– தமிழ்க்காதலி தாரணி
தன் வரப்போரம் இருந்த ஒத்தை வேப்ப மரத்தடியில் அமர்ந்து, உச்சிவெயிலில் எங்கிருந்தாவது மண்வாசணை வந்துவிடாதா என்று கனவு கண்டுகொண்டிருந்தார்.
இருபது வயசு நிரம்பிய தன் இளைய புள்ளையான தென்னை மரங்கள், தன் முன்னாலே உயிருக்கு ஊசலாடுவதை கண்டு, இரண்டு சொட்டு கண்ணீரை கரட்டின் மேல் சிந்தினார் ராசய்யா.
இராட்சச காடு பட்ட இடம் தெரியாமல் நீரை உறிஞ்சிக்கொண்டு, பஞ்சத்தை மட்டுமே கண்ணில் காட்டியது. எங்கிருந்தோ ஒரு வண்டி சத்தத்தோடு ஊருக்குள் சென்றது, அதை கேட்காதவாறு மேட்டுக்காட்டு ராசய்யா தன் பெரிய உடம்பை சுருட்டி பொட்டக்காட்டில் படுத்து உறங்க ஆரம்பித்தார்.
தூரத்தில் இருந்து மூச்சு வாங்க வாங்க சுப்பையா ஓடிவந்தான்..
“மாமாவ்… மாமா”
“என்னடா உசுரு போறாமாறி இப்படி கத்திட்டே வர… என்னானு சொல்லு”
“நம்ப ஊ……ட்டுக்கு முன்னாடி ஆம்புலன்சு வந்துருக்கு. மாம்.. மா நம்ப சேகரு நம்ப சேகருல…”
“என்னத்தடா சொல்லவற, பொறுமையா சொல்லி தொலடே”
“பூங்கோத வேற மயக்கம் போட்டு விழுந்துருச்சு. நீ வெரசா வூட்டுக்கு வா”
தட்டுத்தடுமாறி எழுந்து வீட்டை நோக்கி ஓடினார் ராசய்யா.
ஒரு பெரிய கும்பலுக்குள் தன் மகன் மட்டும் உறங்கி கொண்டிருப்பதை கண்டு, நெஞ்சில் கை வைத்தவாறு வாசலில் சாய்ந்தார். தன் அப்பா இறந்தது தெரியாமல், பசியில் அழுதுக்கொண்டிருந்தது சேகரின் குழந்தை.
“என்னலே, இது என்ன புதுசாவா நெடக்குது… சட்டுபுட்டுனு போசாய்யக்குள்ள எடுக்கவழிய பாருவுலே. இன்னைக்கு காப்புக்கட்டறது தெரியாதா என்ன?” என ஊர் தலைவர் கறார் ஆக சொன்னார்.
“ராசய்யா சொல்லறமேனு எதும் ஊர தப்பா எடுத்துக்காதயா. பல வருசமா காடுமேடு வாக்கியா வரப்பெல்லாம் காஞ்சுக்கடக்கு. இந்த வருசமாச்சும் ஆத்தா மனசு குளுருராப்புல திருவிழா நடந்தா தா, ஊருசெனம் இந்த வருசெம் பசியாறும்லே”
“சரிப்பா ஊரு பெரியவரு நீரே சொல்லிபுட்டிங்க… ஆகறத செய்யுங்க”
பாடை ஒரு பக்கம் விறுவிறுவென தயார் ஆனது.
சேகரு இறந்ததில் பெரிய வருத்தம் ஒன்னும் கெடையாது பூங்கோதைக்கு, இனி தன் ஒழைப்புல புள்ளைய வழக்கனுமேன்றத தவிர…
ராசய்யா, சேகருக்கு கட்டாயப்படுத்தி கட்டிவச்சப் புள்ளதான் பூங்கோத. காடு கழனிய பாத்துட்டு ,தன் கூடயே இருக்கனும்முனுதான் கட்டி வச்சாரு. ஆனா, சேகருக்கு பூங்கோதையா கண்டாலே மூக்குநுணி செவக்கற அளவுக்கு அவ்வளோ கோவம் வரும். பூங்கோத மழைக்கு கூட பள்ளிக்கூடம் போகதவதான். ஆனா, சேகரு டவுனுல பெரிய படிப்புப் படிச்சவன். அவனோட கோவத்தலாம் அவ மதிச்சி பல நாள் ஆச்சி. ஆனா, இன்னைக்கு அவன் திட்டாம படுத்துக் கெடக்கானேனுதான் வெசனம்.
