– ராகேஷ் கன்னியாகுமரி.
கடைசிக் கொட்டடியில் கிடந்த கிழவி, அதிகாலையில் இறந்திருக்கிறாள். எவ்வளவு பெரிய விடுதலையை காலம் அவளுக்கு பரிசளித்துள்ளது.
பார்த்து வந்த மகளிடம், எப்போ எடுக்க வாராங்க? எனக் கேட்டார்.
“தகவல் சொல்லிட்டாங்க… வாகனம் வேறு முகாமுக்குப் போயிருக்கு” மதியம்தான் வருமென்கின்றனர்.
காலை உணவை வாங்கி வரும் பாத்திரத்தை எடுத்தவரைத் தடுத்து, வாங்கி வருகிறேன் என சிரமப்பட்டு நடந்தாள். வேண்டாமென்றாலும் விடமாட்டாள். பெருத்த வயிற்றுடன் சிரமம் தான். ஆனால், அவளுக்கு இது தின வழக்கம்.
தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகாரன், இருபதை தாண்டிய சிறுவன் போல இருந்தான்.
வணக்கம் என்றவாறே, இவர் அருகில் நெருங்கி அமர்ந்தான். முயன்று ஒருமுறை சிரித்துக்கொண்டே, தான் வர காரணமான ஆங்கில பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி, கொட்டடியை நோட்டமிட்டான்.
இவர் யார், எந்த இடத்தில் வாழ்ந்தவர், பெயர், எந்த நிலையில் வாழ்ந்தவர் என தெரிந்துக்கொள்ள விரும்பினான். மெதுவாக… அய்யா உங்க முழு பெயர்? உபரி தகவல்கள் பெயர் மூலமே தெரிந்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.
உள்ளத்தின் ஆழத்தை அறிந்திருப்பாரோ…? மெதுவாக பெருமூச்சை எறிந்தவர்… விசனத்துடன் புன்முறுவல் புரிந்தார்.
யாருப்பா என்ன கூப்பிட இருக்காங்க? என் பெயர்னு நினைக்கிறதும், சுமந்துக்கிட்டு அலையுறதும் இல்லயே தம்பி “நான்” என்பது. மற்றவங்க என்னையும், நினைவுகளையும் சுமந்துக்கிட்டு திரியுறதுக்கு, சிறைக் கைதிகளுக்கு வைக்கிற எண் போன்றது பெயர். நான், அப்படீங்கிற ஒண்ணு இருக்கிறதே மத்தவங்களோட அங்கீகாரம் மூலமா தானே?
அடுத்தக் கேள்வியை ஏவினான். உங்க மனைவி, புள்ளைங்க? வரிசையில் நிற்கிறாங்களா?
மனைவி போய் சேர்ந்தாச்சு…! எதிர்படையினர் கழுதைப் போல நடக்கவச்சு கூட்டிகிட்டு வரும்போதே, நெஞ்சு வெடிச்சு போயிட்டா. கொஞ்ச நேரம் அமைதி காத்தவர்… மூணு மாசம் எங்களை அடைச்சு வைச்சிருந்தாங்க.
வெளியே வந்தபோது, ஊரும் வீடும் என எதுவுமில்லை. பொண்ணையும், அவளோட கைக்குழந்தையோடும் கிளம்பி கள்ளத்தோணியில் மறுகரையில் இருக்கும் நாட்டுக்கு வருவதை தவிர. இந்தக் கொட்டடியில் சுமார் நாலு வருடங்களாக.
உங்க பொண்ணு இருக்காங்களா? என்றான் ஆர்வமாக. இக்கட்டுரை நிச்சயம் பேசப்படும் என நம்பத் தொடங்கியிருந்தான்.
‘அதோ மஞ்சள்நிற துணி போட்டுக்கிட்டு போறாளே’, நீள்வரிசையில் நின்ற ஒருத்தியை கைகாட்டினார்.
அவங்களா…! இங்க வந்தப் பிறகு தான் கர்ப்பம் தரித்தாங்களா?
மவுனமாக இருந்தவர், கண்மூடி அழுதார். எவன் கொழந்தனே தெரியல்ல. கலைக்கவும் கேட்டுப் பார்த்தோம். ஆபத்துன்னு வேற சொன்னாங்க. அதான்…!
அவனது மனம் கொஞ்சம் தடுமாறியது. ‘அதுக்காக?’
