– ச. மங்கையர்க்கரசி
அந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்பது புரியவில்லை.
யோசித்து யோசித்துத் தலைவலி வந்ததுதான் மிச்சம்.
சரி, சூடாக ஒரு காஃபி சாப்பிட்டால் அதிலிருந்து கொஞ்சமாவது விடுபட முடியும் என்று தோன்றவே, எழுந்து சமையலறை சென்றவள், ஏதோ நினைவுறுத்தப் பின், பக்க நடைக்கதவை சாத்தித் தாழிட்டுவிட்டு வந்தேன்..
கை அதன் போக்கில் காஃபியைக் கலந்துக் கொண்டு இருந்தது. மனம் திரும்பத் திரும்ப நடந்ததையே நினைத்துக்கொண்டு இருந்தது.
அக்காவிற்குக் கல்யாணம். அப்பாவும், குடும்பத்தில் உள்ள அனைவரும் பையன் வீட்டில் முகூர்த்தப்புடவை வைத்து படைப்பதற்காகச் சென்றிருந்தார்கள்.
வீட்டு லாக்கரில் இருந்துத் திருமணத்திற்கு அக்காவுக்குக் கொடுக்க வேண்டிய வெள்ளிச் சாமான்களளை எடுத்து மெருகு போட ஆள் வரப் போகிறார் என்பதற்காக் காத்துக் கொண்டிருக்கும் நேரம். பின்வீட்டுப் பாட்டி கூட இருந்தார்.
பின்வீடு என்றால், பக்கவாட்டில் இருக்கும் கதவு வழியாக பாட்டியின் குடித்தனத்திற்குச் செல்லலாம். காம்பவுண்ட்டுக்குள் முழுவதுமாக இரண்டு வீடும் உட்புறமாக இருக்கும். இதைத்தாண்டி வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால், இருவருக்கும் ஒரே காம்பவுண்டு கேட் தான்.
எங்களுக்குப் பாட்டியை அறிமுகப்படுத்திய மகாலிங்கம் சித்தப்பா, பாட்டி தாத்தாவின் இரண்டாம் தாரமெனவும், உடல்நலம் குன்றிய நிலையில் முதல் தாரம் தவறிவிட, ஒரே மகனைப் பார்த்துக்கொள்ள மறுதாரம் செய்தார் என்றும் கூறியிருந்தார். “சரி நீங்கள் எல்லாம் சின்ன புள்ளைங்க. இதுக்கு மேல பேச முடியாது. பாட்டிக்கு அளவோடு தான் இடங்கொடுக்கணும்” என்றும் சொல்லியிருந்தார்.
கல்யாணப் பெண்ணான அக்கா, அவள் சிநேகிதியுடன் அழகு நிலையம் சென்று இருந்தாள்.
வீட்டில் நானும், அந்தப் பாட்டியும் மிக இயல்பாக ஊர் கதையெல்லாம் பேசிக்கொண்டு, மேலிருந்து எடுத்தப் பொருட்களை சீர்வரிசை கொடுக்கத் தரம் பிரித்து வைத்து துடைத்துக் கொண்டும், அதன் பின்புலத்தில் உள்ள மலரும் நினைவுகளான கதைகளைப் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
எங்கிருந்தோ ஒரு ஃபோன் கால் எனக்கு வரவே, சிக்னல் சரியாகக் கிடைக்காததால், அதை எடுத்துக்கொண்டு மாடி பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்தப் பின்னர் வீட்டிற்குள் வந்து, பாதியில் நின்ற வேலைகளை தொடர்ந்தோம். நான் உள்ளே வரும்போதே, அந்த இடத்தில் இருந்ப்த பாத்திரங்களில் சில வேறுபாடுகளை உணர்ந்தேன். மனதில் பெரிதாக ஒன்றும் பதியவில்லை. மிகுதியாக நின்ற வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, வெள்ளிப் பாத்திரங்களை ஆள் வந்தப் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளறையில் கொண்டு வைப்பதற்காக எடுத்துச் சென்றேன்.
