– வாய்மைநாதன்
“டேய் சொட்டை மண்டையா.. எப்படா வருவ.? அப்பாயியும், நானும் நாலு மாசமா உன்னைப் பார்க்காம எங்களுக்கு எப்பிடிப் போகுது தெரியுமா? ப்ளீஸ்டா.. சீக்கிரம் வாடா.!” என அலைபேசி வழியே மூச்சே விடாமல் தனது அதீத ஆதங்கத்தைத் தன் பாணியிலேயே கொட்டித் தீர்த்தாள் இனியா.
மறுபுறம் தனது குறைந்த செவிட்டுத் தன்மைக்காக அலைபேசியை ‘லவுடு ஸ்பீக்கரில்’ வைத்திருந்த பெருமாள், “வந்துடுறேன்டா கண்ணு.. கொரோனா பிரச்சனைலாம் முடிஞ்சா தான வர முடியும்.. இப்போ பஸ் வசதியும் அவ்வளவா இல்லையேம்மா..” என்பதை முடிந்த அளவிற்கு உரக்கக் கத்தியவாறு பேசினார்.
“ஏன்ய்யா..? ஃபோன் பேசறுதுனா வெளிய போய் கத்தித் தொலையேன்.. இங்கயிருந்து ஏன் எங்க உசுற வாங்குற..?” முதலாளியின் குரல் பெருமாளுக்கு கேட்டதோ இல்லையோ அழைப்பின் மறுபுறமிருந்த இனியாவைத் தொட்டிருந்தது.
“சரி தாத்தா.. நான் வச்சுடுறேன்..” எனக் கவலையோடு அவள் அழைப்பு அணைந்ததுக் கூட தெரியாமல் ‘ஹலோ.. ஹலோ..’ என பெருமாளின் பேச்சு கொஞ்ச தூரம்மட்டும் தானே நீண்டு, குழப்பத்துடன் துண்டித்திருந்தது.
‘இராஜபுரம்’ பஸ் ஸ்டாண்டு கடைகளுள் ஒரு கடையாய் அமைந்த ‘குப்பண்ணன் ஹோட்டலில்’ மணக்க மணக்க வடையும், சுவைக்க ருசிக்க பூரியும் பொரிக்கிற மாஸ்டர் வேலை, பெருமாளின் உத்தியோகம். சொட்டைத் தலை, பொக்கை வாயென வயது அறுபதைத் தாண்டி மூப்படைந்த காரணத்தினால் அவர் நடையில் அதிகம் தளர்வு ஊறியிருந்தது. உட்கார்ந்தால் அந்த இருக்கையே ‘கதி’யென நாள் முழுக்க அமர்ந்தே வேலை செய்ததுண்டு.
அவ்வப்போது தூணைத் தாங்கிக் கொண்டே கழிவறை சென்று வர, அவருக்கு மட்டும் குறைந்தது அரை மணிநேரம் பிடிக்கும். யாருடைய தயவையும் எதிர்பார்ப்பது அவருக்கு ஆகாதவொன்று என்பதால், பலரின் உதவிகளையும் உதாசீனப்படுத்துவது அவரின் வழமையாகிப் போனது எல்லா விஷயத்திலும்!
பெருமாளின் பூர்வீகம் குச்சிக்காடு. அது இராஜபுரத்திலிருந்து வடகிழக்கில் சரியாக முப்பத்திரண்டு மைல் கல்லில் அமைந்திருந்தது. நூற்றி இருபது குடும்பங்கள் சூழ இருந்த அந்த சுற்றுவட்டாரத்தில் ‘பெரிய சமையல்காரர்’ எனப் பெயர் பெற்றிருந்த பெருமாளின் இணைச் சமையலர், அவரின் மனைவி காத்தாயி. இருவரின் கைப்பக்குவத்தையும் விஞ்சிய சுவையை அவ்வூரில் எங்குமே பார்த்திருக்க இயலாது.
பெருமாளின் வீடு – அவர், அவரின் தாய் பொன்னாத்தா, தாரம் காத்தாயி மற்றும் இனியாவோடு சேர்த்து ‘நான்கு’ நபர் அடங்கியிருந்த அழகிய கூடு. அந்தக் கூட்டில் டாக்டர்களாலேயே கண்டறிய முடியாத ஒருவித ’இரத்தச்சோகை’ நோய்க்கு காத்தாயியின் உயிர் அநாயசமாய் கரைந்து, ’ஆறு திங்கள்’ கடந்திருக்க, அத்தோடு கொரோனாவும் நான்கு மாதம் கலந்திருக்க, பெருமாளின் வாழ்வு கடைசி ஆறேழு மாதகாலம்… ‘நகமிழந்த சதை’ போல தாங்கிக்கொள்ள முடியாத வலிகளால் பின்னிப் பிணைந்திருந்தது.
