– அனுஷ்யா ஷாம்பவி
(நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை)
தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர் (கற்பனை பெயர்). குரங்குகள் அதிகம் வசிக்கும் காட்டுப் பகுதி. ஐந்து வருடங்களுக்கு முன்புதான், ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றின் முயற்சியால் உருவாகியிருந்தது. மொத்தம் அறுபத்திரெண்டு அடுக்கு மாடி வீடுகள், ஐந்தே தெருக்கள் தான். சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு வாரியம் கெடுபிடியால் மேற்கொண்டு அங்கு வீடுகள் கட்ட மறுக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனை, பள்ளி, போலீஸ் ஏதும் இல்லாத, ஆனால் ரம்மியமான, அழகான, அமைதியான ஊர். இப்போது சில தினங்களாக கொரோனா கிருமி பரவலால் ஊரடங்கு சட்டத்தில் தவித்துக்கொண்டிருந்தது. நான்கு போலீசார் காவல் காத்து யாரையும் வெளியே விடாமல், வேண்டிய உணவு மட்டும் கிடைக்க வழிசெய்து வந்தனர்.
சுமார் ஒரு வாரம் கழித்து வனப் பகுதியிலிருந்து குரங்குகள் அந்த சிறிய நகருக்குள் ஆள் நடமாட்டம் காணாமல் போனதால், நுழைய ஆரம்பித்தன… முதலில் சேட்டை பல செய்த குரங்குகள், அதன் கூட்டம் சேரச்சேர அந்த சிறு ஊரை தன் ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவருவது போல் செயல்பட ஆரம்பித்ததும், பீதி தலை தூக்க ஆரம்பித்தது.
வாசல் வரை, மொட்டை மாடி வரை, பால்கனி வரை எட்டிப்பார்த்த ஜனங்களால், இப்போது ஜன்னல்கள் கதவுகள் சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே பயத்துடன் வாழும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது.
இரண்டு போலீசாரின் கைத்தடியை பறித்துக்கொண்டு அவர்களை கடித்து தாக்கியதில் நடுங்கிப்போனவர்கள், மறுநாளிலிருந்து வேலைக்கு வரவில்லை.
ஊரடங்கு எப்போது நிறுத்துவார்கள் என மக்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.
எல்லோர் கையில் தொலைபேசி இருந்ததால் இணையத்தின் மூலம் நாட்டு நடப்புகளையும் வேறு பொழுதுபோக்கு அம்சங்களிலும் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தனர். முகநூலில் பற்பல செய்திகள்…. சில நடுக்கத்தை அதிகரித்தன; வேறு சில ஆறுதலாக இருந்தன; இந்த ஊரடங்கினால் என்னென்ன நன்மைகள் என்றும், வேறு பல செய்திகள். “காஷ்மீரில் நாங்கள் ஏழு மாதங்கள் தவித்தோம், கைத்தொலைபேசி கூட உபயோகிக்க முடியாமல்….. வெளி உலகம் பற்றி ஏதும் அறிந்துகொள்ள முடியாமல், உற்றார் உறவினர் பற்றியும் அறிந்துகொள்ள முடியாமல்….” என்று ஒரு பதிவு. “இப்போது தான் கூண்டில் அடைபட்டு வாழும் மிருகங்கள், பறவைகள், எப்படியெல்லாம் தவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பது புரிகிறது” என்று பதிவிட்ட ஒருத்தி, தான் செல்லமாக வளர்த்து வந்த பச்சைக்கிளிகளை வெளியே பறக்கவிட்டதை காணொளி எடுத்து பதிவிட்டிருந்தாள். “ஊரடங்கு முடிந்ததும் நான் வளர்க்கும் மீன்களை ஆற்றில் விட்டுவிடப் போகிறேன்” என்று ஒரு சிறுவன் சபதமெடுத்து பதிவிட்டிருந்தான். “இனி நாய்கள், பூனைகள் தவிர வேறு எந்த செல்லப் பிராணிகளையும் வளர்க்க வேண்டாமே? நாய், பூனை வளர்க்கும்போது, அதற்கும் ஒரு துணை வேண்டும் என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்” என்று ஒரு வயதானவர் கைகூப்பி வேண்டிக் கொண்டார்.
