– ம. சக்திவேலாயுதம்

முகமெல்லாம் கவலைக்கோடுகளும் அழுகைக்கோடுகளும் வழிந்து பதிந்த அவனை, இன்று பார்த்ததுமே என்னை நான் அன்று பார்த்ததாக உணர்கிறேன். நானும் அன்று இப்படித்தான் இங்கு அமர்ந்திருந்தேன். என் சோகத்தில், என் தொண்டை இப்படி அடைத்தே தான் இருந்தது.
அன்று அப்போது இருந்த ராணி டீச்சர் என்னிடம் வந்து வழியவழிய பேசுவார். நான் அவரிடம் பேசாமல் கண்ணீரை மட்டும் வடிப்பேன். அதே போலத்தான் இந்த சக்தியும் இன்று கண்ணீரோடு என் முன்னே..
“சக்தி பேசுடா.. எல்லாம் நடந்தது நடந்து போச்சு… நாங்கலாம் இருக்கோம்” என, என் பிள்ளைகளையும் என்னையும் காட்டி நம்பிக்கை மொழிந்தேன் நான். எனினும் அவன் அசையவில்லை. இந்த நேரத்தில், அன்று நான் எனது பத்து வயதில் இங்கே வந்த நியாபகங்கள் மனதில் ஓடத்தொடங்கின.
யாரும் இல்லாத ஒருவளாய் இங்கு நான் வந்த போது, எனது சூழலை உணர்ந்த ராணி டீச்சரின் அன்பு எனை ஆட்கொண்டது நினைவுச்சுருளாய் மனதுள் சுற்றத்தொடங்கியது. அந்த விபத்துக்கு காரணமே என் அப்பாதான்னு எனக்கு நல்லாவே தெரியும். எத்தனை நாட்கள் என் அம்மா “குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு சொல்லிருப்பாங்க.. புலம்பிருப்பாங்க”
சாராய ஆசை யாரை விட்டுது.. சாராயத்தை குடிச்சு குடிச்சு என் அப்பாவை சாராயம் குடித்தே விட்டது. ஆம் அப்படித்தான் என் அம்மாவோடு இருசக்கர வாகனத்தில் ஒருநாள் ஊர்நிகழ்ச்சிக்கு போயிட்டு வரும்போது, என் அப்பா வழக்கம்போல் மலையேறிட்டார். பாவம்.. என் அம்மா… சாராயத்துக்கு அவரும் பலிகடா ஆகிவிட்டார்கள். மொபட்டில் சற்று வேகமாக எங்க ஊரை நோக்கி வரும் போது, ஆன்மீகச் சுற்றுலா வந்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த வேன் மீது என் அப்பா மொபட் மோதி விட, தூக்கி வீசப்பட்ட என் அப்பாவும், அம்மாவும் சம்பவ இடத்திலேயே பலி. வேன் டிரைவரும் பலி. வேனில் இருந்தவர்கள் பலரும் படுகாயம். ஒருவருக்கு காலும், ஒருவருக்கும் கையும் பறிபோனது.
இந்தச்சோகம் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சம்பவம். அப்போது அழத்தொடங்கிய நான், என் உறவுக்காரங்க வந்து இங்கு வந்துவிட்டப் பிறகும் கூட, சிலநாட்கள் அழுகையின் பிடியில்…
எல்லாம் சரி… நம்மள மாதிரியே அந்த வேன் டிரைவருக்கும் குடும்பம் இருக்குமே. அவங்க நிலைமை? அந்தக் கை கால் போனவர்களின் நிலைமை? என பலநாள் அதை குற்ற உணர்ச்சியா நினைத்து நினைத்து அழுது முடிப்பேன். இருப்பினும் “ராணி டீச்சர் மட்டும் இல்லாட்டி” என ராணி டீச்சரின் பாச மொழிகளை எனக்குள்ளே மொழிந்துக் கொள்வதாய் சக்திக்கு முன்னே சொல்ல..
டீச்சர்… என சக்தி எனை இப்போது கட்டிக்கொண்டான். “சொல்லு சக்தி… சொல்லு சக்தி.. சோகத்தை அடக்கி வைக்காத சொல்லு” என்றதும், அழுகையோடு பகிர்ந்தான் அவன் வாழ்க்கையை.
“நாங்க சந்தோசமா வாழ்ந்திட்டு இருந்தோம். குடியோ, சிகரெட்டோ, வேற எந்தப் பழக்கமோ, எங்க அப்பா கிட்ட வேறெதுவும் கிடையாது. ஆனால் எங்கக் கெட்ட நேரம், நானும் இங்க ஒரு விபத்தால தான் வந்திருக்கேன்” என அழத் தொடங்கினான். உடனே அவனை ஆசுவாசப்படுத்தினேன். இப்போது நான் ராணி டீச்சராய் மாறிக்கொண்டேன்.
