– கா.உஷாராணி
“ஆறுமணியாச்சி… அனு இன்னும் வரவில்லையே”… கவலையுடன், கலக்கத்துடன், கால்நீட்டி உட்கார்ந்திருந்த முத்தம்மாள்… வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கையில் அலைபேசியுடன் அனுவின் அலைபேசி எண்ணிற்கு முயற்சி செய்துக்கொண்டிருந்தாள் கமலா. பலமுறை அலைபேசி அழைத்தும், அனு எடுக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல இருவருக்கும் படபடப்பும் கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது.
“பள்ளிகூடத்துக்கு போனு போட்டுப்பாரு” முத்தம்மாள் குரலில் நடுக்கம் தெரிந்தது.
“ஆ… சரியத்த” என்றாள் கமலா
பள்ளியின் தொலைபேசி எண்ணிற்கும், அனுவின் அலைபேசி எண்ணிற்கும் மாற்றி மாற்றி ஃபோன் செய்துக் கொண்டிருந்தாள் கமலா. தொலைபேசியும் அலைபேசியும் மணி அடித்தாலும், பதில் இல்லை. முத்தம்மாளும் கமலாவும் வாசலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தினமும் பள்ளி முடிந்ததும் ஐந்தரை மணிக்கு வந்துவிடுவாள் அனு. கலகலப்பான பெண். சிரித்த முகத்துடன் இருக்கும் அனு, பள்ளி முடிந்து வந்தவுடன், பாட்டியின் நீண்ட காதுகளில் தொங்கும் பாம்படத்தை ஆட்டி ஆட்டி மகிழ்ச்சியடைவாள். அம்மா கொடுக்கும் தேநீரை குடித்துக்கொண்டு புத்துணரிச்சியுடன் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் கூறுவாள்.
அம்மா, அப்பா, பாட்டிக்கு மட்டுமல்ல… அண்ணன், அண்ணிக்கும் அனு செல்லப்பிள்ளை. ஆசிரியர் பணியே அறப்பணி… அப்பணிக்குச் செல்ல வேண்டும் என்று கனவுகளோடும், இலட்சியத்தோடும் கல்வியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பின்பு, அரசு ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிப் பெற பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். பின்பு அருகிலுள்ள ஆங்கிலவழிக் கல்வி பள்ளிக்கு வேலைக்குச் சென்றாள்.
ஆசிரியர் பணி அவளுக்கு மிகவும் பிடித்தத் தொழில் என்பதால், அதிக ஈடுபாடு உற்சாகத்துடன் வேலை செய்தாள். சிறு வயது முதல் ஆங்கிலவழிக் கல்வியில் படித்ததால், அப்பள்ளியில் பணிபுரியவும் எளிமையாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல பல தோழிகளின் நட்பும், அன்பும் கிடைத்தது. நேரம் ஆறு மணி முப்பது நிமிடம் ஆனது. கையில் தோள்பையுடன் இறுக்கமான முகத்துடன் வந்தாள் அனு.
அனுவை பார்த்தப் பின்பு அம்மா கமலாவும், பாட்டி முத்தம்மாளும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இறுக்கமான முகத்தைப் பார்த்தவுடன், என்ன நடந்ததோ என்று இருவரும் குழம்பினர்.
“அனு ஏம்மா லேட். மீட்டிங் ஏதாச்சும் இருந்ததாமா? ஏன் இப்படி இருக்க?”
“நத்திங் மா” என்று எரிச்சலுடன் கூறினாள் அனு. அனுவின் இந்தப் பதிலும், கோபமும் இருவருக்கும் புதிதாக இருந்தது… மேலும் குழப்பத்தை உண்டாக்கியது.
தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. அவள் அலைபேசியை எடுக்கவில்லை.
“டீ கொண்டுவரட்டுமா”
“நோ தாங்க்ஸ்”
அனுவின் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு காணப்பட்டாள். அனுவின் இந்நிலைக்கு என்ன காரணமாக இருக்கும். மனது புண்படும்படியாக பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்தாள் கமலா.
“அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்… அப்புறம் பேசுவோம்” என்றாள் முத்தம்மாள். சிறிது நேரத்திற்குப் பின்பு அனுவின் அண்ணனும், அண்ணியும் வந்தனர்.
“அனு எங்கே” மல்லிகா தன் அத்தையிடம் கேட்டாள்.
“கட்டிலில் படுத்திருக்கிறாள்”
“ஏன் உடம்பு சரியில்லையா?”
“இல்ல… மனசு சரியில்லாத மாதிரி தெரியுது.”
“சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று கூறிக்கொண்டே மல்லிகா தன் அறைக்குள் சென்றாள்.
இரவில் சாப்பிடும் நேரமாகியும் அனு இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை. கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியபடி, அப்பா சாமிநாதன் வந்தார்.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா”
“இல்ல”
“ஏன் சாப்பிடல”
“அனு….”