அப்போதுதான் கவனித்தேன்… ஒரு சிறிய கனமான கிண்ணம் போன்ற, சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடிய ஒரு வெள்ளிப் பாத்திரம் (ஒரு இருபதாயிரம் மதிப்புள்ளது) காணவில்லை எனபதை.
சிறுவயது முதலே அம்மா இல்லாததால், அப்பாவைப் பெற்ற பாட்டிதான் வளர்த்தார். நான்கும் பெண் குழந்தைகள் என்று ஒருபோதும் வருந்தாத பாட்டியின் வளர்ப்பு. திருமணத்தின்போது கொடுப்பதற்காகவே பாட்டியின் தூண்டுதலால் அப்பா வாங்கி வைத்திருந்தார். எங்கள் பூஜை அறையில் இருந்த அதேபோன்ற பாத்திரத்தின் பயன்பாடும், அழகும் மனதைக் கவரவே, அதேபோல நான்கு பேருக்கும் திருமணத்தில் கொடுக்க வேண்டுமென்று பாட்டி உத்தரவு.
பார்க்கும் மனிதர்களுடன் எல்லாம் பாசத்தை வேண்டி விரும்பி ஒட்டிக்கொள்ளும் எங்களது இயல்பால், பின் வீட்டுப் பாட்டியும் என் வீட்டில் ஒருவரானார்.
அதிலும் என் பங்கு மிகவே அதிகம். நானும், பின் வீட்டு பாட்டியும் வயது வித்தியாசம் அறியாமல் நல்ல சிநேகிதிகள். என் மனதிற்கு இதமான பெரிய மனுஷி. அவர்கள் வாழ்க்கைப்பட்டு வந்தக் கதை, வாழ்ந்தக் கதை, இப்போது வாழ்ந்து வரும் கதை, அனைத்தையும் என்னோடு பகிர்ந்துக் கொள்வார். என்னை மடிமீது சாய்த்துக் கொண்டு, தலை கோதி, பின்னல் போட்டு, பூச்சூட்டி அழகு பார்ப்பார். எங்கள் பங்குக்கு நானும், என் தங்கையும் சேர்ந்து அவருக்கு இரட்டைப் பின்னல் போட்டு கலாட்டா செய்வோம்.
தாத்தா எழுபதைத்தாண்டியும், பொன்னியின் செல்வன் சுந்தரத்தேவன் போல இருந்தார்.
நடக்க முடியாத நிலை இப்போது.
பாட்டியும் அழகில் குறைந்தவர் இல்லை. மாநிறமானாலும் அறுபதைத் தொட்டும், கண்களின் அழகும், இதழோரப் புன்னகையும் யாரையும் ஈர்த்து விடும். வசதி வாய்ப்புக்கும் குறைவில்லை. பாட்டியும், தாத்தாவும் வாலிபத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன்.
சித்தப்பா அறிமுகம் செய்தபோது சொன்னதை, எப்பவுமே சட்டை செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது அதெல்லாம் நினைவில் வந்து நர்த்தனமாடியது.
தற்சமயம் வீட்டில் நானும், பாட்டியும் மட்டுமே இருந்திருக்கும் பட்சத்தில், காணாமல் போன அந்த விலை மதிப்புள்ள பொருளை எப்படிக் கேட்பது, என்னவென்று கேட்பது என்ற குழப்பம் நீடித்தது.
ஒருவேளை நானே கை மறதியாக எங்கேயாவது வைத்து விட்டேனோ என்று எல்லா இடங்களிலும் ஒரு முறை சுற்றி வந்துப் பார்த்தேன். எங்கேயும் அகப்படவில்லை. லாக்கரிலேயே விட்டு விட்டோமோ என்று நினைத்து அதனையும் பார்த்துவிட்டேன். அதிலும் இல்லை. மிகக்குழம்பிய மனநிலையோடு முன்னும் பின்னும் யோசித்தவாறே நடந்துக் கொண்டிருந்தேன்.
மதியச் சாப்பாட்டு வேலை கடந்துவிட்டது. பாட்டி, தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்து வைப்பதற்குச் சென்றிருந்தார். நான்தான் சாப்பாடு பிடிக்காமல் காஃபி கலந்துக் குடித்தேன்.