கல்யாணவீட்டிற்கு என் அப்பா-அம்மாவோடு பைக்கில போயிட்டு வரும்போது, எதிரே வந்த கார் மோதி நாங்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டோம். அதில் என் அப்பா-அம்மா செத்துட்டாங்க. நான் மட்டும் காயங்களோடு பிழைத்தேன். விசாரணையில், காரை ஓட்டி வந்தவங்க மதுபோதையில் வந்ததால்தான் இந்த விபத்து என்று தெரியவந்தது.
“யாரோ செய்யுற தப்புக்கு யாரோ சாகுறதுங்குறது” என மீண்டும் அழத் தொடங்கினான்.
“அழாத சக்தி.. அழாதே..” என்றேன்.
என் மனதில் அப்பியிருந்த, அந்தக் குற்ற உணர்ச்சியை போக்க வந்தவன் நீ தான் சக்தி… என மனதுக்குள் கொஞ்சம் பூரித்துக்கொண்டேன். இருப்பினும், இந்த பையனுக்கு இப்படி நடத்திருக்கக்கூடாதே என மனசுக்குள் அழுதும் கொண்டேன்.
“அன்னிக்கு சாராயம்.. இன்னிக்கு மது.. ஆனா சாவு மட்டும் இன்னும் மாறவே இல்ல டீச்சர்” என சக்தி சொல்ல..
“ஆமா சக்தி, மரணம் எவ்வளவு கொடுமை” என சக்தியை அணைத்துக்கொண்டேன்.
“டீச்சர் இந்த மதுவை அழிக்க என்ன செய்யணும்.. அந்தக் காலத்துல இருந்து, இந்தக் காலம் வரைக்கும், மதுவால எத்தனைக் குடும்பங்கள் அழிஞ்சிருக்கும்”
“ஆமாடா… நம்ம ஹோம்லேயே, உன்னோட சேத்து குடியால பாதிக்கப்பட்டு அழிஞ்ச குடும்பத்தில இருந்து தன்னந்தனியா வந்த பசங்க, எட்டு பேர் இருக்கீங்க” என நான் சொன்னதும்,
“டீச்சர், அப்போ இந்த மது அழிப்புக்கு விடை தான் என்ன?” என உரத்த குரலில் அவன் கேட்க..
அந்தக் கேள்வி எங்க ஹோம் முழுவதும் எதிரொலித்தது.
இதே கோபமும் கேள்வியும் எனக்குள்ளேயும் இருந்தது சக்தி. ஆனால் இதுக்காக நான் இன்று வரைக்கும் போராடிட்டே தான் இருக்கிறேன். அந்த போராட்டத்தில் பல மிரட்டல்கள், பல தோல்விகள், பல இக்கட்டுகள்… இப்படி பலவற்றை நான் எதிர்கொண்டு வருகிறேன்.
மதுவின் கொடுமையால் தவறே செய்யாமல் மாண்டுபோகும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நீதியும், பொருளாதார இழப்பீடும் வாங்கித்தர நீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளேன்.
“அப்போ மது அழிஞ்சிருமா டீச்சர்” என சக்தி கேட்க…
மது அழிஞ்சிருமானு தெரியாதுடா.. ஆனா மது ஒழியனும்-னு என்னால முடிஞ்சத செய்றேன்.
“திருடனா பாத்து திருந்தாவிட்டா… திருட்ட ஒழிக்க முடியாதுனு… சொல்லுற மாதிரி.. குடிக்கிறவங்க குடிய நிறுத்தணும்” அது ரொம்ப முக்கியம்.
அது நடக்குமா டீச்சர். அதுக்காகத்தான் நம்ம ஹோம் மூலமா குடியில சிக்கித் தவிக்கிறவங்களுக்கு தியான வகுப்பு, யோகா வகுப்பெல்லாம் நடத்துகிறோம்.
“இத நாம மட்டும் நடத்தினா போதுமா டீச்சர்”.
“போதவே போதாது.. கவர்மென்டுக்கு இதை மனுவாக எழுதி இருக்கேன். மதுவிலக்கிற்காக பெரிய கோர்ட்டுல ஒரு பொதுநல பெட்டிசன் போட்டிருக்கேன்.. இப்படி நிறைய செய்ஞ்சிட்டிருக்கேன்” என்றேன்.
“அப்படியா டீச்சர்”…
“ஆமாம்டா சக்தி”
எங்கேயோ எனது ரிங்டோன் ஒலிக்கிறது… ஹோமின் வரவேற்பரையில் சார்ஜ் செய்துக் கொண்டிருந்த எனது ஃபோனை எடுக்கிறேன். அன்னோன் நம்பர் என வருகிறது.
யாரா இருக்கும் என நினைத்தபடியே ஃபோனை எடுக்கிறேன்.
