– ச.அஜித்
அழகிய இளவேனிற் காலம் அது. பூக்கள் பூக்க தொடங்கியது, மரங்கள் துளிர்விட்டன. பூக்களை சுற்றி வண்ணப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த அழகிய வண்ணப்பூச்சிகளின் சிறகுகளை கையில் பட்டும் படாமலும், அதன் சிறகுகள் விரல்கள் இடையில் பட்டு உடையாமல் இருக்க மிகவும் கவனத்தோடு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தோம், நானும் என் சக நண்பனும்.
எங்குப் பார்த்தாலும் அழகிய பல வண்ண மலர்களும், புதிதாக துளிர்விட்ட மரங்களும் நிறைந்து இருந்த அந்த அழகிய கிராமத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இருந்தது.
அதுதான் எங்கள் பள்ளி. அங்குத்தான் நானும் என் சக நண்பர்களும், ஆறாம் வகுப்பு படித்து வந்தோம். அதுதான் அந்த ஆண்டின் தொடக்க நாள்.
அன்று எங்கள் பள்ளிக்குப் புதிதாக ஒரு மாணவி வந்துச் சேர்ந்தாள். அவள் பெயர் குழலி. அவள் சிறிது வசதி படைத்தப் பெண். அவளும், அவளோடு சில மாணவர்களும் மட்டும் எப்பொழுதும் தனித்தே அமர்ந்து இருப்பார்கள். என்றும் எங்களோடு சேர மாட்டார்கள். நாங்கள் பேசினாளும் அதற்கு அவர்கள் முகம் சுளித்துச் செல்வார்கள்.
ஆனால் குழலி மட்டும் சற்று வேறுபட்டவள். எங்களிடம் பேச முன்வருவாள். ஆனால் அவள் அப்பா எங்களிடம் பேசக் கூடாது என்று கண்டித்து சொல்லி விடுவார். அதனால் அவளும் எங்களிடம் பேச மாட்டாள்.
வழங்கம் போல் பள்ளி நடைபெற்றது. அன்று எங்களுக்கு புது புத்தகம் வழங்கப்பட்டது. புது புத்தகம் வாங்கிய ஆர்வத்தில், பக்கங்களை வேக வேகமாக திருப்பினேன். அதன் முதல் பக்கத்தில் சில வாசகங்கள் என் கண்ணில் பட்டது… “தீண்டாமை ஒரு பாவச்செயல்… தீண்டாமை ஓரு பெருங்குற்றம்… தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்” என்ற வாசகங்கள் எழுதி இருந்தது.
அதை உத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார். உடனே புத்தகத்தை மூடி விட்டேன். புத்தக பக்கங்களோடு அந்த மூன்று வரி வாசகங்களும் மறைந்துப் போனது. ஆசிரியர் வகுப்பு எடுக்கத் தொடங்கினார்.
சில நிமிடங்களில் வெளியில் இருந்து ஒரு குரல்… ஆசிரியை அழைத்து, இன்று கழிவறை சுத்தம் செய்யும் ஆட்கள் வரவில்லை என்றார். ஆசிரியர் உடனே சிறு கர்வ முகத்தோடு எங்களை நோக்கி கண்களை வீசினார். எங்களை அழைத்து, எங்கள் பள்ளியின் கழிவறையை முழுமையாக சுத்தம் செய்யச் சொன்னார்
ஏன் நாங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கும் தைரியமும் எங்களுக்கு இல்லை. ஆசிரியை எதிர்த்துக் கேள்விகள் கேட்டால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவார் என்ற பயம் எங்களுக்குள். எங்கள் வீடுகளில் நாங்கள் தான் முதன் முறையாக பள்ளிக்கு வந்து இருக்கிறோம். இவ்வளவு ஆண்டுகள் எங்களை சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள். நாங்கள் கல்வி கற்ற கூடாது என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
பயனற்ற ஓர் பெயர்களை கொண்ட சில மக்கள். அதனால் நானும் என் சக நண்பர்களும் ஆசிரியர் சொன்னதை கேட்டுக்கொண்டு, கழிவறையை சுத்தம் செய்யத் தொடங்கினோம்.
