– துடுப்பதி ரகுநாதன்
கிருஷ்ண மூர்த்தி, ஒரு பிரபல தமிழ் பத்திரிகையில், பல ஆண்டுகள் நிருபராக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்து, பல கட்சி ஆட்சிகளைப் பார்த்தவர். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை நேரில் பேட்டி எடுத்த அனுபவங்களும், நிறைய அவருக்கு உண்டு!… மக்களுக்குத் தெரியாத, பத்திரிகைகளில் வராத, பல தலைவர்களின் அந்தரங்கச் செய்திகளும் அவருக்குத் தெரியும்!
கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் ஒரு பேச்சுக்குத் தான்! பல விஷயங்களை மனசு விட்டு பேசவும் முடியாது! எழுதவும் முடியாது!
கிருஷ்ண மூர்த்திக்கும், அப்துல் கலாம் போல் இந்தியா பெரிய வல்லரசு நாடாக மாற வேண்டும் என்ற ஆசை உண்டு!… சாதாரண ஒய்வுப் பெற்ற ஒரு பத்திரிகை ஊழியனால், என்ன செய்து விட முடியும்?
இந்தக் கொரோனா காலத்தில் கூட டாஸ்மாக் கடைகள் திறந்து விட்டார்கள்!
இடுப்பு வேட்டி அவிழ்ந்து ரோட்டில் கிடக்கும் குடிகாரர்கள், பாதுகாப்பாக க்யூவில் நிற்க… அரை மைல் தூரம் இரவில் குச்சிகள் நட்டு, தொழிலாளிகள் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்!… கொரோனா தொற்று பொது மக்களுக்கு ஏற்படாமல், மக்கள் பாதுகாப்புக்கு இதுவரை பயன்பட்ட காவல் துறை, இனி குடிகாரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போய் விடுவார்கள்!… இது போன்ற தவறுகளுக்கு எல்லாம், அரசு இடம் கொடுக்கக் கூடாது என்ற தன் கருத்தை, ஒரு கட்டுரையாக எழுதி, அவர் வேலை பார்த்த பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்தால் கூட, அதை பிரசுரித்தால் அரசு விளம்பரங்கள் குறையலாம் என்று நினைத்து, அதை பிரசுரம் செய்ய மாட்டார்கள்!…
பொதுவாக, அரசியல் தலைவர்கள், பத்திரிகை முதலாளிகள் எல்லோருமே, நாட்டின் நலனை விட, தங்கள் நலனே பெரிதென்று நினைத்து வாழப் பழகி விட்டார்கள்!
நீதி மன்றங்கள் கூட அரசு இயற்றும் சட்டத்தைப் பார்த்து தான், தங்கள் தீர்ப்புகளைச் சொல்ல முடியும்!… இன்று ஆட்சிக்கு வந்து சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று, மக்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்!
வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று சொல்லி எந்த துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினாலும், போராட்டம் நடத்துபவர்களிடம் போய், இந்தப் போராட்டத்தால், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று நாம் சொன்னால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது… அதற்கு முதலில் ஒரு வழி சொல்லுங்கள் என்று தான் நம்மைக் கேட்பார்கள்!…
அப்படி போராடுபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல், அவர்களுக்கு ஒரு வழி சொல்லக் கூடிய பொறுப்பில் இருப்பவர்கள், இன்றைக்கு ஆட்சிக்கு வருபவர்கள்!
குடிப்பது தீமை என்று எல்லோருக்கும் தான் தெரியும்!… டாஸ்மாக் கடைகள் திறந்த அன்று ராத்திரியே, பலக் குடிசைகளில்… பெண்களின் கூந்தல் ஆண்களின் கைகளில் இருக்கும்!…
மறுநாளே அவங்கத் தாலி, கம்மல், மூக்குத்தி எல்லாம் அடகு கடைகளுக்குப் பயணப்பட்டு விடும்!… அவர்கள் குழந்தைகள் படிப்புக் கெட்டு, அவர்கள் எதிர்காலம் வீணாகி விடும்!…
இது அரசியல் தலைவர்களுக்குத் தெரியாதா என்ன?… ஆனால் அவர்களின் இன்றைய வாழ்வாதாரம், மது விற்பனையில் தான் இருக்கிறது!… அதை கெடுத்துக் கொள் என்று சொன்னால், கோபம் வராமல் என்ன செய்யும்?
இன்று மது உற்பத்திக்கும் சரி, விற்பனைக்கும் சரி, துணை நிற்பவர்கள் ஆட்சிக்கு வரும் கட்சி அரசியல்வாதிகளே!…
அவர்களுக்குப் பிடிக்காத இந்த விஷயத்தை பெரியவர்கள் யார் சொன்னாலும், அவர்கள் சிரித்துக் கொண்டே போய் விடுவார்கள்!… அவர்கள் படித்த நாகரிகம் தெரிந்தவர்கள்!…
ஆட்சியாளர்களிடம், மக்கள் தான் தாங்கள் ஒரு கோரிக்கை வைப்பதற்கு முன்பாக, நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்!
