– சிதம்பரம் கண்ணா
சுப்புராஜ் மற்றும் கார்த்தி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்… அவள் வரும் வரை… சுப்பு ஊரின் பிரபலம் என்றாலும், அவரின் ஜாதி மக்கள் பிணங்களுக்கு சவக்குழி தோண்டுபவர்கள்… மூதாதையர்கள் முதல் இது தான் அவர்கள் பிரதான தொழில்… அவர்கள் இனத்தில் சுப்புவைப்போல் சிலர் மேலெழும்பி வந்துள்ளனர்….
ஆனால் கார்த்தி சுப்புவின் ஜாதி அல்ல… சுப்புவை விட ஒரு படி மேல் உள்ள ஜாதி… அவ்வளவு தான்…. கார்த்தி ஊரினுள் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்… சுப்பு தான் எழுதிய IAS தேர்வின் தேர்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கிறான்….
ஊரின் பெரிய தலைக்கட்டு வணங்காமுடி… வரும் வழி எல்லாம் வணக்கங்கள்… மெதுவாய் உருண்ட வண்டி, கார்த்தி கடை அருகில் நின்றது… அவ்வளவு தான் கார்த்தியின் கடை கும்பலால் வழிந்தோடியது… கார்த்திக்காக இல்லை… வணக்க முடிக்காகவும் இல்லை… வணங்காமுடி வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வந்தனாவை பார்க்க வந்த கூட்டம்…
வந்தனா… உடலின் பளபளப்பை சற்றும் தேயா வண்ணம், குளித்து ஊரையே அவள் பின்னால் வரவைத்தவள்… அதில் இந்த இருவரும் அடங்குவர்.. கூட்டத்தின் பின்னால் பெண் ஆசை இல்லாத இருவர் எட்டிப் பார்த்தனர்… விலக்க முடியாமல் கூடிய கூட்டத்தை, வந்தனா தன் பார்வையை அம்பாய் மாற்றி… கூட்டத்தை விலக்கி, கார்த்தியின் இதயத்தில் கூரென இறக்கினாள்….
முன்னனுபவம் இல்லாத கார்த்தி, என்ன நிலையில் உள்ளேன் என அறியாமல் திகைக்கலானான்… கார்த்தி கிறங்கி நிற்க… பேருந்தேறி போனாள் அந்த வில்லாதி வில்லி… அடித்த அம்பு வேலையை காட்ட ஆரம்பித்தது… கார்த்தி நினைத்துக்கொண்டான்..
“லவ் உறுதியான பிறகு நண்பனிடம் சொல்லலாம்” என… கார்த்தி பரிசு ஒன்று வாங்கி மாலைக்காக ஏங்கி நின்றான்… பார்த்த அன்றேவா பரிசை நீட்டுவது என ஒரு துளி கூட யோசிக்காமல், அனுபவமற்ற கார்த்தி காதலிக்காக காத்திருக்கிறான்… மாலை பேருந்து வந்தது…
வந்தனா… படிக்கட்டுக்கும் கூட வலிக்காமல் காலை படியில் நடுகிறாள்… கார்த்தி கடையில் இருந்து வேகமாய் தலை கோதிக் கிளம்புகிறான்… வந்தனாவை நோக்கி… வந்தனா கீழிறங்கி நிற்கிறாள்… இது தான் நேரம் என வேகமாய் போகிறான் கார்த்தி… அவள் அருகில் நிற்கிறான்… வந்தனா கார்த்தியை நோட்டமிட்டு நிற்கிறாள்… பின்னால் வைத்திருந்த பரிசை எடுத்து நீட்டும் வேளையில்… வந்தனாவை பேருந்தில் இருந்த ஒரு குரல் அழைக்கிறது… அழைத்த இடம் நோக்கி இருவரும் பார்க்கின்றனர்… உள்ளே சுப்பு பரிசு ஒன்றோடு படிக்கட்டில் நிற்கிறான்…
அப்பொழுது தான் கார்த்திக்கு எல்லாம் புரிந்தது… அவள் விட்ட அம்பு கார்த்தியை துளைத்து, பின் அந்த அம்பின் வீரியம் குறையாமல் தன் பின்னால் நின்ற சுப்புவையும் தாக்கியது என்று…. அம்பு தான் என்றாலும் பெண் அம்பு அல்லவா… அதான் ஒரே நேரத்தில் இரு இதயம்….