“யோவ் பெருமாளு.. பூரி ரெடியாய்யா.?” வந்த மறுகணமே அதட்டலாய் மொழிந்த முதலாளியின் மகனுக்கு பகட்டைப் பழகித்தந்த அளவிற்கு, மரியாதையைக் கற்றுத்தர மறந்திருந்தார் அவனின் தந்தை.
“ஆச்சுங்க சின்னய்யா.. தேய்ச்ச பூரி மிச்சமிருந்தா குடுங்க.. ஒட்டுக்கா பொரிச்சுக் குடுத்துடுறேன்..” பவ்வியத்தோடு அவனைப் பணித்தார் பெருமாள்.
“ஆமாய்யா.. நாந்தான் உங்கிட்ட கைக்கட்டி வேலை செய்யுறேன் பாரு.. செய்யுற ஒன்னுமில்லாத வேலைக்கி ஒன்பது ஆள் உதவிக்குத் கேக்குதோ.? போய் நீயே எடுத்துக்கியா..” என அவன் எடுத்தெறிந்து பேசிய பேச்சில், பெருமாளின் சப்தநாடியும் ஒரு நொடியில் அடங்கிப்போனது. அங்கிருந்த ’கஸ்டமர்’ ஒருவரின் பரிதாபப் பார்வையும், அவரை மேலும் மனதளவில் நிலைகுலையச் செய்திருந்தது. ஒருபக்கம் தன் குடும்பமும், மறுபக்கம் முதலாளி மகனின் சிவந்த முகமும் மாறிமாறி நிழலாடிய பொழுதினில், சட்டியிலிட்டிருந்த கடைசி பூரி ‘கடும் தணலால்’ கருகியிருந்தது.
சட்டென நினைவு பிறந்து கவனித்தவர், முதலாளியின் மகனுக்குத் தெரியாமல் அதை அப்புறப்படுத்துவதில் உடனடி தீவிரம் காண்பித்தார். இல்லையென்றால் அதற்கும் சேர்த்து தனியே நொக்குப் பெத்திருப்பார். பாவம்.! வாய் பேசமுடியாத, ஆனால் குறைந்தபட்சத் தன்மானத்தோடு வாழ விரும்பும் ஜீவனது. அதற்கிருந்த ஒரேயொரு ‘நற்றுணையையும்’ காலம் கருணையின்றி ‘கபளீகரம்’ செய்திருந்தது.
“இந்தாய்யா.. சமயல்காரரே.. நீ வச்சிட்டிருக்குற புளிக்கொழம்புல உப்பு ஒரப்புலாம் நல்லா இருக்கணும்யா.. ஒம்பாட்டுக்கு ஏதோ கடமைக்கின்னு செஞ்சுடாத..” அன்றும் இப்படித்தான் கல்யாண வீட்டுக்காரனொருவன் பெருமாளை இழிவுப் பேசினான். வரிஞ்சுக் கட்டிக்கொண்டு வந்த காத்தாயி,
“இங்கப் பாருங்க.. ருசியப் பார்த்துப்புட்டு எம் புருஷனைப் பேசுங்க.. இல்லையா ஊருல உள்ளப் பெரிய மனுஷங்களப் போய்க் கேட்டு தெரிஞ்சுட்டுப் பேசுங்க.. சொம்மா உங்களுக்குத்தான் வாயிருக்கேன்னு இங்க வந்துப் பேசக் கூடாது..” எனப் பதிலுக்கு சுடுமொழி பேசி ‘பிறர் வாயடைக்க வைத்த தருணங்கள்’ இனி என்றுமே பெருமாளுக்கு வாய்க்காது. அதனால்தான் வேலை தெரியாத ‘பொடுசுகள்லாம்’ முதலாளி இருக்கையில் அமர்ந்துக்கொண்டு ஊரே மெச்சிய ‘தொழில்காரரை’ அடிமையாய் நடத்தியிருந்தது.
இதுபோன்ற கஷ்டம் நேர்ந்த நேரமெல்லாம் ‘இனியா பற்றிய எண்ணம்’ பெருமாளின் ஆழ்மனதில் அனிச்சையாய் ஊற்றெடுப்பது வழக்கம். அந்த ஊற்றுதான் அவருக்கு இனிப்பூட்டும்; சமாதானப்படுத்தும்; துன்பம் மறந்து வாழ வழி சொல்லிவிட்டுப் போகும்.. அன்றும் அப்படித்தான் சொல்லிவிட்டுப் போனது.