“கோடிக் கணக்கில் உங்கள் குடும்பத்திற்கு வரும் வருமானம், சொகுசு வாழ்க்கை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, குடிசையில் வாழும் ஏழை பஞ்சை, பராரிகளுக்காக சேவை செய்ய தெருவுக்கு வாங்க!”..என்று அரசியல்வாதிகளிடம் போய் நாம் கோரிக்கை வைப்பது உங்களுக்கே சரியாகப் படுகிறதா?..
இந்த மதுவால் ஒரு பைசா ஆதாயம் கூட இல்லாத, அதன் தீமைகளை மட்டுமே உணர்ந்த, அன்று வாழ்ந்த ராஜாஜி.. அல்லது காமராசர், கக்கன் போலவா… இன்றைய அரசியல்வாதிகள் வாழ்கிறார்கள்?…
இன்று மது உற்பத்தி செய்யும் அனைத்து தொழிற்சாலைகளும், நம் அரசியல் தலைவர்கள் உறவினர் பெயரிலோ, அல்லது அவர்கள் கட்சி பிரமுகர் பெயரிலோ… அல்லது அவர்களுடைய நண்பர்கள் பெயரிலோ தான் இருக்கும்!…
அப்படியே இல்லா விட்டால் கூட, மது தயாரிப்பு ஆலை நடத்துபவர்கள், அதை நடத்த அனுமதிக் கொடுத்து, தங்களை ஆதரிப்பதற்காக, மாதம் தவறாமல் அவர்கள் அந்த அரசியல் தலைவர்களுக்கு கோடிக் கணக்கில் கப்பம் கட்டுபவர்களாக இருப்பார்கள்!…
அதுமட்டுமல்ல, மதுக் கடைகளில் இன்று இரவு முழுக்க நடத்தப்படும், பல ஆயிரம் பார் உரிமையாளர்கள் எல்லாம் யார்?…………..
எல்லோரும் ஆளும் கட்சி பிரமுகர்களாகவும், ஆட்சியாளர்களின் வலது கையாக இருப்பவர்கள்!…. நாளைக்கு தேர்தல் வந்தால் பணத்தைக் கொட்டி கொடுப்பவர்கள்!…. அந்தப் பார்களை நம்பி வாழ்க்கை நடத்தும் எடுபிடிகள், நாளைக்கு அந்த அரசியல் கட்சிக்குப் பயன்படும் கட்சி அடியாள்களாக இருப்பார்கள்!….
அவர்கள் அத்தனை பேர்களின் மொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு பிரச்னையை, அவர்களிடமே கொண்டுப் போய் கொடுத்து, தீர்த்து வையுங்கள் என்று கோரிக்கை வைப்பது, புத்திசாலித்தனமாக கிருஷ்ண மூர்த்திக்குத் தெரியவில்லை!… இன்றைய அரசியல்வாதிகள் புத்தர்களும் அல்ல! காந்தியும் அல்ல!…
மது விற்பனை வருவாயால் தான், இன்று அரசாங்கமே நடக்கிறது என்று பலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்!
அது சரியான புள்ளி விபரம் அல்ல!… மாநில வருமானத்தில் மதுவால் கிடைக்கும் வருமானம் ஒரு குறைந்த சதவிகிதம் தான்!…
உண்மையில் ஆட்சிக்கு வரும் கட்சித் தலைவர்களுக்கும், அவர்களின் விசுவாசிகளுக்கும் தான், மது விற்பனை தொடர்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது!…
இதை எல்லாம் புரிந்துக் கொள்ளாமல், மது விலக்கு என்று யார் கரடியாக இந்த நாட்டில் கத்தினாலும், ஒரு பிரயோசனமும் இல்லை!
நாடு ரொம்பக் கெட்டுப் போச்சு! இனி பேசியோ… எழுதியோ… இனி நம் நாட்டைத் திருத்த முடியாது!
இன்றைய சமுதாய சீர்கேட்டிற்கு காரணம், இந்திய நாட்டைப் பிடித்த நான்கு பீடைகள்! இந்தக் காலத்தில், பிறந்த குழந்தைகள் வாலிப பருவத்திற்கு வருவதற்குள், இந்த நான்கு பீடைகளில் ஏதோ ஒரு பீடை அந்த இளைஞனைப் பிடித்து… அவனையும் நாசமாக்கி, சமுதாயத்தையும் நாசப்படுத்தி விடுகிறது!….
