– கீர்த்தனா
தனிமை = முதுமை, வறுமையை விடக் கொடுமை. அதிலயும், நம்மமேல பாசம் வைச்சு இருக்குறவங்களை விட, நாம பாசம் வைச்சுருக்குற மனுஷங்க நம்மளை விட்டுப் பிரிஞ்சு போனப்பிறகு ஏற்படுற தனிமை இருக்கே, அது ரொம்பக் கொடுமை. எனக்கு எம்பது வயசாயிடுச்சு. என் வாழ்க்கையில எத்தனை விதமான உறவுங்க! எவ்வளவு சந்தோஷங்க! எவ்வளவு துயரங்க! எல்லாமே நான் பாத்து, உணர்ந்து, பரவசப்பட்டு, பரிதவிச்ச நேரங்க!
ஜன்னல் வழியே தெரியுதே அந்த வேப்பமரம், எனக்கு மட்டும் இனிப்பு. காரணம் அது ஒண்ணுதான் என்னைக்குமே எனக்குத் துணை. நான் மகிழ்ச்சியா இருக்கும்போது அது ஆடுறது…. என் ஆனந்தத்தில் பங்குக் கொள்றது போலவும், துன்பமா இருக்கும்போது அது வாடுறது…. என் வருத்தத்தில பங்குக் கொள்றது போலவும் எனக்குத் தோணும்.
அதைப் பாத்துக்கிட்டு இருக்கேன். என் மனசு பழைய நினைவுகளை அசைப் போடுது..
பக்கத்து வீட்டில இருந்து கேக்குற அந்த சினிமாப்பாட்டு எனக்காக எழுதுன மாதிரியே இருக்கு..
“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன? வேரென நீயிருந்தாய்! அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்!”
யாரை சொல்றது? யாரை விடுறது? வேரைப் பத்தி சொல்றதா? விழுதுகளைப் பத்தி சொல்றதா?
என் ராசாத்தியைப் பத்தி தான் சொல்லணும். என் பேத்தி! ஆஸ்பத்திரியில பிறந்திருந்தா நான் பாத்திருப்பேனாங்குறது சந்தேகம் தான். ஆனா, இங்க இந்த அறையிலதான் அவளும் பொறந்தா. திடீர்னு நடுராத்திரியில அவ அம்மாவுக்கு பிரசவ வலி. பக்கத்தில ஆஸ்பத்திரி இல்லாத ஊரு. இதே தெருவில இருந்த கிராமத்து மருத்துவச்சி பேச்சியம்மாதான், எங்க பல பேருக்கு கண் கண்ட தெய்வம்.
அப்படிப் பொறந்தவ என் அழகுக்கிளி ராசாத்தி. அவங்க அம்மா மாதிரி கருப்பா இருந்தாலும், கொள்ளை அழகு. சின்ன வயசுலியே ரொம்பப் புத்திசாலி. ஆனா ரொம்ப வாலு. நல்லா படம் வரைவா. நான் பாத்து ரசிச்சுக்கிட்டு இருப்பேன். சரியா வரலைன்னா, கோபத்துல அப்படியே அந்த வாட்டர் கலரைத் தூக்கி எறிவா. என்மேல அப்படியே விழும். அவங்கம்மா அவக் கையைப் பிடிச்சு அடிக்கும்போது, என் மேல சாஞ்சு அழுவா… எனக்கு மனசு கேக்காது. அவ அம்மா போயிட்டா, அப்படியே என்னை ஒட்டிப்படுத்து தூங்கிடுவா.
என் பொண்ணு புருஷன் மூர்த்தி, ஒரு முரடன். பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பிட்டு குடிச்சிட்டு படுத்துருவான். கற்பகம் விடியறதுக்கு முன்னாடி ராசாத்தியை தூக்கிக்கிட்டு, மைல் கணக்கா நடந்து மெயின் ரோடு போய், டவுனுக்குப் போற பஸ்சைப் பிடிச்சு வேலைக்குப் போவா. டவுன்ல தீப்பெட்டி கம்பெனியில காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் பீடி சுத்திட்டு, கடைசி பஸ்ஸைப் பிடிச்சு ராத்திரி வீட்டுக்கு வந்து சேருவா. அப்பா இல்லாதப் பிள்ளை கற்பகத்தைப் பார்க்க எனக்குப் பாவமா இருக்கும். அவ புருஷனைப் பார்க்கும்போது எனக்கு ஆத்திரமா வரும்.
