– நாகவேல்
ஒட்டுப் போட்ட இருக்கை, ஓட முடியாத நிலையில் இருக்கும் சக்கரங்கள், மங்கிப் போன நிறம், மொத்தத்தில் 20 வருடங்கள் பழைய ஒரு மிதிவண்டியை 18 வயது வாலிபன் மெதுவாக ஓட்டி வந்து, அந்தக் கல்லூரி வாசலை வந்தடைகிறான். ஏனெனில் அந்தக் கல்லூரியில் தான் அவனது அப்பா காவலாளி வேலை பார்க்கிறார்.
தான் வேலை பார்க்கும் இந்தக் கல்லூரியில், தன் மகனை படிக்க வைக்க வேண்டுமென்று அப்பா திரவியத்துக்கு ஆசை. தினமும் வாசல் வரை வந்துச்செல்லும் இந்தக் கல்லூரியில் படிக்க வேண்டுமென, அவனுக்கும் ஆசை. ஆனால் இதுவரை இருவரும் இதுபற்றிப் பேசிக் கொண்டதே இல்லை.
இன்னும் இரண்டு நாட்களில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற செய்தியை, வானொலி மூலம் அப்பா மகன் இருவரும் கேட்கின்றனர். ஒருவித ஆவல் இருவருக்கும் ஏற்பட்டது. ஆனால் மகனுக்கு ஒரு வித பயமும் தொற்றிக்கொண்டது. தான் இயற்பியல் தேர்வு சரியாக எழுதாதை நினைவுகூர்ந்தான்.
இரண்டு நாள் தேர்வு முடிவு பற்றிய பயத்துடனே கழிந்தது. அடுத்த நாள் காலை விடிந்தவுடனே கடற்கரை பக்கம் சென்றுவிட்டான். என்னுடன் விளையாட வா என கால்களை தொட்டுத் தொட்டுச் செல்லும் கடல் அலைகள். எங்களுடன் சேர்ந்து நீயும் பாடேன் என கொஞ்சி கொஞ்சி….. கெஞ்சி கேக்கும் பறவைகள். எங்களைப் போல் நீயும் கடலில் வந்து நீந்திப் பாறேன் என கதைக்கும் ஓடங்கள்.
இவை எல்லாம் இத்தனை கேட்க, அவன் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்று தான். தேர்வு முடிவும், இயற்பியல் தேர்வு பற்றிய சிந்தனையும் தான். நினைவில் நிறைய ஒடிக்கொண்டிருக்க, தூரத்தில் யாரோ அவனை அழைக்கும் சத்தம் கேட்க, தடுமாற்றத்துடனும் பயத்துடனும் திரும்பிப் பார்த்தான்.
அது அவனுடைய நண்பன். உன்னை நம் ஆசிரியர்கள் பள்ளிக்குக் கூப்பிட்டாங்க. உனக்கு அங்கப் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று சொல்லி விட்டு ஓடி விட்டான். ஏற்கனவே பயத்துடன் இருந்தவனுக்கு, இப்பொழுது குலைநடுங்கி போய் விட்டான். அன்று மட்டும் என்ன அதிசயமோ, பள்ளி வாசற்கதவு பேய் பங்களா கதவைப் போல் இருந்தது.
மெதுவாக உள்ளே நுழைந்தான். நுழைந்தவுடன் அவன் பார்த்த முதல் விஷயம் அறிவிப்புப் பலகை தான். அதில் +2 தேர்வில் நமது பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவனுக்கு ஒரு வினாடி இருந்தக் கொஞ்ச நிம்மதியும் போய் விட்டது. அவன் திரும்ப, அவன் பின்னாடி அவனது இயற்பியல் ஆசிரியர் அவன் பின்னால் நின்றுக்கொண்டு இருந்தார்.
சார்…..! என இழுத்தான்.
உனக்கு நான் என்னடா பண்ணேன். நீ மட்டும் ஏன்டா இப்படி பண்ண? உன்னை நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக்கிட்டேன்.
சார்…. சாரி சார். நான் எல்லாமே நல்லா தான் சார் எழுதுனேன். ஏன் இப்படி ஆச்சுனு தெரியல சார். என்னை மன்னிச்சுருங்க சார்.
போ… போ… அங்கத் தலைமை ஆசிரியர் இருப்பார். அவரை போய் பாரு. அவர் கிட்டப்போய் அடுத்து என்ன பன்றதுனு போய் கேளு.
சரி என்றவாறு, மெதுவாக தலைமை ஆசிரியர் அறை நோக்கி நடக்கும் பொழுது, தனது வகுப்பு நண்பர்கள் சிலர் தேர்வில் வெற்றிப் பெற்ற ஆனந்தத்தில் நடனமாடி கொண்டிருந்ததைப் பார்த்து, நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று யோசித்தான்.
ஒரு வேளை நாம் மட்டும் தேர்வில் தோற்றுவிட்டோம் என தெரியவந்தால் இறந்துவிட வேண்டும் என நினைத்தான்.
பயத்துடன்… Sir, May I come in? என்று கேட்டான். உள்ள வரலாம். வாங்க என்றார் தலைமை ஆசிரியர்.
