– எம். ஜி. கன்னியப்பன்
பொன்னியம்மாள் ஒருநாளும் இப்படி நெடுங்கெடயாய் விழுந்து கிடந்தவரில்லை. காலை 4 மணிக்கே அவரது உலகம் விடிந்துவிடும். முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளித்து, தகரப் பெட்டியில், நூல் புடவை ஒன்றை பூச்சுருண்டை வாசனையோடு கட்டிக்கொண்டு பரபரப்பாகிவிடுவார். 60 வயதில் அத்தனை சுறுசுறுப்பு… வாசலைக் கூட்டி, சாணம் கரைத்த நீர் தெளித்து, சின்னக் கோலம் போட்டாரென்றால்… வாசலுக்கு புது புத்துணர்வு வந்துவிடும். ‘வாடக வூடுன்னாலும், சுத்த பத்தமா வெச்சிகிட்டா நமக்குத்தான நல்லது’ என்பார்.
கயித்துக் கட்டிலில் உறங்கும் கணவர் காளிமுத்துவை, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விட்டுவிட்டு, கருப்பட்டி கலந்த கொத்தமல்லி காபி வைத்து, இரண்டு கிளாஸ்களில் பங்கிட்டு, தனக்கொன்றும், கணவருக்கு ஒன்றுமாக எடுத்துவந்து ‘முத்தையா… முத்தையா..’ என அசக்கி எழுப்பி உட்கார வைத்து கிளாஸைக் கொடுப்பார். கிளாஸின் சூடு தாங்காமல், சேலையை சேர்த்துப் பிடித்துக் கொண்டு ஆவி பறக்க ஊதி குடித்து முடிப்பார். பின், மளிகை சாமான்களுக்குத் தேவையான பணம், பைகளை எடுத்துக்கொண்டு, இருவரும் வெளியே வந்து கதவை அடித்து சாத்துவார். அப்படி அடித்து சாத்தினால்தான் ‘கொண்டி’ போடும் அளவுக்கு வந்து நிற்கும். சரிபண்ண வேண்டும் என்று நினைப்பதோடு சரி. இன்று வரை அதற்கு ஒரு வழி பிறக்கவில்லை.
காளிமுத்து தனது பழைய சைக்கிளை துடைத்து பெடல், சக்கர பால்ரஸ், பிரேக் கட்டைக்கு எண்ணெய் விட்டு, தயார் நிலையில் வைத்திருப்பார். அத்தோடு ‘பென் டிரைவ்’ செருகி பாடல் கேட்கும் ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ அளவுக்கு, ஒரு ‘ஸ்பீக்கர் பாக்ஸ்’ இருக்கும். அவ்வப்போது வயரின் ‘லூஸ்’ கனெக்ஷனில் பாடல் ஒலிக்காத தருணங்களில்ம் அதன் தலையில் லாவகமாக ஒரு தட்டு தட்டினால் மீண்டும் உயிர்ப்பித்து பாடத் துவங்கும். எட்டித் தட்டுவதற்கு வசதியாக, சைக்கிளின் முகப்புக் கூடையில் நிறுத்தி வைத்திருப்பார்.
பொன்னியம்மாள் சைக்கிள் கேரியரில் ஏறி உட்கார்ந்ததும், ‘பென் டிரைவ்-ஐ’ போட்டு பாட விட்டாரென்றால், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் தேவையான காய்கறிகள் வாங்கிக்கொண்டு, வீடு சேரும்வரை, எம்.ஜி.ஆர். பாடல்களாய் ஒலிக்கும். எம்.ஜி.ஆர். என்றால் காளிமுத்துக்கு அவ்வளவு பிரியம்.
டவுனுக்கு சென்று, கிட்டதட்ட 500 பாடல்களுக்கு மேல் பதிவு செய்து வந்திருக்கிறார். நாள் முழுக்க கேட்டுக் கேட்டு ரசிப்பது, அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ‘இப்ப இருக்கிற ‘அஜித், விஜய், தனுஷ், சூர்யா பாட்டெல்லாம் கேக்க மாட்டியா பெருசு…?’ கிண்டலடிக்கும் இளசுகளிடம், ‘தலைவர் பாட்டைக் கேட்டுப் பாருய்யா, அறிவு வளரும், மனுஷன மனுஷனா மதிக்கவும், நேர்மையா ஒழச்சி வாழவும் கத்துக் குடுத்துட்டு போயிருக்காரு’, தலைவர் பெருமைப் பேச ஆரம்பித்துவிடுவார்.
