– சேசுபட்டுஜீவா
‘அந்த மனுசனிருந்தா இப்படியா என் நெலமை இருந்திருக்கும்.’
“வடை என்னாச்சி?… அதிரசம் எப்போ?… என்னை ஒரு எடத்தில இருக்க உட்ருப்பாரா? அண்ணாச்சி கடை சாமானில பாதியை கொண்டு வந்துக் கொட்டி, அதை செய், இதை செய்னு என்னை உருட்டி வச்சிருப்பாரே. அவருப் போனதோட ஏங்சீவனே போன மாதிரி ஆச்சே. இப்பிடி புடிச்சி வச்ச புள்ளையார் மாதிரி ஆயிட்டேனே. ஒண்ணுமே ஓடலயே.”
வாசல்படிக்கு காவலாக, திண்ணையில் ஒரு காலுக்கு மறுகாலை அண்டை கொடுத்தப்படி, முழுவதும் நரைத்த தலையில் வெள்ளை முடிகளுக்கு காவலாய் ஆங்காங்கே இருந்த கருப்பு முடிகளை கையால் தடவியபடி… எதையோ பறி கொடுத்தவளாய், தன் மங்கலான கண்களைக் கைகளால் கசக்கிய படி எதையோ… இல்லை, யாரையோ எதிர்பார்த்தபடி ஏங்கி, தெருவாசலை வெறித்தப்படி உட்கார்ந்திருக்கிறாள் சங்கரம்மா.
வீட்டைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்திருந்தாள், அவளால் முடிந்தவரை. வடைக்கு உளுந்து ஊற வைத்திருந்தாள். சுசியத்திற்கு வெல்லத்தை கலந்து ஒரு சட்டியில் பூரணம், மாவுக்கரைசலுக்கு மாவு தயாராய், தக்காளிச் சட்னியா, தேங்காய் சட்னியா, இல்ல சாம்பாரா, எதை இட்லிக்கு தயார் பண்ணலாம். எல்லாம் சரி… சாப்பிட யாரு இருக்கா? வரவேண்டியவங்க இன்னும் வரலயே, ஒத்தையாளாய் அவள்… தனிமை வாழ்க்கையோடு மல்லுக்கட்டியபடி, அடிக்கும் எதிர்காற்றில் நிற்கும் ஒத்தை பனைமரமாய், சங்கரம்மா.
அந்த நாட்களில்……
தீபாவளிக்கு அவரு நியூஸ் பேப்பரில் பொதிந்து வாங்கிக் கொண்டு வரும் பட்டாசுக்காக, விடிய விடிய தூங்காமல் இருந்து, வந்ததும் அதை வாங்கிப் பிரித்து பார்த்து அய், அய்ய்ய், மத்தாப்பு, ஆனைவெடி, லெட்சுமி வெடி, குருவி வெடி, சரவெடி, அணுகுண்டு, புஸ்வாணம், கம்பி மத்தாப்புன்னு சொல்லி சொல்லி அம்புட்டு பல்லையும் காட்டுவானே…
அவனை வெளியே வாசலுக்கு கூட்டிச்சென்று, ஒவ்வொரு வெடியிலும் ஒண்ணையாவது வச்சி வெடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்புறமா, அவரு மடியிலேயே தலைவைத்து, வெடி பார்சலை பக்கத்திலேயே வைத்தபடி தூங்கி விடுவான். வெடிமருந்து ஒட்டிய கைவிரலை வாய்க்குள் வைத்து விடாமல் இழுத்து விட்டு ஈரத்துணியால் துடைச்சி விடுவாரு.
உளுந்து வடை மாவை நான் தட்டி தட்டி எண்ணெய் சட்டியில் போட, அவரு சுட்டதை அரிச்சி எடுக்க, மொத நாலு வடையை விளக்கு முன்னால வச்சிட்டு மவனை எழுப்பி “ஏலேய், ஏ ஐயா, எந்திரிய்யா, சூடா ரெண்டு வடை சாப்பிடுடா. விடிஞ்சி சாப்பிட ஆறிப்போயிரும், தின்னுட்டு தூங்குடான்னு எழுப்பி, அவனை சாப்பிட வைச்சாதான் இவருக்கு நிம்மதி.
அப்பிடியெல்லாம் இருந்த சந்தோச தீபாவளி, இப்பிடி அலங்க மலங்க அடிக்குதே, ‘ஓ‘ ன்னு ஆயி போச்சே.
