– உஷா

காலை ஆறு மணிக்கு வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள் லோகநாயகி அம்மாள்.
வீட்டை ஒட்டிய கீழ்பகுதியில் தொப் தொப்பென்று சத்தம் கேட்கவே யாரென்று எட்டிப் பார்த்தாள்.
எதிர்பார்த்தது போலவே, நெற்றியில் விபூதிக் கீற்றுடன் வீட்டுக்கு வெளியில் இருக்கும் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள் அறுபது வயது வசந்தியம்மாள்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக லோகநாயகி அம்மாளின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவள்.
கள்ளங் கபடமற்ற கிராமத்துப் பெண்மணி. படிப்பு வாசனையே அறியாதவள் என்றாலும், கடுமையான உழைப்பாளி.
எல்லோருடனும் நன்றாகப் பழகுவாள். சுற்றி இருப்பவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வாள்.
எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் இருக்கும் வசந்திக்கு, ஒரு மகன். அவர்கள் இங்கு குடிவரும்போது பதினைந்து வயது சிறுவனாக இருந்தான்.
அப்படியே அவளுக்கு நேரெதிராக இறுகிய முகத்துடன் யாருடனும் பேசமாட்டான்.
அவ்வப்போது தன் தாயிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுவதைத் தான் பார்க்க முடியும்.
இதைப்பற்றி எவரேனும் கேட்டால் கூட “அவன் பாவம்மா” என்று மகனுக்குப் பரிந்து பேசுவாள். ஆனால் காரணத்தைக் கூறமாட்டாள்.
வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதுபோல ஒருமுறை அவன் நடந்துக் கொண்டபோது சொன்னாள்.
“ஊர்ல வசதியா வாழ்ந்தக் குடும்பம். என் கணவர் பொறுப்பில்லாம குடிச்சுட்டு செலவழிச்சுட்டு இருந்தார். அவர் பணத்துல ஆதாயம் அடைஞ்ச அவங்க வீட்டாளுங்க எல்லாரும், அவர் பக்கம் தான் பேசுவாங்க.
அப்போ எல்லாம் இவன் மட்டும் தான் எனக்கு ஆறுதலா இருப்பான். சொத்தெல்லாம் கரைஞ்ச கவலையிலேயே அவர் இறந்த பின்னாடி, எல்லாரும் விலகிட்டாங்க.
வேற வழியில்லாம அவன் படிப்பையும் நிறுத்திட்டு, இந்த ஊருக்கு வந்தோம்.
அவரோ இல்லை. மத்தவங்களோ என்ன செஞ்சாலும் பொறுமையா இருப்பேன்.
அப்பாதான் பொறுப்பில்லாம இருந்தாருன்னா, நீயாவது விவரமா இருந்திருக்கக் கூடாதா. பொறுமையா இருக்கேன்னு இப்போ என்ன நிலைமையில இருக்கோம் பாருன்னு சொல்வான்.
அவன் கோவமும் நியாயம் தானே. நல்லாப் படிக்குற பையன். படிச்சுப் பெரிய ஆளா வரணும்னு எவ்வளவு கனவு கண்டிருப்பான்.
அதனாலதான் அவன் என்ன சொன்னாலும் அதைப் பெரிசு படுத்தமாட்டேன்” என்றாள் ஒரு பெருமூச்சுடன்.
வாசல் பெருக்கி, துணிகளைத் துவைத்து காயப்போட்டு, தெருக்கோடியில் உள்ள குழாயில் ஏழெட்டு குடங்கள் தண்ணீர் பிடித்து வந்து வைக்கும்போது மணி ஏழாகியிருந்தது.
வழக்கமாக பல ஆண்டுகளாக பார்க்கும் காட்சிதான் என்றாலும், இன்று ஏனோ சற்று எரிச்சலைத் தந்தது லோகநாயகிக்கு.
மகனுக்குத் திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் அதே கதைதானா என்று.
அதற்குள் “அத்தை காபி” என்ற மருமகளின் குரல் கேட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
ஏதேனும் தெரியவில்லை என்றால் கொஞ்சம் படித்த, பெரிய வீட்டுப் பெண்மணியான லோகநாயகியிடம் தான் யோசனை கேட்க வருவாள்.
அன்றும் ஏதோ கேட்பதற்காக இரண்டு வயது பேரக்குழந்தையுடன் வந்த வசந்தியிடம் கேட்டே விட்டாள்.
“இவ்வளவு நாளா செஞ்சது போதாதுன்னு இப்போ மருமகள் வந்தப் பிறகும் ஏன் இப்படிக் கஷ்டப்படுற”
“ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. ஏதோ என்னால முடிஞ்சதை செய்றேன்மா.
என்னைத்தான் வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்லிட்டான். நான் இப்போ அஞ்சாறு வருஷமா வீட்லதானே இருக்கேன்” என்றாள் அதற்கும்.
இன்னொரு நாள் காலையில் “உங்களுக்கு சொன்னாப் புரியாதா அத்தை” என்று இரைந்துக்கொண்டே வசந்தியின் மருமகள் வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.
பாவம் இந்தப் பெண் என்று நினைத்த லோகநாயகி, அறிவுரை கூறினாள்.
