– திலிப்குமார்
மொத்த ஜெயிலிற்கும் கறிச்சோறின் வாசம் பரவிக் கிடக்கிறது காற்றில். விறகுக் கட்டைகள் அடுக்கடுக்காய்க் கொட்டப்பட்டு, ஒவ்வொன்றாய் அடுப்பிற்குள் அழகழகாய் எடுத்து வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. ஒருபக்கம் சோற்றை வெள்ளைத் துணியில் கட்டி வடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் கைதிகள் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் நடந்து, சமையலறையை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
காளி சமைக்கும் சமையல் என்றால் சும்மாவா என்ன? இந்த ஜெயிலில் எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. காளி என்றால் கைப்பக்குவக்காரன் என்று. ஜெயில் சோறென்றே தெரியாத வகையில் விருந்து படைத்துவிடுவேன் சமையலில். ஜெயில் அதிகாரிகளே தேடி வந்து சாப்பிடுவார்கள். முதலில் கடமைக்கு வந்த அரிசியும் காய்கறிகளும், என் கைப்பக்குவத்தை கண்டு ஃப்ரஷ்ஷாக வந்திறங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்று வெந்துக் கொண்டிருக்கும் கறிச்சோற்றின் செலவு மொத்தமும் என் செலவுதான். இத்தனை நாட்கள் ஜெயிலில் நான் வேலைப்பார்த்து சம்பாதித்த கூலி அனைத்தையும் ஜெயிலரிடம் கொடுத்து, கறிச்சோற்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால் இதைக் கொண்டாடாமல், இந்த கைதிகள் எல்லாம் கனத்த மனதுடனேயே அமர்ந்திருக்கின்றனர். சமையலறையைக் கடந்துச் செல்லும் கண்கள் அனைத்தும் கறிச்சோற்றின்மேல் இல்லாமல், என் மீதே இருக்கிறது. எனக்கு இது சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.
காரணம் என்னவென்று கேட்டால், எனது கடைசி நாளாம். தண்டனை காலம் முடிந்து போகிறேனாம். இன்னொன்று என்னவென்றால், எனக்கு நாளை அதிகாலை தூக்குதண்டனை தரயிருக்கிறார்களாம். அதுதான் இவர்களுக்கு எல்லாம் சோகமாம். ஆனால் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது. இவர்களுக்கு நான் சாவப்போவதை நினைத்து வருத்தமா… இல்லை காளியுடைய சமையலை இனி வாய்க்கு ருசியா சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தமா என்றுதான் தெரியவில்லை.
“டேய் மணியா”
“அண்ணே”
“உண்மையச் சொல்லு, உனக்கு நான் சாவறத நினைச்சு வருத்தமா, இல்ல என் சமையல திங்க முடியாதேனு வருத்தமா?”
“அண்ணே எண்ணனே”
“டேய் சொல்லுடே சும்மா”
கண்களைக் கசக்கத் தொடங்கிவிட்டான். “டே… டே.. எதுக்குடா அழுவுற.. சரிடா கேட்கல.. அடுப்பப் பாரு”
இதே கேள்வியை நான் ஒரு முப்பது பேரிடம் கேட்டுவிட்டேன். பாசம் நிறைந்த மனிதர்கள். விட்டுச்செல்ல எனக்குமே வருத்தம்தான். வயதுதான் அறுபது ஆகிவிட்டதே. இனி வருந்தி என்ன செய்யப்போகிறோம்.
நாற்பது வருடத்தை இந்த ஜெயிலிலே கழித்துவிட்டேன். எனக்கு இரட்டை ஆயுளும், ஒரு மரணதண்டனையும் கொடுத்த நீதிபதி பெருமாள் இறந்தே, இருபது வருடம் ஆகிவிட்டது. நல்ல மனிதர் சாவதற்கு ஒருமாதத்திற்கு முன்பு என்னைத் தேடி விசாரித்து வந்து பார்த்தார். அடுத்தக் காந்தி ஜெயந்தி அன்று எனது மரண தண்டனையைக் குறைத்துவிட பரிந்துறை செய்கிறேன் என்று சொன்னார். அவருக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். போய் சேர்ந்துவிட்டார்.
“டேய் மணி.. அடி பிடிக்குது பாருடா.. விறக அண, சட்டிய எறக்குடா”
வேகவேகமாக விறகை வெளியே இழுத்துப்போட்டு, சட்டியைப் பிடித்து கீழே இறக்கி வைத்தாயிற்று. கறிச்சோறு தயாராகிவிட்டது.