”ம்ம்ம்….. மறுபடி மறுபடி அந்த நினைவுகளே அவளை சுற்றி சுற்றி கிறங்கடித்தன.
எங்கோ வெடித்தப் பட்டாசு சத்தத்தில், பழைய நினைவுகளிலிருந்து திரும்பினாள்.
‘ஆச்சி என்னாச்சி விருந்தாளி இன்னும் வரலையா’, விசாரிப்பு தாங்கலை.
வீட்டுப்புள்ளை விருந்தாளி ஆயிட்டானே, காலக் கொடுமைதான் இது.
மூணு மாசமாச்சி ஊருக்கு வந்து, அப்பவே சொல்லி அனுப்புனேன். தீபாவளிக்கு மறக்காம பேத்தி பொண்ணோட வந்திருடான்னு… ஏதாவது சாக்கு சொல்லாத. டிக்கெட்ட போட்டுறுன்னு. படிச்சி படிச்சி சொல்லி உட்டேன். தனியா வந்து எட்டி பாத்துட்டுபோற மாதிரி வராம, குடும்பத்தோட வந்து வீட்டை கலகலன்னு ஆக்குன்னு சொன்னேன். இப்பிடி கம்முன்னு இருக்கானே.
அரை டவுசர் போட்டப்ப நாம சொன்னதைக் கேட்டவன்… முழுடவுசர் போட்டதும் அவன் சொல்லுறதை நாம கேக்கற மாதிரி ஆகி போச்சே…
இன்னமும் பச்சை புள்ளையா?, வேலை சோலின்னு அதுகளுக்கும் கழுத்தாம்புடியா நெருக்குது. இதுல நாமதான் அமைதியா கெடக்கணும்.
அவரு வராரு, இவரு வராருன்னு வாயில நுழையாத அதிகாரி பேருல்லாம் சொல்றான். நமக்கு என்ன தெரியுது. அப்பிடி என்ன?. ஒரு தீபாவளி பொங்கலுக்குக் கூட, பெத்தவளைப் பாக்கப் போக கூடாதுன்னு கூட சொல்லுற அதிகாரியாவா இருப்பாக.
நாலு நாளைக்கு முன்னால கூட ஃபோன் பண்ணி பேசினான். அப்ப கூட சொன்னேனே, தீவாளிக்கு எப்பிடியாவது வந்துருடான்னு”
“ஏம்மா எனக்கு மட்டும் பொறந்து, வளர்ந்த வீட்டுக்கும், ஊருக்கும் வரணும்னு ஆசையில்லையா… மெசின் மாதிரி ஓடிட்டு இருக்கோம். இந்த மாதிரி ஊருக்கு வந்து உன்னோட, இருந்துட்டு போறது தானேம்மா எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியா இருக்கு. எங்களை விட ஒம்பேத்திதான் ஊருக்கு கிளம்ப ரெடியா இருக்கா.
“ஆச்சீசீ… பேத்தியின் குரலில் தன்னை மறந்துவிட்டாள்.” ஆச்சி ஒனக்கு ரோஸ் கலருல சேலை எடுத்துருக்கோம். நான்தான் செலக்ட் பண்ணினேனாக்கும். அப்புறம் ஒனக்கு ஒரு கரடி பொம்மை, அப்புறம் ஒரு சாமி படம், ம்ம்… அப்புறம் குளிருக்கு ஒரு சூப்பரான போர்வைல்லாம் வாங்கி வச்சிருக்கோம். அப்பாதான் லீவு கிடைக்கலன்றாங்க. நீ அப்பாக்கு லீவு வாங்கி தரீயா, அப்புறம் ம்ம்…
அப்புறம் அப்புறம்ன்னு எத்தனை அப்புறம்தான், பிஞ்சுக் குரலில் கொஞ்ச கொஞ்ச குளிர்ந்துதான் போனாள் சங்கரம்மா.
“ஆச்சி எனக்கு என்ன வாங்கி வச்சிருக்கே?”