ரோட்டில் சுற்றும் வெறி நாய்களைப் போல், இந்த நான்கு பீடைகளில் எந்தப் பீடை பிடித்தாலும், அந்த இளைஞர்கள் அப்படித் தான் இருப்பார்கள்!.. வெறிப் பிடித்த இளைஞர்கள், அவர்களைப் போல் வெறி பிடித்த இளைஞர்களோடு சேர்ந்துக் கொண்டு தான் கடைசி வரை சுத்துவார்கள்! அவர்களைத் திருத்த முடியாது!
பாவம், அந்த ஓய்வு பெற்ற பத்திரிகை நிருபர் கிருஷ்ண மூர்த்தி, இப்படியெல்லாம் சிந்தித்து சிந்தித்தே… களைத்துப் போய்… வயசான காலத்தில், உடம்பையும் கெடுத்துக் கொள்கிறார்!
அன்று காலையில், வழக்கம் போல் இரண்டு தினசரி பத்திரிக்கைகள் வந்து விழுந்தன… எடுத்துப் பிரித்தார்… ஒவ்வொரு பத்திரிக்கைகளும், நான்கு பக்கங்களுக்கு அழகான போட்டோக்களை பிரசுரம் செய்திருந்தன.
அதற்கு முதல் நாள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்திய பிரதமர் அடிக்கல் நாட்டினார். அந்தச் செய்திகளும் அது தொடர்பான படங்களும் நிறைய இருந்தன.
பாரத பிரதமரும், கடவுள் நம்பிக்கையில் யாருக்கும் குறைந்தவர் அல்ல என்பதை விளக்குவதுப் போல், அவர் குழந்தை ராமர் சன்னதியில், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கும் ஒரு படம் இருந்தது!
அந்தப் படத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய படத்தில், ஶ்ரீராம பிரான், வில் அம்புகளோடு பார்க்க மிக அழகாகக் காட்சித் தந்தார்!
கிருஷ்ண மூர்த்தியும் சிறந்த பக்திமான் தான்! அவர் ஶ்ரீராமரையும், ராம பாணத்தையும் பற்றி நிறைய படித்திருக்கிறார்…. ராமர் பாணம் வில்லில் இருந்து புறப்பட்டால், அநியாயத்தை அழிக்காமல் அது திரும்பாதாம்! அந்த ஶ்ரீராமர் படத்தையும், வில் அம்பையும் தொட்டு வணங்கினார்…
அந்தப் படத்தை நெஞ்சிலேயே போட்டுக் கொண்டு, நாற்காலியில் ஶ்ரீராமரை நினைத்தவாறு லேசாக கண் அயர்ந்து விட்டார்!…..
திடீரென்று அந்த காலை நேரத்தில் ஒரு கனவு வந்தது! ஶ்ரீ ராம பிரான், வில் அம்போடு அவர் கனவில் வந்து, “ஏப்பா?….இந்த வயசான காலத்தில், எந்த நேரமும் உன்னைப் பற்றிக் கவனிக்காமல், இந்த நாட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாய்?…”
“ஐயா!…என்ன செய்யட்டும்?…நாட்டின் முன்னேற்றத்தைக் கவனிக்க வேண்டிய இந்திய அரசியல்வாதிகள் பலர், தங்களின் மூன்றாவது தலைமுறையினரை, எப்படி கோடீஸ்வரராக வாழ வைப்பது என்பதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!…”
“அப்படியானல் அவர்களின் இரண்டு தலைமுறையினர்?….”
“இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், ஆட்சிக்கு வந்த எல்லா அரசியல்வாதிகளும், தங்கள் இரண்டு தலைமுறையினர் கோடீஸ்வரராக வாழ்வதற்குத் தேவையான பணத்தை, ஏற்கனவே சேர்த்து வைத்து விட்டார்கள்!” என்றார்.
ஶ்ரீராம பிரானுக்கே சிரிப்பு வந்து விட்டது…. அவர் சிரிக்கும் பொழுது மிக மிக அழாக இருந்தது!…..
“அயோத்தி மக்களுக்கே கிடைக்காத வாய்ப்பு கிருஷ்ண மூர்த்திக்கு கிடைத்தது!…”
“நீ ரொம்ப வித்தியாசமான ஆளாய் இருக்கிறாய்!. உனக்கு என்ன வரம் வேண்டும்…..கேள்….தருகிறேன்!…”
“இந்தியா ரொம்பக் கெட்டுப் போய் கொண்டிருக்கிறது!.. இனி பேசியோ… எழுதியோ… இனி இந்த நாட்டைத் திருத்த முடியாது! ஏதாவது ஒரு கடுமையான சட்டம் போட்டுத் தான், இந்தியாவை உருப்பட செய்ய முடியும்!..”