சரி. சிறிது நேரம் படுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன்.
நான் படுத்து சிறிது நேரம் ஆகியிருக்கும், தூங்கவில்லை. அப்போது யாரோ வெளிப்புற கதவைத் திறக்கும் சத்தம் மிக மெதுவாகக் கேட்டது. எனக்கே உரிய ஆர்வத்தோடு, இந்தக் குழப்பமும் சேர்ந்துக் கொள்ள, மெதுவாக முன் அறைக்குச் சென்று, ஜன்னல் திரையை விலக்கி நோட்டமிட்டேன் .
பாட்டிதான். கையில் ஒரு பை வைத்திருந்தார். மெதுவாக என் வீட்டு வாசலைப் பார்த்துக்கொண்டே வெளிக்கதவை மூடிக்கொண்டு வெளியில் சென்றார். எனக்கு ஏதோ பொறித் தட்டியது.
நானும் அவர் அறியாத வண்ணம் கதவை பூட்டிக்கொண்டு, பாட்டியின் பின்னால் சென்றேன், பாட்டியின் கண்களில் தென்படாமல் சற்று இடைவெளிவிட்டு. மார்க்கெட் ஏரியா வந்தவுடன் பாட்டி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஒரு அடகுக் கடையை அணுகினார்.
எனக்கு மிகுந்தத் தவிப்பாக இருந்தது. படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. நான் அங்கு நடப்பதை எதிர்ப்புறம் இருந்த ஒரு ஃபேன்சி ஸ்டோரிலிருந்த கவனித்துக் கொண்டிருந்தேன். பாட்டி அந்தக் கடைக்காரரிடம் ஏதோ பேசிவிட்டுப் பையிலிருந்து, ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கடைக்காரரின் மேஜை மீது வைத்தார்.
கடைக்காரர் அந்தப் பொருளை கையில் எடுத்து கையாலே கனம் பார்த்தார்.
பின்னர் அப்படி இப்படி திருப்பிப் பார்த்துவிட்டு, அந்தப் பொருளை எடைபோட வைத்துவிட்டு பாட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
பின், பாட்டியின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.
இவை அனைத்தும் என் கண்ணெதிரில் நடந்துக் கொண்டிருந்தது. என் வீட்டுப் பொருள் அந்தக் கடையில் கை மாறிக்கொண்டிருந்தது. பாட்டி பணத்தைப் பெற்றுப் பத்திரமாக இடுப்பில் சொருகியிருந்தச் சிறிய துணிப்பையில் வைத்துக்கொண்டார். பின் மெதுவாக வெளிப்புறம் வந்து வீட்டுக்கு வரவேண்டிய திசைக்கு எதிர் திசையில் சிறிது தூரம் சென்றார். பின்னர் ஏதோ ஒன்றிரண்டு பொருட்கள் மார்க்கெட்டில் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து திரும்பினார்.
அவரது வயோதிகமும், தாங்கி நடக்கும் இயல்பும் அவரை மெதுவாக நடத்திக் கொண்டுவர, நான் அவரது கண்ணில் படாமல் அவருக்கு முன்னரே வேகமாக வீடு வந்துச் சேர்ந்தேன். வீட்டிற்கு வந்து மின் விசிறியை சுழலவிட்டு, ஹாலில் அமர்ந்து படபடப்பை தீர்த்துக் கொண்டேன்.
இப்போது இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது? பாட்டியிடம் கேட்பதா, இவ்வளவு நாள் பாட்டியும் நானும் பழகிய விதம், பாட்டி மீது நான் வைத்திருந்த பாசம் எல்லாம் ஒரு சேர தகர்ந்து தரைமட்டமானது. இந்த விஷயத்தை எங்கே ஆரம்பிப்பது? இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது? பள்ளிப் பிள்ளைகளுக்கு எவ்வளவு கண்டிப்போ, அதே அளவுக் கண்டிப்பை வீட்டிலும் காட்டக்கூடிய அப்பாவிடம் என்ன சொல்லி இந்த விஷயத்தை புரியவைத்து, இந்த சிக்கலைத் தீர்ப்பது என்று யோசனையாக இருந்தது.
