-பா.ஆசைத்தம்பி
தூறல் லேசாக விழுந்து கொண்டிருந்தது. தனது தோளில் அழுக்கு சாக்கினை சுமந்தவாறு வேகமாக நகரின் கடைசியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்கொடையை நோக்கி கொஞ்சம் வேகமாக கால் தாங்கி…தாங்கி…..நடந்து வந்தான் அந்த கிழவன்.
இரண்டு நாளா காலையிலேயே கொஞ்சம் தூறரது அப்புறம் நாள் முழுக்க வெய்யில் காட்டுறது யார ஏமாத்துது………… இந்த மழைக்கு என்ன எம் பொழப்புதான் இரண்டு நாளா ………….. வீணா போவுது…. இதுக்கு என்ன வயிரா இருக்கு… எனக்கு இருக்கு ………இல்ல..
பழைய பேப்பர பொறுக்கி கடையில போட்டு கிடைக்கிற காச வைச்சிதான் என் வயிர கழிவிக்கனும்…….. இந்த … மழைக்கு என்னவாம் என்றவாரு சிந்தனை செய்து கொண்டு வேகமாக வந்தான் அந்த பயணியர் நிழற்குடைக்கு…. கிழவன்.
என்ன கிழவா மழையில கூட வேலைய பாக்குறயா? என்றவாறு கிழவனை நக்கலாக ஒருவன் கேட்டான். என்ன நீ பேப்பர் பொறுக்க போகாவிட்டா உன் குழந்தைகள் எல்லாம் பட்டினியாக கிடக்குமா? என்றான் சத்தமாக.
ஒனக்கு எது சொன்னாதான் புரிய போது……… புள்ளைக்கு மட்டும் வயிறு இல்லடா உனக்கும் எனக்கும் இருக்கு……. ஏன் நமக்கெல்லாம் பசிக்காது? என்று சத்தமாக கேட்டான் கிழவன்…………
பெருசு சும்மா சொன்னேன்…… நானே இரண்டு நாளா வெளியில வரல ……. இப்பதான் வந்தேன். உன்ன பார்த்தவுடன் கொஞ்சம் கோவம்……. என்னடா இந்த ஆளு நம்மள உட்டுட்டு காலையிலே கிளம்பி வேலைய முடிச்சிட்டு வரானேன்னு சரி….சரி போ போ என்றான்.
இல்லப்பா ஒரு வாரமா காலையில லேசா தூறுது அப்புறம் பாரு நாள் முழுக்க வெய்யில் அடிக்குது. நம்ம பொழப்பே பழைய பேப்பர் பொறுக்கிறது……. நமக்கு தேவை வெயில்…….. அதுவும் எனக்கு அதிக வெயில் ஆவாது…….. நம்ம வயது அதுபோல செம வெயிலுன்னா நான் சுருண்டுக்குவேன்.
அதனால பெரிய வெயிலுக்கு முன்ன கொஞ்சம் காலையிலே போயி வேலைய பார்ப்பேன். இன்னைக்கு பாரு காலையில பார்த்தா லேசா இருட்டுது ………. இன்னிக்கும் பட்டினியா……. கடவுளே கருணை காட்டு இன்னு வேண்டிகிட்டேன்.
கொஞ்சம் வெளிச்சம் வந்தது சரி… சரி… ரெண்டு நாளைக்கு மேல பொறுக்கியத ஒரு வீட்டுல ஓரமா போட்டு வச்சியிருந்தேன்…… அதையும் சேர்த்து இப்பதான் எடுத்து வரேன்……. இத பிரிச்சு எடை போட்டு …….. காசு வாங்கி…….. எப்ப பசியாறரது இப்பவே காலையில பத்து மணிய நெருங்குது இதுல நீ வேற என்றான் கிழவன் தன் உடல் சங்கடத்தோட…….
பெருசு சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன் நீ கிளம்பு……. நான் போயி……. ஏதாவது கிடைக்காதா இன்னு நாளு தெருவ சுத்தி பார்க்கிறேன் என்றவாறு சாக்கை தோளில்மேல் போட்டுகிட்டு சென்றான் அவன்.
கிழவன் பேருந்து நிழற்குடையை நெருங்கி அவன் எப்போதும் அமரும் அந்த மூலையில் தனது தோளில் உள்ள மூட்டையை அப்பாடா……. என்றவாறு இறக்கி வைத்தான்.
கிழவன் வரும் போதே ஒரு எளிய கடையில் ஒரு நாளு இட்லி பார்சல் வாங்கிகிட்டு வந்தான். அதனையும் ஒரு ஓரமாக வைத்தான்.
