– டி.எச்.லோகாவதி

“உங்கப் பையனுக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் மஸ்குலர் டிஸ்ட்ரோப்பி ……”
“அப்படின்னா………”
“தசை வளக்கேடு……தசைநார் தேய்வு………..”
மருத்துவர் அந்த நோயைப்பற்றி விவரித்துக் கொண்டே போனார்.
வதனாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் கண்கள் குளமாகி இருந்தன. எப்போது வேண்டுமானாலும் வெடித்து அழுது விடுவாள் போல் இருந்தது.
அவள் நரேந்திரனைப் பார்த்தாள். அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதைக் குணப்படுத்தவே முடியாதா டாக்டர்…… இதற்கு மருத்துவமே இல்லையா…….ப்ளீஸ்… டாக்டர்… எனக்கு, எம் பையனை முழுசாக் குணப்படுத்தித் தர முடியாதா டாக்டர்….”
கண்ணீருடன் மன்றாடும் வதனாவைப் பரிதாபத்துடன் நோக்கினார்.
“இல்லேம்மா….. இதற்குச் சரியான மருந்துக் கண்டுப்பிடிக்கலே…… தலைமுறை கடந்து வர்ற ஜெனடிக் நோய் இது. ஒரு குழந்தை பிறந்து இரண்டு வருடம் முதல், மெள்ளத் தெரியவரும் நோய்…. தசைநார்கள் தேய்ந்து தேய்ந்து, அதன் இயக்கங்களை நிறுத்திக்கொள்ளும் நோய் இது….. பன்னிரண்டு வயதுக்குள், இந்த நோயாளியைச் சக்கர நாற்காலி ஆட்கொண்டு விடும்……”
டாக்டர் பெருமூச்சுடன் இடை நிறுத்தினார். பின் தொடர்ந்தார்.
“நோயாளியின் மூளையிடும் கட்டளைகளை, அவருடைய தசைநார்கள் கேட்காது. படிப்படியாக தசைகள் சுருங்கி அவர் இயக்கத்தை முடக்கிவிடும். எந்த ஒரு அசைவிற்கும் பிறரைச் சார்ந்தே இருக்கவேண்டிய நிலை ஏற்படும். அடுத்ததா….. முக்கியமான ஒன்னு…. இந்த நோயாளியின் ஆயுட்காலம் குறைவு…. இருபதிலிருந்து.. முப்பதுக்குள் எப்போது வேண்டுமானாலும் காலம் முடிவடையலாம்….. இருக்கின்ற மருந்து நோயாளி அனுபவிக்கும் வலியின் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்கலாம்….. அவ்வளவே…. சிலநேரம் மூச்சு விடவே சிரமப்படுவாங்க….. சாப்பிட்ட உணவை விழுங்கக் கூட முடியாது….. அடிக்கடி இதயம் பாதிக்கும்…… ஏன்னா……”
டாக்டரை இடைமறித்த வதனா…… “போதும் டாக்டர்…… என்ன….. நோயாளிக்கு குடும்பத்தாரோட முழுமையான அன்பும், அர்ப்பணிப்புச் சேவையும் வேண்டும்னு சொல்றீங்க…… அவ்வளவு தானே டாக்டர். ஒரு தாய்க்கு இதைவிடப் பெரிய பாக்கியம் வேறென்ன வேண்டும் டாக்டர். நான் பார்த்துக்கறேன் என் பையன…..” என அழுத்திச் சொன்னாள்.
“இந்தச் சீட்டில் கண்ட மருந்துகள் மட்டும் வாங்கிக்கங்க… கன்ஸல்டிங் பீஸ் வேண்டாம்…..”
டாக்டரைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டு நரேந்திரனை இடுப்பில் தூக்கிக்கொண்டாள். வெளியே வந்தவள் மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கும் மருந்துக்கடையில், டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்கிக் கொண்டாள்.
எல்லாம் டாக்டர் சொன்னபடியே நடந்தது…..
பன்னிரண்டு வயதில் வீல் சேரில் நரேந்திரன் உட்கார்ந்தான். அவனது தசைகள் சுருங்கத் தொடங்கி, அவன் உருவமே கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. சின்ன வயதில் அழகாக இருந்த அவன் முகம், அவனது அடையாளத்தையே மாற்றியது.