ஒனக்கும் ரோஸ்கலர்ல கவுன் வாங்கி வச்சிருக்கேன்மா”
“ஐய்யா ரோஸ்கலரா, ரெண்டு பேருக்கும் சேம் கலரா?. சூப்பரா இருக்குமில்ல. ஆமா, ஆச்சி, உனக்கு என்னமோ நதியா கொண்டை, அழகா போட தெரியுமாமே. அது எப்பிடியிருக்கும்? நா ஊருக்கு வரும்போது எனக்கும் போட்டு விடுறியா?
“நீ வாம்மா, ஒனக்கு நா போட்டு விடுறேன். அதைவிட இந்த கெழவிக்கு வேற என்ன வேலை”
பேத்திப் பொண்ணுக்கு சீவி, சிங்காரிச்சி, அலங்கரிச்சி பார்க்கிறதுல அப்படி ஒரு குதூகலம் சங்கரம்மாளின் மனதுக்குள்.
“போன வாரம் திடீரென ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டானே, இங்க ஆடிட்டிங் வந்திருக்காங்க, தீபாவளிக்கு வர்றது சந்தேகம்தான்மா, நா இங்க சூழ்நிலையைப் பொறுத்து ஃபோன் பண்றேன்னு வச்சவன்தான், இன்னைக்கு வரைக்கும் மூச்சே இல்லாமல் ஃபோனும் ஊமையாக கிடக்குதே”…
விடிந்தால் தீபாவளி, ஆனால் சங்கரம்மாவுக்கோ வெட்டவெளி. சடசடவென வெடித்த மெல்லிய பட்டாசு சத்தத்தில் அவள் மனம் மட்டும் ஓசையிழந்து கிடந்தது.
தீபாவளிக்காக வேலை சீக்கிரமே முடியக்கூடாதா, இல்ல, வந்து பாத்துக்காலாம்னு அந்த அதிகாரிகள்தான் நினைக்கக் கூடாதா… பஸ் இல்லன்னாலும், ஒரு காரு அமர்த்தி இந்த அம்மாவைப் பார்க்க வந்திறக் கூடாதா? இருப்புக் கொள்ளவில்லை. கிழ மனசு கிடந்து தவித்தது.
திடீரென இப்பிடியெல்லாம் நடக்குமா, என்ன, மந்திரமா போட முடியும்? ஏன் மந்திரம் போட்டாதான் என்னவாம்.
தலையை திருப்பி திருப்பி வீட்டுக்குள் பார்ப்பதும்… தெருவாசலை பார்ப்பதும்… நேரம் ஆக, ஆக அவள் சோர்ந்துதான் போனாள்.
நாம இப்பிடி நெலை கொள்ளாம இருந்து தவிக்கிறோமே, இந்த பிள்ளைவொளுக்கும் இப்படிதானே இருக்கும். ஊருக்குப் போகணும்னா மொத நாள்ல இருந்து துணிமணி மடித்து வைக்கிறதென்ன, அதை வச்சாச்சா, இதை வச்சாச்சான்னு ரெண்டுபேரும் பேசிக்கிறதென்ன, கத்துவது என்ன, நான் எடுத்து வச்சிட்டுதானே இருக்கேன்னு… ஒண்ணுக்கொண்ணு மூஞ்சி காமிக்கிறதென்ன…
சாயந்திரம் பஸ்ஸுக்காக காலையிலிருந்து மருமகளும் பேத்தியும் காத்திருக்கிறதென்ன, வேலை சீக்கிரமே முடிந்து வேகவேகமாய் வீட்டிற்கு வருவதென்ன, எவ்வளவு சீக்கிரம் வந்தாலும் “லேட்டாவே வாங்க” ன்னு மருமகள் அலுத்துக் கொள்வதென்ன, சிலமுறை அவர்களோடு தானும் இருந்துப் பார்த்த அனுபவம் நினைவுக்கு வராமலா இருக்கும்…
இரவு இருட்டு தீபாவளியை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. கடிகார முள் கூட அதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. வானத்தில் பளீரென வெளிச்சம், வானத்தில் வண்ண வண்ணப் பூக்களாய், ஊரெங்கும் பட்டாசு வெளிச்சம் மின்ன…
சங்கரம்மா மனதில் மட்டும் ஒரு மத்தாப்பு வெளிச்சம் கூட வரவில்லை. எப்படி வரும்?, மகன் அனுப்பியப் பணம் வந்தது, நகை வந்தது, அனுப்பிய பணத்தில் சொத்தும் வந்தது. ஒத்தைக் கிழவி அதை வைத்து ஊறுகாயா போட முடியும். அவனுக்கு தெரியுமா, இத்தனையும் அனுப்பி வராத சந்தோசத்தை, நிம்மதியை… அவளருகே இருந்து “அம்மா” என்றழைக்கும் ஒற்றை வார்த்தை அள்ளிக்கொடுத்து விடுமே. அந்த ஒரு வெளிச்சம் கோடி மத்தாப்பு வெளிச்சத்தை அவளுக்கு கொடுக்கும் என்பது அவளுக்குத்தானே தெரியும்.
கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்பதரையை நெருங்கியிருந்தது. தெருவாசலை பார்க்கிறாள். யார் யாரோ நடக்கிறார்கள்.
‘வந்துற மாட்டானா, திடீரென வந்து நின்று “அம்மா” என்று அதிர்ச்சி தர மாட்டானா? ‘ஆச்சீ’ என்று பேத்தி பொண்ணு முகத்துக்கு நேரே வந்து நின்று விடாதா?… என்னல்லாமோ நினைத்தாள்.
மறுபடியும் வாசலுக்கு வந்துப் படியில் முட்டியை பிடித்தபடி மெல்ல ஸ்ஸம்மா அம்மா….. பெருமூச்சு விட்டவாறு நிமிர்கிறாள்.
“ஆச்சீ, ஆச்சீ” மணி சத்தத்தைக் கூட கவனிக்காம அப்பிடி என்ன யோசனை. வாசல்படியிலே நிக்கிறீங்களே. தம்பி இன்னும் ஊருல இருந்து வரலயா?”
பால்கார மணியின் மணி விசாரிப்பில் நினைவுக்கு வருகிறாள். ஆச்சியின் உருவம்தான் அங்கிருந்ததே தவிர, மனசு வேறெங்கோ இருந்தது.
“ஆமாய்யா, வருவான் வருவான்னு பார்த்துட்டே இருக்கேன். ஒரு நெலையிலே இல்லாம மனசுக் கெடந்து தவிக்குது. வர்றதே தீவாளி பொங்கலுக்கு தான். அதும் வருவானா, மாட்டானான்னு தவிக்கிற மாதிரி ஆயிடுச்சே. ஊரெல்லாம் தீவாளி பண்டிகை கொண்டாடுற நேரத்தில, என் வீடு மட்டும் இருண்டு கெடக்கே. இந்த தீவாளி வெறுசாவே போயிருமோன்னு மனசுக் கெடந்து அடிச்சுக்குதுய்யா”
“ஏன் இப்பிடி தவிக்கிறீக. தம்பி எப்பிடியும் வந்துரும். வராம எங்க போயிர போகுது. ஒரு ஃபோன் பண்ணிக் கேட்டா தெரியப்போகுது. காலம் எவ்வளவோ மாறிப் போச்சி. செல்ல எடுத்து தம்பிக்கு பண்ணுங்க ஆச்சி.”
“இருந்த பதட்டத்திலே இது தோணாம போச்சே. நீ ஞாபகப்படுத்தினது ரொம்ப நல்லதா போச்சுய்யா. இந்தா ஒடனே பண்ணிடறேன்.”
மகன் வாங்கிக்கொடுத்த செல்போனை எடுத்து, நம்பரை தேடி போன் பண்ணுகிறாள். காதில் வைத்துக் கேட்கிறாள்.
“ஆங், ஃபோன் போகுது, போகுது”
எதிர்முனையில் மணி அடிக்கிறது. யாரும் எடுக்கவில்லை. மறுபடியும் அடித்தாள். மணி அடித்துக்கொண்டே இருந்தது.
ஃபோனை எடுத்ததும் எங்க வர்றான்னு முதல்ல கேக்கணும். ஏதாவது வரலன்னு சாக்குப் போக்கு சொன்னா, புடிச்சி சத்தம் போட்டுற வேண்டியதுதான். கோவிச்சுட்டு இருந்தா இருக்கட்டும்.