30 வருடங்களுக்கு முன்னால் பொன்னியும், காளிமுத்துவும் ரகசியமாய் காதல் கலப்பு மணம் புரிந்து, சொந்த ஊருக்குப் பயந்து நாடோடியாய் திரிந்தபோது, இந்த ஊர்தான் தஞ்சம் கொடுத்தது. குடிவந்தக் கொஞ்ச நாளில், சுற்றத்தார் தாயாய், பிள்ளையாய் பழகினார்கள். அந்த ஊரில், பொன்னியம்மாள் என்றால் யாருக்கும் தெரியாது. ‘வண்டிக்காரம்மா’ என்றால்தான் சட்டெனப் புரியும்.
கணவனும், மனைவியும் கொளுத்து வேலை, கிழங்கு பிஷின், பருத்தி மில் எனக் கிடைத்த ஏதேதோ கூலி வேலை செய்து, கிடைத்தப் பணத்தில் பொன்னியம்மாள் கொஞ்சம் சிக்கனம் பிடித்து சேமித்து வைத்தார். ‘கைல கொஞ்சம் காசு இருக்கு. ஏதாச்சு வியாபாரம் பண்ணலாமா…?’ என்றார். காளிமுத்துக்கு சரியெனப்படவே பெட்டிக்கடை, பிளாஸ்டிக் சாமான்கள், ஜாக்கெட் துணிகள் வாங்கி விற்பது என ஆலோசித்தப்போது, பொன்னிதான் அந்த யோசனையை சொன்னது.
‘ஊரு தெரு முணையில சாப்பாடுக் கடை போடலாம்ங்க. செய்யற தொழில்ல நிம்மதி வேணுமில்ல…? பசிக்கிற வயித்துக்கு சோறு போடுறது புண்ணியம்தான’ என்றார். காளிமுத்துவுக்கும் அது சரியாகப்பட்டது. ‘தள்ளு வண்டிக் கடைக்கு, இல்லாதப் பட்டவங்கதான் வருவாங்க. பசியாத்திட்டு, வயிறெரிஞ்சு காசு தர்ற மாதிரி வேலை இருக்கக்கூடாது.’ அவங்க கஷ்டத்த, நாம லாபமா சம்பாதிக்கக் கூடாது… என்பதுதான் காளிமுத்துவின் முதல் கண்டிஷனாக இருந்தது.
ஆக, இருவரின் மன சந்தோஷத்துடன் உருவானது ‘மீன் குழம்பு சாப்பாட்டுக் கடை.’ 10 ரூபாய்தான் சாப்பாடு. வயிறுதான் அளவு. பசி நிறையும்வரை தட்டில் சாதம் விழுந்துக் கொண்டே இருக்கும். ஒரு சிறு துண்டு மீனோடு குழம்பு, சம்பார், ரசம், கூட்டுப் பொரியல், அப்பளம் என மணக்க, மணக்க ருசியாக இருக்கும். அதைவிட, கணவனும் மனைவியும் வாஞ்சையோடு உபசரிக்கும் விதம்… ஜனங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்களால்தான், பொன்னியம்மாள் ‘வண்டிக்காரம்மா’ ஆனார்.
காலை 10 மணிக்கு, வண்டியை உணவு உபகரணங்களோடு வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு, சமையல் பணி தொடங்கும். அப்படியே ஸ்பீக்கர் பாக்ஸையும் ஒலிக்கச் செய்தால், இரவு வரை நிற்கிற வலி தெரியாமல், எம்.ஜி.ஆர்.தான் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
‘ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்..’