கழிவறையை சுத்தம் செய்துக்கொண்டே வகுப்பறையை எட்டிப் பார்த்தேன். மேல் சாதி என சொல்லும் சில மனித மிருகங்களின் குழந்தைகள், ஆணவத்தோடு எங்களை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பு சத்தத்தின் நடுவிலும், ஓரு முகம் மட்டும் வேதனையோடு எங்களை பார்த்துக் கொண்டிருந்தது.
அவள் பார்வையில் இந்தச் சாதி என்ற சாக்கடையை யார், எப்போது, இறங்கி சுத்தம் செய்வார்கள் என எனக்குச் சொல்வது போல் இருந்தது. அவள் குழலி என நான் உணர்ந்துக் கொண்டேன்.
நாங்கள் கழிவறை முழுவதும் சுத்தம் செய்து விட்டு வருமுன் வகுப்புகள் எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் வருவதைப் பார்த்துவிட்டு ஆசியர்கள், மாணவர்கள் எல்லாரும் சிரித்தார்கள். இது என்ன ஆனந்த சிரிப்பா… இல்லை சாதி என்னும் ஆணவ சிரிப்பா… என எங்களுக்குத் தெரியவில்லை.
பைகளை எடுக்க எங்கள் வகுப்பறைக்குச் சென்றோம். பைகளின் மேல் மூடப்பட்ட புத்தகம் அப்படியே இருந்தது. அதை எடுத்துப் பைக்குள் வைக்கும்போது, சில மணி நேரத்துக்கு முன் படித்த அந்த முதல் பக்க மூன்று வரி வாசங்கள் என் நினைவில் வந்தது. அது வெள்ளைக் காகிதத்தை நிரப்பமட்டும் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எனப் புரிந்துக் கொண்டேன்.
வகுப்பிற்க்குள் சில நாட்களும், வகுப்பிற்க்கு வெளியில் பல நாட்களும் என ஆண்டுகள் பல நகர்ந்தன. நல்ல மதிபெண்களோடு பள்ளிப் பருவத்தை முடித்துவிட்டு, கல்லூரி செல்வதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு ஓரு அம்மா தன் பையனை அடித்துக் கொண்டிருந்தார். ஏன் என தெரிந்துக் கொள்ள அருகில் சென்றோம். அப்போது அந்த அம்மா எங்கள் மீது சில பார்வையை வீசிவிட்டு, அந்தப் பையனை மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.
நம்பளை விட கீழ் சாதி மாணவர்கள் எல்லாம் நல்ல மதிபெண் எடுத்து இருக்காங்க. நீ மட்டும் ஏன் இவ்வளவு குறைவான மதிபெண் எடுக்கிறாய்… என எங்கள் முன் திட்டினார். அப்போது எனக்குப் புரிந்தது, அவர்கள் பையன் குறைவான மதிபெண் எடுத்தது.
அவர்கள் பிரச்சனைகள் இல்லை… தன்னைவிட தாழ்ந்த மக்களின் பிள்ளைகள் அதிக மதிபெண்கள் எடுத்து விட்டார்கள் என்பதே அவர்களின் மிருகக் குணங்கள்.
உடனே நானும், என் சக நண்பனும் அங்கு இருந்து கிளம்பி விட்டோம். நாங்கள் எங்கள் கல்லூரி கனவை பற்றி பேசத் தொடங்கினோம். அடுத்த நாள் இங்க நடந்த விசயத்தை பற்றி என் அப்பாவிடம் சொன்னேன்.
என் அப்பா அதற்கு அதைப் பற்றி கவலைப்படாதே அன்பு என்றார். நீ அனைவர் மீதும் அன்பு காட்ட வேண்டும். நாம் யாருக்கும் அடிமை இல்லை. நமக்கும் யாரும் அடிமை இல்லை என்றார். நம் அடிமை விளங்கை உடைக்க நீ நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறை கூறினார்.
இறுதியில் ஒன்று மட்டும் சொன்னார்… நீ கல்லூரி படிப்பை வெளி ஊர் சென்று படிக்க வேண்டும் என்று சொல்லி, அதைப் பற்றிய காரணம் ஏதும் கேட்க வேண்டாம் என முடிவாக சொன்னார்.
நானும் என் நண்பனும் வெளி ஊர் சென்று படிக்கத் தயார் ஆனோம். எங்கள் தாய் தந்தையை விட்டு முதல்முறை நாங்கள் வெளி ஊர் செல்கிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எங்கள் விடுதி அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். அன்று இரவு முழுவதும் நாளை கல்லூரி செல்லும் நினைவுகளோடு படுத்து உறங்கிவிட்டோம்.