“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே வசந்தி. எல்லாத்தையும் நம்மக் கட்டுப்பாட்டுல வெச்சுக்கணும். பேங்க் உத்தியோகம் பார்க்கிற என் பையன் இப்போவும் என் பேச்சை மீறமாட்டான். என் மருமக என் முன்னாடி உட்காரக் கூட மாட்டா. நம்ம கைல பணம் இருந்தா தான் பெத்த பிள்ளைங்களே மதிப்பாங்க. இப்போ நான் ஊர்க்காரங்க, உறவுக்காரங்க வீட்டுக்குப் போனாலும், எனக்கு முதல் மரியாதை கிடைக்குதுன்னா அதுதான் காரணம். இப்போவே இப்படின்னா கடைசிக் காலத்தை நினைச்சுப்பாரு. இந்தக் காலத்துல மகன் பார்த்துப்பான், மகள் பார்த்துப்பான்னு யாரையும் நம்ப முடியாது. அப்படி நம்பி பாசத்தைக் கொட்டி வளர்த்த பெற்றோர்கள் தான், இன்னைக்கு முதியோர் இல்லங்கள்-ல இருக்காங்க.
புத்திசாலித்தனமா நடந்துக்கோ” என்று கூறியதற்கு பதில் ஏதும் பேசாமல் மௌனமாக சென்றுவிட்டாள்
அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் படிகளில் ஏறமுடியாமல் அறையிலேயே முடங்கிவிட்டாள் லோகநாயகி அம்மாள்.
மகன் ஒருபுறம் அலுவலக வேலையிலும், பேரன் ஒருபுறம் செல்ஃபோன், கம்ப்யூட்டரிலும் மூழ்கி இருந்தனர்.
மருமகள் காபி, உணவு, மருந்துகள் என்று அவ்வப்போது தந்துவிட்டுப் போனாள்.
ஒருநாள் வசந்தியம்மாள் தன் மருமகளுடன் சிரித்துப் பேசியபடி கேட்டினுள் வந்துகொண்டிருப்பது தெரிந்தது.
தன் மகன் கட்டியுள்ள புதிய வீட்டிற்குச் செல்லப்போவதாகக் கூறி கையில் அழைப்பிதழைக் கொடுத்தாள்.
வாங்கி பிரித்துப்பார்த்த லோகநாயகி அம்மாள் அதில் “வசந்தி இல்லம்” என்றிருந்ததைப் பார்த்து யோசனையுடன் வசந்தியை நோக்கினாள்.
புரிந்துக்கொண்டவளாக பதில் சொன்னாள் அவள்.
“நம்ம பிள்ளைங்களை நாமளே நம்பலேன்னா எப்படிம்மா. அவங்ககிட்டே கண்டிப்பா நடந்துக்கிட்டா கட்டாயத்துக்காக மரியாதைக் கொடுப்பாங்க. ஆனா நம்ம மேல துளி கூட பாசம் வராது.
அந்த மரியாதையும் நமக்கு உடம்புல சக்தி இருக்குற வரைக்கும் தான். பணத்துக்காக முகஸ்துதி பண்ற நாலஞ்சு பேரும் அப்போ காணாம போய்டுவாங்க.
வெறும் பணம் மட்டும் மரியாதையைத் தேடித் தராது.
அதுக்காக பாசமா இருக்கேன்னு அவங்களுக்கு பாரமா இருக்கக் கூடாது.
வயசான காலத்துல நம்ம எதிர்பார்ப்பை குறைச்சுக்கிட்டு அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கணும்
இல்லேன்னா இது எப்போ ஒழியுமோன்னு கடமைக்காக கூட வெச்சிருப்பாங்க.
நாம கொடுக்கிறதைத் தானே மத்தவங்க நமக்கு திருப்பிக் கொடுப்பாங்க. நம்ம பிள்ளைங்கன்னு இல்லை… இது எல்லாருக்கும் பொருந்தும்”
அவள் மருமகளும், “அத்தை என்னை மருமகளா இல்லாம, மகள் மாதிரி பாத்துக்கிட்டாங்க. அதனாலதான் அவங்க மேல மரியாதையும் அதைவிட அதிகமா பிரியமும் இருக்கு.
ஏதோ அவரோட நிலைமை சரியில்லாம போனதால கொஞ்சம் அத்தை மேல கொஞ்சம் மனவருத்தத்துல இருந்தார். அவ்வளவுதான். அதையும் எடுத்துச் சொல்லிப் புரியவெச்சேன்.
இப்போ உழைச்சு சொந்தமா தொழில் செஞ்சு வீடும் கட்டியிருக்கார்.
என்னை பாத்துக்கிட்டவங்களை இப்போ நான் பாத்துக்கப் போறேன்” என்றாள்.
“கடைசிக் காலத்து தனிமையில நமக்குப் பணம் உதவாது. மனுஷங்க தான்மா வேணும் அப்போ” என்று கூறிவிட்டுப் போனவளை பிரமிப்புடன் பார்த்தாள் லோகநாயகி.
எப்போதும் தன்னிடம் யோசனை கேட்பவள், இன்று எவ்வளவு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.
இதனால்தான் அக்கம் பக்கத்தில் யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும், முதல் ஆளாக வசந்தியை தான் கூப்பிடுகிறார்கள்.
மறுநாள் காலை தனக்கு முன்பே எழுந்து, இருவருக்குமாக காபி கலந்துக் கொண்டுவந்த மாமியாரை ஆச்சரியத்துடன் பார்த்தாள், லோகநாயகி அம்மாளின் மருமகள்.
– கதைப் படிக்கலாம் – 106
இதையும் படியுங்கள் : பூனை




