– சா.ரு.மணிவில்லன்
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இருப்பார்கள். எங்கக் கூட வேலைப் பார்த்த சரிதா, அந்த வெகுசில பெண்களில் ஒருத்தியாக இருந்தாள்.
ஐந்தடிக்கும் குறைவான உருவம். கண்ணை கவரும் கருமையான நிறம். முறைத்துப் பார்த்தால் மட்டும் பயமுறுத்தும் குண்டு விழிகள். அவள் சொற்கள் மூலம் சொல்வதைக் காட்டிலும், அவளுடைய விழிகள் மூலம் சொல்லும் செய்தியே அதிகமாக இருக்கும். அவளுக்கு கோபம் வந்தால் அந்தப் பெரிய விழிகளை இன்னும் கொஞ்சம் பெரிதாக்குவாள். மகிழ்ச்சி என்றால் அந்தக் கோலிக்குண்டு விழிகள் அலைபாய்ந்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் அமைதியாக இருப்பதைப் போன்ற தோற்றதை மட்டுமே அவளால் தரமுடியும்.
பழனிக்கு நேரம் மிக மெதுவாக ஊர்ந்து செல்வதாகப்பட்டது. காலை கண்விழித்தது முதல், சரிதாவின் நினைவாகவே இருந்தது. திருமணத்திற்குப் பிறகு அவளை நேரில் பார்க்கவேயில்லை. ஏன் ஃபோனில்கூட பேசவில்லை.
திடீரென நேற்று இரவு, சந்திக்கலாமா… என்று செய்தி அனுப்பியிருந்தாள். செய்தியைப் பார்த்ததும் மனதுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆர்வத்தோடு சந்திக்கலாமே என்று பதில் அனுப்பினான். என்ன விசயம் என்று கேட்டதற்கு, நாளைக்கு நேரில் சொல்வதாக சொல்லிவிட்டாள். என்னப் பேசபோகிறாள் என்று புதிராக இருந்தது.
பழனி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை பார்த்தான். அதுவொரு சின்ன கம்பெனி, அங்கு ஐந்து பேர் மட்டுமே வேலை பார்த்தனர். எல்லோருமே ஐ.டி.ஐ. படித்தவர்கள். கம்பெனி முதலாளியே ஐ.டி.ஐ. படித்தவர்தான். அந்த வளாகத்தில் ஐந்து சின்ன சின்ன கம்பெனிகள் இருந்தன. அனைத்திலும் ஆண்களே வேலைப் பார்த்தனர். ஒருநாள் கம்பெனிக்கு புதிதாக ஒரு பெண் வேலைக்கு வரப்போவதாக முதலாளி சொன்னார்.
எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பெண்ணின் வரவை, முதலாளியைவிட நாங்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கிடந்தோம். எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பெண் ஃபோன் செய்யவும் ஆறுமுகம்தான் சைக்களில் போய் அழைத்து வந்தான். அவளை முதலில் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குத்தான் கிடைத்தது.
சரிதா உயரம் குறைவான, கருத்த நிறமுள்ள பெண்ணாக இருந்தாள். முகமெல்லாம் முகப்பருக்கள். எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தது. அவள் மெசினிஸ்ட். ஆவடி டேங்க் ஃபேக்டரியில் அப்ரண்டீஸ் பார்த்துள்ளாள். ட்ரிலிங் மெஷின் ஓட்டத் தெரியுமென்று சொன்னாள். ஆனால் எங்க மொதலாளி அவளுக்குப் பேப்பர் ஒர்க்-தான் கொடுத்தார். கம்பெனியைவிட்டு வெளியே போகும் மற்றும் உள்ளே வரும் பொருட்களுக்கு ரசீது போடுவது, கம்பெனியின் தினசரி செலவுகளை குறித்து வைப்பது, டெலிஃபோனில் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது… இப்படியான வேலைகள்.