வானரமூர் மக்களும் தாங்கள் குரங்குக் கூட்டங்களினால் படும் கஷ்டத்தை வெளிப்படுத்தினர். சுமார் ஒரு மாதம் கழித்து ஊரடங்கு நிறுத்தப்பட, மக்கள் வெளியே கையில் பிரம்பு மற்றும் கம்பி, பைப் போன்ற சின்னச்சின்ன ஆயுதத்துடன் குரங்குகளை எதிர்கொள்ள துணிந்து வெளியே வர நினைத்து எத்தணித்தது தான் தாமதம்…… Planet of The Apes ஆங்கில சினிமாவில் வந்தது போல் குரங்குகளின் படை அவர்களை சூழ்ந்தது. எல்லோரும் பதறியடித்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர்.
பக்கத்து கிராமத்திலிருந்து பல நாட்கள் கழித்து பால் விற்க சைக்கிளில் வந்தான் குமார். “அம்மா…. ஐயா…. பசும் பால்…. பசும் பால்” என்று கத்தியவாறு மணியடித்துக் கொண்டே முதல் வீதியில் நுழைந்தான். குரங்குகள் ஆங்காங்கே அமர்ந்து என்னென்னவோ சேட்டைகள் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். ஒன்று பாதாம் கனிக்கொட்டையை ஒரு கல்லால் அடித்து கொட்டையை எடுத்து சாப்பிடுவதில் மும்முரமாக…. ஒன்று தன் குடும்பம் சமேதமாக வாழைப்பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது… வேறு பல, கொய்யா மரத்தில் தாவித்தாவி நல்ல பழுத்தவைகளை தேடியெடுத்து சாப்பிட்டது… கவனித்துக்கொண்டே வந்தவனின் பின்னால் ஒரு கூட்டம் “இவன் யார் புதுசாக?…. இது என்ன வண்டி?…. என்ன கிண்ணங்கள்?…“ என்று எண்ணியவாறு, ‘ஆர்ர்ர்… க்கிர்ர்ர்ஹுர்ர்ர்…’ என்று சப்தமிட்டு மெதுவாக நடந்தன.
பல நாட்களாக பால் அருந்தாமல் கஷ்டப்பட்ட குடும்பப் பெண் ஒருத்தி, தன் இடுப்பில் கைக்குழந்தையுடன், ஒரு கையில் பாத்திரம் ஒன்று ஏந்தியவாறு வெளியே மெல்ல வந்தாள். குழந்தையை வாசல் கேட் அருகே நிற்க வைத்து, தெருவுக்குள் காலடி வைத்தாள். அவள் பின்னால் அவளின் கணவன் கையில் பிரம்போடு “ஆஷ்…. ஊஷ்” என்றபடியே தொடர்ந்தான். குமார் பெரிய பால் கிண்ணம் ஒன்றின் மூடியை திறந்ததும், வாட்டசாட்டமாக இருந்த ஒரு பெரிய குரங்கு திடீரென்று சைக்கிள் மேல் ஏறி கிண்ணத்திற்குள் எட்டிப் பார்த்தது. குமார் அதை விரட்ட கை ஓங்கியபோது, இன்னும் மூன்று குரங்குகள் சைக்கிள் மேல் தாவின. ஒரு குரங்கை தள்ளிவிட்டான்….. அவ்வளவு தான்… வேறோர் குரங்கு அவன் தலை மேல் ஏறி அவனை குதற துடித்தது. செய்வது அறியாமல் சைக்கிளை அப்படியே போட்டு அந்த பெண்ணை பார்த்து “ஒடுங்கம்மா..” என்று கத்திக்கொண்டு அவள் வீட்டு வாசலை நெருங்கினான். அவள் உள்ளே நுழைய முயன்றபோது, வேறோர் குரங்குக்கூட்டம் அவளின் இரண்டு வயதுக் குழந்தையை சுற்றி சுற்றி நடந்து, அதை ஆச்சரியமாக பார்த்தது.