ராசய்யா எவ்வள சொல்லியும் கேக்காம தான், கம்பெனில சேந்தான் சேகரு. கம்பெனி வந்து நாளு மாசம் முழுசாகல, அதுக்குள்ள ஆத்துத்தண்ணி நெறம் மாறிப்போச்சு… இப்போ காஞ்சும் போச்சு. இதுவர மாசத்துக்கு பத்து பொணமாச்சும் சுத்துப்பட்டு எல்லா கிராமத்துலயும் விழுந்துருது. ஊருக்குள்ள இப்பலாம் பொணத்தப் பாத்து, அலுட்டிக்காம பக்கத்து வீட்டுல பொங்கி திண்ற அளவுக்கு சாவு வெறுத்துப்போச்சி சனத்துக்கு.
“ஏம்பா ராசய்யா, கொட்டு வச்சில்லாம் தூக்க வேணாமுய்யா. பொசாய்யா ஆத்தா ஊருசுத்தி வருது. இந்த நேரத்துல வேணாம், பொணத்தையும் கோவிலு பக்கமா போவாம்மா, நடுத்தெருவு வழியா எடுத்துருவம்ய்யா. ஊர தீட்டாக்கி ஆத்தா குத்தத்துக்கு ஆளாக வேணாம்”
“ஆமா… ஆமா…. ராசய்யா. பல வருசமா காடு மேடு காஞ்சிக்கெடக்கு. இந்தத் தேருக்கு பெய்யற மழைய நம்பிதான் ஊரே கெடக்கு”
“நா மட்டும் மழ வரத தடுக்கவா போறே. ஊரு மழையில குளுந்தா எங்காடு மட்டும் காயவா போவுது, எனக்கும் தான. அப்பபடியே செஞ்சிருவோம்ல”
எப்பவும் சேகர் யாரையும் நம்பி பொளைக்கற ஆளு இல்ல. மேலுக்கு முடியலனாளும் ஊனி எந்துருவான். ஆனா, இன்னைக்கு நாளு பேரு தூக்கிப் பாடையில ஏத்தும் போதும், படுத்தே கடக்கானுதான் பூங்கோத நெனப்புலாம்.
“காரியம் முடியற வரைக்கும் மேட்டுக்காட்டு கொட்டையிலே மருமக புள்ளையும் நீயும் இருங்கய்யா. உன் சாதிசனம் ஆகற சடங்க அங்குட்டு வந்தே செஞ்சிக்கட்டும். நம்ப ஆத்தாளுக்கு சுத்தமா இந்த தீட்டு ஆகாதுலே அதான்”
சேகர் வெறுத்த காட்டுலே அவன் பொணம் படுத்துருக்கு. சாதிசனம் பூங்கோதய வளவி பூவெல்லாம் வச்சி, புதுபொடவகட்டி சிங்காரிச்சிகிட்டு இருந்தது. அவளுக்கு இத பத்தி ஒன்னும் தெரியாது. நாளு, கெழம, சம்பரதாயம் எதையும் அவ கண்டதில்ல. பொறந்ததுலருந்து வேலதான். ராசய்யா வீட்டுக்கு வந்தப் பெறவுதான், ராணியாட்டாம் மூனு வேல சோத்தப் பாத்தா. அது வர மதினியா போட்டா மிச்சம் மீதி தான்.
அவ பொறந்தப்பயே ஆத்தா அப்பன முழுங்கிட்டா. இப்போ அவ புள்ளையும், அவங்க அப்பன முழுங்கிட்டானு வூரு பொம்பளைக ராசய்யா காது பட பூங்கோதைய வசவு பாடனதுக்கு, பதில்பேச முடியாம இருந்தாரு.
ஏரிகரைக்கு பூங்கோதைய கூட்டிப்போச்சு பொம்பளைங்க கூட்டம. ஏரியிலயும் குட்டப் போலதான் தண்ணி நின்னுச்சு. போட்ட வளவி, வச்சப் பூவெல்லாம் கலச்சி, வெள்ள பொடவையாக்கி தான் விட்டுச்சு சாதிசனம். பூங்கோதை இந்தக் கோலத்துல பாத்து கலங்கி போனாரு ராசய்யா. இந்த நெலம் இன்னும் எத்தன உசுர குடிச்சி, இந்தூரூ பொம்பளைகள இப்படியாக்கப் போகுதோ.
