந்தாலும், இந்த குளிப்பாட்டும் வேலைக்கு எங்களை அழைத்து தானே ஆகவேண்டும் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். உண்மையில் இந்த வேலை அப்படித்தான். கொஞ்சம் பிசகினாலும் பிஞ்சுக் குழந்தை தாங்காது. கவனமாக குளிப்பாட்டி சாம்பிராணி தூபம் காட்டி, குழந்தையின் மூக்கு அழுக்கை பருத்தித் துணியால் சுத்தம் செய்து, உமாவிடம் நீட்டும் வரை அங்கு சங்கரி தான் ராணி.
குழந்தையைப் பராமரிக்கும் நேரம் போக, மீதி நேரமெல்லாம் அவளுக்கு பேரன் சஞ்சய் தான் துணை. பாட்டியும் பேரனும் அப்படி அளாவளாவிக் கொண்டார்கள். அந்தப் பூனையை அவன் அவ்வளவு கரிசனமாக பார்த்துக் கொண்டான்.
‘பாட்டி பூனை கண்ணு ஏன் இருட்டுல மின்னுது?’
‘பாட்டி அவ்ளோ பெரிய எலியை எப்படி சத்தமே இல்லாம பிடிச்சிருது?’
‘நீ பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எவ்ளோ பூன வளத்துருப்ப?’
என பூனையைப் பற்றியே ஆயிரம் கேள்விகள் அவளிடம் கேட்பான். எல்லாவற்றுக்கும் சலிக்காமல் அவள் பதில் சொல்வாள். சில நேரங்களில் தூங்கிய பிறகும், அவள் கழுத்து மருவை நோண்டிக் கொண்டே இருப்பான். அதுவும் கூட அவளுக்கு சுகமாக இருக்கும்.
ரகுவுக்கு அம்மா மீண்டும் தன்னிடம் வந்ததில் அவ்வளவு ஆனந்தம். அலுவலகத்தில் இருந்து வந்ததுமே சங்கரி அறைக்குச் சென்று, பத்து நிமிடம் பேசியிருந்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பான்.
உமாவும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிடம் பேசுவது, வீட்டுக்கு வந்ததை விட அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. சாப்பாடு கூட தட்டில் போட்டு, பேரன் சஞ்சயிடம் ‘கொண்டுப் போய் பாட்டிகிட்ட கொடு’ எனச் சொல்வது இவள் காதுக்கு இதமாக இருக்கும்.
அப்போதெல்லாம் உமாவை புரிந்து நடந்திருந்தால், இந்த நான்கு வருடங்களும் கூட பிரிந்திருந்திருக்க வேண்டியதில்லையே என வருத்தமாக இருக்கும். ஒரே மகனை பெற்றிருக்கும் அம்மாக்களின் மனநிலையைப் பற்றியும், அவர்களின் பயத்தினாலேயே குடும்பம் பிரிவது பற்றியும், ஹோம் கேரில் பலமுறை உளவியல் வகுப்புகளை நடத்தி இருக்கிறார்கள். அவற்றில் பங்கேற்றதில் இருந்து சங்கரி நிறைய பக்குவம் அடைந்திருக்கிறாள். இந்த அல்ப விஷயத்துக்காகவெல்லாமா சண்டைப் போட்டோம் என அவளுக்கே சிரிப்பாக இருக்கும்.
குழந்தைப் பிறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. முன் மண்டையின் பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக மூடத் தொடங்கி விட்டது. இனி பயமில்லாமல் யார் வேண்டுமானாலும் குளிப்பாட்டலாம். குழந்தையை குப்புறத் திருப்பிப் படுக்கவைப்பது எப்படி, உரை விழுந்தால் என்ன செய்வது என பல விஷயங்களை உமாவுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
குழந்தையை போலவே பூனையும் இப்போது கொழுக் மொழுக்கென நன்கு வளர்ந்து விட்டிருந்தது. வீட்டில் சுத்தமாக ஒரு எலிக்கூட இல்லை. மருந்தும், எலிப்பொறியும் செய்ய முடியாததை செய்து விட்டேன் பாரென, ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக அது கம்பீரமாக நடப்பது போலிருக்கும்.