நாட்கள் செல்ல செல்ல அவளின் கவனத்தைப்பெற எல்லோரும் முயன்றுக் கொண்டிருந்தோம். குறிப்பாக ஆறுமுகம் அதில் முதலிடத்தில் இருந்தான். காலையில் நேரத்தோடு வந்து கம்பெனி சைக்கிளை எடுத்துக்கிட்டுப்போய், அவளை அழைத்து வந்தான். மாலையில் அவளைப் பேருந்து நிலையத்துக்கு கொண்டுவிட வேண்டுமென்பதை மனதில் வைத்தே, வேலைகளை திட்டமிட்டான். இந்தப் போட்டியில் என்னுடைய கூச்ச சுபாவம் காரணமாக நான் கடைசி இடத்தில் இருந்தேன்.
பழனி முகத்தை சவரம் செய்துக்கொண்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு உடைகளை அயர்ன் செய்தான். அறை நண்பர்கள் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தனர். புன்னகைத்தப்படியே அவன் குளிக்கச் சென்றான். கல்யாணத்துக்கு பிறகு ஃபோனில் பேசிக்க வேண்டாம், நேரிலும் சந்திக்க வேண்டாம் என்று அவள்தான் சொன்னாள். எதற்காக ஆறு மாதத்திற்குப் பிறகு, இப்போது சந்திக்க வேண்டும் என்கிறாள். மறுபடியும் வேலைக்கு வரப்போகிறாளா, இல்லை கணவனோடு ஏதும் பிரச்சனையாக இருக்குமா… யோசனைகளோடு குளித்து முடித்தான்.
பழனி உயரமானவன். அதுப்பற்றி அவனுக்கு கொஞ்சம் பெருமைக்கூட உண்டு. பீரோ மேலிருக்கும் புத்தகக் கட்டுகளுக்கு இடையே இருக்கும் ரசீது புத்தகத்தை எடுக்க, அவ்வப்போது சரிதா பழனியை அழைப்பாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடையே புரிதல் ஏற்பட்டது. வேலை குறைவான நாளொன்றில் அனைவரும் ஒன்றாக சிரித்து பேசிக்கொண்டு, ஒருவரையொருவர் கேலி செய்துக்கொண்டனர்.
நான் வேலைக்கு வந்தப் புதுசுல என்கிட்ட பேசவே மாட்டீங்க, என்கிட்ட கடைசியா பேசுன ஆளே நீங்கத்தான். உங்கள அப்பாவின்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ என்னடானா எல்லாரையும் இப்படி கேலி பண்ணுறீங்க. நீங்க அப்பாவியில்ல… அடப்பாவிப் போலிருக்கே என்று சொல்லி, சரிதா பழனியைப் பார்த்துச் சிரித்தாள். அன்றுதான் அவன் மனதுக்குள்ளும் அவள் நுழைந்தாள்.
அறை நண்பர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். காலை உணவை முடித்துவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்டு பழனி வெளியே செல்ல தயாரானான். அறையை பூட்டிவிட்டு சாவியை சன்னல் மறைவிலிருக்கும் ஆணியில் மாட்டினான்.
சரிதாவுக்கும் பழனிக்கும் நிறைய விசயங்களில் ஒற்றுமை இருந்தது. இருவரும் பேக்கரி போய் காபி சாப்பிடும் அளவுக்கு, அவர்களிடம் நெருக்கம் அதிகமானது. பழனிக்கு டீத்தான் பிடிக்கும் என்றாலும், அவளுக்காக காபிக்கு மாறினான். ஒருநாள் பேக்கரியில் வைத்து, பழனி சரிதாவிடம் தன் காதலைச் சொன்னான். முதலில் மெளனமாக இருந்த சரிதா, முடிவில் அது சரிவராது என்றாள். ஏன் சரிவராது… என்ன காரணம் சொல்லுன்னு… பழனி கெஞ்சினான்.
நான் குள்ளமா இருக்கேன், நீங்க உயரமா இருக்கிங்க. நாம ஜோடியா போனா எல்லாரும் கேலிப்பண்ணுவாங்க என்றாள்.
இதுல்லாம் ஒரு காரணமா, இப்போ நாம ஒண்ணாதானே சுத்துறோம்.
இது வேற அது வேற….. அதவிடவும் எங்க வீட்ல இத ஒத்துக்க மாட்டாங்க.
பேசி புரியவைக்க முடியாதா.