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பாட்டியை காஃபி குடிப்பதற்கு வருமாறு அழைத்தேன். எதுவுமே நடக்காதது போல் வெகு இயல்பாக அவர் உள்ளே வந்தார். நான் காஃபி கலந்துப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு, அப்பாவின் கடினமான குணாதிசயத்தை பற்றி இரண்டொரு வார்த்தைப் பேசினேன். பின்னர் “நீங்கள் எங்காவது வெளியில் போனீர்களா பாட்டி?” என்று கேட்டேன்.
“இல்லை வீட்டில் படுத்திருந்தேன்” என்று பாட்டி சொன்னார்.
சரி. மேலும் எப்படி அந்த சம்பாஷணையைத் தொடர்வது!? என்ற யோசனையில் சில வினாடிகள் கழிந்தது. பின்னர் மனதிற்குள் ஒரு வைராக்கியம் வந்தது. தவறு செய்த அவரே திறமையாக அதனை மறைக்கும்போது, நம் மீது எந்தத் தவறும் இல்லை என்பதாலும், அந்தப் பொருள் மீது நமக்குரிய உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயமும் கூடியதால், நேரடியாக் கேட்டு விடுவோம் என்று பாட்டியிடம், “காலையில் நாம் தேடிக் கொண்டிருந்த அந்தக் கிண்ணம், அதை ஏன் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றீர்கள் பாட்டி?” என்று கேட்டேன்.
பாட்டி திடீரென நான் அவ்வாறு கேட்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு கணம் அவரது முகத்தில் வேறுபாடான உணர்ச்சிக் குவியல். உடனே சுதாரித்தார்.
“அடத் தெய்வமே, என்னையா சந்தேகப்படுகிறாய்!? பெருமாள் சாட்சியாக நான் அவ்வாறு செய்யவில்லை” என்று அடித்துப் பேசினார். பின்னர் கண் கலங்கியபடி போய்விட்டார்.
எனக்கு ஒரு கணம் தலை சுற்றியது, நான் கண்டதெல்லாம் ஒருவேளை கனவோ?? ஒரு மனுஷி எப்படி இவ்வளவு திடமாக ஒரு விஷயத்தை அடித்துப் பேசமுடியும் என்ற எண்ணத்தில். அதற்கு மேல் அந்தப் பாட்டியிடம் ஏதும் கேட்கத் தோன்றவில்லை.
வெகுநேரம் செயலற்று அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை.
வெளியில் கலகலப்பான பேச்சரவம் கேட்டது. போனவர்கள் வந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
போய்க் கதவைத் திறந்து விட்டேன்.
அழகு நிலையம் சென்ற அக்காவை அப்பாவே பிக்-அப் செய்திருந்தார்..
வந்தவுடனே அத்தை தான், “என்னடி, அழுதியா என்ன? முகம் அதச்சாப்ல இருக்கு? கண் கலங்கிக் கிடங்கு?”
அப்பாவும் ஏறெடுத்துப் பார்த்தார், கண்ணில் கேள்வியோடு.
அத்தையிடம் ஏதோ மழுப்பினேன். பாட்டி உடனே, “இருக்காதா, கூடவே சுத்திக்கிட்டு இருக்கிறவ ஒரு வாரத்தில வீட்டை விட்டுப் போறா. நீ ஏன் வந்ததும் – வராததுமா, பஞ்சாயத்து வைக்கிற. போ, போய் ராத்திரி என்ன சமைக்கலாம்னு பாரு” என்றவுடன், அத்தை பெரிய அக்காவை இழுத்துக்கொண்டு போய் விட்டார்.
புதுப்பொண்ணு, மாப்பிள்ளை வீட்டில் நடந்ததைக் கேட்க, தங்கையைத் தள்ளிச் சென்று விட்டாள். அப்பாவும், பாட்டியும், மாமாவும் கல்யாண விஷயம் பேசிக்கொண்டு இருந்தனர். இருப்பினும் அப்பா என்னை கவனித்தப்படிதான் இருந்தார். மாமா ஏதோ வேலையாக கிளம்பி விட, அப்பாவும், பாட்டியும் தனித்திருக்க, நான் தயக்கத்துடன் சென்று பாட்டி அருகாமையில் உட்கார்ந்து, அப்பாவைப் பார்த்து, மெதுவாக, அப்பா, என்றவுடன் அதற்காகவே காத்திருந்த மாதிரி, “சொல்லு, என்னாச்சு?” என ஊக்கப்படுத்தினார்.
