– பா. சாய்ரா பானு
நள்ளிரவு… செல்ஃபோன் சிணுங்கியது. தூக்கக் கலக்கத்தோடு ஃபோனை எடுத்துப் பார்த்தேன். ‘ரோசி’ என்று காட்டியது. கண்களை விரித்து மீண்டும் உற்றுப் பார்த்தேன். ஆம் ரோசியே தான்! போர்வையை உதறித் தூக்கி எறிந்துவிட்டு, ஃபோனையே பார்த்தேன். அது துடித்து அடங்கி விட்டிருந்தது. எனக்குள் ஒரு அதிர்வை உணர முடிந்தது…
‘என்ன?’ அக்காவின் குரல்… தொலைக்காட்சிப் பெட்டியின் வெளிச்சத்தில், அவள் முகம் மட்டும் தெளிவாக பார்க்க முடிந்தது. நல்ல வேளையாக, என் முகத்தை என்னால் காண முடியவில்லை… உம்ம்… என்றேன்.. ‘யார்?’ என்பது போல் அவள் புருவத்தை உயர்த்தி கேட்டதை காணமுடிந்தது.
‘சொல்லலாமா? வேண்டாமா? எப்படி சொல்வேன்? அவள்தான் என்று!’… “கல்லூரி நாட்களில் என் அறையில் தங்கியிருந்தவள், ஆனாலும் அதிகம் பரிச்சயம் இல்லாதவள்.., அவள் இறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது”…
அங்குமிங்குமாக கண்கள் அலைந்தன. என் இருதயம் மேலும் தட்டுத்தடுமாறியது. வியர்வையோ, எனக்கு தெரியாமலேயே என்னை ஈரமாக்கும் முயற்சியில் வெற்றிக் கண்டிருந்தது..
‘இன்னும் தூங்காம என்ன பண்றீங்க?’ என் தாயின் குரல் எங்கிருந்தோ கேட்டது… சற்று நிதானத்திற்கு வந்தேன். செல்ஃபோனையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.. ‘பயமாக இருந்தது’… யாரோ முகத்தில் அடித்தாற்போல் இருக்க, திடுக்கிட்டேன்.
மீண்டும் செல்ஃபோன் அலறியது. அதே பெயர்! ஆம்! மனம் எதை எதையோ யோசித்துக் கொண்டே இருந்த வேளையிலேயே, என் மீது ஏதோ கருப்பாக நிழல்போல் படுவதை உணர்ந்தேன்! முதுகுக்குப் பின்னால் பாரமாக இருப்பது போன்ற உணர்வு!
மெதுவாக என் சகோதரி அமர்ந்திருந்த நாற்காலியை பார்த்தேன். ‘அது இப்போது காலியாக இருந்தது! மீண்டும் பார்க்கப் பயம்! போர்வையை இழுத்து போர்த்திக் கொள்ளவேண்டும்… எனினும் அசைந்துதான் ஆக வேண்டும்… தைரியமானவள் போல் காட்டிக்கொள்ள திரும்பினேன்.
‘ச்ச்ச்சீசீசீ போடி! எருமமாடே! சனியனே!’ என்று திட்டிவிட்டு என் சகோதரியை முறைத்தேன். ‘முதுகுக்கு பின்னாடி வந்து இப்படித்தான் நிப்பியா? யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேனா?’ என்றேன்.
‘ஆமா! நான் கேட்டேன் நீ சொல்லல!’ என்றாள் கூலாக..
அவ்வளவு ஆத்திரமும், கை நடுக்கமாக மட்டுமே வெளிப்பட்டது எனக்கு! இந்தா, ‘இந்த ஃபோனை டேபிள்ள வை’, என்றேன்.
செல்ஃபோனை கையில் வாங்கியவள், யாருடைய அழைப்பு என்று தேடிக்கொண்டே, ‘யாரு?’ என்று கேட்டாள்.
‘தெரிஞ்சா செத்துருவ. போடி, போய் தூங்கு’, என்றேன்.
‘எதுக்கு போடிங்குற?’… என்றாள்.
‘இப்போ உனக்கு அவ்வளவு தான் மரியாதை போ’ என்று சொல்லிவிட்டு படுக்கையில், சாய்ந்தேன். தூக்கமே வரவில்லை. என் தாயாரின் அருகில் சென்றேன். அவர் நன்கு உறங்கிக்கொண்டிருக்க, தலையணையை முகத்தில் அழுத்தி பிடித்தவாறு அருகிலேயே உறங்கிப் போயிருந்தேன், நான்! எப்போது என எனக்கே தெரியவில்லை!