‘டிங் டிங் டிங்’ என சாப்பாட்டு மணியும் அடித்தாயிற்று. கறிச்சோறென்றால் அடித்துப் பிடித்து வரிசையில் நிற்கும் கூட்டம், நீ முன்னாடி போ, நீ பின்னாடி போ என்று பின்னால், பின்னால் சென்று நிற்கின்றனர். சோற்றை அள்ளிப்போடும் முன்பே தட்டைச் சோற்று சட்டிக்குள் விடுபவர்கள், தட்டை நீட்டி சோறு வாங்க மறுக்கிறார்கள்
“டேய்… என்னங்கடா ஆச்சு.. கிறுக்கு புடிச்சுக்கிச்சா என்ன”
வெறுமென தலையை மட்டும் குனிந்து நிற்கின்றனர்.
“சாவற அன்னைக்கு ஏன்டா கத்த வைக்கிறிங்க.. யோ பெரியபுள்ள உனக்கென்னயா சின்ன புள்ளயாட்டம்.. தட்டக் கொண்டாயா..”
எல்லாருக்கும் தயக்கம். என் முகத்தை முழுதாகப் பார்க்க மறுக்கிறார்கள். 40 வருடங்கள் சோறு போட்டவன் கையாயிற்றே. 20 வயதில் ஜெயிலுக்கு வந்து 22 வயதில் கரண்டிபிடிக்க ஆரம்பித்த கை. என்னத்தான் சிரித்துக்கொண்டே சோற்றை அள்ளி வைத்தாலும், என்னிடம் சோறு வாங்கித் தின்பதற்கு அவர்களுக்குத் தயக்கம். இப்படியே அடிதடி தயக்கங்களுக்கு நடுவே சோற்றை தின்றும் முடித்தாயிற்று.
ஆறு மணிக்கு வெள்ளை புறாக்கள் அனைத்தும் கோட்டைக்குள் இருக்கும் சிறைக்குள் அதனதன் ஜோடிகளுடன் சென்று அடைந்துவிட்டன. நானும் மணியுடன் வந்து சேர்ந்துவிட்டேன் என் சிறைக்குள். சிறைக்குள் அடங்கிய கைதிகளின் சத்தம் அடங்க சில நேரம் எடுத்துக்கொண்டது. பறவைகள் அதன் கூட்டிற்குள் சென்று தூங்கும்வரை ஊர்சுற்றிய கதைகளைப் பேசுவதுபோல தான் இந்த சிறைக்குள்ளும் நடக்கும். கூச்சல்கள் அடங்கிய சில நிமிடத்தில்.. டப்… டப்… டப்… டப்… என பூட்ஸ் காலின் சத்தம். கணக்கெடுக்க வருபவரின் சத்தம்.
இரவு ஒருமுறை கணக்கெடுப்பு. காலை திறந்துவிடுவதற்கு முன்பு ஒருமுறை கணக்கெடுப்பு. இதுதான் நடைமுறை. இரண்டு கணக்கும் சரியாக இருக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் நாளை காலை கணக்கெடுக்கின்போது ஒரு எண்ணிக்கை குறைந்துவிடும். இந்த காளியின் ஆட்டம் அடங்கிவிடும். இயக்கங்கள் என்றேனும் ஒருநாள் ஓய்வு நிலைக்கு வந்துதானே தீரவேண்டும். ஆடி அடங்கும் உலகம்தானே இது. இந்தக் காளி மட்டும் என்ன சாமியா? அடங்காமல் ஆடியவாறே நிற்க.
அதிகாலை மூன்று மணிக்கு என் உடலில் தகிக்கும் உயிரின் கருவை வலிக்காமல் எடுக்கச்சொல்லி உத்தரவு. இதற்காக பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டேன். ஒருவாறு உருட்டிப் பிரட்டி மனதை தயார்படுத்திக்கொண்டேன். இருந்தும் நேரம் நெருங்க, நெருங்க மனதினுள் ஒரு பயம். இரவின் இருள் அதிகமாக அதிகமாக ஒரு பதட்டம். நாற்பது வருடங்கள் 6329 என்ற எண் அணிந்த இந்த வெள்ளை சட்டையுடனேயே காலத்தை ஓட்டிவிட்டேன்.
என் வாழ்நாளில் நான் வாழ்ந்த நாட்கள் என்றால், அது தேன்மொழியை பார்ப்பதற்காகவே 13சி பேருந்தில் ஏறி, வெறுமனே அவளை வேடிக்கைப் பார்த்த நாட்கள் மட்டும்தான். கோபத்தின் உச்சியில் ஏழாவதாக ஒருவனை வெட்டும்போது, அவள் பார்த்த அழுகையுடனான பயம் கலந்த முகம் மட்டும்தான், இப்போது மனதில் தேங்கி நிற்கிறது. அழகிய நாட்கள் அவளது முகத்தினை தினம் பார்க்கும் நாட்கள். அதன்பிறகான நாட்கள் அனைத்துமே நான் எண்ணி எண்ணிக் கழித்த நாட்கள்தான்.