என்றப் பாடல்தான், சாப்பாடு ரெடி என்பதற்கான சமிக்கை. அடுத்த ஐந்தாவது நிமிடங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து சேர்ந்து விடுவார்கள். காலில் சுற்றிய சாக்குப் பைகளுடன், ரோடு வேலை செய்பவர்கள், கொத்தனார் – சித்தாள், சட்டையில் ஆங்காங்கே வண்ணக்கலவை தீட்டப்பட்ட பெயிண்டர்கள், அழுக்கடைந்த ஆட்டோ மெக்கானிக்குகள், தலையில் பனி போல் பஞ்சு படர்ந்தப்படி வரும், நூல் மில் பணியாளர்கள், என எல்லோரையும் மீன் குழம்பின் ருசி ஈர்த்திழுத்து ஒன்று சேர்த்துவிடும்..
‘அம்மா காசு இல்ல, நாளைக்குத் தரவா..?’ என்பவர்களிடம்… ‘நாளவர நாம பொறுத்திருக்கலாம், பசி பொறுத்திருக்குமா..? காசு இல்லாட்டி என்ன சாமி… சாப்புடு.’ பொன்னி, தட்டில் சாதத்தை அள்ளி அள்ளி வைத்து, குழம்பு ஊற்றி நீட்டுவார். இரவு வரவு செலவு கணக்குப் பார்க்க, ஒவ்வொரு நாட்கள் நூறோ ஐம்பதோ லாபம் கிடைக்கும். அதிக நாட்களில் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். சில நாட்களில், அசல் தொகையிலிருந்தே குறையும். பற்றாக்குறை தினங்களில் அரிசி, எண்ணெய், மசாலா பொருட்கள் வாங்கும் முருகேசன், மளிகைக் கடையில் கடன் சொல்ல வேண்டியிருக்கும்..
‘ஏம்பா.. காளிமுத்து. இந்தக் காலத்துல, மீன் குழம்போட 10 ரூபாய்க்கு எவன் சோறு போடறான். விலைய கொஞ்சம் ஏத்துப்பா… நீயும் நாலு காசு பாத்து, பொழைக்க வேணாமா..?’
‘இனிமே நாங்க சேத்து வெச்சி என்னத்துக்கு ஆகப்போவுது. புள்ளையா, குட்டியா. ஏதோ முடிஞ்ச மட்டும் லாபமோ நஷ்டமோ, நம்பி வர்ற நாலு பேருக்கு பசியாத்திட்டுப் போவோம். தம்பி….. உலகத்துலயே பெரிய நோயி, பசிதான். பசின்னு வர்றவனுக்கு, ஒரு வேளை சோறு போட்டுப்பாரு, அவன் கண்ணுக்கு நீ சாமியா தெரிவ’ என்றதிலிருந்து முருகேசன் வாய் திறப்பதில்லை.
வழக்கமாக கடைக்கு வரும் 7 வயது சிறுவன், அன்றும் பட்டிவைத்த அழுக்கு டிராயர் மட்டும் அணிந்தப்படி, கையில் சில்வர் தூக்குச் சட்டியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.
‘தாத்தா… எங்கம்மா தம்பிக்கு சோறு வாங்கிட்டு வரச் சொன்னாங்க.’
‘ஏண்டா ஊலமூக்கா… ஒங்கம்மா வூட்டுல சோறாக்கலையா..?’ என்றபடி தூக்குச் சட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார் காளிமுத்து.
‘எங்கப்பா, இருந்தக் காசு எல்லாத்துக்கும் குடிச்சிட்டு வந்து படுத்துக்கிட்டாறாம். சோறாக்க காசு தரலையாம்.’ என்றான் மழலை மாறாமல்…
‘கொப்பன் என்னைக்கு திருந்தப் போறான்னு தெரியல’ என திட்டிக்கொண்டே… தூக்கு வாளியை நிறைத்து மீன் குழம்பு, சாம்பார், ரசம் என… தனித் தனியே கட்டிக்கொடுத்தார். ‘ஆமா, சோத்துக்கு எங்கக் காசு..?’
‘எங்கம்மா, அப்பறமா தர்றாங்களாம்’ என்றான், தூக்குச் சட்டியைப் பார்த்தபடி.