இதெல்லாம் கார்த்தியின் மனதை உழட்டிய வேளையில்.. சுப்பு அவளிடம் பரிசை நீட்டி “நான் உன்னை…” என்று கூற வரும்போதே, அவனது பரிசை கீழே தள்ளிவிட்டு, “எனது காதலியிடம் நீ என்ன டா பேசுகிறாய்….” எனக்கூறி முகத்தில் ஒரு குத்து விட…
குத்து வாங்கிய சுப்பனோ, தன் மூக்கில் சிந்திய ரத்தத்திற்கு, கார்த்தியின் வாயில் வந்த ரத்தத்தால் கணக்கை சரி செய்ய… ஊரார்கள் வந்து இருவரையும் பிரிக்க… எப்போதும் போல வந்தனா தானே ஒதுங்கிக் கொண்டாள்…
இருவரும் ஊரார் பிடியில்… வசனம் பேசாமல் விட்டுவிடுவார்களா… கார்த்தி சுப்புவைப் பார்த்து “சாதி புத்திய காட்டிட்டல டா… சவக்குழி தோண்டுற நாய, கூட சேத்தேன்ல… ஏன் தப்பு தான் டா..”
“டேய் சாதி பாக்குற பன்னியா இருந்தா, நாங்கத் தோண்டுற குழியில படுக்காம…. வீட்டுக்குள்ளே படுத்துக்கடா….”
“எங்க சாவுல தான் டா உங்க வாழ்க்கையே பொதஞ்சு இருக்கு”
“நாங்க பொதைக்கலைனா உங்களுக்கு சாவே இருக்காது டா… டேய் இவ்ளோ பேசிட்டில டா… உனக்குன்னே ஒரு சவக்குழி தோண்டி, அதுல உன்ன படுக்கவச்சு, என்னோட சாதி வழக்கத்த பண்ணி உன்ன அதுல பொதைக்கல… நான் சுப்பையா பாண்டியன் மகன் சுப்புராஜ் இல்ல டா…”
இதுவரை பொறுமையாய் இருந்த பெருசுகள் சாதி வழக்கத்தை மாற்றுவேன் என சுப்பு கூறியதைப் பொருக்க முடியாமல் வெகுண்டு எழுந்தனர்… பின்னர் எப்போதும் போல கலைந்துச் சென்றனர்…
கார்த்தி வீட்டில் ஒரே உறவினர் கூட்டம்…. காரணம் கார்த்தி அல்ல… கார்த்தியின் ஜாதி… (ஒத்துமையா இருக்கிறதா காட்டிகிதாம் நாயிங்க…. இத வச்சு எத்தன பிரச்சனை கூட்டலாம்னு பிளான் பண்ண ஒன்னு கூடுதுங்க…)அனைவரும் கார்த்திக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர்…. அனைவரின் அறிவுரையின் ஆதியும் அந்தமும் என்னவெனில், “நம்ம சாதிக்காரன் தொட்டா விட்ருவோமா… நாமெல்லாம் அக்னில பொறந்தவனுங்க டா”
ஆனால் கார்த்தியின் நினைப்பு முழுவதும் சுப்புராஜின் சொற்களின் மீதே இருந்தது… சண்டை எனில் வழக்கம் போல வெட்டுவேன் குத்துவேன் என்றில்லாமல், எனது சவக்குழியை வெட்டுவதே அவனின் தலையாய கடமை போல சொன்னது, இவனின் மனதை உறுத்தியது…. இரவெல்லாம் தூங்கவிடாமல் அவனை உறுத்திய ஒரு வார்த்தை “சவக்குழி”….
மறுநாள்.. வேலை விஷயமாக வெளிஊர் சென்ற கார்த்தியின் மாமா நீலகண்டன் வீட்டிற்கு திரும்பினார்.. வந்த மாமா கால் கூட கழுவாமல், வந்த அவசரத்தில் கார்த்தியிடம்.. “நீ தான் கண்ணு வருத்தப்படுற… அங்க அவ அவனோட கீழ்ச்சாதி புத்தியை காட்டிட்டான்..”