ராசாத்தி கொஞ்சம் வளர்ந்தப் பிறகு, வீட்டுக்கு வெளியில அக்கம் பக்கத்து பிள்ளைங்களோட புழுதியோட புழுதியா விளையாடுவா. ஒருநாள் வயசுக்கு வந்துட்டா. அவ விளையாட்டு புத்தி மறைஞ்சு வெக்கப்படுற வயசு. படிக்க ஆசைப்பட்டும் குடிகார சோம்பேறி புருஷனை வச்சுக்கிட்டு, கற்பகத்தால பொண்ணை படிக்கவைக்க முடியலை. அவளையும் தன் கூட பீடி சுத்துற வேலைக்கு கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சுட்டா.
மூர்த்தி ஓசியில எங்கயாவது குடிச்சிட்டு வந்து, ராத்திரியில கற்பகத்தைத் துன்பப்படுத்துவான். பக்கத்துல பொண்ணு இருக்குன்னு கூட நினைக்காம, பொண்டாட்டியை கற்பழிக்குற மாதிரி கேவலமா நடந்துக்குவான்.
ராசாத்தி எங்க ஏரியாவுலேயே பேரழகி. அவக் கருப்பு முகத்துல, அந்த வெள்ளை வெளேர்னு பல் வரிசை கண்ணைப் பறிக்கும். மூக்கை சுளிச்சுக்கிட்டு, உதடைக் கடிச்சு ஒரு புன்சிரிப்பு சிரிப்பா. பாக்குற பய பூரா செத்து செத்து விழுவான். முத்து மணி சிதறுற மாதிரி ஒரு கலகப்பான சிரிப்பு. கேக்குற பய பூரா சுருண்டு முசக்குட்டியா மாறி, அவப் பின்னாலயே ஓடி வருவான்.
நடந்தா ஒரு கோவிலு சிற்பமே நடந்து வந்த மாதிரி ஒரு ஸ்டைலு. என் ராசாத்திங்குற சிலைக்கு மாப்பிள்ளையா வர எவனுக்குக் கொடுத்து வச்சிருக்கோ?னு நினைப்பேன். முக்கூடலுக்கு பீடி சுத்தப்போன பொண்ணு கண்ணுல, பீடி கம்பெனியில மேஸ்திரியா இருக்க ஒரு பையன் பட்டுட்டான்.
அவன் ஏர்மாபுரத்து ஏழைப் பையன். எப்பப் பாரு நெத்தியில சந்தனம் குங்குமம் தான். சின்ன வயசுல இருந்து ரொம்ப ஆன்மீக ஈடுபாடுள்ள பையன். எந்த கெட்டப் பழக்கமும் இல்ல. பீடிக் கம்பெனி முதலாளி பையன்ல இருந்து… வேலை செய்யுற எல்லாப் பயலும் ராசாத்தியோட ஒரு சிரிப்புக்கு ஏங்கிக் கிடக்கயில… ஐயப்பன் சிரமமே படாம அவ மனசுல நுழைஞ்சுட்டான்.
அவளுடைய அம்மாவுக்கு இஷ்டம் இல்லன்னாலும், அவ அப்பன் தொல்லைப் பொறுக்க முடியாம, எவன் கூடயாவது ஓடிருவாளோன்னு பயந்த கற்பகம் ஒத்துகிட்டா.
சரியா பொண்ணு கல்யாணம் அன்னைக்கு, கல்யாணத்துக்கு வச்சு இருந்தப் பணத்தை எடுத்துக்கிட்டு ஒடுனவன் தான் அவங்க அப்பன். திரும்பவே இல்ல. ஐயப்பன் ரொம்ப நல்ல பையன். எல்லா செலவும் நான் பாத்துக்குறேனு சொல்லி, பாபநாசம் உலகம்மன் கோவில்ல ராசாத்தியை மனைவியாக்கிட்டான். கல்யாணத்தன்னிக்கு புருஷன் இருக்கானா இல்லியான்னு தெரியாம, சுமங்கலிக் கோலத்துல பொண்ணை கல்யாணம் பண்ணிவச்சா கற்பகம்.