“ஹலோ” என்றேன் பவ்வியக்குரலில்…
“ஏய் டீச்சர்.. உனக்கும் வாழ ஆசை இல்லையா.. நீ ஹோம்ல இருந்து காணமப்போயிருவ”
“யாருடா நீ.. என்னிய மிரட்டுர”
“நான் உன்னால இன்னிக்கும் பாதிக்கப்படுறவன்.. கமிஷனர் ஆபீசல்யும், கோர்ட்டுலயும் பெட்டிசன் பெட்டிசனா போட்டியே.. அதுல ஒருத்தன் தாண்டி நா”
“டேய், தைரியம் இருந்தா டைரெக்டா மோதுடா”
“உன்ன என்ன செய்யுறேன் பாருடி” என ஃபோனை வைத்தான்.
இதைப் பார்த்த கேட்ட சக்தியும், ஹோம் பிள்ளைகளும், டீச்சரை
“டீச்சர்” எனக் கட்டிக்கொண்டனர்.
“ஒண்ணுமில்லடா.. இதெல்லாம் எப்போதும் நடக்கக்கூடியது தான்”
எனக் குழந்தைகளை அமைதிப்படுத்தினேன்
“ராஜா.. அந்தக் கோர்ட் பெட்டிசன் ஃபைலையும், கமிஷனர் கம்ப்ளைண்ட் ஃபைலையும், கொஞ்சம் எடுத்து வா” என நான் அழைக்க..
“இந்தா வாரேம்மா”.. என்றபடியே எடுத்து வந்து என்னிடம் வழங்கினான்.
“ஃபைலை புரட்டிட்டே யாரா இருக்கும்” என யோசித்தேன்.
ஒரு பெட்டிசனில் நாளை வாய்தா என இருந்தது. வக்கீலுக்கு ஃபோன் செய்தேன்.
“சார் வணக்கம்.. ஹோம்ல இருந்து டீச்சர் பேசுறேன்”
“வணக்கம் டீச்சர்.. எப்டி இருக்கீங்க”
“நல்லா இருக்கேன் நீங்க?”
“நானுந்தான் டீச்சர்”
“நாளைக்கு அந்த ஸ்கூல்கிட்ட இருக்குற பார் வழக்கு வருதுல்லா”
“ஆமா டீச்சர் நாளைக்கித்தான், நானே போன் பண்ணனும் நினைச்சேன்.. நீங்க அதுக்குள்ள கூப்பிட்டுடீங்க, டீச்சர் நம்ம கண்டிப்பா ஜெயிப்போம்” என நம்பிக்கையில் பேச…
பெருமூச்சுவிட்டபடி “அப்பாடி இப்போதான் சார் நிம்மதியே கொஞ்சம் வருது” என்றேன்.
“சரி டீச்சர்.. நாளைக்கு வந்திருங்க” என வக்கீல் நிறைவு செய்ய முனைந்தார்.
“சார்.. ஒரு நிமிஷம்”
“என்ன டீச்சர்.. சொல்லுங்க”
“வழக்கம்போல ஃபோனில் ஒரு மிரட்டல் அழைப்பு.. நம்பர் புதுசா இருந்தது, ஆனா பயங்கரக் கோபத்தில பேசினான் அவன்”
“விடுங்க டீச்சர், மிரட்டலுக்கு பயப்படாதீங்க”
“மிரட்டலுக்கு பயப்படல.. இருந்தாலும் இங்குள்ள என் குழந்தைகளுக்கெல்லாம் யார் இருக்கா.. நான்தானே இருக்கேன், அதான் உங்கக்கிட்ட சொல்றேன்”
“இன்னிக்கு முடிஞ்சா, அந்த நம்பரை வைச்சு ஒரு கம்ப்ளயிண்ட், நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல பண்ணுங்க”
“சரி சார்.. இப்போ ரெடி பண்ணிட்டு கிளம்புறேன்”
“ஓ.கே. டீச்சர்… நாளைக்கி பார்ப்போம்” என ஃபோனை வைத்தார்.
விறுவிறுவென நடந்தப் பிரச்சனையை டைப் செய்து, ப்ரிண்ட் அவுட் எடுத்து, கையெழுத்திட்டு… போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினேன்.
“ராஜா, நா ஸ்டேஷன் வர்ற போயிட்டு வாரேன், பிள்ளைகளைப் பாத்துக்கோ”
“ஏப்பசங்களா, சமத்தா இருங்க… கொஞ்சம் வெளியே போய்ட்டு வாரேன்”
“சரிங்க டீச்சர்.. எல்லாரும் கோரசா சொல்ல”
சக்தி மட்டும் எதுவும் சொல்லாமல், தள்ளி நின்று என்னைப் பார்த்தான்.
