– மாலா உத்தண்டராமன்
கோவிந்தன் முகம் கோணியது. விழிகள் சிவந்தன.
‘ஹூம்.. இது டாக்டர் தலை.. இது இஞ்சினியர் தலை.. இது சிறுமி தலை..’ வெளுப்பாக – பழுப்பாக – கறுப்பாக அத்தனையும் கூட்டிப் பெருக்கி, மூலையில் குவித்தப்போது, அவனுக்கு சலிப்புரேகை நெற்றியில் பரவியது.
‘சேச்சே..! இதே பிழைப்பைத் தொடரனும்னு நம்ம தலையில் எழுதியிருக்கு. எவ்வளவு பெரிய ரப்பரை போட்டுத் தேய்ச்சாலும், தலையை மொட்டை அடிச்சாலும் தலையெழுத்தை அழிக்கவே முடியாது போலிருக்கு.. ’, மனதோரத்தில் வெறுப்புக் குமிழியிட்டு கொதித்தது.
‘நானா வந்தேன் இந்தத் தொழிலுக்கு..? என் தலைவிதி…. இப்ப வந்துப் போனாங்களே டாக்டரு.. இஞ்சினியரு… இதுல யாராவது என்னை எடுத்து வளர்த்திருந்தா, ஒரு நல்ல ஆஃபிசரா ஆகியிருப்பேனே… என்னைக் கழனி காட்டிலே கண்டெடுத்தவர் முடிவெட்டுபவராக இருக்கப்போக, நானும் அதே வேலையை கத்துக்கிட்டு இங்கேப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை..’ சொற்ப வருமானத்துக்காக காலம் காலமாக, அதே தொழிலைத் தொடர்ந்து செய்து வெறுப்பில் அல்லாடினான்.
‘என்ன ஆனாலும் சரி.. எத்தனை கஷ்டம் வந்தாலும் சரி.. என் மகன் சாமிநாதனுக்கு இந்த நிலைமைக்கு வர விடமாட்டேன்!’… மனதுள் சபதம் போட்டு நிமிர்ந்தபோது, சலூன் கடைக்குள் நுழைந்தான் சாமிநாதன். அடுத்த நிமிடம் சுவர் மூலையில் – கறுப்பாக – வெள்ளையாக – நீளமாக – தூளாகக் குவிந்துக் கிடந்தத் தலைமுடி வகையறாக்களை கைகளால் அள்ளி எடுத்து, பிளாஸ்டிக் வாளியில் நிரப்பலானான்.
இதைக் கண்ட கோவிந்தன் பதறிப்போனான்.
“மகனே.. சாமிநாதா.. அதையெல்லாம் நீ தொடாதே..! நான் அள்ளிக்கிறேன். வீட்டுக்குப் போ.. படிக்கிற வேலையை மட்டும் பாரு..” வாளியைப் பிடுங்கிக்கொண்டான்.
‘வழக்கத்திற்கு மாறாக அப்பா புதுசா உளர்றாரே..’ வினோதமாக பார்த்தான் பத்து வயது மகன்.
“ஆமாண்டா கண்ணு.. நான் சொல்றதைக் கேளு. சலூன் பக்கம் இனிமேல் வராதே..!” அன்புக் கட்டளை விடுத்தான்.
அப்பா இப்படி திடீர் என்று சொன்னதும்… மறுப்பேதும் கூறாமல், அதேசமயம்… ஒன்றுமே புரியாமல், “சரிப்பா..” என்று சம்மதித்து வெளியேறினான் சாமிநாதன்.
‘ஆதரவற்றுக் கிடந்த என்னை எடுத்து தன் பிள்ளையாக பாவித்து வளர்த்தாரு அப்பா. வறுமையின் கொடுமையால அஞ்சாங் கிளாஸுக்கு மேலப்போக விடலை. சலூனில் எடுபிடி வேலைக்கு உதவ ஆரம்பிச்சு, முடிதிருத்தும் வேலையைக் கத்துக்கிட்டேன். சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணமும் செஞ்சிவச்சாரு. அவர் காலத்துக்குப் பிறகு, நான் அதே தொழிலை நடத்தவேண்டியதாயிடுச்சு… இந்த அளவுக்கு வாழ்க்கையில் நான் முன்னேற வழிகாட்டிய அப்பாவை மறக்க மாட்டேன். அவரால் முடிஞ்சதை அந்தக் காலத்தில் செஞ்சி உதவினாருங்கிறது நிஜம்.. ஆனால், இப்ப காலம் மாறிப்போச்சு. படிப்புக்கு எல்லா சலுகையும் கிடைக்குது. என் மகன் டிகிரி வாங்கணும். டவுனில் சிறந்த வேலையில் சேரணும். இந்த பரம்பரைத் தொழில் அவனுக்கு இனி தேவை இல்லை… அவனை சலூன்ல வேலை செய்ய விடமாட்டேன்.. இதுதான் என் லட்சியம்..’ உறுதி எடுத்துக்கொண்டான் கோவிந்தன். அந்த வெறியோடு மகனை திட்டி வீட்டுக்குச் செல்ல விரட்டினான்.