அவனைப் பார்த்தவுடன் “நீயா? உன்னால் தான் நமது பள்ளி தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது”.
சார், என்னை மன்னிச்சுருங்க. இதுக்கு மேல நான் என்ன பன்னணும்னு சொல்லுங்க சார் என்றான்.
சரி விடு. நீ நல்ல பையன்னு நான் கேள்விபட்டு இருக்கேன். மீத எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்ற நீ, கணிதத்தில் மட்டும் ஏன் தேர்ச்சி பெறவில்லை.
கணிதமா? நான் எல்லாமே நல்லா தான் சார் எழுதுனேன். ஏன் இப்படி ஆச்சுனு தெரியல சார். என்னை மன்னிச்சுருங்க சார்.
சரி விடு. ஆசிரியர்களும் சில நேரம் தவறு செய்வது உண்டு. போய் மறுகூட்டலுக்கும் ஜுன் மாதம் நடக்கும் மறுதேர்விற்கும் விண்ணப்பி. பார்க்கலாம் என்ன நடக்கும்னு.
அவனும் வெளியே வந்தான். பயந்துக் கொண்டிருந்த இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி. ஆனால் கணிதத்தில் தேர்ச்சிப் பெறவில்லை.
அழுதுக் கொண்டே வீடு திரும்புகிறான். நம்மால் நம் வீட்டுக்கு தான் அவமானம் என நினைத்துக்கொண்டு தூக்குபோட முயற்சிக்கிறான்.
அந்த வேளையில் அவனது அம்மா படத்தில் இருந்து எப்போதோ சொருகி வைத்த காகிதம், இவன் கால் அடியில் வந்து விழுகிறது.
அதை எடுத்துப் பிரித்துப் படித்தான். அதில் அவனது அம்மா அவனுக்கு ஒரு சில பொன் மொழிகளையும், புத்திமதிகளையும் கூறியிருந்தார். அதில் முக்கியமான ஒன்று .
“தோல்வியாளர்கள் எப்பொழுதும் தோற்பதில்லை.
வெற்றியாளர்கள் எப்பொழுதும் ஜெயிப்பதில்லை
ஒரு முறை தோற்றால் மறுமுறை
முயற்சி செய். அதனுடன் பயிற்சி செய்
கண்டிப்பாக நீயும் ஒரு நாள் வெற்றி பெறுவாய்.”
இதைக் கண்டவுடன் மனதிற்க்குள் ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டது. தன்னுடைய மதிப்பெண் பட்டியலையும், அந்தக் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு அப்பாவை காணச் சென்றான்.
இதற்கு முன்னரே தனது மகன் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவான் என நம்பி, தன் மகனை தான் வேலை பார்க்கும் கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி, அதை நிரப்புவதற்கு தன் மகனின் மதிப்பெண் பட்டியலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார், அப்பா திரவியம்.
அவனும் வந்தான். மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்தனர். அவன் தேர்ச்சிப் பெறவில்லை எனத் தெரிந்ததும், அவனது அப்பாவை எள்ளி நகையாடினார்கள்.
“பாஸ் ஆகாத பிள்ளைக்கு பட்டபடிப்புக்கு சீட்டாம்”
“டீ கிளாஸ் கழுவ பொறந்தவனுக்கு டிகிரி ஒரு கேடா?”
“தவளை ஏணிப்படி ஏற ஆசைப்படலாம். ஏரோபிளேன் ஏற ஆசைப்படலாமா?”
மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அப்பா, ஒரு நிமிடம் திகைத்துப்போனார். இந்த மன உளைச்சலால் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். உடல் சரி இல்லாமல் போனதால் வேலையையும் விட வேண்டியதாயிற்று.
அந்த ஓட்டை மிதிவண்டியை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக பணம் சம்பாதித்து, தன் அப்பாவின் மருத்துவச் செலவையும், குடும்ப செலவையும் பார்த்துக்கொண்டான்.
இந்நிலையில் மறுகூட்டலின் முடிவுகள் வெளியாகின. அதில் கணிதத்தில் 92 மதிப்பெண் என்று வெளிவந்தது. இதற்கு முன் அது 29 என மாற்றி அச்சிடப்பட்டு இருந்தது. இந்தப் புதிய மதிப்பெண்ணால் அவனுக்கு வேறொரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து. பட்டமும் பெற்று, இப்பொழுது மேடை பேச்சாளராக இந்தச் சமூகத்தில் வலம் வருகிறார்.
அது வேரு யாருமில்லை… நான் தான். என் அப்பா காவலாளியாக பணிபுரிந்தது இந்த கல்லூரியில் தான். யாரோ ஒரு சிலர் செய்யும் சின்னக் கவனக்குறைவால், ஒரு சிலரின் வாழ்க்கையே தடம் புரளுகிறது. அதற்கு நான் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
இச்சிறுகதையை மேடைப்பேச்சு வாயிலாக உங்களுக்குச் சொன்னதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
– கதைப் படிக்கலாம் – 103
இதையும் படியுங்கள் : அன்புள்ள அப்பாவுக்கு