ஜோடின்னா அப்படியொரு ஜோடி! பொண்டாட்டி மேல ஐயப்பனுக்கு உயிரு. ஆனா என்னன்னா… பாதி நேரம் கோவில், பூஜைன்னு அலைவான். ஆன்மீகம் கணவன் மனைவி தாம்பத்யத்தை இளமையிலேயே தூரமாக்கிடுச்சுன்னா, அதுனால என்ன பலன்? வயசான நான் உணருறதை எப்படி ஐயப்பன் கிட்ட சொல்ல முடியும்? ஆனா ராசாத்தி சின்னப் பொண்ணு! எவ்வளவோ கற்பனைகளோட கல்யாணம் பண்ணியிருப்பா? கிடைக்காத வாழ்க்கையை நினைச்சு, தன் வாழ்க்கையை நரகமாக்கிக்கிற முட்டாப் பொண்ணுக மத்தியில, கிடைச்சது இவ்வளவுதான்னு மன நிறைவோட வாழுற ராசாத்தி மாதிரி பொண்ணுக, இந்தக் காலத்துல அபூர்வம்.
சபரிமலை சீசன். ஏற்கெனவே சின்ன வயசுல இருந்து பல வருஷம் போய் வந்தவன் தான் ஐயப்பன். கல்யாணம் ஆகி கொஞ்ச மாசம் தான் ஆயிருக்கும். ஏற்கனவே சாமியாருக்கு வாக்குப்பட்டு சம்சார வாழ்க்கையே எப்பவோனு இருக்குற ராசாத்தி, இந்த வருஷம் வேண்டாம்னு சொல்லிப் பாத்தா. அவன் கேக்கலை. காசு இல்லாத இந்த நேரத்துல போணுமான்னு வாதாடிப் பாத்தா. அவன் ஒத்துக்கலை. கிளம்பிட்டான்.
அவன் அம்மா, திருவண்ணாமலையில புருஷன் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான்னு கேள்விப்பட்டு, அவனைத் தேடப் போயிட்டா.
அன்னைக்கு ராத்திரிதான் அது நடந்தது. பீடிக் கம்பெனி முதலாளி பையன் ஹரிதாஸ், ஐயப்பனைத் தேடி வந்தான். கணக்கு வழக்குல, ஐயப்பன் கொஞ்சப் பணத்தைக் கையாடிருக்கான்னு சொன்னப்ப, என்னை விட ராசாத்தி அதிர்ந்துப் போனாள். “சபரி மலைக்குப் போக பணமில்லன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க! ஒருவேளை ஏதாவது எடுத்து இருந்தா… வந்த உடனே நான் மறுபடி வேலைக்குப் போய் அடைச்சிருதேன் முதலாளி!”
அவள் சொன்னாள். அதுவரைக்கும் என் காதுல விழுந்திருச்சு. அப்புறம், உன் கிட்ட தனியாப் பேசணும்னு அவன் என் பேத்தியை பின்புறம் இருக்குற காட்டுப் பக்கம் கூட்டிட்டிப் போனான்.
அதுக்கு அடுத்த ஒண்ணு, ரெண்டு நாள்ல… ஐயப்பன் சபரிமலையில காணாமப் போயிட்டான்னு தகவல் வந்துச்சு. ராசாத்தி உடஞ்சுப் போயிட்டா. சாப்பிடவே இல்லை. தூங்கவே இல்லை. அவ அம்மா மாதிரியே இவ புருஷனும் காணாமப் போயிட்டானானு அக்கம் பக்கம் பேசிக்கிட்டாங்க. போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தும், அவனைப் பத்தி துப்பு கிடைக்கல.
போன மாசம் ஒரு நாள். அதிகாலையில இதே ரூம்ல, என் அருமை ராசாத்தி… தூக்குல தொங்குனா. ஐயோ! ராசாத்தி என் செல்லமே… என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேடா… நான் யாரை நினைச்சு வருத்தப்பட்டாலும் ராசாத்தியை பாத்து ஆறுதலடைஞ்சுக்குவேன். இப்ப என் கண்மணியே போயிட்டா… யார் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும்? மக சாவு பத்தி தகவல் தெரிஞ்சு கற்பகம் ஓடிவந்தா. ஒரே சமயம் புருஷன் கிடைக்கல. மாப்பிள்ளை என்ன ஆனான்னு தெரியலை. ஒரே மகளும் போயிட்டா. என் மேல முட்டி மோதி கதறி அழுதா. நான் இன்னிக்கோ நாளைக்கோனு இருக்கேன், என்னால என்ன செய்ய முடியும்?