“எனக்கு அவ உயிரோடவாவது இருக்காளே, அப்படின்னு கொஞ்சம் சமாதானம். நானும் போய்ட்டேன்னா…? அவளுக்கு இங்க எதுவும் புடிக்காது. வேற என்ன பண்றது…” என்றார்.
என்னணே… எந்த நாயோட… என்று முடிக்காமல் வாயை மூடினான்.
யார் கருவா இருந்தா என்ன? குழந்தைங்கிறது குழந்தை தானே? புருஷன் இறந்து போயிட்டான்னு நெனச்சுக்கிட்டு வாழவேண்டியது தான். உண்மையும் ஒருவேளை அது தானே…!
இருந்தாலும், ‘…இத எப்படி’ என்று மீண்டும் முடிப்பதற்குள்…
வந்த முதல் வாரத்தில, சின்ன ஒரு தள்ளுமுள்ளு உண்டாச்சு இங்க. ஒரு பிடி அரிசிக்கு. எண்ணி நூறு அரிசியை எனக்குக் கொடுத்திருந்தா போதும். இன்னைக்கு கடைசி பேத்தியாவது எங்கூட இருந்திருப்பா… நான் ஏன் நியாயத்த கடைபிடிச்சேன் அப்படின்னு இப்போ புரியல. ஒருவேள, உள்ளுக்குள்ள பயந்து ஒடுங்கிப்போய் நின்னிட்டேனோ அப்படின்னும் தெரியல்ல. அந்த நாளை எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும், இப்போ நினைவுக்கே வரமாட்டேங்குது. ஒருவேள போலீஸ்காரனோட அடிக்கு நடுங்கிப்போய் நின்றேன் போல. என் இடத்தில பொண்டாட்டியோ, இல்ல வேற எவ்வளவு வயசான பொம்பளையா இருந்திருந்தாலும், ஒரு பிடி அரிசிய வாங்காம போயிருக்கமாட்டாங்க. ரொம்ப யோசிச்சு பார்த்தா ஆம்பளைய விட வைராக்கியமும், நம்பிக்கையும் எல்லா பொம்பளைங்களுக்கும் அதிகம் தம்பி என்றவர்… இடைவெளி விட்டு… எனக்குக் கிடைக்காம போன ஒருபிடி, வேற குழந்தைக்குப் போய் சேர்ந்திருக்கும் அப்படின்னு மனதை தேத்திக்கிறேன். அதனால குழந்தைய அடக்கம் பண்ணும்போது அழவே இல்ல.
“இல்ல, கொழந்த செத்துப்போகட்டும் அப்படின்னு, மனசார விரும்பினீங்களா?” வாய் கேள்வியை திடமாக உதிர்த்தது.
கண்களைக் கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்தவர்… மெதுவாக கண்களை தாழ்த்தி “ஆத்மா வேணுமுன்னா ஆசைப்பட்டிருக்கலாம்.” ஆனா மூளை யோசிக்கவேயில்லை. இந்தக் கேள்வி எனக்கும் பல நாட்கள் தோணும். ஒருவேளை அதனால தானோ என்னவோ, கால்கள் அன்றைக்கு மரத்துப்போய் நின்றது? தெரியல்ல. நீங்க கேக்கும்போது, தெரிஞ்சே கொன்னிருக்கேன் போல தோணுது.
அவனுக்கும் தொண்டை அடைக்கத் தொடங்கியது. தவறான கேள்வியை கேட்டுவிட்டேன் என்பதாலோ? இல்லை… வாயிலிருந்து இப்படி ஒரு பதில் கேட்டுப் பெற வேண்டும், அது கட்டுரைக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும் என்ற கொடூரமான ஆசையோ…? இல்லை. அவர் இப்போதாவது உணர்ந்து மன நிம்மதி அடையட்டும் என்றா?