கார்த்தி நடந்தது புரியாமல் “என்ன பண்ணான் என் நண்பேன்…”
“இவ்ளோ ஆனதுக்கு அப்புறம் என்ன நண்பேன்.. அவன் நமக்கு சென்ம விரோதி”
அவர்கள் இருவருக்குள் ஆயிரம் சண்டைகள் நடந்திருக்கிறது. ஆனால் ஒன்று கூட அவனை சென்ம விரோதி ஆக்கவில்லை… ஆனால் ஏன் இந்த சண்டை இவனை சென்ம விரோதி ஆக்குகிறது என கார்த்தி யோசிக்கலானான்…. இவ்வளவும் மூளையில் ஓடிய வேளையில், மாமா நீலகண்டம் தன்னை அக்கினி குஞ்சு என்று நிரூபித்துக் கொண்டு இருந்திருக்கிறார்… அதாவது தனது ஜாதி பெருமையை பேசி இருக்கிறார்… “ஹே என்னப்பா… அவன் பண்ண காரியம்…”
“அட என்ன காரியம் மாமா பண்ணிதொலச்சான்..”
“உனக்கு காரியம் பண்ண சவக்குழி தோண்டிக்கிட்டு இருகானப்பா…”
நண்பனின் நல்ல செயல்கள் எல்லாம் சரிந்து போயின கார்த்தியின் உள்ளத்தில்….
“சும்மா சொல்லுக்கு தான் சொல்றான்னு நெனச்சா… ஹையோ நினைக்கும் போதே உடம்பெல்லாம்… அதுவும் உன் உடம்புக்கு ஏத்த மாரியாம்…. நீளம் அதிகமா, அகலம் கம்மியா “என கார்த்தியின் பயத்தை பன்மடங்காக்கி இடம் கடந்தார்…. மகனின் மனஉளைச்சளைப் போக்க தந்தை புருசோத்தமன், “எப்பா முனி… இருயா உனக்கு பிரியாணி வாங்கியார்ரேன்…”
“எது… முனியா… கார்த்தி….”
“சேரி சேரி டா முனியாண்டி பேரா”
ஆயுளே போகும் நிலையைக் கண்டு அஞ்சிய கார்த்திக்கு அலுமினிய பிரியாணி பொட்டலம் சற்றே ஆறுதல் தந்தது…. அலுமினிய பொட்டலத்தைப் பிரித்த கார்த்தி, அதில் பிரியாணிக்கு பதில் அவனின் உருவத்தைப் பார்த்தான்… ஆம்… பொட்டலத்தின் வடிவமைப்பு அவனுக்கு சவக்குழியை நியாபகப்படுத்திட்டு…. நீளம் அதிகமாய் அகலம் கம்மியாய்… உள்ளே குழி போன்ற அமைப்பு… அதில் இருந்த பிரியாணியின் நிறம் அவனுக்கு செம்மண்ணை நினைவிற்கு கொண்டுவந்தது… உடனே கார்த்திக்கு சுப்புவின் மீதுள்ள பயத்தை மேலும் அதிகரித்தது அவனின் உள்ளம்… அதே நேரத்தில் அங்கு சுப்பு கார்த்தியின் சடலத்திற்க்கான சவக்குழியை தோண்டி முடித்தான்….
பின் சுற்றி நின்ற உறவினர்களிடம் “இது நம்மள தப்பா பேசுனவனுக்கு… ” என்றான்…. உடனே சுப்புவின் உறவினர்கள்…. “நம்மள பத்தி பேசுனாகூட விட்ருவோம் டா… நம்ம சாதிய பத்தி பேசிபுட்டான் டா… அதுக்கு தான் இது” என்றனர்..
அப்பொழுதுதான் சுப்புவிற்கு ஒன்று புரிந்தது… நம்ம இனத்துலயே நமக்கு மட்டும் தான் மூளையைப் பயன்படுத்தத் தெரிகிறது என்று….
