– ரஞ்சித்
மதியம் 1 மணி இருக்கும். நல்ல பசி, வீட்டுக்குப் போய் சாப்பிடலாமென்று வந்தேன்.
உள்ளே நுழையும் முன் உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. இதுக்கு முன்னாடி எங்க வீட்டில் இந்த குரலைக் கேட்டதில்லை, அதனால் யாராக இருக்குமென ஒரு ஆர்வம்.
வெளியே நின்று நடப்பதைப் பார்க்க முடிவு செய்தேன்.
அப்பெண்ணின் முகம் தெரியவில்லை . ஒரு 18-20 வயதிருக்கும். ரொம்ப துரு துறுன்னு ஓடிட்டு இருந்தா. எனக்கு அவளைப் பார்த்தே ஆகணும்னு ரொம்ப ஆசை!! ஆனா உள்ள போய் எதையும் கலைக்கவும் விருப்பமில்ல. கொஞ்ச நேரம் காத்திருந்து ஜன்னல் பக்கமா போய் அவள் முகத்தைப் பார்த்தேன்.
“இந்த முகத்தை நான் எங்கேயோ பார்த்த ஞாபகம் !!! எங்கே எப்போது பார்த்தேன், புரியவில்லை… ஏதோ ஃபோட்டோ-ல பாத்திருக்கேன், ஆமா எந்த ஃபோட்டோ, ஆங் கல்யாண ஃபோட்டோ, எங்க அம்மா அப்பா கல்யாண ஃபோட்டோ, எங்க அப்பா பக்கத்துல, அப்ப இது என் அம்மா!!! ஆமா, என் அம்மா தான் இவ, என் அம்மா 20 வயசுல. என்ன நடக்குது இங்க? எப்படி என் அம்மாவை இப்படி பார்க்கிறேன்? ரொம்ப குழப்பம்” என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்னு நினைச்சேன்.
என் அம்மா 20 வயசுல, இன்னும் ரொம்ப அழகா இருக்கா.. என் அம்மாவா இது? இவ்ளோ சந்தோசமா இருக்கா? ஒரு இடத்துல நிக்கல அவ. அவளுக்கு என் தாத்தா, பாட்டி ரொம்ப செல்லம் போல. அவ என்ன பண்ணாலும் சிரிக்கிறாங்க.
என்னையும் என் அப்பாவையும் பத்தி எப்பவுமே கவலைப்படுற என் அம்மாவைதான் நான் பார்த்ததுண்டு. இங்கே கவலையே இல்லாமல்,ரொம்ப உற்சாகமா அவளைப் பார்க்கும்போது “சந்தோஷமா” இருக்கு.
தனக்குன்னு ஏதும் வேணும்னு கேட்காத என் அம்மாவைதான் பாத்திருக்கேன். இங்க தனக்கு இது கண்டிப்பா வேணும்னு, என் தாத்தா கிட்ட அடம் பிடிக்கிற அவளைப் பார்க்கும்போது “ஆச்சரியமா” இருக்கு.
என் அம்மாவோட இந்த ரூபம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எத்தனைப் பேருக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கும்? என்ன இப்போ பாத்தா எப்படி ரியாக்ட் பண்ணுவா. உள்ள போலாமானு யோசிச்சேன்.
அப்போ என் தாத்தா ஒரு ஃபோட்டோ கொண்டு வராரு . என் அம்மா கிட்ட கொடுக்கிறாரு. அதைப் பார்த்ததும் என் அம்மா முகத்தில் ஒரு வெட்கம். ஃபோட்டோவ கொடுத்திட்டு வேகமா போயிட்டாரு என் தாத்தா. என் பாட்டிக்கிட்ட அவளிடம் பேசச் சொல்கிறார். நான் அந்த ஃபோட்டோவ பாத்தேன். அதுல என் அப்பா. எனக்குப் புரிஞ்சு போச்சு என் அம்மாவோட வெட்கத்துக்கான காரணம். என் அம்மா என்ன தான் சொல்றான்னு பார்க்கிறேன்.
அவளுக்கு என் அப்பாவைப் பிடித்துப் போனது!! அவளும் அவ அம்மாவும் ரொம்ப மும்முரமா சந்தோஷமா பேசிட்டு இருக்காங்க. என் பாட்டி சொல்றா “என்னதான் குடும்பம் பிள்ளைன்னு வந்தாலும்உனக்கு உன் புருஷன் தான் முக்கியம், நாளைக்கு உன் பிள்ளைகள் வளர்ந்தாலும் உன் புருஷன் தான் உன் கூட எப்பவும் இருப்பான், புரிஞ்சு நடந்துக்கடி”
என் அம்மா “அப்படிலாம் இல்ல, எனக்கு என் பையன் இருப்பான் எங்க ரெண்டு பேர் கூட எப்பவும் இருப்பான், என்னை நல்லாப் பாத்துக்குவான்”
என் பாட்டி “அப்படி எல்லாம் நினைக்காதடி, பசங்கள நம்ப முடியாது. உன் அண்ணன பாரு, கூரா இருந்துக்கோ “
என் அம்மா “அது உன் வளர்ப்பு, அதான் அப்படி. என் பையன் அப்படி எல்லாம் இருக்க மாட்டான்”ன்னு சொல்லிட்டே சட்டுன்னு திரும்பி என்னைப் பார்த்து “என்ன விட்டிட மாட்டியே”ன்னு கேட்டா.