அவரின் மனம் ரணகளமாய் தடுமாறி அழுவதை உணரமுடிந்தது. குற்றவுணர்ச்சியிலிருந்து அவரை வெளியேக் கொண்டுவர தெரியவில்லை. மெதுவாக சொன்னான்… வேற குழந்தைக்கு அந்த பிடி அரிசி கிடைச்சிருக்கும் அப்படின்னு நம்புறீங்க…! ஆனா, அரிசி கிடைச்ச குழந்தையோட அப்பாவோ, அம்மாவோ, இல்ல வேறு யாரா இருந்தாலும், உங்களுக்கு அரிசி கிடைச்சு, அவங்களுக்கு கிடைக்கலைனா, நீங்க நினைக்கிறதுப் போல நினைச்சிருப்பாங்களா? அவரை கொஞ்சம் புனிதப்படுத்திக் காட்ட, மனம் கணக்குப் போட்டது… ஆனாலும் தெரிந்தே கொன்றார் என்றுதான் நம்ப ஆசைப்பட்டான்… இந்த அரசு செய்து தரும் வசதிகள் போதுமானதாக உள்ளதா? உங்கள் சொந்த தேசம் போல் இருக்காது என்பது தெரியும்.
எங்களை இங்கு வந்து சேர்த்த அன்று, பெரும்புயல் இங்கே வீசியது. எந்தப் பொணத்தையும் ஏதும் செய்ய இயலவில்லை. உண்மையிலே ஒரு மனுஷனோட சாவு, பெரும் இயற்கை சேதத்துடன் நடக்கக்கூடாது. அன்றைக்கு எரிக்க மின்சார மயானத்துக்கு மின்சாரமும் கிடையாது. விறகு, வரட்டி எதையும் உபயோகப்படுத்த முடியல்ல. பெருமழை நீரில் நனைந்ததை வைத்து என்ன செய்ய? அதோ தெரிகின்ற பனைமரத்தின் நிழல் தான் அடையாளம். அங்கு தான் புதைத்தனர். ஆனால் வேலியை தாண்டிப்போய் பார்க்க யாரையும் அனுமதிக்கல. இறந்துப்போன பெண்ணின் தாலியை கழட்டி, கால்சட்டையில் ஒளித்து வைத்தவனும், ஈரத்தால் உப்பிப்போன ஏதோ சிறுகுழந்தையின் கையில் கிடந்த சிறுமோதிரத்தை கழட்ட முடியாமல், விரலை அறுப்பதையும் பார்த்து நிற்க மட்டுமே முடிந்தது.
சரி, இப்போ தான் எல்லாம் முடிஞ்சிடுச்சே. இப்போ உங்களை இப்படி பண்ணினவங்களை மன்னிச்சிட முடியுமா? இந்தக் கேள்வியை சிறிய ஆணவத்துடனும், அதே நேரம் இளக்காரமாகவும் தான் வீசினான்.
“நான் இருந்த இடத்தில தம்பி, விதி உங்கள நிப்பாட்டி இருந்தா…?” என்று சீண்டினார்.
எல்லாம் இழந்தபிறகும் இந்த கிழவனோட திமிர் அடங்கவேயில்லை. மனம் அதிசயத்தக்க வகையில், கோபம் கொள்ளத் தொடங்கியது.
ம்ம்ம்… யோசிச்சு பார்த்தா, மன்னிச்சாலும்… இல்லைன்னாலும்… எதுவும் மாறப்போறதில்லை. இப்போ நினைச்சாலும், யாரும் யாரையும் எதுவும் பண்ணிட முடியாது. ஆனா, இயலாதவன் ‘மன்னித்து விடுவோம்’ அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிறது நிச்சயமா கோழைத்தனம் தான். ஆனால், அப்படி நினைச்சு விடாமல் இருந்தா, வாழுற ஒவ்வொரு நொடியும் மரணத்தை விட வலி அதிகமா இருக்கும். உண்மையிலேயே மன்னிப்பு அப்படீங்கிறது, நாம அடுத்தவங்களுக்கு கொடுக்கிறது கிடையாது. நாமளே நம்ம மனசுக்கு கொடுக்கிற சிறு ஆறுதல்.
கொஞ்சம் பரிதாபமாக இருந்தது அவரைப் பார்க்க. “உணவு இங்கு சரியாக தரப்படுகிறதா?”