வருசத்துக்கொரு தடவை, தீபாவளிக்கு கூட வர முடியலன்னா. இனிமே வரவே வேணாம். எப்பவும் போல தனியாவே இந்த வீட்டிலே பொலம்பிக்கிறேன். அந்த மனுசன் போனப்புறம் நமக்குன்னு இருக்கிற ஒண்ணும் இப்பிடி தவிக்க உடுதே. கிடைக்கிற ஒருநாள் சந்தோசமும் நமக்கு இல்லன்னு ஆயிருமோ. சே… தீபாவளியாவது ஒண்ணாவது… ஃபோன் அடிச்சிட்டே இருக்கு. எடுக்கிறானா பாரு. எடுத்து என்ன ஏதுன்னு ஒருவார்த்தை பேசிட்டு வச்சா என்ன கொறைஞ்சா போயிரும்.”
என்னல்லாமோ யோசித்தது அவள் மனது. ஆற்றாமை பொங்கியது கண்கள் நிறைய கண்ணீராக.
ஃபோன் அடித்து அடித்து ஓய்ந்தது. எதிர்முனையில் எடுக்கவேயில்லை. தனிமையில் “ஓவென” அழ வேண்டும் போலிருந்தது.
தெருவில் மற்ற வீடுகளுக்கும் பால் ஊற்றி விட்டு திரும்பி வந்த மணி…
“என்ன ஆச்சி, தம்பி பேசிருச்சா”
“எங்க பேசுறது. எடுக்கவேயில்லை. அவன் வரமாட்டான்யா. வேலை சம்பாத்தியம்னு ஓடுற இந்தக் காலத்து புள்ளைகளுக்கு பாசம்லாம் கொறைஞ்சி போச்சிய்யா. என்னத்த ஓடி… என்ன பிரயோசனம். ஒத்த கெழவி.. தனியா கெடக்காளேன்னு நெனைச்சிருந்தா இப்பிடி இருப்பாங்களா… என்னவோ அதுகளாச்சும் நல்லாருக்கட்டும்.”
வழிந்தக் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
“எப்பிடியும் வருவாக ஆச்சி. இதுக்குப் போயி இப்பிடி மூக்கை சிந்துறீகளே.”
தெருமுனை வரைச் சென்ற பால்க்கார மணி வண்டியை நிறுத்தி மணி அடித்தார்…
“ஆச்சி” சத்தமாக கூப்பிடுகிறார்.
வாசல்படியில் நின்று மணியை திரும்பி பார்க்கிறாள்….
“போனை எடுக்கலன்னு சொல்லி அழுதீகளே… இனிமே அழாதீங்க… இங்க பாருங்க…. ஒங்களுக்கும் தீபாவளி வந்தாச்சி…. இனி ஆச்சியை கையில புடிக்க முடியாதே…”
தெருமுனையில் மகனும், மருமகளும் ஆளுக்கொரு சூட்கேஸும், பேக்கையும் தூக்க முடியாமல் தூக்கியபடி வர…
”ஆச்சி… ஆச்ச்சீ…….” மழலைக்குரலில் அழைத்தபடி, அம்புட்டு பல்லும் தெரிய சிரித்தபடி, தலையில் சிண்டு ரெண்டும் முயல்காதுப் போல ஆட்டியபடி… பேத்திப் பொண்ணு ஓடி வருகிறாள்.
மங்கலான கண்களை கைகளால் கசக்கிய படி உற்றுப் பார்க்கிறாள். கண்கள் விரிந்தன. மனசெல்லாம் பறந்தது. பொங்கிய கண்ணீர் கன்னத்தில் வழிய.
வயதான, தன் தளர்ந்த கால்களால் விடுவிடுவென படியிறங்குகிறாள்.
ஓடிச்சென்று பேத்திப் பொண்ணை அள்ளித் தூக்கி…
“அட ஏங் மொசக்குட்டீ……… பேத்திப் பொண்ணே, வந்துட்டியா செல்லம்”, இரு கன்னங்களையும் மாறி மாறி ஈரமாக்கினாள்.
தீபாவளி வந்துவிட்டது சங்கரம்மா ஆச்சிக்கு….
வானத்தில் எங்கோ வெடித்து கிளம்பிய பட்டாசு… வண்ண வண்ண பூக்களாய் அவள் பஞ்சடைத்த கண்களில் பளபளவென தெரிந்தது. யார் யாரோ வெடித்த பட்டாசு சத்தமெல்லாம், ஆயிரம் சரவெடிகளாக இப்போது அவள் காதில் கேட்கிறது.
“…………படபட பட்பட் டமார், டமார்……”
– கதைப் படிக்கலாம் – 52
இதையும் படியுங்கள் : ஒரு ரூபாய்