‘தாத்தாவுக்கு காசு வேணாம். நீதான் நல்லா ஆட்டம் போடுவியே, ஒரு ஆட்டத்த போட்டுட்டு… தூக்க வாங்கிட்டுப் போ’ அலுமினியப் பாத்திரம் ஒன்றை கவிழ்த்துப்போட்டு தாளம்தட்ட, சிறுவன் இடுப்பையும், கை கால்களையும் வளைத்து நெளிந்து ஆட, உற்சாகமான காளிமுத்துவும், சிறுவனோடு சேர்ந்து ஆட்டம் போடத்தொடங்கினார். அவர் ஆடுவதைக் கண்டு, பொன்னிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தார். ‘கொழந்தைங்க மேல இவ்ளோ ஆசையா இருக்கிற இந்த மனுஷனுக்கு, ஒரு புள்ளைய பெத்து குடுக்க முடியாத பாவியாயிட்டனே’….. என மனுசுக்குள் ஓடியதை மறைத்துக்கொண்டு..
‘ஏங்க, புள்ளைக்கு காலு வலிக்கப்போவுது… வுடுங்க’ மூச்சு வாங்கி நின்ற சிறுவனிடம் தூக்குச் சட்டியைக் கொடுக்க, வாங்கிக் கொண்டு சிட்டுக் குருவியாய் பறந்தான். குடித்துவிட்டு வரும் எவனுக்கும், சோறு கொடுப்பதில்லை பொன்னியும், காளிமுத்துவும்… என்றோ தீர்மானித்ததுதான். அதையும் மீறி கையில் ‘க்வாட்டர்’ பாட்டிலுடன் தள்ளாடியபடி ‘யோவ் பெரிசு.. ஒரு கிளாசும், சொம்புல தண்ணியும் குடு. இந்தா சோத்துக்கு காசு எடுத்துக்க’ என ரூபாய் தாளை நீட்டுபவர்களிடம், ‘குடிச்சிட்டு கொடலு வெந்து சாகப் போறவனுக்கு எதுக்குடா சோறு..? தின்னுட்டு வாந்திதான எடுக்கப்போற..? அத வேற ஒருத்தனுக்கு போட்டாலாவது… பசியாறி நிம்மதியா தூங்குவான்’… பணத்தை அவன் பாக்கெட்டில் திணித்து அனுப்பிவிடுவார். அதனால் குடிகாரர்கள் யாரும் கடைப்பக்கம் வருவதில்லை.
காலை 11 மணி வரையிலும், பிழிந்துப் போட்ட ஈர சேலைப் போல, படுத்திருந்த இடத்தை விட்டு நகராமல் கிடந்தார், பொன்னி. சூனியம் வைத்ததுபோல் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையும் ஒரு நொடியில் சரித்துப் போட்டுவிட்டது, அந்த விபத்து. அன்று இரவிலிருந்தே கைகால்கள் குடைந்தெடுக்க… பைகளையும், பணத்தையும் கொடுத்து… காளிமுத்துவை மட்டும் உழவர் சந்தைக்கு அனுப்பி வைத்தார்.
சென்ற அரை மணி நேரத்தில்.. இடிப் போன்ற செய்தி பொன்னி தலையில் வந்து இறங்கியது. ‘ஏதோ காரோ பஸ்ஸோதான் காளிமுத்து மேல மோதியிருக்கு. ஆள் அந்த இடத்திலேயே செத்துட்டாரு.’ நான்கு நாட்களுக்கு முன் உயிருடன் இருந்த காளிமுத்து, தற்போது புகைப்படத்தில் மட்டும் சிரிக்கும்படியாயிற்று…
“ஒரு ருசுவும் காட்டாம கொண்டுப்போயிட்டியே. சாவு வரும்னு தெரிஞ்சிருந்தா, கூட இந்த பாவியும் வந்திருப்பேனே… அய்யோ சாமி.” புகைப்படத்தை நெஞ்சு மீது வைத்துக் கொண்டு அரற்றினார். முப்பது ஆண்டுகள் காளிமுத்து, பொன்னியின் முந்தானையை பிடிக்கவில்லையே தவிர, கூடவேதான் வருவதும் போவதும். பொன்னியும் அப்படிதான்…. எங்குப் பார்த்தாலும் இருவரும் ஒன்றாகத்தான் வருவதும், போவதும்… தெருவில் எதிர்படும் இளம்பெண்கள், ‘இங்க பாருங்கடி, நேத்துத்தான் கல்யாணமான இளஞ்ஜோடிங்க போவுது’ என்று கெக்கலிப்பதும் உண்டு. இன்றைக்கு அந்த சந்தோஷ அணை, உடைந்த வெள்ளமாய் வடிந்துவிட்டது. இனி விடியவே விடியாத பூமியாய் இருண்டுப் போனது.