சில நாட்கள் கடந்த ஓரிரவில் என்றும் போல கடையின் கட்டாந்தரையைப் பாய் விரித்துப் படுக்கையாக்கிப் படுத்தார், பெருமாள். உடல் வலியோடு கலந்த அவ்விரவின் குளுமை இனியாவையும், தன் தாயையும் இணைத்து நினைத்தப்படி அப்படியே உறங்கச் சொல்லியது. ஆனால் வாயசைவாக, “மவராசிய விட்டுப்புட்டேனே.. என் தெய்வத்த தொலச்சிப்புட்டேனே..” என புலம்பிக் கொண்டே, பெருமாளின் நெஞ்சத்தில் நிலவிய ஏதோ ஒரு பாரம் – இடியெனப் பரவி கண்ணின் ஓரம் கண்ணீர்த் துளிகளையனுப்பி ஆறுதல் பேசிய பின்னரே, அவர் கண்களை உறக்கம் ஓடி வந்து தழுவியது.
“தாத்தா… தாத்தா…” பெருமாளின் கனவில் இனியா மிகுத்துக் கத்துவதைப் பொறுக்காமல், பெருமாள் துயில் கலைத்தபோது நேரம் விடியற்காலை ஐந்தைத் தாண்டியிருந்தது. ‘சட்டர்’ கதவை ஓங்கியோங்கி அறைந்தக் கைகளோடு மீண்டும்,
“தாத்தா…. தாத்தா….” என்றக் குரல் இருமுறை ஒலித்தது.
பதைபதைத்த இதயத்தோடு உறக்கம் முழுமையாய் கலையாத உடலைக் குலுக்கி, கைகள் நடுங்கிக் கொண்டே ‘சட்டர்’ கதவைத் திறந்தார் பெருமாள்.
“தாயீ.…..” …. “இனியா……”
நொருங்கிப்போன அடி உள்ளத்திலிருந்து தழுதழுத்தது, அந்தக் குரல்.
“சொட்டைத் தாத்தா… எப்பிடிய்யா இருக்க…” சொல்லிக் கொண்டே இனியா ஓங்கி அழுதே விட்டாள்.
“உன்னைப் பார்க்காம எப்படியிருந்துச்சு தெரியுமா.? இங்க வந்து ஏன் தாத்தா மாட்டிக்கிட்டு கஷ்டப்படுற..? எங்களுக்காகத் தான..? நான் உனக்கு அவ்வளவு பாரத்தைக் குடுக்குறேனா தாத்தா..” என அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைத்து, பெருமாளின் பதிலுக்காய் காத்திராமல் அவரை இறுகப் பற்றிக் கொண்டாள்.
தன் நெஞ்சுக்கு நெருக்கமாய்ப் புதைந்திருந்த இனியாவின் முகமுயர்த்தி கண்களில் கொட்டித் தீர்த்த கண்ணீரை வாஞ்சையோடு துடைத்து விட்டவர்,
“அப்புடிலாம் இல்லடிம்மா.. ஏன்டி பெரிய பெரிய வார்த்தைலாம் பேசுற.?” என்று வார்த்தை பேசியவாறே கால் இடறினார். கட்டுப் போட்டிருந்த வலது காலை இனியா அப்போதுதான் கவனித்திருந்தாள். உள்ளிருந்த ‘காட்டன்’ பஞ்சைத் தாண்டி இரத்தம் நிரம்ப சொட்டி, அது அப்படியே உறைந்திருப்பதாகத் தோன்றியது. ஒரு கணம் ஆடிப் போனவள் “என்ன தாத்தா இது..” என நெஞ்சம் பொறுக்காது குமுறினாள்.
“அதை விடும்மா.. உன் அப்பாயி எப்பிடியிருக்கு.? நேரா நேரத்துக்கு சாப்பிடுதா.? நீயும் சாப்பிடுறியா..?” இனியாவின் கவனத்தைத் திசை திருப்ப முயன்று தோற்றிருந்தார் பெருமாள்.
“நீ இதைச் சொல்லு தாத்தா முதல்ல.. என்னத்தப் பண்ணி வச்சுருக்க..” இந்த முறை சீற்றம் மிகுத்து கொஞ்சம் சீறினாள் இனியா.