மெதுவான குரலில் கொஞ்சம் சங்கடத்தோடு நடப்பைச் சொல்லி முடிக்கவும், பலவித உணர்ச்சிக் குவியலாக பாட்டியும், அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, பாட்டிதான், “இதென்ன இப்படியுமா ஆளுங்க இருப்பாங்க” என்று திடுக்கிட்டுக் கேட்டார். அப்பா கோபப்படாமல் “விடு, பார்த்துக்கலாம்னு”, சிரிக்க முயற்சித்துத் தோற்றார்.
பாட்டியையும் என்னையும் சமாதானமாக இருக்கச் செய்ய, அப்பாவின் நிதானம் போதுமாய் இருந்தது.
அப்பா அதற்குள் எங்கோ வெளியில் சென்றார். பாட்டி புலம்பிக் கொண்டு இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் என்னிடம் மொத்தமாக வந்து துக்கம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். நான் இன்னும் சோர்ந்துப் போனேன்.
அப்பாவும், மாமாவும் ஒன்றாகத் திரும்பி வந்தனர். சின்ன அக்கா அப்பாவிடம், ” பரவால்லப்பா, எனக்கு அந்தப் பாத்திரம் வேண்டாம்” என்று சமாளித்தாள். அதற்குள் எங்க வீட்டு கடைக்குட்டி, “இவதானே தொலைச்சா, இவளோட பாத்திரத்தை அக்காவுக்குக் கொடுக்கலாம்” என்று யோசனை சொன்னாள். நானும் கலங்கிய கண்களுடன் தலையசைத்து ஆமோதித்தேன்.
அப்பா கையமர்த்தி பையில் இருந்தப் பொருளை வெளியே எடுத்து வைத்தார். அந்த வெள்ளிப் பாத்திரம்.
“ஏரியா ஸ்டேஷனில் இருக்கிற என் ஃபரண்ட் கூட அந்தக் கடைக்குப் போய், கடைக்காரனை அரட்டி உருட்டி இதை வாங்கி வந்துட்டேன், போ” என்றார்.
“என்ன ஒரு அஞ்சாயிரம் பின்வீட்டுப் பாட்டிக்கு மொய் எழுதினா மாதிரி ஆச்சு” என்றார் மாமா.”” ம்ம்….
அந்தம்மா இதை அஞ்சாயிரத்துக்கு வித்திருக்கு. ‘வயசானவங்க. வீட்டுத் தேவைக்கு விக்கிறாங்கன்னு நினைச்சேன்’ ன்னான் கடைக்காரன்.
சரி நம்ப மேலயும் தப்பு இருக்கு. நம்ப அலட்சியத்துக்கு இது விலைன்னு “காசை கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார் அப்பா. சரி போய் வேலையப்பாருங்க. புள்ளய ஒண்ணும் சொல்லாதீங்க-ன்னார் அப்பா.
நான் இவ்வளவு நேரம் அடக்கிய அழுகை விம்மலாய் வெடித்துக் கிளம்பியது. ஆளாளுக்கு சமாதானப்படுத்தப் பார்க்க, அப்பா மட்டும், “விடு அழட்டும். காலையில் இருந்து தொண்டைக்குள்ளே வச்சிருந்த துக்கம். அது தொலைச்சது வெள்ளிப் பாத்திரம் இல்ல. அதோட நம்பிக்கை” ன்னார். எப்போதும் சிம்ம கர்ஜனையாக இருக்கும் அப்பா குரல், இதைச் சொன்னபோது கம்மலாக இருந்தது.
அதற்குப் பின்னர் பின்வீட்டுப் பாட்டியை இன்று வரை நான் பார்க்கவேயில்லை.
– கதைப் படிக்கலாம் – 138
இதையும் படியுங்கள் : “இந்த நாள்”