முடியாது. இந்தப் பேச்ச இதோட விடுங்க.
சரிதா மிகவும் உறுதியாகச் சொன்னாள். தான் உயரமாக வளர்ந்ததுக்காக பழனி அன்று நிறையவே வருத்தப்பட்டான். மேற்கொண்டு அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், பழனி அமைதியாக இருந்தான். அன்று மிகவும் சீக்கிரமாக பேக்கரியிலிருந்து வெளியேறினர். இருவரும் சிலநாட்கள் பேசாமலிருந்தார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. ஏதாவது தேவையின் பொருட்டு இருவரும் பேசவேண்டிய சூழல். கொஞ்சம் நாட்களில் அப்படி ஒரு விசயம் பேசினோம் என்பதை மறந்து, இருவரும் சாதாரணமாக பழகக் கற்றுக்கொண்டனர். சீக்கிரம் வேலைமுடியும் நாட்களில், மறுபடியும் நண்பர்களாக பேக்கரிக்கு சென்று காபி சாப்பிட்டனர்.
சரிதாவுக்கு கல்யாணம் நிச்சயமானதும், வேலையைவிட்டு நின்றாள். கடைசி நாள் பழனியை பேக்கரிக்கு காபி சாப்பிட அழைத்தாள். இனிமே நீங்க எனக்கு ஃபோன் பண்ண வேண்டாம். ஏன் மெஸேஜ் கூட அனுப்ப வேண்டாம். தேவைன்னா நானே கூப்பிடுறேன் என்று சரிதா சொன்னபோது, பழனி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எந்த விதமான மனதடங்களும் இல்லாமல், அவள் பேசிக்கொண்டிருந்தாள். காபி குடித்ததும் உடனே அவள் பிரிந்து சென்றுவிட்டாள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் பழனி அந்த பேக்கரி வாசலில் சரிதாவின் வரவை எதிர்பார்த்து காத்து நின்றான். பேக்கரிக்கு பக்கத்திலிருந்த கல்யாண மண்டப வாசலில் திருமணத்திற்கு வந்த மக்கள் கூட்டம். அலங்கரித்துக்கொண்ட ஆண்களும், பெண்களும் அவசர அவசரமாக உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.
முதன்முதலாக புடவைக்கட்டிய சின்ன பெண்கள் இருவர், முகத்தில் பெருமிதத்தோடு தங்களை அழகை தாங்களே வியந்துப் பேசியப்படி சென்றனர். அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியின் கோடுகளை பழனி ரசித்தான்.
அங்க என்ன வேடிக்கை… சரிதாவின் குரல்கேட்டு பழனி திரும்பிப் பார்த்தான். சரிதா அவனருகே நின்றுக்கொண்டிருந்தாள். ஆறு மாதத்தில் கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறாள். முகத்தில் கருமை நிறம் மறைந்து, கொஞ்சம் பளப்பளப்புக் கூடியிருந்தது. இருவரும் பேக்கரியின் உள்ளே சென்றனர். வழக்கம் போல காபிக்கு அவளே சொன்னாள்.
வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்ததும், அங்குக் கனத்த அமைதி நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி இருந்தனர். காபி கப்பை கீழை வைத்தப்படியே, அவள் அவனைப்பார்த்து… நீ கொஞ்சம் பொறுமையாவே கல்யாணம் பண்ணிக்கோ, அவசரப்படாத என்றாள்.
ஏன் இப்படி சொல்கிறாள். அவளது கணவன் ஒரு கம்பெனியில் கேஷியராக நல்ல சம்பளத்தில்தானே இருக்கிறான். என்ன பிரச்சனையாக இருக்கும்.
ஏன் அப்படி சொல்ற, கேஷியர் சார் எப்படி இருக்கார்.
அவருக்கென்ன நல்லாயிருக்காரு என்று சலிப்பாக சொன்னாள்.
ஏன் ஒருமாதிரி இழுக்கிற, குடும்பத்துல எதும் பிரச்சனையா.