இதற்கு மேல் அவளிடம் மறைக்க முடியாதென உணர்ந்தவர்,
“தாத்தாவுக்கு ‘சுகர்’ அதிகமாய்டுச்சு தாயி.. ஆப்பரேஷன் பண்ணாத் தான் பொழைப்பன்னு பெரிய டாக்டரு சொன்னாருமா.. அதான் காயம் பெருசான மூணு விரலையும் எடுக்கச் சொல்லிபுட்டேன்.. அப்பப்ப இப்பிடி கொஞ்சம் ரெத்தம் சிந்தும்.. இப்போ பழகிகிச்சுமா..” என உணர்ச்சி வயப்பட்டபடியே முடித்தார்.
“தனியா ஆளில்லாம எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பல்ல… நான்லாம் இருக்கறதையே மறந்துட்டியா தாத்தா.. இதெல்லாம் மறைக்கத் தான் நாலு மாசமா வண்டி வசதி இல்லன்னு என்கிட்ட பொய் சொன்னியாய்யா..” என சொல்லிக் கொண்டே, பெருமாளின் காலை கண்ணீரோடு மெதுவாய் தடவிக் கொடுத்தாள்.
“உசுரு இல்லாம ஒடம்பு வாழுமாடி.? உம் படிப்பு பாதிக்குமேன்னு தான் தாயி.. நானெதும் சொல்லல..” மெல்ல வார்த்தைகளை மென்று முழுங்கினார்.
“படிப்புலாம் ஒன்னும் பாதிக்கல.. கொரோனா தான் எல்லாத்தையும் தள்ளி வச்சுருச்சுல்ல.. எப்போ ‘கவர்மெண்டு எக்ஸாம்’ வச்சாலும் நான் ஃபர்ஸ்ட் அட்டம்ப்டுலயே வேலைக்குப் போய்ருவேன்.. நீ இதுவர என்னைப் படிக்கவைக்க ஒழச்சதலாம் போதும்.. வெறும் ரெண்டாயிரம் ரூவா காசுக்கு அடிமாடாட்டம் ஆயிட்டல.. நான் கைமுறுக்கு சுட்டாவது அந்த ரெண்டாயிரத்தை மாசாமாசம் ஈட்டிப்புடுறேன்.. நீ முதல்ல வண்டியேறு..” என கைக்காட்டிய திசையில், மூன்று சக்கர ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.
பெருமாளுக்கு இனியா இவ்வளவு தூரம் வண்டி பேசி வந்ததன் முழுநோக்கமும் புரிந்துவிட்டது. ஆனாலும் அரசு வேலையில் அமர்த்திவிட்டுத்தான் ஓய வேண்டுமென்ற அவரின் உள்ளார்ந்தக் கொள்கை, அவரை ஆட்டோ ஏற்ற மறுத்தது. இனியாவின் காலில் விழாத குறையாய் கெஞ்சிப் பேசி திரும்ப வீட்டுக்கு அனுப்ப முற்பட்டு வெற்றி பெற்றார்.
“தாத்தாவை இப்படி விட்டுட்டு போறோமே..” என்ற அரை மனது ஒருபுறமிருக்க, “சீக்கிரம் கவர்மெண்டு வேலைக்குப் போயி நம்ம தாத்தாவ உட்கார வச்சு சோறு போடணும்..” எனும் வாடிக்கையான நம்பிக்கையைத் தன்னுள் திரும்ப விதைத்து, கலங்கிக் கொண்டே கையசைத்தாள்.
மனம் இறுகியவாறே பதில் அசைவு புரிந்த பெருமாளின் செவி முழுக்க, காத்தாயியின் முத்துச்சொல்லொன்று அசரீரியாய்க் கேட்டது.
“நீங்க வேணும்னா பாருங்க.. நாம பெத்துப் போட்ட புள்ளைங்க இப்ப நம்மல கைவிட்டுட்டு அனாதையாக்கிருக்கலாம்.. எங்கயோ இருந்து நமக்காகன்னே கெடைச்ச இந்த புள்ளைதான், நம்மலோட கடைசி காலத்துல தொணையா இருக்கப் போகுது.. இது எம்மேலஞ் சத்தியம்.!”
இதுவரை இனியாவைத் தன் தத்துப் பிள்ளையெனக் காட்டிக் கொள்ளாத பெருமாள், அவள் தன்னை ‘தாத்தாவாகப்’ பாவிப்பதை என்றுமே மறுத்துப் பேசியதில்லை.
“உஞ்சொல்லு பலிச்சுடுச்சு காத்தாயி” என வடகிழக்கு நோக்கி வடிந்த கண்ணீரோடு கும்பிட்டு மெதுவாய் ஊர்ந்தவாறே தன் வேலையைத் தொடங்கினார் பெருமாள்.
-முற்றும்-
– கதைப் படிக்கலாம் – 69
இதையும் படியுங்கள் : செங்காயி