எனக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்ளோ நேரம் சந்தோஷமா பார்த்திட்டு இருந்தேன். இப்படி அவ கேக்கவும் பயங்கர நடுக்கம். நான் இங்க இருந்தது தெரியுமா அவளுக்கு? நான் யோசிக்கும்போதே எழுந்து பேசாம போகிறாள்.
நான் “அம்மா”ன்னு கூப்பிடுறேன், திரும்பிப் பாக்கல. திடிர்னு சினிமால வர மாதிரி என் வீடு மாற ஆரம்பிக்குது… என் தாத்தா பாட்டிய காணும். என் அம்மா மெதுவா நடந்துப் போறா, “இல்ல இப்ப இவ என் அம்மா இல்ல. அவ முகம் மாறுது, தோல் எல்லாம் சுருங்குது, முடியாதக் காரணத்தால் மெதுவாக நடக்கிறாள்”
எனக்குப் இப்போ ரொம்ப அழுகை வருது… என் அம்மாவை இப்படிப் பார்க்க பிடிக்கவில்லை… இதோ வயதான என் அம்மா என் முன்னால் இப்போ!! நான் “அம்மா அம்மா”ன்னு கூப்பிடுறேன், அவ பாக்கவே இல்ல!
என்ன நடக்குது இங்க, ஒன்னும் புரியல எனக்கு. என் வீடு வேற மாதிரி ஆயிடுச்சு இப்போ. என் அம்மா தட்டு ஒன்ன கைல எடுத்திட்டு நடந்து போறா. “ஏம்மா இப்படி போறீங்க, என் கூட வாம்மா”ன்னு கூப்பிடுறேன், அவ கேக்கல.
இப்ப அவ பக்கத்துல நிறைய அவள் வயதுடைய அம்மாக்கள், யாரோட முகத்துலையும் என் அம்மாவோட முகத்துலையும் சந்தோஷம் இல்ல. எனக்கு அங்க இருக்க பிடிக்கல, என் அம்மாவை எப்படியாவது இங்க இருந்துக் கூட்டிட்டு போயிடணும்னு, உள்ளே நுழையப் போனேன், கதவு தானாக சாத்திக்கொண்டது. எனக்கு கோவம் அழுகை ரெண்டும் சேர்ந்து வருது.
இது எந்த இடம், ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு பார்க்கும்போது அந்தப் பெயர்ப்பலகை தெரிகிறது…
“அன்னை முதியோர் இல்லம்”
எனக்கு மூச்சு முட்டுது, மயங்கி விழுறேன்.
எழுந்துப் பார்த்தால், அதிகாலை 4 மணி. உடம்பெல்லாம் வேர்த்திருக்கு. எல்லாம் கனவா? வேகமா எழுந்து பக்கத்துக்கு ரூமிற்க்குப் போகிறேன், அங்க என் அம்மா தூங்கிட்டு இருக்கா. அவளருகில் பெட்டியில் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது… ஒரு ரசீது… அது என் அம்மாவின் பெயரில் “அன்னை முதியோர் இல்லம்” தலைப்பிட்ட 20000 ரூபாய்க்கான ரசீது.
என் அம்மாவை நாளை முதல் அந்த விடுதியில் விட இந்த ஏற்பாடு செய்திருந்தேன். என் அம்மா நிம்மதி இல்லாத ஒரு உறக்கத்தில் இருக்கிறாள் என புரியவந்தது. அவளைப் பார்த்ததும் என்னை அடக்க முடியாமல் அழுகிறேன்…
அந்த ரசீதை கிழித்து எரிகிறேன்…
“என் அம்மா எங்கேயும் போகப் போறது இல்லை”ன்னு முடிவு செய்தேன். மனசு ரொம்ப லேசான மாதிரி இருந்துச்சு. எவ்ளோ பெரிய தப்பு பண்ண இருந்தேன் நான்!! அவளருகில் அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன், இப்போ அவள் முகத்தில் இருந்தச் சுருக்கங்கள் எல்லாம் மறைந்து, அந்த 20 வயது முகம் எனக்குத் தெரிந்தது…
என்னைப் பார்த்து நிம்மதியாக… சந்தோஷமாக… புன்னகை உதிர்த்தது அந்த முகம்!!!
– கதைப் படிக்கலாம் – 56
இதையும் படியுங்கள் : குப்பைத்தீவு!!