கொஞ்சம் நடை அசதி அப்பாடா ஆண்டவா ஏண்டா என்னை இன்னும் இருக்க……வைக்கிவற சீக்கிரம் முடிச்சிட்டு அழை…… எத்தனை நாளைக்கு தான் பழைய பேப்பர பொறுக்கி பொழைப்ப பார்க்கிறது. நான் எப்படி இருந்தேன்…… என்ன நிலைமைக்கு கொண்டு வந்து உட்டுட்ட கடவுளே என்றவன் சரி… சரி பழைய பேப்பர் மூட்டையை எடுத்து பிரிக்க ஆரம்பித்தான்.
பேப்பர் ஒருபுறம்……. அட்டை ஒருபுறம்…… பழைய தண்ணீர் பாட்டில்கள் ஒருபுறம் என்று பிரித்து பேப்பர்கள் காற்றில் பறக்காதவாறு ஒரு கல்லை எடுத்து வைத்து சிரத்தையாக வேலை செய்தான்.
யாரோ….. அம்ம……. அம்ம…….. என்று அழைக்கும் ஒரு குழந்தையின் குரல் கேட்டு சட்டென்று திரும்பினான் கிழவன்.
என்ன சத்தம்…..யாரு அங்கெ….என்றவாறு உற்றுப் பார்த்தான் …
அந்த நிழற்குடையின் இன்னொரு மூலையில் ஒரு இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை ஒரு துண்டை மடித்து போட்டு அமர வைக்கப்பட்டுள்ளது……. ஏது இந்த குழந்தை என்றவாறு உற்றுப் பார்த்தான்…….
அது அம்மா…… அம்மா……. என்றவாறு கையை வெளிப்பக்கம் நீட்டியது. ஓ…..ஓ…… யாரோ பஸ் ஏற வந்தவங்க குழந்தையை ஒக்கார வச்சிட்டு கொஞ்சம் ஒதுங்க போயிருப்பாங்க போல சரி….. சரி….. அம்மா வருவாங்க நீ அழுவாத இரு…. இரு…. என்றவாறு தனது வேலையை பார்த்தான் கிழவன்.
அந்த பேருந்து நிறுத்தம் நகரின் கடைசியில் உள்ளது. டவுன்பஸ் தவிர வேறு எந்த பஸ்ஸும் நிற்காது. அதனால் கிராமங்களுக்கு செல்பவர்கள் மட்டும் அந்த பேருந்து நிலையத்திற்கு வருவார்கள். அவ்வளவு கூட்டம் எப்போதுமே இருக்காது. அதனால்தான் கிழவன் தனக்கு வசதியாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தான். சுற்றிலும் கொஞ்சம் புல் பூண்டு படர்ந்து கொஞ்சம் அடர்ப்பாக இருக்கும்.
சரி….. சரி…… குழந்தைகாரங்க வரட்டும் என்றவாறு தன் வேலையாக இருந்தவனை அம்ம…… அம்ம……. என்று குழந்தையின் குரல் அழைத்தது.
என்னப்பா அம்மா வருவாங்க குந்தினு… இரு என்று தனது வேலையினை பார்த்தவனை மீண்டும் அழைத்தது குழந்தை.
கொஞ்சம் சங்கடத்தோடு எதுக்கு கூப்பிடுது என்று கோபமாக நெருங்கினான்.
குழந்தையின் கண்களில் மிரட்சி தெரிந்தது. கிழவன் பாவம் குழந்தை என்று கொஞ்சம் கோவத்தில் பின்வாங்கி என்ன என்றான்?
அம்ம……. என்றவாறு குழந்தை வயிற்றுக்கு கீழே கையால் தட்டி காட்டியது. பசிக்குதா? என்றான் கிழவன்.
இல்லை என்று தலையாட்டியது……குழந்தை.
மீண்டும் அம்ம……. என்று வயிற்றுக்கு கீழே தட்டி காட்டியது.
கிழவன் புரிந்து கொண்டான்….. ஓ சிறுநீர் கழிக்கவா ஏண்டா ப்பா எழுந்திரு என்றான் கிழவன்.
குழந்தை அம்ம…… என்று இருகைகளை உயர தூக்கி…… தூக்கச் சொன்னது.
கிழ்வனுக்கு கொஞ்சம் கோவம்…..இருந்தாலும்…
யாரு பெத்த புள்ளையோ….. என்ன போயி வேலை வாங்குது எங்க போனா இதோட அம்மா….. நானே தள்ளாத கிழவன்……. நடக்கலாம் இல்ல இது எதுக்கு என்ன தூக்க சொல்லுது…….. கண்றாவி என்றவாறு குழந்தையின் தோளில் கைகளை கொடுத்து தூக்கினான். தூக்கியவன் ஆடிப்போனான்…
அந்தக் குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள கால்கள் இரண்டும் கடிகாரத்தின் பெண்டுலம் போல ஆடின…..