ஒரு மாதம் கடந்தபின், மாலை நேரத்தில் சலூன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி, தோட்டத்து பக்கம் சென்ற கோவிந்தன், அதிர்ந்து நின்றான்.
அங்கே அவன் கண்ட காட்சி.
எதிர்வீட்டு சிறுவனுக்கு முடிதிருத்தம் செய்துக் கொண்டிருந்தான் சாமிநாதன்!
“டேய்… சாமிநாதா..! என்னடா இது….?”
“வந்துப்பா… வந்து… இவன் நாளை காலையில் ஸ்கவுட் கேம்ப் போறானாம்.. பம்பை முடி வச்சிக்கிட்டு வரக்கூடாதாம். நல்லா ஒட்ட முடி வெட்டிட்டு வரச் சொன்னாங்கன்னு கெஞ்சினான். அவசரம்னு அழுதான். பார்க்க பாவமா இருந்திச்சு… அதனால் நண்பனுக்கு உதவினேம்பா..” அச்சம் கலந்து கூறினான்.
“ஓகோ… அப்படியா சங்கதி..?” முறைத்தான்.
‘பரவாயில்லையே.. நேர்த்தியாக முடி திருத்தியிருக்கானே. அடிக்கடி என் கூடவே இருந்து தொழிலை நல்லா கத்துக்கிட்டானே..’ மனசுக்குள் வியந்தவாறு, எதிர்வீட்டு சிறுவனை கோபமாகப் பார்த்தான்.. அவ்வளவுதான்! பயந்து, நடுங்கி ஓட்டமெடுத்தான் எதிர்வீட்டுப் பையன்!
கோவிந்தன் உடனடியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ‘இனி இவனை இந்த ஊரில் படிக்கவிட்டால் சரிபட்டு வராது. கடன் கிடன் வாங்கி, எப்பாடு பட்டாவது, டவுன் பள்ளிக்கூடத்தில் சேர்த்து ஹாஸ்டலில் தங்க வச்சிடணும்..’ முடிவெடுத்தான்.
ஆரம்பத்தில் லேசாக முரண்டுப் பிடித்த மகன், தந்தையின் பிடிவாதமான லட்சியத்தை நிறைவேற்ற, ஒருவழியாக சம்மதித்தான்.
மனைவியின் தாலியை விற்று, வாடிக்கையாளர் ஒருவரின் சிபாரிசு மூலமாக சாமிநாதனை நகரத்தின் பிரபலமான பள்ளியில் இடம் வாங்கி, விடுதியில் தங்கிப் பயில ஏற்பாடு செய்து முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது.
பையன் செம அறிவாளி. நகரத்து பள்ளி போதித்த கல்வி மீது அதிக நாட்டம் உண்டாகி விட்டது. இரவும் பகலும் அயராது படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றான். சுலபமாக பொறியியல் பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தான்.
அவனது வளர்ச்சிக்காக கோவிந்தன் எதிர்கொண்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பெற்ற பிள்ளையை ஒரு பொறியாளனாக்கும் கனவு நிறைவேறியது.
ஆனால், உடனடியாக வேலைவாய்ப்பு அமையவில்லை. பெற்றோரும் பிள்ளையும் நொந்துப் போனார்கள்.
“அப்பா… இங்கே ஒரு வேலையுமில்லாமல், சும்மா உட்கார்ந்திட்டிருக்க முடியாது. நான் சென்னைக்குப் போய் வேலை தேடப் போறேன்” கெஞ்சினான் சாமிநாதன்”
அதுவும் நல்ல யோசனையா படுது. அப்படியே செய் சாமி, ஒப்புதல் அளித்தான் தந்தை.