உணவைக் களவாட முயன்றார்கள் எனக் கூறி போன வாரம் போலீஸ் அடித்ததில், முகாமில் உள்ள இரு குழந்தைகளின் மண்டை உடைந்தது. பசி, பசி, பசி என்பதைத் தாண்டி, வேறு எதைப் பற்றி இந்தக் குழந்தைகள் யோசிக்கும்? பெரியவர்களுக்கு 0.07 டாலரும், வயதுக் குறைந்தவர்களுக்கு 0.035 டாலரும், தினசரி தருவதாக சொல்லியிருந்தார்கள். இந்த நாலு வருடத்தில் ஒரு கொசு வலை, வருடம் மூன்று குளியல் கட்டிகள், இரண்டு வருடத்துக்கு ஒரு ஜோடி செருப்பு, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு குடும்பத்துக்கு முன்னூறு கிராம் அரிசி அல்லது கோதுமை. இதில் எப்படி ஒரு குடும்பம் அல்லது ஒரு ஜீவன் வாழும். அதோ… அமர்ந்து சாப்பிடுகிற ஒருவரேனும், அக்கறையில் சாப்பிடுவதாக தெரிகிறதா?
தலையாட்டி அவர் சொன்னதை ஆமோதித்தவன். எதிர்காலத்தைப் பற்றி?
புதியதொரு வாழ்க்கையை இவர்கள் அமைப்பார்கள் என்றவாறே, தூரத்தில் வரிசையில் நின்றக் குழந்தைகளை பார்த்தார்.
வாகனம் சற்றுநேரம் கழித்துதான் வருமென்கின்றனர் என்றவாறே, அவரது மகள் இவர்களின் அருகில் வந்தாள்.
கூண்டுக்குள் இருக்கும் பறவையைக் காப்பதற்கும், ரோட்டில் அடிபட்டு கதறும் நாயை காக்கவும் துடிக்கின்ற பல சங்கங்கள்… ஏன், மனிதர்கள் என்றழைக்கப்படும் எங்களைக் காக்க, அவர்களது மனசாட்சியில் குறைந்தபட்ச இடமில்லை? உங்களைப் போன்றவர்கள்… என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அமைதியானாள்.
பிறந்தக் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு ஆயாசமாக படுத்திருந்த பெண், பாம்பு கடிபட்டு செத்ததும், அதே மார்பில் பால் குடித்து சாகக் கிடந்த குழந்தையை, காலையில் பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை. இந்த இடம் ஒருகாலத்தில் பன்றி வளர்க்கும் பண்ணையாக இருந்து அழிந்த இடம் போல. அப்படிப்பட்ட இடத்தை தான், புகுந்த தேசம் இந்த மனிதக் குப்பைகளுக்கு நல்கியது என்றாள்.
குறைந்தபட்ச உயரத்தில் அல்லது ஒரு அடி போதும். சுற்றுச் சுவர் எழுப்பி, கூரை போட்டுக்கொடுங்கள் என்று கேட்டோம். அப்படி கேட்டதற்கு, இரண்டு நாள் பட்டினி. இப்படி எப்போதாவது வேண்டுமென்றே செய்வார்கள். எப்போது உணவை குறைப்பார்கள் என்பதை அறியாததால், கிடைக்கின்ற உணவை அடுத்தநாள் குழந்தைகளுக்கு என வைத்துவிட்டு, சாப்பிடாமல் கிடக்கும் தாய்மார்… பாம்பென்ன, தலையை வெட்டிச் சென்றாலும் அறியமாட்டார்கள்.
இடையில் புகுந்து, அரசு சில நேரங்களில் ஒரு நாளைக்கு மொத்தமாக ஒரு கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணையை மட்டுமே பத்து குடும்பத்துக்கு கொடுக்கிறது. பல நாட்கள் அப்படி செய்தாலும், யாராலும் எதுவும் கேட்க முடிவதில்லை. அன்பை போதிக்கும் மதங்கள் சொல்கின்ற நரகம் காண, இங்கு வந்தால் போதும். அவர் காறித் துப்பிவிட்டு எழுந்து நடந்தார்.
மெதுவாக இவன் அவளைப் பார்த்தான். உங்கள் அப்பாவின் பெயர்? என்றான் நாசூக்காக.
நீங்கள் நினைப்பதைப் போல, அவர் என் அப்பா அல்ல. இவரது அரசியல் எதிர்ப்பின் காரணமாக, இவரது மனைவியை நடுரோட்டில் வைத்து அம்மணமாக இவர் கண் முன்னால் ஓட வைத்து, சுட்டுக் கொன்றனர் எதிர் படையினர். இறந்த சடலத்தை இவரை தொடவும் அனுமதிக்காமல் மிதித்திருக்கின்றனர். பேரக்குழந்தைகள் எங்கு இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர் சொல்கின்ற தகவல்கள் நிறையவே உண்மை. கொஞ்சம் மனம் அமைதியின்மையின் பிதற்றல்.