தற்கொலைனு போலீஸ் வந்துச்சு! எல்லாரையும் போகச் சொல்லிட்டு வீட்டை இழுத்துப் பூட்டுனாங்க. தற்கொலை நடந்த வீடுங்கறதுனால, யாரும் குடியும் வரலை. வாங்கவும் வரலை.
தற்செயலா, கற்பகம் தோழி மீனம்மா பொண்ணு ஈஸ்வரி, இன்னொரு பெண் கிட்ட ரகசியமா பேசிக்கிட்டு இருந்தது என் காதுல விழுந்துருச்சு.
“ஏண்டி! ஹேமா! புருஷன் சபரிமலைக்கு போயிருக்கும் போது, பொண்டாட்டி வேற ஒருத்தன் கூடப் படுத்து அவனுக்குத் துரோகம் பண்ணா, அவன் திரும்பவே மாட்டானாமே! உண்மைதானே? ஈஸ்வரி”.
“ஆமா! அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். ஏன் அதைக் கேக்கே?” அவள் தோழி கேட்டா.
“அன்னைக்கு வந்தானே முதலாளி மவன், அவன் ராசாத்தியை வலுக்கட்டாயமா கெடுத்துட்டான். அது அவ மனசை உறுத்திக் கொண்டே இருந்துச்சு. இதை என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டா. அப்ப அவ புருஷனை காணலைனு நியூஸ் வந்தவுடனே, இதைக் கேட்டா நான் அப்படித்தாம்ட்டி சொல்லுவாங்கனு சொன்னேன்… அன்னைக்கு ராத்திரியே தூக்குல தொங்கிட்டா” என்று பேசுனாங்க.
இப்ப எனக்குத் தெரியுது. தான் செஞ்ச தவறால புருஷன் உயிருக்கு ஆபத்துன்னு மனசாட்சி உறுத்த, தனக்கு தானே தண்டனை கொடுத்துக்கிட்டா.
ஐயப்பன் வருவானோ? மாட்டானோ? வரலைன்னா… தெய்வம் பழி வாங்கிருச்சுனு, தேவையில்லாம கடவுள் ஐயப்பன் மேல கெட்டப் பேரு வரும்.
திரும்பி வந்துட்டா… பொண்டாட்டியை முதலாளிக்கிட்ட விட்டு சம்பாதிச்சான்னு, மனுஷன் ஐயப்பனுக்கு கெட்டப் பேரு வரும்.
அவன் வராம இருக்குறதே நல்லது. எல்லாப் புகழும் – பழியும் இறைவனுக்கே!
அன்னிக்கு காலை. வீட்டை வாங்கியவங்க, அந்த இடத்தில அப்பார்ட்மெண்ட் கட்டப் போறாங்களாம்.
இடிச்சு தரை மட்டமாக்குற எந்திரம் வந்துச்சு. வீட்டை சுக்கு நூறாக உடைச்சாங்க… என் மனசையும் தான்.
எண்பது வருஷமா… என் கூட வாழ்ந்த மனுஷங்க சந்தோஷங்களைப் பாத்து சிரிச்சுருக்கேன்…. அவுங்க துன்பத்தை, இழப்பைப் பாத்து அழுதுருக்கேன். ஆமா அந்தப் பாட்டுதான், எனக்கு இப்ப ஞாபகம் வருது.
“சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்”
இனிமே சிரிக்க முடியாது. அழ முடியாது. ஏன், நான் பேசவே முடியாது… இதோ நான்… மண்ணோட மண்ணா போறேன்.
ஆம்! இதுவரைக்கும் உங்களிடம் தன் உண்மைக் கதையைச் சொல்லி வந்த அந்த 80 வருஷத்து வீடு, இருந்த இடம் தெரியாமல்… தன் உணர்வுகளை தன்னோடுப் புதைத்துக் கொண்டு இறந்துப் போனது!……
சுபம்
– கதைப் படிக்கலாம் – 49
இதையும் படியுங்கள் : இந்த நாட்டை விட்டுப் போறேன் !