“அனுவுக்கு என்னாச்சி”
“அனுவுக்கு மனசு சரியில்லனு படுத்திருக்கா… இன்னும் எந்திக்கவில்லை”
“அனுமா செல்லம்…” என்று அழைத்தபடி சாமிநாதன் அனுவின் அருகில் சென்றார். அனுவின் அருகில் பாட்டி முத்தம்மாளும், அண்ணி மல்லிகாவும் உட்கார்ந்திருந்தனர். அப்பாவை பார்த்தவுடன் அழுதுவிட்டாள் அனு.
“ஏம்மா சாப்பிடல.. என்னாச்சி” என்றார் கவலையுடன்.
“ஸ்கூல்ல என்னம்மா நடந்திச்சு”
“பள்ளிகூடத்துல யாரும் எதாச்சும் சொன்னாங்களா” என்றாள் முத்தம்மாள்.
“டோன்ட் க்ரை டெல் மீ” என்றாள் மல்லிகா.
“ஸ்கூல்ல ஈவீனிங் மீட்டிங். பிரின்ஸ்பல், கரஸ்பாண்டனட் பேசினாங்க. நா என்னோட ப்ரெண்ட்ஸ் நல்லாதான் வொர்க் பண்றோம். டுடே மீட்டிங்ல வாங்குற கூலிக்கு ஒழுங்கா வேல செய்யுங்கனு கரஸ்பாண்டன் கத்தினார். மனசு கஸ்டமா இருக்குது. இனிமே ஸ்கூல் வொர்க் வேண்டாம்.” என்று கூறிக்கொண்டே அழுதாள்.
“இதுக்கா அழுதுக்கிட்டு இருக்க” என்று சிரித்தார் சாமிநாதன்.
“நீ மனசு வருத்தப்படுற அளவுக்கு, கூலிங்றது கெட்ட வார்த்த இல்ல” அனுவிற்கு புரியவைக்க முயற்சி செய்தாள் பாட்டி முத்தம்மாள்.
சற்று மன ஆறுதலுடன் பார்த்தாள் அனு.
“ஆமாடியம்மா… நீ மனசு வருத்தப்படுற அளவுக்கு கூலிங்றது கெட்ட வார்த்தையில்ல. ரொம்ப தாழ்வான வார்த்தையுமில்ல. செய்த வேலைக்கான சம்பளம். அத இங்கிலீசுல என்ன சொல்லுவாங்க மல்லிகா.”
“சாலரி”
“ம்… அதுதான் தமிழ்ல கூலிங்றது.” அவரு திட்டுனதை விட, வாங்குற கூலின்னு சொன்னது உனக்கு கௌரவ குறைச்சலா இருக்கு. அவ்வளவுதான். இதுக்குப்போய் அழுது பொலம்பிட்டு இருக்க. இங்கிலீசு இங்கிலீசுன்னு படிச்சிட்டு தமிழ் வார்த்தைகளையே மறந்துட்ட. மத்த மொழியெல்லாம் ஆர்வமா படிச்சிட்டு, தமிழ் மொழியப்பத்தி தெரிஞ்சிக்காமா விட்டுட்ட, வேற மொழியே படிச்சாலும் ,அதற்கு நிகரான தமிழ் சொல்லையும் தெரிஞ்சுக்கனும். மத்த மொழியவிட நம்ம மொழிக்கு தனிசிறப்பு இருக்குன்னு, வேற மொழி பேசுறவுகளுக்கு எடுத்துச்சொல்லு.
உண்ண சொல்லி குத்தமில்லடி… உன்னோட அப்பனையும், ஆத்தாளையும் சொல்லணும். இங்கிலீசு படிக்க வைப்பேன்னு படிக்க வச்சான். இப்ப தமிழ்நாட்ல, தமிழ்மொழிய பேசினா அவமானமா நினைக்கிற…..
பாட்டி முத்தம்மாளின் பேச்சு அனுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், தமிழ் சொற்களை பேசிக்கொண்டு வாழவில்லை என்று நினைத்து வெட்கமடைந்தாள். கூலி என்றச் சொல் அருவருப்பான சொல் என்று நினைத்தாள். இன்று அச்சொல்லின் பொருள் தெரிந்தப் பின்பு உயர்வாக நினைத்தாள். இனிவரும் சந்ததியினருக்கு தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக் கூற வேண்டும் என்று முடிவு செய்தாள்.
மறுநாள் சிரித்த முகத்துடன்…
“வேலை செஞ்சி கூலி வாங்கப்போறேன் பாட்டி. பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வருகிறேன் பாட்டி”
பாட்டியின் பாம்படத்தை ஆட்டிவிட்டு, தோள்பையுடன் பள்ளிக்குச் சென்றாள் அனு.
– கதைப் படிக்கலாம் – 100
இதையும் படியுங்கள் : சொல்லப்படாத இரகசியங்கள்!