“சக்தி வாடா இங்க, ஏன்டா ஒண்ணும் பேசமாட்டுக்க”
“டீச்சர் நீங்க இப்போ வெளில போயே ஆகணுமா” என்றான்.
“ஆமாடா.. போய் இப்பவே கம்ப்ளயிண்ட் பண்ணினா, இந்த மாதிரி மிரட்டல் ஃபோன்லாம் வராது”
சரிங்க டீச்சர், போய்ட்டுவாங்கன்னு… இருமனதாய் சக்தியும் அனுப்பி வைத்தான்.
மனதில் கம்பீரத்தோடு சாலையில் நடந்துக் கொண்டிருந்தேன். “ஓ புது தென்றல் புயலாகி வருதே” பாடல் எங்கேயோ ரேடியோவில் ஒலிக்குது. இப்போது பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய், என் வீரநடை விரைவுநடை போலீஸ் ஸ்டேஷனை அடைகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் நுழைஞ்சதும், “சார் இன்ஸ்பெக்டர் இருக்காங்களா” என்றேன்.
“இல்லம்மா அவர் ரவுண்ட்ஸ் போயிருக்கார்”
“சார் ஒரு கம்ப்ளயிண்ட் கொடுக்கணும்”
“என்னம்மா” என்றதும் நடந்ததை சொன்னேன்.
“சரிம்மா, இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்றேன். நீங்க சாயங்காலம் வாங்க” என்றார்.
சரியென்றவாறு ஹோமிற்கு கிளம்பினேன். இப்போது அதே சாலையில் “தப்பெல்லாம் தப்பே இல்லை” என்ற பாடல் ஒலிக்கிறது.
இதையும் என் காதுகள் கேட்கிறது. மனம் வலிக்கிறது. இப்போது என் நடையில் வேகமில்லை. நான் ஹோமை நெருங்குகிறேன்.
வேகமாக ஒரு கார் என்னையொட்டிச் செல்கிறது. என்னைக் கடக்கிறது. ஹோம் வாசலில் அந்த வண்டி நிற்கிறது.
“ஏன் இப்படி போறார்கள்” திட்டினேன்.
இப்போ ஹோம் வாசலை நான் வர..
“திமுதிமுன்னு அந்த கார்ல இருந்து அஞ்சுபேர்… அருவாளோடு இறங்கிட்டே”
“என்ன தைரியம்டி உனக்குன்னு… ஒரு வெட்டு… என் கைய வெட்ட” இன்னொருத்தன், “எங்க முதலாளி கஷ்டப்பட்டு பார் கான்ட்ராக்ட ஊருக்குள்ள எடுத்தா.. நீ அதுக்கு ஈசியா கடைய மூட வைக்க கோர்டுக்கு போவன்னு.. கழுத்துல ஒரு வெட்டு”
“இன்னோம் உயிர் இருக்கு… உயிர் துடிக்கு… பார்டா… இன்னொரு வெட்ட போடு” இன்னொருவன் சொல்ல…
“உடனே பின்னாடி நின்ன ஒருத்தன் முதுகிலே ஒரு வெட்டு.. ஆளு காலி”
கிளம்புவோம். கார் வந்த வேகத்தில் பறந்தது.
எனது துடிதுடிப்பின் சப்தத்தைக் கேட்டு, என்னருகே வந்த என் குழந்தைகள், என்னைப்பார்த்து கதறி அழுதன.
ராஜா “அம்மா.. இப்படி செஞ்சிட்டாங்க இந்தப் பாவிகள்” எனக் கதற
சக்தி “டீச்சர் இன்னிக்கு வேணான்னு சொன்னனே.. கேக்கலையே என கண்ணீர் வடித்தான்.
என் துடிப்பு நிற்கப்போவது எனக்கு தெரியத்தொடங்கியது.
“ராஜா.. நம்ம பிள்ளைகளுக்கு இனி நீதான் எல்லாம்”
சக்தி, இந்த மதுவால எந்த தப்பும் செய்யாத உன் அப்பா-அம்மா மாதிரி, நானும் இன்று மேலேப் போகிறேன்.
“எம்பசங்களா நல்லாப் படிக்கணும்”
என் கண்கள் மூடத்தொடங்கும் முன், இந்த உலகத்தை ஒரு வினாடி பார்க்கிறது.
என்னருகே ஒரு குப்பைத் தொட்டியைப் பார்க்கிறேன். அதன் திண்டில் ஒரு மதுபாட்டில் கொஞ்சம் மதுவோடு இருந்தது. மதுவும் மதுபாட்டிலும் நிற்கிறது வாழ்கிறது. என் உயிர் நிற்கவில்லை. குப்பைத்தொட்டியின் மதுவாடையில் மேலே பறக்கிறது.
– கதைப் படிக்கலாம் – 42
இதையும் படியுங்கள் : புகைப்படம்