கார்த்தி இதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு முடிவு எடுத்தான்… சுப்புவிடம் சமாதானம் பேச ஒரு தூதுவனை அனுப்ப முடிவு செய்தான்… ஊரின் சிறுவன் ஒருவனை(சொடல) தூதனாய் அனுப்பினான் கார்த்தி…
அந்தச் சிறுவன் சுப்புவிடம்… “கார்த்தி அண்ணே உன்கிட்ட சொல்ல சொன்னுச்சு அண்ணே…. நாம ரெண்டு பேருக்கும் சண்ட யாரால…. அந்தப் புள்ளயால தான… அதனால நம்ம புள்ளையார் மடம் கிட்ட வச்சு, அந்த புள்ளைகிட்டயே போய் கேப்போம்.. அவ யாருக்கு ஓ.கே. சொல்றலோ இன்னொருத்தவன் வெலகிடனும்… ஓ.கே.வானு கேட்டுட்டு வர சொன்னுச்சு அண்ணே…”
சுப்பு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “சேரி வாரேன்-னு சொல்லு…”
அடுத்த நாள் அவள் வெள்ளிக்கிழமையை சிறப்பிக்க விநாயகருக்கு தரிசனம் கொடுக்க வந்தாள்…. அவள் தரிசனம் முடிய வெளிய இருவரும் வெறியோடு காத்திருந்தனர்… கையில் பரிசோடு…. அவள் தரிசனம் முடித்து வெளிய வர… இருவரும் அவளை நோக்கி விரைவாய் நடந்தனர்…
உடனே கார்த்தி அவளிடம், “வந்தனா நாங்க ரெண்டுபேரும் உன்ன லவ் பன்றோம்…. எங்க ரெண்டுபேர்ல யாரு உன் பெர்சோனாலிட்டிக்கு ஏத்தமாரி… “என்ன பெர்சோனாலிட்டி..” இடைமறித்தான் சுப்புராஜ்…. “அவளுக்கு புடிச்சவள அவ ஏத்துக்கட்டும் என்ன… சொல்லுமா வந்தனா… உனக்கு யார புடிக்கும்னு…”
“டேய் அவ கண்ணே சொல்லுதுடா… என்னதான் அவளுக்கு புடிக்கும்னு நீ என்ன டா…”
“என்ன கண்ணு சொல்லுது, காது சொல்லுதுனு… அவ சொல்லுனும்… அவ மனசார சொல்லனும்”
இருவரிடமும் வாக்குவாதம் முற்ற… கைகலப்பாகி இருவரின் சட்டையும் இருவரின் பிடியில் இறுக…. மவுனம் கலைத்து கூச்சலிட்டாள்…
“நிறுத்துங்க டா…” பழம் போன்ற மேனியில் இருந்து அனல் காற்று அடித்தார் போல் அவள் கூறிய வார்த்தை இருவரையும் அவளை நோக்க வைத்தது… பேச்சைத் தொடர்ந்தாள் அவள்… “என்ன டா ரெண்டு பேரும் எனக்குப் போட்டி போடுறீங்க என்னய கேக்காம…. நா சொல்றேன் டா இப்போ எனக்கு உங்க ரெண்டு பேரையும்மே புடிக்கல…”
தன் அழகை நிர்ணயித்து அவளுக்கு தன்னைப் புடிக்கவில்லை என சுப்புராஜ் தன் கைகளை அவன் சட்டையில் இருந்து விலக்கிகொண்டான்…
ஆனால் கார்த்தி???? அழகு, சொந்த தொழில், சுப்புவை விட மேல்சாதி… “ஏன் என்னை புடிக்கல…?” என வினவினான் கார்த்தி…
அதற்கு வந்தனா.. “உன்ன பொறுத்தவர உனக்கு அவன் கீழ்சாதி… ஆனா என்னைய பொறுத்தவர, நீங்க ரெண்டுபேருமே கீழ்ச்சாதி டா…”
இதைக் கேட்ட கார்த்திக்கு, அப்போதுதான் தன் சாதி பெருமையின் மீது சாணியடி விழுந்ததுபோல் உணர்வு…. சாதியை சொல்லி ஒருவனை தாழ்த்துவது எவ்வளவு கொடுமையான செயல் என உணர்ந்தான்..
தவறை உணர்ந்த கார்த்தி, சுப்புவிடம் மன்னிப்பு கேட்க சுப்பு பக்கம் திரும்பினான்…
ஆனால் அங்கு சுப்பு இல்லை… அதிர்ந்து அருகில் இருந்த சொடலையிடம் “எங்க டா அவன்…???” என கேட்க..
அவனோ “அண்ணே அப்போவே போய்ட்டான்… கோவமா வேற போனுச்சு… போ போய் வீட்டுக்கிட்டப் பாரு..” என்றான்..
