– நன்னிலம் இளங்கோவன்
கெளரி… அங்க என்ன பண்ணிகிட் இருக்க… சாமான்லாம் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு… முதல்ல இதையெல்லாம் தூக்கி போடு… மணி எட்டாக போவுது… போய், காலை டிபன் ரெடி பண்ணு… இன்னைக்கு கார்த்திகைன்னு உனக்கு தெரியாதா… போய், சொன்னதெல்லாம் சீக்கிரமா செஞ்சு முடி… நேரம் ஆகிட்டேயிருக்கு…
அத்தை… இந்தாங்க, காபியை சாப்பிடுங்க…
நான் காபி சாப்புடுறது இருக்கட்டும்! தோய்ச்ச துணியெல்லாம் மாடியில கொண்டு காய போட்டுட்டு வா…
சரி… அத்தை இதோ காய போட்டுட்டு வர்றேன்…
கெளரி… மதிய சமையலுக்கு காயகறி வெட்டியாச்சு… அப்புறம் வீட்டை மாப்பு போட்டு துடைச்சுடு…
அத்தை இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வீட்டை துடைச்சேன்… இன்னைக்கும் துடைக்கணுமா…
கெளரி… சொன்னத செய்… எதுவும் பேசாத…
இப்படி எப்போதும் முகத்தை கடு, கடுவென வைத்துக்கொண்டு, மருமகள் கெளரியை வேலை வாங்குவதுதான், மாமியார் லெட்சுமியின் அன்றாட வேலையாக இருந்தது.
லெட்சுமியின் கணவர், நாராயணன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாவர்… ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு இருந்தவர். திடீரென ஒருநாள், இதய நோயால் இறந்துப்போக, அவர் வாங்கி வந்த பென்சன், லெட்சுமிக்கு ஓய்வூதியமாக மாறிவிட்டது.
நாராயணன் லெட்சுமி தம்பதிக்கு சுந்தரும், தேவியும் இரண்டு குழந்தைகள்… முதலாவதாக பிறந்த சுந்தருக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணமாகி இருந்தது. தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் சுந்தருக்கு மனைவியாக வந்துள்ள கெளரியைத் தான், மாமியார் லெட்சுமி பாடாய்படுத்திக் கொண்டிருந்தாள்.
கெளரி பொறுமையாக இருப்பதால், மாமியார் சொல்வதை தட்டாமல் செய்துக்கொண்டிருந்தாள்…
ஒரு வருசம் ஓடிபோயிடுச்சு… உன் வயித்துல ஒரு புழு பூச்சிய காணும்… எப்ப ஒரு பேரனை பெத்து கொடுக்கப் போறியோ… தெரியல…
சில நேரங்களில் இப்படியும் கெளரியிடம், கேள்வி கேட்டு துன்புறுத்துவதுண்டு… குறை யாரிடம் இருக்கிறது என்பது தெரியாமலேயே, சுந்தர் கெளரி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது…
தேவி எம்.காம்., வரை படித்துவிட்டு, தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்து உறவில் சங்கர் என்ற பையனுக்கு தேவியை மணமுடிக்க ஏற்பாடாகி, அதன்படி ஒரு சுபமுகூர்த்த் தினத்தில், சங்கர் தேவி திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
சங்கர் சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், மேனேஜராக வேலை பார்க்கிறான். அம்மா அப்பாவோடு சென்னையிலேயே வசிப்பதால், அவர்களோடு தேவியும் இருந்தாள்.
சங்கர், தேவி திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தேவி தனது அம்மா லெட்சுமிக்கு கைபேசியில் பேசினாள்…
அம்மா.. என் வீட்டுக்காரு வேலை செய்யற ஹோட்டலோட பிராஞ்ச், சிங்கப்பூர்ல திறக்கப் போறங்களாம்… அதுக்குண்டான ஏற்பாடெல்லாம் செய்யறதுக்கு, என் வூட்டுக்காரு சிங்கப்பூருகு போறாரும்மா… வர்றதுக்கு, மூனு மாசத்துக்கு மேல ஆகும் போல தெரியுது… இன்னும் ஒரு வாரத்துல கிளம்பிடுவாரும்மா…
நல்ல செய்திதான்… அப்படின்னா… நீ ஏன் அங்கே இருந்துக்கிட்டு, மாமனார், மாமியாருக்கிட்ட கஷ்டப்பட்டு இருக்குற… புறப்பட்டு அம்மா வூட்டுக்கு வந்துடும்மா… மாப்பிள்ளை சிங்கப்பூருக்கு ஃபிளைட் ஏறுனதும், மாமனாருகிட்ட சொல்லிட்டு உடனே பஸ் ஏறி வந்துடும்மா…
அம்மா… ரொம்ப அவசரப்படாத…
ஏன் தேவி… என்னா ஆச்சு…?