குமாரின் தலையை பதம் பார்த்த அந்தக் கொடூரமான குரங்கு, அவன் தலையிலிருந்து கீழே குதித்து, அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட, அதன் பின்னால் மற்ற குரங்குகள் ஓடின. ஒரு கணம் ஸ்தம்பித்துப்போன அவள் கணவன், கையில் இருந்த பிரம்பை அந்தக் கொடூரமான குரங்கை குறிபார்த்து ஏவினான். பதட்டமான நிலைமையை பார்த்த குமார், தன் தலையில் இரத்தம் வடிவதையும் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு உதவ நினைத்து குரங்குக் கூட்டத்தின் பின்னால் ஓடினான். அடிபட்ட கொடூரமான குரங்கு குழந்தையை கீழே போட்டது…. ஆனால் வேறோர் பெரிய குரங்கு அக்குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு மரத்தின் மேல் ஏறியது. அதன் குடும்பம் சமேதமாக குழந்தையை தொட்டுத் தொட்டு ஆராய்ந்தது. பெண்மணி மயங்கி கீழே சாய்ந்தாள். கணவன் ஓவென்று அழுது கதற ஆரம்பித்தான். குமார் சில கற்களை பொறுக்கி குரங்குக் கூட்டத்தின் மேல் ஏவினான். அக்கம்பக்கத்தார் சிலர் உதவிக்கு வந்தனர். இன்னும் பல குரங்குக்கூட்டமும் மரத்தின் மேல் ஏறி, புது ஜீவனான அக்குழந்தையை சூழ்ந்தன. இன்னோர் பெரிய குரங்கு, குழந்தையை பிடுங்க சண்டையிட்டது. குழந்தை செய்வது அறியாது அழ ஆரம்பித்தது….. ‘காச்மூச், கீச்மூச்’ என்று கூட்டம் கூட்டமாக சேர்ந்த குரங்குகள், போர்முனைபோல் சண்டைபோட்டுக்கொண்டன…… அப்படி சண்டைபோட்டு மரத்தில் தாவி தாவி ஓடியதில், திடீரென்று குழந்தை கீழே விழுந்தது…. குமார் ஓடிச்சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு, பெண்மணியின் வீட்டிற்குள் புகுந்தான். கணவன் தன் பக்கத்துக்கு வீட்டார் சிலரின் உதவியுடன் மனைவியை தூக்கிக்கொண்டு வீட்டை அடைந்தான். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் கண் திறந்தாள்…. “ஐயா….. உங்கள் குழந்தை….. உங்கள் குழந்தை” குமார் பதட்டமாக அவர்களுருகில் குழந்தையை கொண்டு வந்தான்…. அவன் கண்கள் குளமாகியிருந்தது…. “ஐயா….. செத்துடுச்சா பாருங்க…” கை கால்களை உதறிக்கொண்டிருந்த அந்த சிறு குழந்தையின் உயிர் பறிபோயிருந்தது.
வானரமூர் சுமார் நூறு வீட்டிலும் ஏதோ ஒரு பிரச்சனை தலை தூக்கியது…. வேலைக்குப் போக முடியாமல், பள்ளிக்குப் போக முடியாமல்…. மருத்துவமனைக்குப் போக முடியாமல்….. தத்தளித்த அனைவரும், முகநூலில் பதிவேற்றம் செய்தனர்…. சில நிமிடங்களில், குழந்தைக்கு நேர்ந்ததை படம் பிடித்த ஒருவன், அதையும் பதிவு செய்து, “Planet of The Apes’ சினிமாவை கண்கூடாக பார்க்கிறோம்…. உதவிக்கு வாருங்கள்” என்று அழாத குறையாக புலம்பி இருந்தான்.