கார்த்திக்கோ தயக்கம்… ஏனெனில் வீட்டின் அருகில் தான் அவன் சவக்குழி வேறு தோண்டி இருக்கிறான்… நாம சாதிய சொல்லி திட்டுனதுக்கு தான் அவன் சவக்குழியே தோண்டியிருக்கான்… இப்போ அவ வேற சாதிய சொல்லி திட்டிவிட்ருக்கா… அவ கிடைக்காத வெறில நம்மள போட்டுத்தள்ளி குழில போட்டு மூடிட்டான்னா…
ஆழ்ந்தயோசனையில் விழுந்த கார்த்தி… பின் தெளிவானான்… நாம பண்ணது தப்பு, அவன சாதிய சொல்லி திட்டுனது மகா தப்பு… தப்புக்கு தண்டன எவன் கொடுத்தா என்ன என முடிவெடுத்து அவன் வீடடைந்தான்..
வீட்டில்…
கார்த்தி வரவை நோக்கி எதிர்பார்த்ததுபோல், சுப்பு மண்வெட்டியோடு உட்கார்ந்திருந்தான்… உடனே கார்த்தி… “நண்பா உன்ன சாதி சொல்லி திட்டுனது என் தப்புதான் டா…. அத சொல்லி திட்டுனா எவ்ளோ வலிக்கும்னு எனக்கு ஒருத்தவ புரியவச்சுட்டா… அந்தத் தப்புக்கு என்னைய என்ன வேணாலும் பண்ணி, அந்தக் குழிய நெறைச்சு உன் கோபத்த தனிச்சுக்கோ…” என கூறி கண்களை இறுக மூடிக் கொண்டான்….
இந்த வார்த்தையை கேட்ட சுப்பு… மண்வெட்டியில் ஒட்டி இருந்த மண்ணை உதறி கார்த்தியை நோக்கி ஓடினான்… அவன் ஓடிவரும் சத்தம் கேட்டே தனது கடைசிநாள் இதுவென புரிந்து வாழ்க்கையை திரும்பிப்பார்த்தான் கார்த்தி…
நடப்பதை வைத்து ஏதோ சம்பவம் நிகழப்போவதாய் உணர்ந்த கிழவிகள், கூப்பாடு போட ஆரம்பித்தனர்…. கார்த்தி இப்பொழுது பள்ளிக்கூட நினைவுகளை கடந்திருந்தான்… சுப்பு அவனிடம் நெருங்கினான்… நினைவின் வேகத்தை அதிகரித்தான் கார்த்தி எச்சி விழுங்கி… கண்கள் சிவந்த சுப்பு வலக்கையில் மண்வெட்டி வைத்திருந்தான்…
இடக்கையால் கார்த்தி வைத்திருந்த பரிசை பிடுங்கிக்கொண்டு வீட்டின் பின்னால் தோண்டி வைத்திருந்த சவக்குழியை நோக்கி ஓடினான்…. உயிரை எடுக்க வந்தவன், தன்னிடம் இருந்து எதையோ உருவிக்கொண்டு செல்வதை அறிந்தவன், மேற்கொண்டு என்ன நடக்குமோ என அறிய கார்த்தி சுப்புவின் பின்னால் ஓடினான்…
இருவரும் சவக்குழியை நெருங்க… சுற்றி இருக்கும் ஊரார்கள், ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என நினைத்து அவர்களும் ஓடினர்… சவக்குழியின் விளிம்பில் சுப்புவும், கார்த்தியும்… தூரத்தில் ஊரார்கள்… என்ன நடக்குமோ என திகைப்பில் அனைவரும்… பிடுங்கிய பரிசை சவக்குழியில் வீசி… வீசிய கையை நண்பனின் தோளில் போட்டு…
“வந்தனா வந்ததால நீ வரமாட்டியோன்னு நெனச்சுதான்… இந்த சவக்குழிய தோண்டுனேன்… தோண்டும்பொதே சவக்குழி சொன்னுச்சு… ஒன்னு நா உள்ள விழணும், இல்ல நீ உள்ள விழணும்னு… நல்லவேள எதுவும் நடக்கல… ஆனா சவக்குழி தோண்டுனா, சவத்த வைக்காம மூடக்கூடாது… ஊருல ஒரு பைத்தியம் இழுத்துக்கிட்டு திரியுது… அது முடியட்டும்… முடிஞ்சோனே மூடிடுவோம் “…. என்றான் சுப்பு…