காலை கண்விழித்தப் போது திக்கென்று இருந்தது. “அந்த அழைப்பு என்ன ஆயிற்று?”… எழுந்து திடுதிடுமென்று ஓடி மொபைலை எடுத்துப் பார்த்தேன்! “ஆம்! அவளுடைய அழைப்பேதான்!” எனில், நான் கேள்விப்பட்டது பொய்யோ!! எண்ணங்கள் அலை பாய்ந்தன!
பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணம் அல்ல என்னுடையது… அதனால் ரோசி என்னுடன், பேசுவதை தவிர்த்துக் கொண்டாள்…. சில நாட்களுக்கு முன்பு சந்தித்த எனது கல்லூரி தோழிதான், “ரோசி இறந்துப்போனதாக கூறினாள்”..
‘என்ன சொல்றே?, ‘ஆமாம்பா,’ அதை ஏன் கேக்குற.. அந்தப் பிள்ளை துணி துவைப்பதற்காக குளத்துக்குப் போய் இருக்கா. கூட தம்பியும் போய் இருக்கான். அவன் சின்ன பையன். குளத்துக்குப் போன ஆளுகள ரொம்ப நேரமா காணோமே என்று அவங்க வீட்ல தேடிக்கிட்டு, குளத்துக்குப் போய் இருக்காங்க. துணி மட்டும்தான் கல்லு மேல இருந்து இருக்கு.
கல்யாண பொண்ணாச்சே… இந்தப் பிள்ளை எங்கே போச்சுனு, ஆளுக்கு ஒரு பக்கமாக தேடிக்கிட்டு போயிருக்காங்க,.. கூட போன இந்த பையன எங்கன்னு தேடிப்பிடித்து கேட்டா, அந்த பய ஒண்ணுமே சொல்லாம, விக்கி விக்கி பயந்து நிக்கறதும், தண்ணியை மொண்டு மொண்டு குடிக்கிறதுமா இருந்திருக்கிறான்.
கதறிக் கத்திக்குன்னு குளத்தில் ஆளுக்கொரு மூலையில தேடிப்பார்த்தால் உள்ள சிக்கி இருந்த புள்ளையை தூக்கிட்டு வந்து போட்டாங்களாம், உயிரில்லாம… என்று அவள் சொல்லி முடிக்க இடி இறங்கியதுபோல் இருந்தது.
‘யாருடி நைட்டு அந்த நேரத்துல கால் பண்ணது’ என்றாள், மீண்டும் சகோதரி.
அன்னைக்கு சொன்னேன்ல குளத்தில செத்துப் போச்சுனு, நான் முடிப்பதற்குள், ‘யாரு ரோசியா?’ என்றாள்.
ஆமாம்… அவள் முகத்தைப் பார்க்க, என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பெரும் அமைதி. கால் செய்துவிடலாம் என்று எண்ணி டயல் செய்தேன். ‘ரிங் போய்க்கொண்டே இருந்தது’… எடுத்து விட்டார்கள்…
‘ஹலோ’ அந்தப் பக்கம் குரல் கேட்டது!
‘நல்லா இருக்கியா..மா?’
‘நல்லா இருக்கேன்’, ஆன்ட்டி..
நான் தான் ஃபோன் பண்ணேன். ‘என் பொண்ணு ஃபோன்ல நைட்டு, ரிமைண்டர் அடிச்சது ம்மா..’, “பிறந்தநாள் பானுவுக்கு”-னு.. அதான்டா உனக்கு போன் பண்ணேன்… ‘உனக்கு இன்னிக்கி பிறந்தநாளா.. மா?’
இதைக் கேட்கும்போதே அவரது குரல் உடைந்திருந்தது. அவரே தொடர்ந்து, பேசிக்கொண்டு இருந்தார்… “என்ன நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியலம்மா”… அவரது அழுகுரல் ஓங்க…’ ஸ்தம்பித்து நின்றுக் கொண்டிருந்தேன், நான்’…
“என் மனம் எதையோ கோடிட்டுக் காட்டியது… அது என் கதையின் தலைப்பாக இருக்கக்கூடும்!!”…
– கதைப் படிக்கலாம் – 101
இதையும் படியுங்கள் : தடை செய்யப்பட்ட பகுதி (எதிர்காலம்)