இன்னும் சில நிமிடங்கள் கழித்து வேறொரு முகநூல் பதிவு ஒன்று, பார்த்த அனைவரையும் நிலைகுத்தி நிற்கச்செய்தது… ஆம்…. அந்தப் பதிவில் அந்தக் கொடூரமான குரங்குக்கூட்டங்கள் இன்னுமோர் குழந்தையை வேறொரு வீட்டிலிருந்து கடத்தியது (அதன் ஆராய்ச்சி முடிவு பெறாமல், முதல் குழந்தை கீழே விழுந்து மக்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டதால்!!). அந்தக் குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்….. பெண் குழந்தை…. ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே, ஒரு வெறி பிடித்த குரங்கு அவள் அந்தரங்க உறுப்புகளை பதம் பார்த்தது; நொடிப்பொழுதில் அக்குழந்தையை கற்பழிப்பது போல் எத்தணித்தது; அதை பார்த்த மற்ற சில பெரிய குரங்குகளும் கூட்டு பலாத்காரம் போல் நடந்துகொள்ள சூழ்ந்தன; அதை அடுத்த வந்த காட்சியில் அக்குழந்தையின் தாய் தலையில் அடித்துக்கொண்டு ஓவென்று புலம்புவது தெரிந்தது. சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அந்த சிறு பெண் குழந்தையை, பல ஆண்கள் சென்று குரங்குகளிடம் சண்டையிட்டு மீட்டு வந்ததை இன்னொரு பதிவு காட்டியது
எல்லா முகநூல் பதிவுகளும் காற்றுத் தீ போல் பரவியதில், பலர் போலீசுக்கு தொலைபேசி மூலம் முறையிட்டதில், அரைமணி நேரத்தில் சுமார் முப்பது போலீசார் அங்கு வந்து குவிந்தனர். ஆனால் எத்தனை குரங்குக்கூட்டம் அங்கிருக்கிறது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை; மனிதக்கூட்டம் குரங்குக்கூட்டத்தை லத்தி சார்ஜ் செய்தும் பலனளிக்கவில்லை. அவர்களிடமிருந்த லத்தியை பிடுங்கி அவர்களையே துரத்தித்துரத்தி விரட்டியது குரங்குக்கூட்டங்கள்.
சென்ற வருடம் பொள்ளாச்சியில் சில அரசியல்வாதிகளின் மகன்கள் பல பெண்களை மானபங்கப்படுத்திய செய்தியை மீண்டும் காட்டி, “அப்போது எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி இந்த அரசியல்வாதிகளால் கிடைக்கவில்லை. இப்போது சொல்கிறோம், இந்த சிறுமியை மானபங்கப்படுத்திய அந்த குரங்குக்கூட்டங்களை 24 மணி நேரத்திற்குள் அந்த நகரத்தை விட்டு வெளியேறச் செய்யவில்லை என்றால், நாங்கள் ஐந்து கல்லூரிப்பெண்களும் தீ குளிப்போம்” என்ற ஒரு பதிவை அந்த ஐந்து பெண்களும் ஒருசேர பதிவிட்டிருந்ததை பார்த்த முதலமைச்சர், தலையில் கை வைத்து சொரிந்தார். “என்னய்யா நடக்குது நம்ம நாட்டிலே?” என்று போலீஸ் கமிசினரைப் பார்த்து கத்தினார்.
கோயம்புத்தூருக்கு உல்லாச சுற்றுலா வந்த ஒரு வெளிநாட்டவர் தன் ட்ரோன் மூலம் அந்த வானரமூர் மேல் பறக்கவிட்டு நடந்த சில காட்சிகள் முகநூலில் பதிவு செய்து இருந்ததில், அங்கு சுமார் 1000 குரங்குகள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.