சரிதா அமைதியாக காபி குடித்தாள். பக்கத்து சீட்டில் இருந்த குழந்தையை வேடிக்கைப் பார்த்தாள். பழனியும் வேடிக்கைப் பார்த்தான். அவளாக பேசட்டும் எனக் காத்திருந்தான். சற்று நேரம் கழித்து பேசத் தொடங்கினாள்.
அங்க தம்பி, தங்கச்சிலாம் அவங்க சம்பாதிக்கிறத தனியா வச்சிக்குறாங்க, இவருதான் வீட்ல எல்லா செலவையும் பாக்கிறார். இதுல கல்யாண கடன்னு வேற தனியா பிரிச்சு விட்டு இருக்காங்க. அது அப்படியே இருக்கு.
வீட்டுக்கு மூத்தவர் அப்படித்தான் இருக்க முடியும், கொஞ்ச நாள் போனா புரிஞ்சுக்குவார்… கவலப்படாத…
ஆமா.. எங்க அம்மாவும் இப்படித்தான் சொல்லுது. இவருதான் வேல வேலன்னு லீவ்-கூட போடாம வேலைக்குப் போறார். அவங்க எல்லாம் அப்படி இல்ல… அப்பப்போ லீவு போட்டுட்டு ஜாலியா ஊர் சுத்துறாங்க. நான் வேலைக்குப் போறேன்னு சொன்னாலும் வேணாங்கிறார், இவரு என்ன எங்கேயும் கூட்டிக்கிட்டே போனதுல்ல.
இன்னைக்கு என் ஃபிரண்டு ஒருத்திக்கு கல்யாணம் வாங்கன்னா, லீவ் போடமுடியாது, கம்பெனில அர்ஜெண்ட் வேல இருக்குன்னு போயிட்டார். அந்த வீட்ல யாருமே என்கூட சரியா பேச மாட்டேங்கறாங்க, எப்பவும் தனியாவே இருக்கேன். இவருக்கு சொன்னாலும் புரியமாட்டேங்குது. ஏன்டா கல்யாணம் ஆச்சுன்னு இருக்கு.
அவள் பேசி முடிக்கும்வரை பழனி அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கோபத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்த அந்தக் குண்டு விழிகளில், மெல்லிய சோகம் மினுமினுத்தது. அவள் கைக்குட்டையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டாள்.
பழனி மெல்லியக்குரலில்… மத்தவங்களோட நம்மள கம்பேர் பண்ணினா, நாம நிம்மதியா இருக்க முடியுமா. நமக்குக் கெடச்சத வைச்சிக்கிட்டு எப்படி சந்தோசமா இருக்குறதுன்னு பாரு என்றான்.
சரிதாவின் முகம் சோர்ந்துவிட்டது. அவளை எப்படி சாமாதானப்படுத்துவது.
சரி நான் கிளம்புறேன் என்றாள்.
நான் எதும் தப்பா சொல்லிட்டேனா.
அப்படில்லாம் இல்ல.
அப்பறம் என்ன திடீர்ன்னு கிளம்பறேன்னு சொல்ற. ஏதோ பேசனும்னு சொன்னியே.
இந்தப்பக்கம் ஒரு கல்யாணத்துக்காக வந்தேன். உன்னப் பாக்கனும்ன்னு தோணுச்சு. பாத்துட்டேன்.. கெளம்புறேன்.
அவ்வளவுதானா.
ஆமா. அப்பறம் என்ன.. நீ எதும் கற்பனைய வளத்துக்காத… வரட்டுமா என்று புன்னகைத்தாள்.
இப்போது அவள் பழைய சரிதாவாக இருந்தாள். பிடிவாதமாக காபிக்கு அவளே காசுக்கொடுத்தாள். இருவரும் பேக்கரிக்கு வெளியே வந்தனர்.
இருவரும் அமைதியாக பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவளுக்கான பேருந்து வந்ததும், அவள் புன்னகையோடு கை அசைத்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொண்டாள். அவளின் நினைவுகளால் அவனின் மனம் கணமாகிப்போனது. இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாமோ என்று யோசித்தப்படியே, அவன் சாலையோரமாக மெதுவாக நடக்கத் தொடங்கினான்.
– கதைப் படிக்கலாம் – 92
இதையும் படியுங்கள் : உதவாக்கரை