ஏதோ ஒரு சாவு விழும் என நினைத்த ஊரார்களுக்கு, சம்பவம் ஏதும் நடக்காதது சந்தோசம்… கார்த்தியின் மாமா நீலகண்டனை தவிர… பிரிந்த நட்பு இணைந்ததை கோலாகலமாக கொண்டாடினான் கார்த்தி… கார்த்தி, சுப்பு என இருவரும் அம்மா பிரியாணியில் மூழ்கி எந்திரித்தனர்… இலையில் வைத்த பிரியாணியும் அதில் ஊற்றிய கறிகுழம்பும் சுப்புவிற்கு வீட்டின் ஓரம் வளைத்துப்போடாமல் வைத்திருந்த திமில் போன்ற மலையில் அரக்கு நிற அருவி போல் தோற்றமளித்தது…. வழக்கமாய் அருவியின் நிறம் வெள்ளைதானே என நினைத்து அதை தேடியவேளையில்… அது கார்த்தியின் கண்களில் கிடைத்தது… அனைவரும் அன்பில் திளைத்து போதையில் மிதந்ததை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தான் மாமா நீலகண்டன்…
சாதிகள் மறந்து சால்னாக்கள் ஓடியதை பொருக்க முடியாத அக்னிக்குஞ்சு திமிறி எழுந்து சுப்புவை பார்த்து… “ஏன்டா கீழ்ச்சாதி பயலே… அவனுங்கதான், தான் யாருனு மறந்துட்டானுங்க… உன் நெலமைய நீ மறக்கலைல… மறக்குற விஷயமாடா அது… மறந்துராத… மறந்துட்டினா நியாபகப்படுத்த என்ன மாரி ஆயிரம் நீலகண்டனுங்க இருக்கானுங்க… மொதெல்ல எந்திருச்சு வெளிய போடா… கீழ்ச்சாதி பயலே…” என கத்தினான்…
கார்த்தி நீலகண்டனை அமைதிப்படுத்த முயன்ற வேளையில், சுப்பு கையை கழுவாமல் வீட்டைவிட்டு நகர்ந்தான்… வெளிஊருக்கு வேலை காரணமாக மாமா நீலகண்டன் மீண்டும் சென்றார்.
இந்த நேரத்தில் கார்த்தி சுப்புவின் வீட்டிற்கு சென்று நடந்ததற்கு வருத்தப்பட்டான்… அதற்கு சுப்பு “டேய் பரவால்ல டா…. ஊர்ல ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நீலகண்டனுங்க இருப்பானுங்க… அதுக்கெல்லாம் சுப்புவும், கார்த்தியும் வருத்தப்பட கூடாது… வா… “நடந்துக்கொண்டே ஊரை பற்றி பேசிய நிலையில், சவக்குழி மூடப்பட்டிருந்ததை பார்த்த கார்த்தி… “என்னையா சவம் வந்திருச்சு போல… குழிய மூடிட்டிங்க…” என்றான்…
“ஆமாப்பா… அந்தப் பைத்தியம் வரும்னு நெனச்சேன்… ஆனா அதுக்கு பதிலா ஊருக்குள்ள சுத்திட்டு இருந்த வேற ஒரு பைத்தியம்… நீ கூட பாத்திருப்ப… அது தான்…” என்றான் சுப்பு… ம்ம்ம் என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு விலகினார்கள் இருவரும்…
“வா டா அன்னைக்கி தான் மாமா வந்துக் குழப்பி விட்டுட்டாரு… இன்னைக்கி ஒரு புடி புடிப்போம் வா…” என கூறி சுப்புவை அழைத்து சென்றான்… அங்க இருவரும் ஒரு பிடி பிடித்த பின்னர், கை கழுவும் நேரம் வரும் போது, கார்த்திக்கு மாமா நினைவு வந்தது….
சென்றமுறை இதே நேரத்தில் தான் பிரச்சனையை ஆரம்பித்தார் என்பதால்… மாமாவிற்கு அழைத்தான். அவருக்கு அழைப்பு செல்லாததால், உடனே அம்மாவிடம் உட்கார்ந்தபடியே கேட்டான் கார்த்தி.. “அம்மா மிஸ்டர் நீலகண்டன் எங்க மா…”
உடனே சுப்பு கார்த்தியிடம்… “மச்சான் நீலகண்டன்கள் இனிமேல் வரமாட்டானுங்க டா…” என்று கூறி கையை கழுவினான்…. அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் கார்த்திக்குப் புரிந்தது… அவன் வீட்டின் பின் தோண்டிய சவக்குழி, நீலகண்டனால் நிறைக்கப்பட்டது என….
– கதைப் படிக்கலாம் – 140
இதையும் படியுங்கள் : விடியலும் வரும்