ஏழு பேரை வெட்டிக்கொன்றபோது இருந்த வெறி, துணிவு, கோபம், மனபிறழ்வு எதுவும் இப்போது இல்லை. அது கடந்த இருபது வருடத்தில் எப்போதும் இல்லை.
கொட்டும் பனியினில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அடங்கி ஒடுங்கி அமைதியாக இருக்கும் பனிவெளியில், பூட்ஸ் சத்தம் கேட்டால் என்னைத் தூக்குமேடைக்கு அழைத்துச்செல்லத்தான் வருகிறார்களோ என்ற பயம். அவர்கள் வரக்கூடாது இன்னும் சில மணித்துளிகள் கடந்துக்கொள்கிறேன் என்ற ஏக்கம், ஆசை. 40 வருடங்கள் எதை எதையோ நினைத்து நாட்களை கழித்திருக்கிறேன். ஆனால் இந்த இரவை மட்டும் கடக்காமல் நீட்டிக்கவே நினைக்கிறேன்.
இந்தக் கால இடைவெளியில் வெளிஉலகில் எத்தனை மாற்றங்கள் நடந்திருக்கும். எத்தனை எத்தனை தலைவர்கள் வந்திருப்பார்கள். எத்தனை எத்தனை காதல் மலர்ந்திருக்கும். எத்தனை எத்தனை குழந்தைகள் சிரித்திருக்கும். ஜெயிலில் நான் படித்த மார்லியைப்போல எத்தனை பாடகர்கள் வந்திருப்பார்கள். எத்தனை பாடல்கள் ரசிக்கப்பட்டிருக்கும்.
எனக்குள் நானே பேசிக்கொண்டிருக்க, பூட்ஸ் காலின் சத்தம் அதிகமானது. நெஞ்சம் துடிக்கத் தொடங்கிவிட்டது. ஜெயில் கம்பிகளின் வெளியில் வந்து நிற்கப்போகும் உருவத்திற்காக, கண்கள் விரிந்த நிலையில் இருக்க, ரவுண்ட்ஸ் செல்லும் ட்யூட்டி ஆபிசர் லத்தியுடன் வந்து நிற்கிறார்.
“என்ன காளி.. தூங்கலயாடே”
“மணி ஆயிடுச்சா சார்”
“டேய் அது கெடக்குடே கொள்ள நேரம், நீ தூங்கலாம்ல”
“வரல சார்.. இன்னைக்குத்தான் இந்த நட்சத்திரம் அழகா தெரிது, பெளர்ணமி அழகா தெரிது, நைட்டோட சத்தம் அழகா தெரிது”
“ப்ச்.. என்னடே நீ இப்டி பேசுற.. பேசாம படுடே”
“படுக்குறேன் சார் போங்க”
“எதாது வேணுமாடா.. சாப்டணும்னு தோணுதா?”
ஒரே ஒரு புன்னகைமட்டும் என் உதட்டில் இருந்து. எனக்குச் சூடாக இஞ்சி டீயும், அதனுடன் தொட்டுக்கொள்ள டைகர் பிஸ்கேட்டும் வேண்டும் என்ற ஆசை. அதைத்தேடி அவர் ஓடவேண்டும். கிடைத்தால் அவர் மனது, இதை வாழ்நாள் முழுதும் கொண்டாடும்.
கிடைக்கவில்லையென்றால்??
இறந்துவிட்டான் என்பதற்காக வருந்துவதைவிட, இறந்தவனுக்கு ஒரு டீ வாங்கித்தர முடியவில்லையே என வருந்துவது கொஞ்சம் கொடுமையானது. செத்தப் பின்பு எதற்கு ஒருவன் மண்டைக்குள் குற்ற உணர்ச்சியாக இருந்து அவனை கொல்வானேன். போகட்டும்.
இந்த மணி வேறு மற்ற நாட்கள் தூங்கவிடாமல் பேசியே கொல்வான். இன்று ஆளுக்கு முன்பு தூங்கிக்கொண்டான். நேரம் செல்ல செல்ல, நேரத்தை போகாதே போகாதே என்று நினைத்த மனது, கொஞ்சம் கொஞ்சமாக மாறி அட எழவு சீக்கிரம் போய்விட்டாலாவது, இந்தக் காத்திருக்கும் வலி இல்லாமல் போய்விடும் என்று எண்ணத்தொடங்கிவிட்டது.
புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் மாட்டின் கழுத்துக்கு அடியில் இருக்கும் புல் நுனியில் இருக்கும் புழுவைபோல நெளிந்து கொண்டிருக்கிறேன். மாடு மேயாமல் போவாது என்பது உறுதி. ஆனால், அது எப்போது இந்தப் புல்லோடு சேர்த்து என்னைத் திங்கும் என்பது தெரியாமல் முழிப்பதுபோல, காலத்தின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னுள் இருக்கும் காதல் புதுமையாக அப்படியே இருக்கிறது. எனக்குத் தினமும் முத்தம் தரும் அண்ணன் மகனின் முகத்துடனாக ஒட்டிக்கொடுக்கும் அந்த முத்தம், இன்னமும் கன்னத்தில் ஒட்டியிருக்கிறது. மறைந்து மறந்துபோயிருந்த இது அனைத்தையும் இந்த இரவு மேலும் மேலும் நினைவூட்டி என்னை வாட்டுகிறது.
சிறைக் கம்பிகளில் கன்னம் வைத்துக்கொண்டு, இரவின் குளிர்ச்சி இறங்கிய அந்த இரும்பின் குளிர்ச்சியை உணர்ந்தவாறு மெல்ல கண்கள் சொருகத்தொடங்க.. டப்… டப்… டப்… என்ற இரண்டு மூன்று பூட்ஸ் கால்கள் சத்தம். படக்கென முழித்துக்கொண்டேன். அந்தப் பாதையில் இருந்த அனைத்து சிறைகளும் முழித்துக்கொண்டது. இந்த மணியை தவிர. கையில் பேப்பருடன் ஜெயிலர் வந்து நின்றார்.
“காளி” என்றார். எழுந்து தயாராக நின்றுக்கொண்டேன். ஜெயிலின் கதவு திறக்கப்பட்டது. திரும்பி மணியை ஒரு பார்வை பார்த்தேன். நன்றாக தூங்கிப்போய்விட்டான்.
“எழுப்பட்டுமா டே” என்றார் ஜெயிலர்
“வேண்டாம் சார், எழுந்தா அழுவான்” என்று நடக்கத் தொடங்கிவிட்டேன்.
நடக்கும் பாதையில் இருக்கும் அனைத்து சிறையிலும் கைதிகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. கடைசி பார்வையின் அழுத்தம் எனக்குத் தெரியும். என் காதலி கற்றுக் கொடுத்திருக்கிறாள். தலையைக் கீழே குனிந்தவாறே சென்றுவிட்டேன். பெரியதொரு அமைதியை உணர்ந்தேன். வெளியில் ஒரு மேஜிஸ்ட்ரேட் மற்றும் நான்கு பேர் இருந்தனர். ஜெயிலர்தான் என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
“சார், இன்னைக்கு கறிச்சோறு பத்தி எதுமே சொல்லலயே” என்றேன்…
அவரது கையை என் மூக்கின் அருகில் வைத்து, “பாருலே, இந்த வாசம் போகவே ஒருவாரம் எடுக்கும்லே” என்றார்…
“அப்ப இன்னும் ஒரு வாரத்துக்குக் கறிச்சோறு திங்கமாட்டிங்க, இந்த வாசனையே போதும்” என்று சொல்ல, படாரென சிரித்துவிட்டார். அதிகாலை அமைதியில் சிரிப்பின் சத்தம் அந்த ஜெயிலிற்கே கேட்டதுபோல ஒரு மாயை.
என் கையைப் பின்னால் இட்டுக் கட்டினர். கட்டிவிட்டு சரியான நேரம் ஆவதற்காக காத்திருந்தனர். அருகில் இருக்கும் மேஜிஸ்ட்ரேட்டிடம்,
“மேடம், தண்டனை குடுக்குறது திருந்தத்தான?” என்று கேட்டேன்.
மேஜிஸ்ட்ரேட் பதில் பேசவேயில்லை. சிறுது நேரம் கழித்து ஜெயிலர் அருகில் வந்து, “பலவாட்டி கேட்டுட்டேன், கடைசியா கேட்குறேன். மனசுல எதாது வச்சுருக்கியா டே” என்றார்.
மேஜிஸ்ட்ரேட் “டைம் ஆச்சு, ப்ளேசுக்கு கூட்டிட்டுப் போங்க” என்றார்.
“கோட்டை வெளியில் உதிக்கும் சூரியனை பார்க்க வேணும் சார்” என்று கேட்க ஆசை. சிரித்துக்கொண்டே சென்றுவிட்டேன்.
மேடைமேல் இருக்கும் பலகையில் ஏறி நின்றேன். மனது பட பட பட வென அடிக்கத்தொடங்கியது. கருப்புத் துணியை போற்றினார்கள். நான் எண்ணியதைப் போல இந்த இருள் இப்படியே நிலைக்க…
– கதைப் படிக்கலாம் – 133
இதையும் படியுங்கள் : தீதும் நன்றும் பிறர்தர வாரா!