கடவுளே……. இது என்ன கொடுமை ….படைத்தவனின் வஞ்சனையை சபித்தான்…… குழந்தையின் நிலையில்லாமல் ஆடும் கால்களை பார்த்தான் கண்களீருந்து கண்ணீர் தானாக கொட்டியது …
ஓ…… இதனால்தான் என்னை தூக்க சொன்னதோ நான் ஒரு கூறுகெட்டவன்….. மரியாதை பார்த்தேன். இது போல பாவத்துக்கு “ஒதவாத பிறப்பு என்னடா நம்ம பிறப்பு” என்று சிந்தித்தான்.
சரி சரி வாப்பா……… என்றவாறு அனுசரனையாக குழந்தையை ஒரு கல்லின்மீது அமரவைத்தான்…. குழந்தை சிறுநீர் கழித்தது.
பின்பு தூக்கி வந்து துண்டின் மீது அமர வைத்தான் கிழவன்.
அப்புறம் கிழவன் குழந்தையிடம் அம்மா எங்கே என்றான்?.
குழந்தை ஏற்கனவே கை காட்டிய பக்கத்தை நோக்கி கையை நீட்டி அம்மா…… என்றது.
சரி சரி வருவாங்க என்றவாறு தனது மீண்டும் வேலையை ஆரம்பித்தான் கிழவன்.
ஒரு அரை மணி நேரத்திற்கும் மேல் இருக்கும் குழந்தை அம்ம…… அம்ம.. என்று அழைத்தது. கிழவன் நெருங்கினான். என்னப்பா? அது வயிற்றை மேல்பக்கம் தட்டி காட்டியது.
பசியா…… என்றான்? கிழவன்.
ஆமாம் என்பது போல தலையாட்டியது.
தினமும் தனக்கும் தன்னை சார்ந்திருக்கும் நாய்க்கும் ஒரு நாலு இட்லி வாங்கிவருவான் கிழவன்.
சரி… சரி… பாவம் புள்ளைக்கு பசிக்குது போல என்றவாறு பார்சலை பிரித்து ஒரு இலையில் ஒரு இட்லியை நான்காக பிட்டு வைத்து ஓரத்தில் சாம்பாரு ஊற்றி சாப்பிடு என்றான்.
பின்னர் அட… அடச்சிக்கிட்டா என்ன செய்வது என்று தண்ணீர் எடுத்து திரும்பியவன்…….. ஆச்சரியப்பட்டு போனான். குழந்தை இட்லியை அவ்வளவு வேகமாக சாப்டிடிச்சி…… சரி இன்னொரு இட்லிய கொடுப்போம் என்று கொடுத்தான்.
அதையும் சாப்பிட்டுவிட்டு போதும் என்று வயிற்றை தொட்டுகாட்டியது குழந்தை.
போதுமா…… சரி இரு….. அம்மா வருவாங்க என்று தனது வேலையினை தொடர்ந்தான்.
யாரு பெத்த புள்ளையோ……. பாவம் காலு வெளங்கல…… இதோட அம்மா எங்க போயிருப்பாங்க இவ்வளவு நேரமா காணோமே……… வருவாங்களா………..மாட்டங்களா என்ற சிந்தனை ஓங்கியது கொஞ்சம் பயமும் கூடியது கிழவனுக்கு.
இடையில் குழந்தை இவனை இயற்கை உபாதை கழிக்க அழைத்தது. உதவினான்.
தன்னை அவர்கள் வீட்டை விட்டு துரத்திய போது தனது பேரப்பிள்ளைக்கு இந்த வயது இருக்கும். அவனை பிரிந்தபோது கிழவனின் பேரனுக்கு இரண்டு வயது முடிந்திருந்தது.
ஒரு நாள் மருமகள் குடிக்க கொடுத்த கஞ்சியில் உப்பில்லை…… கொஞ்சம் உப்பு போடுமா……. என்றான் கிழவன்.
ஊத்திரதே ஓசி கஞ்சி இதுல வேற சூடு சொரனைக்கு உப்பு கேட்குதா? என்று வேகமாக கஞ்சி குண்டானை தட்டிவிட்டாள் மருமகள் சிதறியது கஞ்சி.