விடியற்காலை விரைவிலே எழுந்துக் கல்லூரி கிளம்பி விட்டோம். நானும் என் நண்பனும் கல்லூரி செல்லும் வழியில் நடந்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பின்னால் ஒரு பெண் நடந்து வந்தாள். அவளை எங்கோப் பார்த்த ஞாபகம் இருக்கு எனக்குள். அவள் எங்களோடு படித்த குழலி தான் என்று உணர்ந்து கொண்டேன். ஏனோ என் கண்கள் சில நிமிடம் அவளைப் பார்க்க துடித்தது. அவளும் சில வினாடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டாள்.
அவளுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் பார்வை, ஜாதி என்னும் சிறை சாலையை உடைத்தெறிந்தது. அவள் என் மீது வீசிய பார்வை இரக்க பார்வையா.. இல்லை காதல் பார்வையா.. என எனக்குப் புரியவில்லை.
ஆனால் எனக்குள் சில மாற்றங்கள். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டே வகுப்பறைக்கு சென்று அமர்ந்தோம். சில நிமிடங்களில் வகுப்பறைக்கு ஆசிரியர் வந்தார். அவர் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார்
நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொண்டோம். இங்குப் புத்தகங்கள் மாறியது. அதன் முதல் பக்க வாசகங்களும் மாறியது.
ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற இரு ஜாதியை தவிர, வேறு எந்த சொல்லுக்கும் இங்கு இடம் இல்லை. ஆசிரியர் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு, இதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்றார்.
மாணவர்கள் அனைவரும் கேள்விக் கனைகளை தொடுத்தனர்.
இதுவரை ஆசிரியரிடம் பேசவே தயங்கிய எங்களுக்கு, ஆசிரியரை கேள்வி கேட்பது என்பது, எங்களுக்குப் புதுமையாக இருந்தது.
நாட்கள் பல நகர்ந்தன. குழலிக்கும், எனக்கும் காதல் மெல்ல மலர்ந்தது. இருவரும் இரு வரிகளில் இணைத்து இருக்கும் திருக்குறள் ஆனோம். பாரதி கண்ணம்மா கவிதைக்கு இணங்க, எங்கள் காதல் புனிதமானது. ஆனால் எங்கள் மீது ஜாதி என்ற கொடியும் பரவத் தொடங்கியது.
எங்கள் காதல் விஷயம் மெல்ல குழலியின் தந்தை காதுக்கு எட்டியது. அவர் பலமுறை வந்து என்னை எச்சரித்துச் சென்றார். ஆனால் என் காதலை எண்ணும் பொழுது, அதுப் பெரியதாகத் தெரியவில்லை. ஜாதி இல்லையடி பாப்பா என்ற கவிதையை பலமுறை படித்து இருக்கிறேன். ஆனால் அந்தக் கவிதை, பல மூட நம்பிக்கைக் கொண்ட மனிதர்களிடம் இன்றும் போய் சேரவில்லை.
குழலியின் அப்பா குழலியை மிரட்டினார். அவனை காதலிப்பதை விடவில்லை என்றாள், அவனை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். குழலி அதைக் கேட்டுவிட்டு மௌனம் ஆனாள். ஏதும் பேச அவளுக்கு தோன்றவில்லை. பேசியும் பயனில்லை என விட்டு விட்டாள்.
அடுத்த நாள் குழலியின் அப்பா சில ஆட்களோடு வந்து, என் வீட்டை உடைத்தும், என் அப்பாவை அடித்தும் விட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து உடையற்றுப் பிறந்தும், சாதி என்னும் போர்வை போத்தி கொண்டது.
இதன் காரணம் தானோ, என் அப்பா என்னை வெளியூர் சென்று படிக்கச் சொன்னார் எனப் புரிந்து கொண்டேன். சில நாட்கள் நானும், அவளும் பார்த்துக்கொள்ளவே இல்லை. நாட்கள் ஓடியது. குழலி ஒரு நாள் அவள் தோழி மூலம் எனக்கு ஓர் கடிதம் அனுப்பினாள்.