ஒவ்வொரு நாளும், இரவு முழுக்க அழுது, கண்கள் வீங்கிக் கிடந்தன. ஆதரவாய் இருந்த கணவனும் இல்லையென்றானபின், வாழ்வதென்பது சாத்தியாமா..? அடுத்தத் தெருவிலில் வசிக்கும் மூளை வளர்ச்சி குறைவான சிறுமி தங்கமணி, வீட்டுக்குள் ஓடிவந்தாள். பொன்னி அழுவதைப் பார்த்து, அவளும் அழுவதைப் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.
“காளி தாத்தா எங்க…? ஏண்டி பொன்னி, தாத்தா போட்டாவுல இருக்காரு..?” என்பதுதான் அவளது கேள்வியாக இருந்தது. பசியெடுத்தால் கடைக்கு ஓடி வந்துவிடுவாள். காளிமுத்துவோ, பொன்னியோ போட்டுக்கொடுக்கும் சாதத்தை, மேலும் கீழுமாக இறைத்தப்படி ஒருவாய் சாதத்துக்கு, ஒருவாய் தண்ணீர் குடிப்பாள். ‘புள்ளையில்லாத குறைக்கு இருக்கட்டுமே பொன்னி’ என்பார் காளிமுத்து. அவளைப் பொருத்தவரை காளிமுத்து தாத்தா, பொன்னி, ‘ஏண்டி பொன்னி’ தான்.
“ஏய் பொன்னி, இன்னிக்கும் சோத்துக்கட போடமாட்டியா… பசிச்சா நா எங்கப் போயி சோறு திங்கறது…?” என்றவளின் கேள்விக்கு பதில் எதிர்பார்ப்பதில்லை. ‘குச்சி ஐஸ்’ என்று தெருவில் கேட்ட குரலுக்கு, ‘ஐ..ஐய்சு’ என்று ஓடிப்போனாள்.
அடுத்த சில நிமிடங்களில், நடுத்தர வயதில் ஒருவர் வந்தார். வசதிப் படைத்தவர்களாக தெரிந்தார். பக்கத்து வீட்டு பெண் கூட்டி வந்திருந்தாள். “இதான் நீங்க கேட்ட பொன்னியம்மா வீடு. உள்ள வாங்க… வண்டிக்காரம்மா, ஒன்னப் பாக்க ஒருத்தர் வந்திருக்காரு எந்திரிங்க.” கட்டில்மேல் கைவைத்து, தலை சாய்த்திருந்த பொன்னி, தலை நிமிர்த்தி பார்த்தார். பைனான்ஸ்காரர் என்பது தெரிந்தது. வந்தப் பெண், அருகிலிருந்த இரும்பு சேர் ஒன்றை, அவர் பக்கம் எடுத்துப்போட்டாள். அவர் அமர்ந்தார்.
“அவரு ஏதாச்சும் கடன் வாங்கியிருந்தாறா.. சாமி..?, என் தலைய அடமானம் வெச்சாவது கட்டிப்புடுறேங்கண்ணு” என்றார், அதிக சத்தமில்லாத உடைந்த குரலில்..
“இல்லம்மா… அவருதான், எங்க கம்பெனியில 50, 100–னு… கொஞ்சம் கொஞ்சமா குடுத்து… 2 லட்ச ரூபா, சீட்டுப் போட்டு வெச்சிருந்தாரு. பணம் எடுக்கலை. ‘தேவையானப்ப எடுத்துக்கறேன் இருக்கட்டும்’-னு சொன்னாரு. இப்டி திடீர்னு இறந்து போவார்னு நெனச்சிக்கூட பாக்கல” என்றவர், சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தார்.