மகன் பார்த்துக்கொண்டிருந்தானே ஒழிய என்ன ஏது என்று கேட்கவில்லை. மகனை பார்த்தான் கிழவன்……. மகன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
பேரப்பையன் மட்டும் தாத்தா தாத்தா என்று கையை நீட்டினான் அந்தக் குழந்தையின் கையில் போட்டாள் மருமகள். அப்போதே அவமானம் தாங்காமல் வெளியேரினான் கிழவன்.
மதியம் ஒருமணி நெருங்க தனது பசியை மறந்து மீதம் இருந்த இரண்டு இட்லியை அந்த குழந்தைக்கு கொடுத்தான். சாப்பிட்டு தண்ணீர் குடித்தது.
பத்திரமா இருப்பியா…டா… என்றான் கிழவன்….தலையாட்டியது குழந்தை…..
மதியம் ஒரு இரண்டு மணிவாக்கில் பிரித்ததை எடுத்துக்கொண்டு பேப்பர் போடும் கடைக்கு போனான். போட்டு முடித்து வரும்போது கிழவனது பசிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பண்ணு வாங்கி வந்தான்.
அங்கு வந்து கொஞ்சம் நேரம் அசந்து இருந்தவன்.
பண்ணை பிரித்து குழந்தைக்கு கொடுத்தான்….சாப்பிட்டவுடன் குழந்தை தூங்கிவிட்டது.
“யாரு…தான். இந்த குழந்தையை அதுவும் இப்படிபட்டதை” கொண்டு வந்து இந்த இடத்தில் உட்டுட்டு போனாங்க……. போவட்டும் இவ்வளவு நேரமா யாருமே வரல……..? அட பாவமே கடவுளே என்றவாறு எதை…எதையோ சிந்தித்தான். கொஞ்சம் பயமும் கூடியது கிழவனுக்கு.
நாமெ என்ன செய்ய முடியும் இந்த முடியாத குழந்தைக்கு ……கடவுளே…இது என்ன சோதனை….இதுக்கு எதாவது ஒரு வழி காமி சாமி……யாரையும் இன்னேரம் வர காணோமே… நான் என்ன செய்வேன்..என்று மன சஞ்சலம் அடைந்தான் கிழவன்
அந்த அசதியில் கிழவன் கொஞ்சம் கண்ணயர்ந்தான்.
திடீரென தூரத்தில் இடி இடிக்கும் சத்தம் கேட்டு கிழவன் அலரி கண்விழித்தான். பயங்கர….. இருட்டாக இருந்தது. மழை வரும் போல இருந்தது…… கிழவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்ன செய்வது…கால் விளங்காத புள்ளைய….நான் என்ன செய்ய முடியும்…
குழந்தையும் எழுந்து கிழவரை பரிதாபமாக பார்த்து அமர்ந்திருந்தது. ….. அதன் கண்கள் சுற்றி சுற்றி யாரையோ தேடியது……. கழிவிரக்கம் முகத்தில் அலைபாய்ந்தது……என்ன செய்ய முடியும் அதனால்…? ஆனால் கிழவரை கண் சிலிர்க்காமல்….வேதனையோடு….பார்த்துக்கொண்டிருந்தது
எழுந்து குடிசைக்கு கிளம்ப தனது பழைய சாக்கை தூக்கி தோளில் போட்டவனை மனம் தடுத்தது.
தன்னை வீட்டிலிருந்து வெளியே போ என்று மருமகள் அடித்து துரத்திய போது யார் கைகள் தடுத்தது…..யாரு இந்தா சாப்பிடு… ன்னு சாப்பாட்ட கையில அள்ளி கொடுத்தாங்க யாருமே இல்ல….எல்லாருமே வேடிக்கை தான் பார்த்தாங்க….
ஆனா… இந்த காலு ரெண்டும் வெலங்காத புள்ளைக்கு என் உயிர் உள்ள வர நானு… பழைய பேப்பர பொறுக்கியாவது கஞ்சி ஊத்துவண்டா என்று அழுதுக்கொண்டே….
குழந்தையை நெருங்கினான். குழந்தையின் முகத்தில் எதிர்பார்ப்பு கருணை மிகுந்திருந்தது அந்த கழிவிரக்கம் கிழவனை பரிதாபமாக ஈர்த்தது. அள்ளி வாரி எடுத்தான் குழந்தையை வாஞ்சையோடு……..நெஞ்சோடு அணைத்தான் …. கிழவனுக்கு உடல் முழுவதும் பாசத்தல் அதிர்ந்தது.
– கதைப் படிக்கலாம் – 5
இதையும் படியுங்கள் : மனிதனும் சில நேரங்களில் தெய்வம்தான்!