“ஆனால் ஒரு நிபந்தனை… ஒரு வருஷம் என்னை சுதந்திரமாக விட்டுடுப்பா… நல்ல வேலை அமைஞ்சப் பிறகுதான் இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைப்பேன்….!” வைராக்கியத்தை வெளிபடுத்தினான் மகன்.
“சரி சாமி… உன் இஷ்டப்படி நடக்கட்டும்.” தலையாட்டினார்கள் தாயும், தந்தையும்.
நல்ல நாளில் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் சென்னை நோக்கி பயணித்தான் மகன்.
சென்னை சென்றபிறகு ஒருவருடம் கழித்து, கோவிந்தனுக்கு முதன்முறையாக அலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு உரையாடினான் சாமிநாதன்.
“அப்பா, ஆத்தா… நீங்க ரெண்டு பேரும் நலமாக இருக்கிங்களா..? சூப்பர் வேலை அமைஞ்சிருக்கு.. ஜப்பான், ஜெர்மனின்னு சூப்பர் பிசினஸ் பண்றேன்.. நிறைய வருமானம் கிடைக்குது… உடனே கிளம்பி நீங்க சென்னைக்கு வாங்க… இனிமேல் என் கூடவே தங்கிக்கலாம்” அன்புடன் அழைத்தான்.
“ஏ.. புள்ளே.. வள்ளி..! நாம நினைச்ச மாதிரி உசந்தப் பதவிக்கு மகன் போயிட்டான்.. நம்ம ரெண்டு பேரையும் கூப்பிடறான். அதுக்காக நாம உடனே போயிடக்கூடாது…” மனைவியின் காதில் கிசுகிசுத்தான் கோவிந்தன். அவளும் சரி என்றாள்.
“நல்லது மகனே.. வூட்ல கூரைபழுது பாக்குற வேலை நடந்திட்டிருக்கு… சலூன் கடையை வாடகைக்கு விடறதுக்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதனால இன்னும் ரெண்டு மூணு மாசம் கழிச்சு சாவகாசமாக வர்றோம்” வாழ்த்தினான் கோவிந்தன்.
இரண்டு மாதங்களுக்கு பின்…
“பெரிய வீடு வாங்கிட்டேன். புதுசா கார்’ வாங்கிட்டேன்”னு அடுத்தடுத்து ஆனந்தத் தகவல்கள் தெரிவித்தான் சாமிநாதன்.
“இங்கே நீங்க சீக்கிரம் வந்திடுங்க… இல்லாட்டி நான் எல்லாத்தையும் விட்டுட்டு அங்கே வந்திடுவேன்” பாச மிரட்டல் விடுத்தான்.
இப்போது பெற்றவர்கள் உள்ளம் குளிர்ந்துப் போயிற்று. அவ்வப்போது செய்தித்தாளில் பெரிய தொழிலதிபர்களோடு சாமிநாதன் இருக்கும் புகைப்படம் பற்றி உள்ளூர் சிநேகிதன் சேதி சொல்ல, ‘ஆ’வென வாய்பிளந்து ஆச்சரியமடைந்து பெருமிதத்தின் உச்சிக்கேப் போய்விட்டார்கள்.
‘எவ்வளவு நல்ல மனசு.. வற்புறுத்தி அழைக்கிறான். இனி தாமதிக்கக் கூடாது. சென்னை போயிடறதுதான் உத்தமம்.. பிள்ளையைப் பார்த்துக் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாச்சு’. மகனை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, சென்னை செல்ல முடிவு எடுத்தனர்.
‘நான் மட்டும் அப்போ தடுத்து நிறுத்தலைன்னா, இந்தத் தலைமுடியை அள்ளிக் கொட்டும் வேலையிலேயே அவன் பொழுது வீணாகப் போயிருக்கும்.. இப்படிபட்ட மகிழ்ச்சியான வாழ்வு வாய்ச்சிருக்குமா..?’ அளவிலா ஆனந்தத்தோடு சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டனர் தாயும், தந்தையும்.
சாமிநாதனின் பங்களா, பளிங்கு கற்களால் இழைக்கப்பட்டு, பிரமாண்டமாக காணப்பட்டது… அத்தனை வசதிகளோடு மின்னிற்று. குனிந்து வணக்கம் போட்டு வரவேற்ற உதவியாள், கோவிந்தன் தம்பதியரை சாமிநாதனின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்.