பல நா கழிச்சி, மேட்டுக்காட்டு பக்கம் ஊரு உத்தரவால போனா பூங்கோத. அவள போலவே காடும் பட்டுபோயு ஒத்தையா மூளியா நின்னுச்சு.
“தேரும் ஈத்து பாத்தாச்சு. ஆத்தா கோவம் கொறையறாப்புல தெரியல. என்ன குத்தம் வச்சமோ, எல்லாம் இந்த திருவிழா நேரத்துல வீந்த பொணமா தான் இருக்குமுனு நெனக்கேன்ல”
“இல்லலே… ஆத்தா என்ன செய்யும். வானம் பாக்க மரமா இருக்கு, நம்பல பாத்து மழ எங்க வர. ஏற்கனவே பாதி சனம் பட்டணம் போயிட்டானுவலே. இப்போ மிச்சமீதி பயலுவளும் மூட்ட முடிச்ச கட்றானுவ”
“அது கடக்கட்டும் மாமாவ். நம்ம தலைவரு மொத பஸ்ஸுக்கு போனாரு, எங்குட்டாம். அவருமா ஊரவிட்டுப் போறாரு?”
“அதுலாம் இல்லலே. அவரு காட்டுல நாளைக்குப் போர் போட்டு பாக்கப் போறோம். அதான் டவுனு வரைக்கும் போர் வண்டி சொல்ல போயிருக்காப்புல.”
இதலாம் டீ கடையில் அமர்ந்தவாறு கேட்டுக்கொண்டு இருந்தார் ராசய்யா.
“தாயி, ஒரு செம்பு தண்ணி கொண்டா. யாத்தே, இன்னைக்கு ஊருக்குள்ள நம்ப கோணபிள்ள கடையில பேசிட்டு இருந்தானுவ நடுத்தெருகாரனுவ”
“இன்னைக்கு என்ன சேதியாம். எத்தன மக்க ஊர விட்டு போனானுவனுதான”
“அதுல்ல தாயி, நம்ப தலைவரு காட்டுல போர் போட போறாறாம். அது விசயமா டவுனுக்கு போயிருக்காறாம்”
“அதுக்கு என்னவாம் இப்போ. அவருக்குப் பணம் காசு இருக்கு போடறாரு, இங்க அப்படியா சோத்துக்கே இல்ல”
“என்ன தாயி இப்படி சொல்லி புட்ட. மண்ண கிழிச்சு தண்ணி எடுக்குறது, மார கிழிச்சி பால குடிக்கறாப்புல இல்லயா. யாத்தே”
“இந்த ஊருல எந்த பொம்பள மாருல பாலு சொரக்குது?”
குழந்தை ஓயாமல் அழுதுக்கொண்டே இருந்தது.
“நான் டவுனுல இருக்க எங்க அண்ணே வூட்டுக்கு போறேன் மாமா….வ்”
ராசய்யா பதில் பேச முடியாமல் எழுந்து நடந்தார்.
“எலே விசியம் தெரியுமா? ரெண்டு நாளா ஆள வேற காணோம்”
“டவுனுல இருக்க என் பெரிய பொண்ண பாத்துட்டு வாறேன். என்ன அப்படி பெரிய விசயம். தலைவர் போட்ட போருல தண்ணி வந்துட்டா?”
“நீ வேற ராசய்யா காட்டுக்கு பக்கத்து காட்டுல தாம்லே தலைவரு போர் போட்டாரு, ஒன்னும் தண்ணி இல்ல… புழுதியா தான் போச்சு”
“எப்படி ராசய்யா ஒத்துக்கிட்டாரு முதல அங்கப் போட”
“அவரு எங்குட்டு ஒத்துக்க, காலையில காட்டுல பாக்கும் போது மனுசம் படுத்துக்கிடந்தாரு… ஒடம்பெல்லாம் புழுதி படிஞ்சி கடந்துச்சு. ராத்திரியே அவரு ஆவி புழுதியோட புழுதியா போயிருச்சு போலலே”
“ஈம சடங்கு யாரு செஞ்சானுவ?”
“அதெ ஏன் கேக்கற, அவன் வளத்த தென்ன மரம் தான் சாஞ்சி அழுதுட்டு கடந்துச்சு. அத பாக்க போனப்ப தான் பாத்தாங்கலாம், போர் அடிச்ச புழுதியே அவனுக்கு மண்ணள்ளி போட்டுருக்கு.”
“மனுசன் கட்ட அவன் காட்டுலே சாஞ்சிருச்சேலே”
– கதைப் படிக்கலாம் – 142