ஆமாம்மா… நீ நினைக்கிற மாதிரி நான் ஊருக்கு வர போறதுல்லம்மா… என் மாமனாரும், மாமியாரும் என்னை ஊருக்குப் போயிட்டு வான்னு சொன்னாலும் நான் ஊருக்கு வர மாட்டம்மா…
என்னம்மா சொல்ற?…
அம்மா உன்ன போல என் மாமியாரு இல்லம்மா… அவுங்க என்ன சொந்த மகளபோல வச்சுருக்காங்க… என்ன நல்லாவும் பார்த்துக்குறாங்க… என் மேல ரொம்பவும் பிரியமா இருக்காங்க….
ஆனா நம்ம வூட்டுக்கு வந்துருக்கற மருமகளை நீ எப்படியெல்லாம் கஷ்டபடுத்திக்கிட்டு இருக்க… அண்ணியும் உன்ன எதிர்த்து பேசாம, நீ சொல்றதெல்லாம் செய்ஞ்சுக்கிட்டு அடிமையா இருக்காங்க… கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம அவுங்கல என்னப் பாடுபடுத்திக்கிட்டு இருக்கற… நான் அங்க இருக்கறப்பவே அண்ணிய சிரமப்படுத்தின நீ, இப்ப அங்க நான் இல்லேன்னதும் எப்படியெல்லாம் துன்புறுத்திக்கிட்டு இருக்கேன்னு தெரியல… பெண் பாவம் பொல்லாதது… ஆமாம்… ஜாக்கிரதையா இருந்துக்க…
என் மேல மாமியார; மட்டுமல்ல, மாமனாரும் என்ன சொந்த பொன்னாத்தான் நினைச்சு நடத்துறாரு… என் வீட்டுக்காரும் என் மேல உசிரையே வச்சுருக்காரு… இப்படி நடத்தற இடத்துலேருந்து நான் எப்படிம்மா வீட்டுக்கு வர முடியும்!
அதைவிட என்னை நம்பித்தான தன்னோட அம்மாவையும், அப்பாவையும் விட்டுட்டு என் வீட்டுக்காரர் வெளிநாடு போறாரு… அவுங்க ரெண்டு பேரும் என் மேல வச்சுருக்கற பாசத்துல, இனிமேல சொந்த ஊருக்கே வரமுடியாது போல இருக்கு…
அம்மா, அப்பா போல என் மேலே பாசமா இருக்கறவங்கல விட்டுட்டு, அங்க வர முடியாத நிலையில் இருக்கம்மா… என்னை மன்னிச்சுடும்மா…
என் மாமியார; போல நீயும் உன் மருமக கிட்ட நடந்துக்கிட்டா, அவுங்களும் உன்னை சொந்த அம்மாவா நினைச்சு நல்லா பார்த்துப்பாங்கம்மா… இனிம உன் மருமக தான் உனக்கு மகள்-ங்குற நினைப்பு உனக்கு வரணும்… இது தாம்மா என்னோட ஆசை…
மகள் தேவி சொல்வதைக் கேட்ட லெட்சுமி, தன் மருமகளை பல வழியிலும் கஷ்டப்படுத்தியதை நினைத்து மனம் வருந்தினாள்…
அதே நேரத்தில், தான் சாப்பிடுவதற்காக கையில் வைத்திருந்த ஆரஞ்சு பழச்சாறு பானத்தை, கௌரியை கூப்பிட்டு சாப்பிட வைத்தாள்.
மாமியார் லெட்சுமியிடமிருந்து பழச்சாறு டம்ளரை கையில் வாங்கிய கௌரிக்கு, ஒன்றும் புரியவில்லை!
– கதைப் படிக்கலாம் – 153