உங்கள் கணவர்?
அவர் இங்கு வந்த ஒரே மாதத்தில், இங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார். முதல் ஆறு மாதங்கள், கடிதங்கள் வேறு வேறு பெயரிலும் நலம் விசாரித்து அனுப்பினார். மொழி தான் புகுந்த நாட்டில் பெரிய பிரச்சனை. வெளியே வேலை கிடைப்பது கடினம் என்றும் சொல்லியிருந்தார். இப்போது கடிதங்களும் வருவதில்லை. இந்த ஊர் பெண் ஒருவரை திருமணம் செய்ய உத்தேசித்துக்கொண்டிருப்பதாக, கடைசிக் கடிதத்தில் கூறியிருந்தார்.
அவள் வயிறை நோக்கினேன்.
புரிந்துக்கொண்டவள்…
“என் முதல் குழந்தையை இந்த கொட்டடியில் வைத்து இழந்தேன்.”
“உடம்பு முடியாமலா?”
“கடத்தினார்கள்…!”
அவன் புரியாமல் புருவத்தை உயர்த்தி “கடத்தினார்களா…?” யார்?
ஒரு அதிகாலை… கண் முழித்துப் பார்த்தபோது குழந்தை இல்லை… யாரிடம் கேட்பது? எங்களைப் பாதுகாக்க, உதவிப் புரிய என சொல்லும் எந்தவொரு கடவுளும், எங்களது மலம் போன்று வாழ்க்கையில் நறுமணம் வீசியருளவில்லை.
கொஞ்சம் தொண்டை வறண்டது அவனுக்கு.
வயிறை பார்த்தவள், இந்தக் குழந்தையின் அப்பா இங்கே தான் பழக்கமானவன்.
அவர்…?
இப்போது சிறார் சிறையில்…!
ஏன்…?
வயது தான் காரணம்…
உங்களுக்குப் புரிவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அதிகாலை வேளை, ஒருமுறை சிறுநீர் கழிப்பதற்கு… என அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் மரங்கள் சூழ்ந்து நின்றிருந்தன.
“அவன் வலுக்கட்டாயமாக என்னை…” உண்மையில் அதை கற்பழிப்பு எனச் சொல்வார்கள். நான் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அவனது விரக்தி, கோபம், நடுக்கம், வேதனை, ஏக்கம் ஆகியவற்றிற்கான வடிகாலாக படுத்திருந்தேன் என்பதே உண்மை. வேறு விதத்தில் சொல்வதானால், எனக்கும் தேவையாக இருந்தது. கடைசிக் கடிதம் வந்த நாள். இவரை மட்டும்தான் தெரியும். அவரிடம் சொன்னேன். முதல் கேள்வி அவன் என்ன மதம்…? என்றே அப்போதும் கேட்டார்.
அவர் ஒரு கைக்குழந்தையைப் பற்றிச் சொன்னார். அவர் பேரப்பிள்ளை எப்படி… ?
யாராலும் அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியாது. தலையும் நிலைக்கவில்லை. கடைசியில்…
… எதையும் பதிலுக்கு கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான். சற்று நேரம் கழித்து, உங்கள் பெற்றோர்கள்?
அப்பா, என்னையும் கணவரையும் முதல் நாள் படகில் ஏற்றிவிட்டு, மறுநாள் வருவதாகச் சொன்னவர், இந்நாள்வரை இந்தக் கரையில் வந்திறங்கவில்லை. அம்மாவை முன்னமே இழந்திருந்தேன். இனிமேல் வாழ்நாள் முழுமைக்கும், அம்மாவை புதைத்த கல்லறையை கூடப் பார்க்கமுடியாது. அதுபோலவே, அப்பாவையும் இப்போது தொலைத்து நிற்கிறேன்.
அவளது எண்ணத்தை திசை திருப்ப, “இவரின் குடும்பத்தைப் பற்றி, வேறு ஏதாவது உங்களுக்கு தெரியுமா” என்றான்.