அழுது ஓய்ந்த பொன்னி, ஓங்காரமிட்டு கதறி அழுதார்.. “ஏ.. சாமீ… இப்டி என்ன பாதியில உட்டுட்டுப் போவேன்னு தெரிஞ்சுதான், ஏங்கிட்ட கூட ஒரு வார்த்த சொல்லாம சேத்து வெச்சியா….? ஒன்ன காங்காத இந்த தேசத்துல, காசு பணத்த வெச்சிக்கிட்டு உசுரு வாழவா போறேன்…?. இப்டி தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே… ஏ… ராசா…” மேலும் அழுகை கூடிப்போனது.
“அழாதிங்கம்மா. காளிமுத்து, எங்கிட்ட எதா இருந்தாலும் மனசுவிட்டு பேசுவாரு. ஒரு தடவ, ‘என் பொன்னி வெகுளி, உலகம் தெரியாதவ. இதுவரைக்கும் அவளுக்குன்னு நான் ஒண்ணும் பண்ணல. இந்த பணத்த வெச்சி, அவ ஆசப்பட்டத செய்யணும். என் பொன்னி இத்தன வருஷத்துல, ஒரு தடவக் கூட அப்பன், ஆத்தாள பாக்கணும்னு கேட்டதில்ல. பெத்தவங்களப் பாக்க எந்தப் புள்ளைக்குத்தான் ஆச இருக்காது. அதுலயும் பொம்பள புள்ளைங்க, எந்த நிமிஷமும் அதே நெனப்புலதான இருப்பாங்க. எங்க கேட்டா திட்டுவேன்னு பயந்துக்கிட்டு, காலத்தக் கடத்திட்டா. ஒருநாளு ஊருக்கு கூட்டிட்டுப் போயி, எட்ட நிக்க வெச்சாவது அவ அப்பன், ஆத்தாவ காட்டிப்புடணும்னு சொல்லுவார்’ என்றார்.
பொன்னியின் அழுகை அதிமாயிற்று… இந்த நேரத்தில் இதைச் சொல்லி பொன்னியை வேதனைப்படுத்துவது தெரிந்தும், வேறு வழியில்லை. எப்போதேனும் சொல்லித்தான் ஆகணும்.
“அம்மா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. இவ்வளவு காலத்துக்கு உங்கக் குடும்பத்தாரோட கோபம் தனிஞ்சிருக்கும். அதுவும் இப்டி தொணையில்லாம ஒத்தையில தவிக்கிறப்ப, சொந்தப்பந்தம் பாத்துக்கிட்டு சும்மா இருக்காது. இந்தப் பணத்த உங்க வீட்டுல குடுங்க. இருக்கிற கொஞ்ச காலத்த, சொந்தங்களோட நிம்மதியா இருக்கலாமில்லையா…? மனசுக்கும் ஆறுதலா இருக்கும்.. அங்கப் போக புடிக்கலன்னா சொல்லுங்க, நல்லாப் பாத்துக்கிற ஆசிரமம் நெறைய இருக்கு, அது ஒண்ணுல சேர்த்துவிடறேன்” என்றார்.
பொன்னியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. காளிமுத்து புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் கிளம்பிப் போனார்.
அடுத்த நாள் சொல்லி வைத்ததுப்போல், பொன்னியின் மூத்த அண்ணன் செய்திக் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தார். வாயில் துண்டு பொத்தி, உடன் பிறந்தவள் வாழ்வை எண்ணி, சில நிமிடங்கள் விசும்பிவிட்டு… “ஏ.. ஊட்டுல இருக்கப் புடிக்கலன்னா சொல்லு… கெழக்கால இருக்கிற நம்ம இடத்துல… ஒரு குடிசப் போட்டுத் தர்றேன்… இருந்துக்க…. ஒனக்குன்னு தனியாவா ஒலை வெக்கப்போறோம். வா பொன்னி. சட்டுமுட்டு சாமானெல்லாம் கட்டி வை… ரெண்டு நாள்ல வர்றேன்… ஊருக்குப் போலாம்” என்றுவிட்டுப் போனார்.