நாம் விரைவில் இந்த ஊரைவிட்டுச் சென்று விடலாம் என்று எழுதி இருந்தாள். இதை என் அப்பாவிடம் சொல்ல முனைந்தேன். ஆனால் அப்பா இதற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்று எனக்குத் தெரியும். என் அப்பாவிற்கு ஜாதி மீது நம்பிக்கை இல்லை. ஆனால் அதன் பெயரில் தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அதனால் இதைச் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன்.
என்னை நம்பி வரும் பெண்ணை எப்படி கைவிடுவது என என் மனம் என்னைக் கேள்வி எழுப்பியது. மூன்று நாட்கள் ஓடியது. குழலி தன் வீட்ட விட்டு வெளியே வந்து விட்டாள். நானும், அவளும் வெகுதூரம் எங்கள் ஊரைவிட்டு மட்டுமே சென்றுவிட்டோம். ஆனால் எங்களோடு பிறக்காத சில மனிதர்கள் எங்களைப் பார்த்து விட்டார்கள்.
நாங்கள் விரைந்துச் சென்று விட்டோம். சில நாட்களில் திருமணம் செய்துக்கொண்டு, ஜாதி என்னும் கூண்டை விட்டு வெகு தொலைவில் பறந்தோம்.
ஆனால் ஜாதி என்ற கர்வம் கொண்ட சில கழுகுகள், எங்களை சில நாட்கள் கூட விட்டுவைக்கவில்லை. எங்களை கொத்தி தின்னத் தொடங்கியது.
ஓரு நாள் நானும், குழலியும் கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கிக்கொண்டு இருந்தோம். தீடிரென குழலியின் அப்பா அங்கு வந்தார். அவர் கண்களில் இன்றும் ஜாதி என்ற ஆவணம் தெரிந்தது. அவரோடு வந்த சில ஆட்கள் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.
குழலியின் கூந்தலைப் பிடித்துக் கீழே தள்ளினார். அவள் கால் தடுமாறி அங்கு இருந்த வேல் மீது போய் விழுந்தாள். சில நிமிடம் அவள் அசையவே இல்லை. அங்கு இருந்த வேல் அவளின் உடலை பதம்பார்த்து விட்டது. அவள் இறந்து விட்டாள்.
குழலியின் மரணத்திற்கு நான் தான் காரணமென, என் கை கால் வெட்டி அங்கு இருந்த ஆற்றில் என்னை தூக்கியெறிந்து விட்டார்கள். அங்கு இருந்தக் கடவுளை பிரார்த்ததனை செய்தும் எங்களுக்கு பயனில்லை.
சில மணி நேரத்தில் என் தந்தைக்கு அந்த விஷயம் தெரிகிறது. தலை வெட்டப்பட்ட கோழி போல என்னை தேடி அலைந்துக்கொண்டு இருந்தார். உயிருள்ள பிணமாய் ஆற்றில் மிதந்துக் கொண்டு இருந்த என்னை கண்டெடுத்து, கரைசேர்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சில நாட்கள் கழித்துப் படுக்கையில் இருந்து எழுந்து, நடந்த சிலவற்றை நினைவு கூர்ந்துப் பார்த்தேன். எல்லாம் கனவு போல் முடிந்து விட்டது.
என்னவள் ஆசை முகம் மறந்து போச்சே. ஆனால் அவள் நினைவுகள் மட்டும் என் மனதில் ஓடி கொண்டே இருந்தது. குழலியைப் புதைத்த இடத்தில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. ஆண்டுகள் பல நகர்ந்தன.
குழலியின் அப்பா ஓர் பள்ளி ஆசிரியர். புத்தகத்தின் முதல் பக்கத்தை பலமுறை திருப்பியும், அவருக்கு அந்த மூன்று வரி வாசகம் புரியாமல் போயிற்று என்று நினைத்துக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தேன்.
குழலியின் அப்பா, மகள் இறந்த சோகத்தில் குடிக்கத் தொடக்கி விட்டார். அவரிடம் இருந்த எல்லா செல்வமும் கரைந்துவிட்டது. அவரோடு இருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது அவன் பணம் அற்றவன். அவனை அவன் ஜாதிக்காரன் கூட மதிப்பது இல்லை. அவர்கள் அடுத்து இவனைப் போல் அடி ஆளை தேட சென்றுவிட்டார்கள். அவன் கஷ்டப்படும் தருவாயில் அவன் ஜாதிக்காரர்கள் யாரும் வரவில்லை.