அவரது மகள் மற்றும் கைக்குழந்தையுடன் படகில் வரும் வழியில், மகள் மரணித்து விட்டார். வேறுவழியின்றி பிணத்தைக் கடலில் வீசி உள்ளனர். அப்போதிருந்தே இப்படி ஆகிவிட்டார். இதேபோல், நாங்கள் வந்தப் படகிலும் நடந்தது, கண் முன்னால் குழந்தையை தாய் ஒருத்தி கடலில் தூக்கி வீசிய சம்பவம். யாருமே எந்தக் கேள்வியும் கேட்கவேயில்லை. என்னால் முடியாமல் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டேன். பொதுவாகக் குழந்தையுடன் படகில் வருபவர்கள், குழந்தையை எடுத்து வரும்போது அழாமல் இருப்பதற்கு, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சில நேரம், கணக்குப் பிசகி கடலின் தட்பவெப்ப மாற்றம் அல்லது முன்நோயின் தாக்கத்தால், குழந்தைகள் இறந்துவிடும்.
இந்தக் கட்டுரை எண்ணியிருந்ததை மீறி, திசை திரும்பிக்கொண்டிருப்பதை அவனால் ஊகிக்க முடிந்தது.
அந்தக் கிழவர் நடந்து அருகில் வந்தமர்ந்தார். பெண்ணை பார்த்துக்கொண்டே, ‘தம்பி’ நம்ம எல்லோருக்கும் புது வாழ்க்கை அமைச்சு தர வந்திருக்காரு என்றவாறே பல்லைக் கடித்தார்.
அவன் அடக்கி வைத்தக் கோபத்தை காட்டாமல், “எழுத்தின் வலிமை பெரியது” என்றான்.
“புரியுது தம்பி, நீங்க எங்களை இப்போ கால் ஒடிஞ்சுப்போன நாயை மாதிரி பார்க்கிறது…” என்றவர், மீண்டும் எச்சிலைக் காறி உமிழ்ந்தார்.
இப்போ உங்க மக்கள் இதைக் கடந்து போய்டுவாங்க அப்படின்னு தோணுதா?
“பசி மட்டுமே மனுஷனுக்கு கண்முன்னால இருந்தா, யாரும் விடுதலை, வீரம், வெற்றி, தூய்மைவாதம் பற்றி யோசிக்க முடியாதுப்பா…”
“இப்போதான் உங்க ஆளுங்களுக்கு புரியத் தொடங்கியிருக்கு இல்லையா?”
“…”
“இங்க இப்போ இருக்கிற வசதி போதுமானது தானே?”
“வசதி…!? உண்மையிலே இப்போ பார்க்கும்போது உயிர் இருப்பதே ஒரு பெரிய வெற்றி தானே?”. நாங்க செத்த எலிப்போல, எங்க உடம்புக்கு உள்ள இருக்கிற ஒவ்வொரு பாகமும் அழுகி நாறிக்கிட்டு இருக்கிறது… எங்க நாசிக்கு மட்டும்தான் உணரமுடியும். உங்களுக்கு புரியவைக்கிறது அவ்வளவு எளிதில்லை.
அவனை அறியாமல் மீண்டும் மனம் கோபத்தின் உச்சத்தை தொட்டது. “உங்களுக்கு” என்றக் கிழவனின் வார்த்தை, வெறுப்பை மிகச்சீக்கிரம் உடம்பு முழுவதும் பரவச்செய்வதை உணரத் தொடங்கினான். கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல், “இப்போது குளிர்காலம் தொடங்கப்போகிறது, அரசு எதைத் தரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”
“…”
இப்போ இருக்கிற நிலைமையில் அமைதியாக, அடிமையாக இருப்பதாகக் கொள்வோம். ஆனால், இதேப்போல் அல்லாமல் தெருவில் நீங்கள் வீழ்ந்து கிடந்த தினத்தில், உங்களிடமும் யாராவது துப்பாக்கியோ அல்லது ஏதேனும் ஆயுதம் வழங்கியிருந்தால் நீங்கள் அவர்களை கொல்லாமல் விட்டு வைத்திருப்பீங்களா? ஆயுதம்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. சிந்தனை அல்ல. அப்படிதானே?
அவர் பதில் சொல்லமாட்டார் என்பது தெரிந்தது.
கொட்டடி-யில் நல்லதொரு மழை பெய்திறங்க வேவு பார்த்துக்கொண்டிருந்தது. மக்கள் தாங்கள் வாங்கிய கொஞ்ச உணவை, அங்கங்கு உட்கார்ந்து உண்ணத் தொடங்கியிருந்தனர்.
“உங்கள ஒரு புகைப்படம் எடுத்துக்கவா?” என்றான் அவரிடம்.