அங்கே இருந்த ஒரு பெண்மணி, “வாங்க.. ஐயா கோடவுனில் இருக்காரு… என்னோடு வாங்க.. ஐயாவைப் பார்க்கலாம்” என்றாள்.
பேந்த பேந்த முழித்தவாறு அவளைப் பின் தொடர்ந்தனர்.
பொருள் கிடங்கு உட்புறம் நுழைந்தனர்… கண்ணாடி சுவர் சூழ்ந்த குளிரூட்டப்பட்ட அறையில், நடுநாயகமாக சாமிநாதன் அமர்ந்திருந்தான். அவன் எதிரில் மூன்று வெளிநாட்டுக்காரர்கள் வீற்றிருந்தனர்.
விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து “வாங்க அப்பா! ஆத்தா..! எப்படி இருக்கீங்க.. பார்த்து பல நாளாச்சு.. இளைச்சுப் போயிட்டீங்க… திடீர்னு பொருள் வாங்க வெளிநாட்டுகாரர்கள் வந்துட்டாங்க.. வியாபார ஒப்பந்தம் இப்பத்தான் கையெழுத்து ஆச்சு.. வாங்க, வாங்க நம்ம வியாபார பொருள்களைப் பாருங்க…” கைபிடித்து கூட்டிச் சென்றான்..
அவன் அழைத்துச் சென்ற அறைக்குள் கால் பதித்தப்போது அவர்கள் கண்ட காட்சி!
ஒவ்வொரு அறையிலும்- அம்பாரம், அம்பாரமாய் தலைமுடி குவியல்!… மூக்கையும், வாயையும் முகமூடி துணி அணிந்த ஆண்களும், பெண்களும், தலைமுடி குவியலில் கலந்துக்கிடந்த தூசு, குப்பைகளை வெகு மும்முரமாக பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிந்தன் தம்பதியரை கண்டதும் எழுந்து நின்று கும்பிட்டார்கள்.
“அம்மா, அப்பா.. என்ன அப்படி ஆச்சரியமா முழிக்கிறீங்க.. இந்தத் தலைமுடியில் – “அமினோ ஆஸிட்”ன்னு ஒரு ரசாயன பொருள் இருக்கு.. அதை எடுத்துக் கறுப்பு சாயக் கலவை தயாரிக்கிறதுக்காக உள்ளூரிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல கம்பெனிக்காரங்க ‘டன்’ கணக்கில் தலை முடியை விலைக் கொடுத்து வாங்கறாங்க.. நம்ம பொருள் தரமாகவும், நியாய விலையிலும் கிடைப்பதால், எக்கச்சக்கமான ஆர்டர் குவியுது..” பெருமையாக விவரித்தான் சாமிநாதன்.
“அடடே.. அப்படியா மகனே! இவ்வளவு நாளாக நான் அலட்சியம் காட்டி, அருவறுப்பாய் நினைச்சு வெறுத்து, ஒதுக்கின அதே தலைமுடியை மூலப்பொருளாக வச்சி, நீ வியாபாரம் செஞ்சி, வருமானத்துக்கு வழி அமைச்சுக் காட்டிட்டே.. மகனே இது உன் சமர்த்து… ரொம்பவே திறமைசாலிப்பா நீ..!” உணர்ச்சிப் பரவசத்துடன் கூறி, சாமிநாதனை கட்டி அணைத்துக் கொண்டான் கோவிந்தன். பிரமித்து முழித்தாள் வள்ளி.
“ஆமாம்பா… சில வருஷத்துக்கு முன்னாடி நான் படிக்கிறதுக்கு நீ ஒரு நல்ல பாதை போட்டுக் கொடுத்தே…. அதேப் பாதையை நான் சீரமைச்சு, தரம் கூட்டி, புதுமைபடுத்தி, பிசினஸ் பாதையாக மாத்திகிட்டேன். என்னாலேயும் சாதிக்க ‘முடி’யும்னு நிரூபிச்சிட்டேன்! வெற்றிச் சூத்திரம் அதிலேதான் இருக்குப்பா..” விளக்கம் தந்தான்.
இப்போது…
அந்த ‘தலைமுடிக் குவியல்’ கோவிந்தன், வள்ளியின் கண்களுக்கு ‘தங்கக்குவியலா’க தெரியலாயிற்று!
– கதைப் படிக்கலாம் – 91
இதையும் படியுங்கள் : மயக்கம்