இப்போதெல்லாம் குழந்தையை ஓரிரு முறை உமாவே சங்கரியின் மேற்பார்வையில் குளிப்பாட்டுகிறாள். ஒருநாள் கழுத்து சாயாமல் பிடித்துக்கொள்ள சங்கரி சாம்பிராணி தூபம் காட்டி எடுத்து வந்தபோது, தூபத்தை வெடுக்கென பிடுங்கியது போலிருந்தது. ஏதோ பதட்டத்தில் இருப்பாள் போலுமென சங்கரி பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.
ஆனால் நாளுக்கு நாள் உமாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் இருப்பதும், பாட்டி அறைக்குப் போய் வந்தபிறகு சஞ்சய் அதிக அடி வாங்குவதும் தினசரி நடக்க ஆரம்பித்தது.
ரகுவும் ஓரிரு முறை “ஏன் உமா இப்படி நடந்துக்குற?” என சத்தம் போட்டான். அதற்கும் பதிலில்லை. சங்கரி நேரடியாகவும் உமாவிடம் போய் பேசிப் பார்த்தாள். ம்ஹும்… அவள் நினைப்பதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பூனை இப்போது நன்கு வளர்ந்துவிட்டது. அதன் கழுத்தில் இறுக்கிய டாலர் செயினை கழட்டி சஞ்சய் தளர்வாக கட்டிவிட்டான்.
ஒரு நாள் இரவில் பால் வைத்திருந்த பாத்திரத்தை உருட்டி சமையலறையெங்கும் பால் சிதறியதில், உமா கடுங்கோபத்துடன் பூனையின் மீது கரண்டியை எறிந்தாள்.
“அடச்சை.. அதான் வந்த வேல முடிஞ்சிடுச்சில்ல.. இந்த சனியன் புடிச்ச பூனைய எங்கயாவது கொண்டுப்போய் விட்டுட்டு வாங்க..” எனக் கத்தினாள்.
சங்கரிக்கு ‘சுருக்’கென்றது. அடுத்த நாள் அதிகாலையில் துணிப்பையை எடுத்துக்கொண்டு தயாரானாள். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு நெட்டி முறித்தாள். ரகுவிடம் வந்து “என்னைக்கொண்டு போய் விட்டுடுப்பா..” என்றாள்.
“ஏன்மா இப்படி.. நான் அவகிட்ட பேசிப் பாக்குறேன்”
“அதெல்லாம் பிரயோஜனம் இல்லப்பா.. வந்த வேலை முடிஞ்சா கிளம்ப வேண்டியது தான்”
“அம்மா.. நான் சொல்றது என்னன்னா..”
“ஒண்ணும் சொல்ல வேணாம் ரகு. அவ மனசுல பயத்த விதைச்சதே நான் தானே.. எனக்காக நீ பேசி மயக்கம் போட்டு விழுந்து.. அதெல்லாம் வேணாம்பா.. வா போகலாம்..” எனப் பேசிக் கொண்டே வாசலுக்கு வந்து விட்டாள். வாசலில் இரவு விரட்டிவிடப்பட்ட பூனை நின்றிருந்தது.
சஞ்சய் கண்களை கசக்கியபடி ” பாட்டி.. எங்கப் பாட்டி போற?” என விசும்பினான்.
“சஞ்சய்.. நீ இந்தப் பாட்டிக்கு ஒரு கிஃப்ட் தரணும். இந்தப் பூனைய நான் எடுத்துக்கிறேனே..” எனக் கெஞ்சினாள்.
சஞ்சய் தலையாட்டப், பூனையை பரிவோடு மடியில் அமர்த்திக் கொண்டாள். ரகுவின் கார் ஹோம் கேரை நோக்கிப் புறப்பட்டது.
– கதைப் படிக்கலாம் – 108
இதையும் படியுங்கள் : “ஆப்பிள் ரகசியம்”