“எதுக்கு…?என்றவர், பின்னர் மெதுவாக” உங்கப் பேரு என்ன தம்பி? எனக் கேட்டார்.
அவரின் கேள்வியை கடக்கும்பொருட்டு, ஜோப்பிலிருந்து கொஞ்சம் காசை அவரது கையை பற்றித் திணித்தான். அவன் நீட்டியப் பணம், கட்டுரையின் மூலம் கிடைக்கப் போகும் பணத்தின் மிகச்சிறியப் பகுதி என்பது அறிந்தேயிருந்தான். ஆனால், இந்தக் காசும் இவர்களுக்கு தேவையல்ல. இவர்களிடம் இருக்கும் பழைய பாலித்தீன் பைகளிலும், சாக்கு கோணிகளிலும் இந்தப் பணத்தை பாதுகாப்பதே கஷ்டம்தான்.
“உங்க கட்டுரைக்கு கிடைக்கப்போற சன்மானத்தொகையை கைப்பற்றி சாப்பிடும்போது, சஞ்சலம் இல்லாம இருப்பதற்காக அல்லவா, வேண்டாம்” என்றார். இப்படி வாரம் வாரம் ஒவ்வொருத்தங்க வருவாங்க. சின்னப் புன்முறுவல் தெளியும் நாட்களை, அவர்களின் வன்மமான கேள்விகளின் மூலம் எதுக்குடா, இப்படிச் சாகாம கிடக்கிறீங்க…? என்ற பாவனையில், குளிப்பாட்டும் நாயிடம் அதட்டுவதுபோல, பல விதங்களில் இந்தப் பிச்சைக்கார வாழ்கையை படம்பிடித்து செல்வார்கள்.
அவர் நேரடியாக ஊடக விபச்சாரி என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்பதை உணர்ந்ததும், உடம்பு தீப்பிழம்பாய் மாறிக் கொதிக்கத் தொடங்கியது.
“தம்பி…”
…கோபக் கனலில் அமைதியாக வெந்துக் கொண்டிருந்தான்.
இந்த மாதிரி வந்திட்டு போற ஒவ்வொரு ஆளும், “கட்டுரை வெளிவந்தவுடன், உங்கள் நிலை மாறும்” எனச் சொல்லாமல் இருந்ததேயில்லை. மாற்றம் வருகிறது. ஏனோ அது அவர்களுக்கு மட்டும். உலகம் முழுவதும் எங்களைப் பற்றி பேச வானத்தில் பறந்துக்கொண்டும், நட்சத்திர விடுதிகளின் மயக்கத்தில்… சாகாத இந்தப் பன்றிகளை பற்றி யோசித்துக்கொண்டும். உண்மையில் நாங்கள் இந்த நிலையினும் கீழே செல்வதை தான் எதிர்பார்க்கிறார்கள். ஒரு வேளை கடவுளின் கருணையினால் டெங்கு, மலேரியா போன்றவை வந்து கொத்துக்கொத்தாய் சாவதை காண, ஆயிரம் கண்களுடன் காத்திருக்கின்றனர்.
“என்னைப் போன்ற ஒவ்வொரு ஆளின் பங்கும் இல்லையேல், இப்படியேனும் வாழ முடியும் என்று நம்புகிறீர்களா…?” அவன் சீறினான்.
உண்மைதான். எங்களைப் போன்றவர்கள் தேவைதானே. இல்லையேல் ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்கி வந்து, எங்கள் குழந்தைகளின் கைகளில் திணித்து, அவர்களுடன் தற்படம் எடுத்து… “இவர்களின் சிரிப்பில் கடவுளைக் காண்கிறேன்” என்று சொல்ல முடியாதல்லவா.
அவனால் சீறி வந்த ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. உங்களுக்கு இங்கு கிடைக்கும் ஒவ்வொரு வசதிக்கும், வாய்ப்புக்கும் எங்களைப் போன்றவர்கள் வெளியிடும் படமும், கட்டுரைகளுமே காரணம் என்பது மறந்திருக்கும்.
ம்ம்… “வெள்ளை சினைப் பன்றிகளை தடவி கொடுக்கும் டாக்டர்களைப் போல” என்றவாறே வேகமாக எழுந்து உள்ளே சென்றார். அகத்தீயின் எரிதழலுடன் அவளும்.
– கதைப் படிக்கலாம் – 41