“காட்டு பகுதியை அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி ஆக்கிரமித்தது தவறு; குரங்குகளை கொல்ல நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று கொடிகள் ஏந்தியவாறு ப்ளூ-கிராஸ் கழகத்தின் இன்னோர் பதிவு போலீசுக்கு தலைவலி கொடுத்தது. முதலமைச்சர் சிறப்பு கூட்டம் ஒன்றை முக்கிய சில மந்திரிகள் மற்றும் போலீஸ் கமிசினரை வைத்து பேசி தீர்வு காண அலசினார்.
இந்நிலையில் ஊட்டியில் சுரேஷ் என்பவர் ஒருவர், தான் சிம்பஞ்சி மற்றும் ஓராங்குட்டான் போன்ற மொத்தம் 8 மனிதக் குரங்குகள் வளர்த்து வருவது, அவர்களின் சைகை பாஷை அறிந்து வைத்திருப்பது உலகம் அறிந்த விஷயம் எனவும், அந்த குரங்குக் கூட்டங்களிடம் பேசி சமாதானப்படுத்தி, அவைகளை காட்டிற்கு திருப்பி அனுப்ப முடியும் எனவும், தனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியிருந்தார்.
மூன்று மணி நேரம் கழித்து சுரேஷ் தன் 8 மனிதக் குரங்குகளுடன் வானரவூர் வந்தார். அவைகளின் கழுத்தில் கேமரா மாட்டப்பட்டிருந்தது
“நன்றாக கவனியுங்கள் – இன்று மனித குலத்திற்கு நீங்கள் ஆற்றும் பணி சரித்திரமாகும். பவ்வியமாக பேசி அந்தக் குரங்குக் கூட்டங்களை காட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு வெற்றியுடன் திரும்புங்கள்” சுரேஷ் வார்த்தைகளை கேட்ட அவை, கட்டை விரல்களை உயர்த்தி காட்டி புன்னைகைத்து, காரியத்தில் இறங்கின. 2 ட்ரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்பட்டது.
குரங்குக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று முதலில் பகைவர்கள் போல் சந்தித்துப் பேசி, பிறகு மெல்ல அருகருகே நெருங்கின. சுரேஷ் மொழி பெயர்ச்சி செய்ய, மொத்த நிகழ்வுகளும் இணையத்தில் உலகமே உற்றுப் பார்த்தது
“யார் நீங்கள்? இது ஐந்து வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் வாழ்ந்த இடம். அதோ அந்த மரத்தில், இந்த மரத்தில், குடும்பம் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருந்த எங்களை, இந்த மனிதர்கள் காட்டை அழித்து துரத்தினார்கள். அப்போது எங்கள் புத்தம் புது குழந்தைகள் பல செத்தன” கொடூரமான அந்த குரங்குக் கூட்டத் தலைவன் பேசிமுடிக்கும் போது அழுவது புரிந்தது.
“மனிதர்கள் உங்களுக்கு செய்தது தவறு தான் சகோதரர்களே; ஆனால் இந்த வானம், இந்த பூமி, நீர், காற்று எல்லாமே எல்லாரும் அனுபவிக்கத்தான் ஆண்டவன் படைத்திருக்கிறான். மனிதர்கள் தங்கள் தவறுகளை புரிந்துகொண்டு மாறி வருகிறார்கள். அவர்களையும் வாழவிடுங்கள்; உங்கள் காட்டுப் பகுதிக்கு திரும்பிப் போய்விடுங்கள்”
“முடியாது. வேண்டுமானால் அவர்கள் இந்த இடத்தை காலிசெய்யச் சொல்லுங்கள். அது தான் சனாதன தர்மம்!!”
“மன்னிக்கவும். நீங்கள் போகவில்லை என்றால் அடித்து விரட்டச் சொல்லி எங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள்”
அதன் பின் சண்டை தீவிரம் ஆனது. அதில் ஆறு குரங்குகள் செத்தன. மனிதக் குரங்குகளுக்கு பல காயங்கள்… செய்வது அறியாது சோகத்துடன் திரும்பின மனிதக் குரங்குகள்.