சிலர் மட்டும் நல்லா இருப்பதற்காக உருவாக்கப்பட்டதே சாதி என்ற கூண்டு, அது என்றும் சாமானிய மக்களுக்கு உதவப்போவது இல்லை. அது என்றும் மக்களை பிரித்து மட்டுமே வைக்கும். வரலாற்றில் பொறிக்கப்பட்ட சில வார்த்தைகள் பொய் என்றால், அது ஏதும் பயனற்ற சாதி என்ற வார்த்தை மட்டுமே என்பதை என்னிடம் என் அப்பா தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
இரண்டு ஆண்டுகள் மருந்துவமனையில் இருந்துவிட்டு, இன்று தான் நானும், என் அப்பாவும் வீடு திரும்புகிறோம். என்னை இரு சக்கர வண்டியில் அமரவைத்து என் அப்பா அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்.
எங்க ஊர் எல்லையை அடைந்தோம். அங்கு வெகு தொலைவில், குழலியின் அப்பா போதை தலைக்கு ஏறிய நிலையில், அவர்முன் லாரி ஒன்று வருவதுக் கூட தெரியாமல், ரோட்டில் நடந்து வந்துக் கொண்டிருந்தார். எதிரில் வந்த லாரி அவரை மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அவர் ரோட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்தார். அவரை கடந்துச் செல்லும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
சில பெண்கள் அவரை பார்த்து, இவன் தன் மகளையே கொலை செய்தவன். இவனுக்கு இதுதான் நிலையென… விதியின் மீதி பழியை போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். என்அருகில் இருந்த என் அப்பா, உடனே சென்று குழலியின் அப்பாவை தூக்க முயன்றார்.
இப்போது எந்தக் கையும் என் அப்பாவை தடுக்கவில்லை. தீண்டு என்றும் குழலியின் அப்பா தடுக்கவில்லை.
குழலியின் அப்பாவை தூக்கி இரு சக்கர வண்டியில் அமர்ந்திருந்த என் மீது அவரை அமர்த்தி, வேக வேகமாய் வண்டியை தள்ளினார் அப்பா. அவரின் ரத்தம் என் மீது சிந்திக்கொண்டே சென்றது. சிந்திய ரத்தத்தில், அவர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியவில்லை.
என் சிந்தனை எல்லாம், இவரும் சக மனிதன் தான். இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருந்தது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று அவரை சேர்த்து விட்டோம்.
மருத்துவர்கள் உடனே என் அப்பாவை அழைத்து, குழலியின் அப்பாவிற்க்கு உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டும் என்றார்.
என் அப்பா எல்லா இடங்களும் அலைந்தும் ரத்தம் கிடைக்கவில்லை.
இறுதியில் என் ரத்தத்தை சோதித்தப் போது, எனக்கும் அவருக்கும் ஒரே ரத்த வகை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள். நான் உடனே ரத்தம் கொடுக்க அனுமதிக்கப்பட்டேன். என் உடலில் இருந்து ரத்தம் அவர் உடலுக்கு சென்றது. எந்த ஜாதி, மத வேறுபாடுமின்றி.
அவரும் நலம் பெற்று விட்டார். இப்போது அவருக்கும், எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருக்குள் ஓடுவது பொதுவான ரத்தம் மட்டுமே. எந்த ஜாதி ரத்தமும் இல்லை. இன்று காலங்கள் மாறிவிட்டது.
வெறும் வெள்ளைக் காகிதத்தை நிரப்ப எந்த வாசகமும் அச்சடிக்க தேவையில்லை. ஏனென்றால் இன்று மாணவர்கள் கைகளில் இருந்து புத்தகங்களை பறித்துவிட்டு, கைகளுக்கு டிஜிட்டல் என்று சில பொருட்களை கொடுத்துவிட்டோம்.
இன்றும் மாணவர்களை புத்தகத்தின் முதல்பக்க வாசகங்களை படிக்கவிடாமல் செய்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டே, மருத்துவமனையை விட்டு வெளியேறினேன்.
– கதைப் படிக்கலாம் – 105
இதையும் படியுங்கள் : முதல் மரியாதை