“என்ன செய்தால் இந்த நாடு உருப்படும்?”
“எனக்குத் தெரிந்து இந்த நாட்டை பிடித்த நான்கு பீடைகள் இருக்கு!.. அவைகளை மட்டும் ஒழித்து விட்டால், உலகிலேயே இந்தியாவுக்கு நிகராக எந்த நாடும் இருக்க முடியாது!..”
“கொஞ்சம் விபரமாகச் சொன்னால் தானே, என் பக்கத்தில் இருக்கும் உங்க பிரதமரிடம் நான் சொல்ல முடியும்! …..”
“இந்தியாவைப் பிடித்த நான்கு பீடைகளுமே ரொம்ப மோசமானவைகள்!.. அதில் ஏதாவது ஒரு பீடை பிடித்தவர்கள், எங்கள் பிரதமரைச் சுற்றி நின்றுக் கொண்டு, அவரைச் செயல்படாமல் தடுத்து விடுவார்களோ என்ற பயம் தான், எனக்கு முதலில் வருகிறது!..”
“….தைரியமாகவும், விபரமாகவும் சொல்!…. நீ சொல்லும் அந்த நான்கு பீடைகளால், தான் இந்திய நாட்டின் முன்னேற்றம் தடைபடும் என்றால், அதை நான் தகர்த்து விட முயற்சி எடுக்கிறேன்!..”
“ஸ்வாமி!… இந்தியாவைப் பிடித்து நான்கு பீடைகள் 1. குடி வெறி…. 2. மத வெறி….. 3. ஜாதி வெறி…. 4. கட்சி வெறி ….
இந்தியா முன்னேற வேண்டுமானால், எங்கள் நாட்டில் வேரூன்றிக் கொண்டிருக்கும் இந்த நாலு வெறிகளையும் ஒழித்தால் போதும்!
அதில் முதல் வெறி! இடுப்பில் வேட்டிக் கூட இல்லாமல், தெருவில் கிடக்கும் குடிகாரர்களின் குடி வெறி!…
தன் பெற்ற மகளிடமே தவறாக நடந்த செய்தி எல்லாம் பத்திரிகையில் வந்திருக்கிறது!… குடியால் வரும் கேடு, இதை விட இனி மோசமாகப் போக முடியாது!
அடுத்து இந்த மத வெறி!…
ஒரு மதத்தைச் சேர்ந்தவன், மற்ற மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டு, எங்கேயாவது போய் பிழைத்துக் கொண்டிருப்பான். அவர்களைத் தேடிப் பிடித்து, மத வெறி கும்பல்கள், நடு ரோட்டிலேயே அவர்களைக் கசாப்பு கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டி வீசிப் விட்டுப் போகிறாங்க!…. இது போன்ற நிகழ்ச்சி எல்லா மாநிலத்திலும் நடக்கிறது!
அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் இந்த ஜாதி வெறி!….
ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை, அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று ஒதுக்கி வைத்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்து விடுவது!… அவர்கள் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தால், அந்த ஊரையே தீ வைத்துக் கொளுத்துவது….
இப்பொழுது கடைசியாகத் தோன்றியிருப்பது கட்சி வெறி!…
இந்தப் புதிய வெறி, மற்ற பழைய வெறிகளை விட ரொம்ப மோசமான வெறியாக இருக்கிறது!.. ஜாதியின் பெயரால்…. மதத்தின் பெயரால்…. மொழியின் பெயரால்…. இனத்தின் பெயரால்….. நினைத்தவன் எல்லாம் ஒரு கட்சியை ஆரம்பித்து, இளைய சமுதாயத்தையும், நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!…..
இந்திய நாட்டைப் பிடித்த இந்த நான்கு பீடைகளையும், நீங்க எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பது தான், இந்தக் கிழ பத்திரிகையாளனின் கோரிக்கை!..”
“இந்த வயசான காலத்தில், நீங்க உங்க உடம்பை பார்த்துக் கொள்ளுங்க!…… வயசான முதியவர்களை நான் நாட்டின் பொக்கிஷமாக நினைக்கிறவன்!… அவசியம் உங்கள் கோரிக்கையை, இங்குப் பக்கத்தில் இருக்கும் உங்கள் பிரதமரிடம் சொல்லி விட்டுப் போகிறேன்!… அவர் அவசியம் அவைகளைப் பரிசீலிப்பார்!….”
“இந்தாங்க காப்பி!.. காலையில் பேப்பர் படிக்கப் படிக்க, அப்படி என்ன தூக்கம்?..” என்று கிருஷ்ண மூர்த்தியை தட்டி எழுப்பினார் அவர் மனைவி…..
– கதைப் படிக்கலாம் – 17
இதையும் படியுங்கள் : மன்னிப்பாயா