“மன்னிக்கணும் அப்பா; எங்களால் ஆறு குரங்குகள் செத்ததில் பாவம் செய்துவிட்டோமே என்று நெஞ்சு துடிக்கிறது!” தேம்பியவாறு சுரேஷிடம் சைகை பாஷையில் பேசியது மனிதக் குரங்கின் தலைவன்… ஆறுதலாக அணைத்த சுரேஷ், “சாரிப்பா… சரி இனி நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் போகலாம் வாருங்கள்” என்றார். இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பலர் கண்ணீர் வடித்தனர்.
அதன் பின் அகத்தியர் மலையில் எங்கோ உலாவிக் கொண்டிருந்த ஒரு சித்தர் தன் கைத்தொலைபேசி(!!) மூலம் நடப்பவைகளை கவனித்துக் கொண்டிருக்கையில், அவர் தனக்கு பரிட்சயமான மந்திரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
“இந்த உலகத்துல எல்லா ஜீவன்களுக்கும் சோறு தாங்க முக்கியம்; அதனால் நடக்கும் கூத்து தானே இதெல்லாம்?! ஐந்து அறிவுன்னு நாம சொல்றோம் அந்த விலங்குகளை பார்த்து; ஆனால் நான் சொல்வேன் அதற்கு ஐந்தரை அறிவு இருக்கு! சோறு கண்ட இடம் சொர்க்கம் அதுகளுக்கு. புரிஞ்சிக்கிட்டு செயல்படுங்கள்”
இதைக் கேட்ட மந்திரி சிறிதும் தாமதிக்காமல் செயலில் இறங்கினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆறு டிப்பர் லாரி வானரமூர் வந்தது; அதில் பல வகையான பழங்கள் குவிக்கப்பட்டிருந்தது. டிரைவர்கள் தங்கள் கதவை சாத்திக்கொண்டு உலா வந்தனர். குரங்குக் கூட்டங்கள் பின் தொடர ஆரம்பித்தது. கூடவே மக்கள் அனைவரும் தங்களுக்கு கூறப்பட்ட அறிவுரையின்படி, தட்டுகள் மற்றும் வேறு என்னென்ன சாமான்கள் கிடைத்ததோ அதை தூக்கிக்கொண்டு வாசலில், பால்கனியில் நின்றவாறு பலத்த ஓசை எழுப்பினர். அதை கேட்க பொறுக்காமல், குரங்குகள் வேகம் பிடித்து லாரியின் மேல் தாவின. லாரிகள் மெல்ல காட்டுப் பகுதிக்குள் புகுந்தது; சொல்லப்பட்ட ஒரு பாதுகாப்பான இடத்தில் எல்லா பழங்களையும் டிரைவர்கள் கொட்டினார்கள்.
பின்குறிப்பு: அதன்பின் குரங்குகளின் தொல்லை குறைந்தது. ஆனாலும், அவ்வப்பொழுது வந்து சென்றதில் அங்கு வசிப்பவர்கள் மெல்ல வேறு இடத்திற்கு போய்விட்டனர். ஓர் ஆண்டிற்குப் பின் வானரவூர் பேய் ஊராக (Ghost Town) மாறியது. கொரோனா போய்… கொ(கு)ரங்கு வந்த இந்த கதை, உலக மக்களுக்கு பல நல்ல பாடங்கள் புகட்டியது… மனித நேயம், மற்ற உயிரினங்கள் மேல் நேயம், குடும்பத்துடன் நேரம் கழிப்பது, உணவுகளை தேவைக்கேற்ப உபயோகிப்பது, சிறந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது, விவசாயம், மருந்து மற்றும் தூய்மை பணிபுரிபவர்களின் முக்கியத்துவம், இப்படிப் பல.
ஆனால் மறப்பது மனிதர்களின் குணம்…. இம்முறையும் மறந்து அலட்சியமாக வாழ நினைத்தால்….. திரும்பி வரும்… இப்போதுள்ளதைவிட மற்றொரு மிகப் பெரிய பேரிடர்!!