ஆனால் நரேந்திரனுக்கோ, இந்தக் கவலை எல்லாம் இல்லை. என்ன, தனது நிலைமைக் கண்டு அப்பா கழிவிரக்கங் கொள்ளாமல், கைக் கழுவியது தான் அவனுக்கு அதிர்ச்சி.
“வதனா……. இவன் நம்ம பிள்ள இல்லேன்னு தலைமுழுகிட்டு எங்கெயாவது இவனைக் கண்காணா இடத்திலே விட்டுட்டு வந்துரு…. எனக்கு இந்த மாதிரி அசிங்கத்தை எல்லாம் காபந்து பண்ணிட்டிருக்க முடியாது….. சொல்லிட்டேன்”
வதனாவிற்கு வந்தது கோபம்…
“எதுங்க அசிங்கம்….. எல்லா அசிங்கமும் உங்ககிட்டேர்ந்து தானே வந்தது….. பெத்தப் புள்ளையைக் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அசிங்கம்னு சொல்றீங்களே…… நீங்க….. த்தூ….. இதுக்கு மேலே நான் ஏதாச்சும் பேசினா, நீங்க தான் அசிங்கப்பட்டுப் போவீங்க…. எம்புள்ள என்னோடு தான் இருப்பான்…. விவேகானந்தர் மாதிரி வரணும்னு தான் என் புள்ளைக்கு பேரு வச்சேன். ஆனா, அவன் அவரோட ஆயுளை மட்டும் அதிலேயும் குறைச்சி வாங்கியிருக்கான். கடைசி வரைக்கும் என் புள்ள என்னோடு தான் இருப்பான். நீங்க வேணா அசிங்கம் பாக்காம வீட்ட விட்டுப் போயிருங்க….”
இந்தப் பேச்சுக்காகக் காத்திருந்தவன் போல வதனாவின் கணவன் புறப்பட்டு விட்டான். அதன் பின் எங்கே இருக்கிறான்…. என்ன ஆனான் என்று எந்தத் தகவலும் இல்லை…. வதனாவும் சுத்தமாக மறந்து விட்டாள், தன் பிள்ளையைப் பராமரிக்கும் முனைப்பில்.
பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு நரேந்திரனை வீல்சேரில் அழைத்துச் சென்றாள். கோவிலை விட்டு வெளியே வரும் போது ஒரு பெண், “பாவம்…. இப்படி ஒரு குழந்தையைப் பெத்து வளர்க்க என்னென்ன கஷ்டப்படுகிறாளோ……” என்று சொல்ல, அருகில் இருந்த இன்னொரு பெண் பதிலளித்தாள்.
“இப்படி ஒரு புள்ளையாவது அம்மான்னு இவளை அழைக்கக் கொடுத்து வச்சிருக்கா இவ….. ஆனா என்னையப் பாரு…. இது நாள் மட்டும் பூவாமக் காய்க்காம இருக்கேனே…. அம்மான்னு அழைக்க ஒரு நாதியிலாது போனேனே…… என்னைய விடவா அவ துரதிர்ஷ்டசாலி…. இந்தப் பெண் ரொம்பக் கொடுத்து வச்சவ…….
அல்ப ஆயுசக் கொண்ட இந்தப் பையன் மாதிரி ஆன்மாக்களைக் கடவுள் படைக்கும் போது, இன்னாருக்குப் பிறந்து அவங்ககிட்ட வளர்ந்து, ஆயுச முடிச்சிக்கிட்டு வாங்கன்னு அனுப்பி வைப்பாராம்….. அப்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மா தான் அந்தப்பையன். அவனை வளர்க்கக் கடவுளாலே தேர்ந்தெடுக்கப்பட்டவங்க தான், அந்தப் பையனோட அம்மா…. அதனாலே அந்த அம்மா தான், கொடுத்து வச்ச அம்மா……..!”
இதைக் கேட்ட வதனாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது. அவள் நரேந்திரனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“அம்மா…..என்னம்மா…….?”
“அம்மா தான்டா செல்லம்….. நான் இருக்கேன்டா உனக்கு……..”
– கதைப் படிக்கலாம் – 44
இதையும் படியுங்கள் : ஒரு தீராநதி