அன்று இரவு முழுக்க விட்டத்தைப் பார்த்தபடி, காளிமுத்து உறங்கும் கயித்துக் கட்டிலில் தலை சாய்த்துப் படுத்திருந்தார். கணவனின் புகைப்படம், பொன்னியின் நெஞ்சில் இருந்தது. காளிமுத்து குடிசைக்குள் அங்குமிங்கும் நடந்தார். ‘ஏய்….. பொன்னி கெழவி….’ செல்லமாய் கூப்பிடும் குரல் கேட்டது. தூரத்தில், எங்கோ ஒரு தெரு நாயின் இடைவிடாது ஊளையிடும் சத்தத்தைத் தவிர, ஊரே இருட்டில் அமைதியாய் கிடந்தது.
மறுநாள் காலை 11 மணியளவில், மனவளர்ச்சி குன்றிய தங்கமணி, பொன்னி வீட்டுக் கதவை, பலம் கொண்ட மட்டும் தட்டினாள். சிறுமி பலமுறை அடித்தும் கதவு திறக்கவில்லை.
“ஏய்..பொன்னி… வூட்டுக்குள்ள என்னடி பண்ற. இப்பக் கதவ தொறக்கல, கல்ல தூக்கி கதவப் பொளந்துபுடுவேன் பாத்துக்க” என்றபடி, மீண்டும் கதவை வேக வேகமாக.. தட்ட.. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த சிலர், பொன்னி வீடு நோக்கி என்னவோ ஏதோவென்று ஓடிவந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் கோபம் பொங்க, தங்கமணி… வண்டி அருகே வந்து நின்று… மூச்சு வாங்கியபடி.. “ஏய் பொன்னி.. இம்புட்டு நேரம் ஒன் வூட்டு கதவ தட்டிபுட்டு வர்றேன். நீ கடயில இருக்கியா. என்ன உட்டுபுட்டு எங்கியோ போயிட்டன்னு… அழுதுக்கிட்டு ஓடிவர்றேன் தெரியுமா..?” என்றவளை, வாரி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு… தலையை தடவிக்கொடுத்தப்படி… “இந்த ஊரையும், ஒங்களையும் உட்டுபுட்டு, எங்க போவப்போறேன்…?” வாஞ்சையோடு அவளைப் பார்த்தார்.
“சரி சோத்தப் போடு… பசிக்குது” என்று தட்டை எடுத்து நீட்டினாள். அதில் சாதம் வைத்துக் கொடுக்க, கை நிறைய அள்ளி வாயில் மென்றபடி, தண்ணீர் குடிக்கும் தங்கமணியை பார்த்தபடியிருந்தார். கடை முன் இன்னும் சிலர் கூட ஆரம்பித்தனர்.
வண்டியில் காளிமுத்து ஃபோட்டோ… புது மாலையுடன்… ஒரு மூளையில் மாட்டப்பட்டிருந்தது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பீக்கர், ‘பென் டிரைவ்’-வுடன் வழக்கம்போல் பாடிக்கொண்டிருந்தது. திடீரென பாடல் நின்றுபோக… ‘மீன் குழம்பு சாப்பாடு – ரூ.10’ என்று சாக்பீஸால் எழுதப்பட்ட சிலேட்டை எடுத்து, ரூ.10 என்றிருந்ததை அழித்துவிட்டு, ரூ.5 என எழுதி ஆணியில் மாட்ட, அது சரியாக மாட்டாமல் ‘ஸ்பீக்கர்’ பெட்டிமேல் விழ, அந்த அதிர்வில் குரலை நிறுத்தியுருந்த ‘ஸ்பீக்கர்’ உயிர்பெற்று…
‘நாடென செய்தது நமக்கு – என
கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு – என
நினைத்தால் நன்மை உனக்கு…’ எனப் பாடல் விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஒலிக்கத் தொடங்க, அதை ஆமோதிப்பதுப் போல் காளிமுத்துவின் புகைப்படம் காற்றில் அசைந்தபடி இருந்தது.
– கதைப் படிக்கலாம் – 35
இதையும் படியுங்கள் : அறிவுக்கு அப்பால்