– இரா. சரவணகுமார்
அன்று சாயங்காலம் மெல்லியதாக பூங்காற்று வீசிக்கொண்டிருந்தது. மதில் சுவர் பெரிதாக இல்லாத சின்ன கோவில் என்பதால், காற்று நன்றாக வீசியது. கோவிலுக்குள் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. தெய்வத்தை வணங்கிவிட்டு சன்னிதானத்தில் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான், சாரங்கன்.
கோவிலில் கட்டப்பட்ட மணி மெல்லியதாக ஒலித்தது. அதை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது கோவில் வாயிலில் பாதம் தளும்ப, தளும்ப பட்டுப்பாவாடைக் கட்டி, அதற்குப் பொருத்தமாய் தாவணி போட்டு, கையில் அர்ச்சனை கூடை வைத்து, நெற்றியில் இரு புருவத்திற்கும் இடையே சின்னதாய் பொட்டு வைத்து, தலையில் இரு புறமும் எடுத்து பிண்ணிய தலைமுடி… அதில் நெருக்கமாய் கட்டிய மல்லிகை பூ வைத்து, அவள் நடந்து வர, அவள் அசைவுக்கு ஏற்றார்போல அசைந்தாடிய அவளது ஜிமிக்கி, சற்று முன்னரே மலர துவங்கிய பூ போல, சின்னதாய் ஒரு புன்னகையோடு அவள் வருகிறாள்.
அதுவரை தெய்வத்தை பார்த்தவன். அப்பொழுது தேவதையை பார்க்கிறான். அவள் சன்னிதானத்திற்குள் வந்ததும், எல்லோரும் கும்பிடுவது போல இரு கன்னத்திலும் தட்டிக்கொள்கிறாள். அந்தச் சமயம் பின்புறமாய் எடுத்து முன்புறம் பிடித்திருந்த அவளது தாவணி நழுவ, அது சாரங்கனின் முகத்தில் உரசி செல்கிறது. சாரங்கன் கண்களை மூடிக்கொள்கிறான். அதுவரை தியானம் செய்ய முடியாதவனை அவள் தாவணி மூர்ச்சை நிலைக்கே கொண்டு சென்றது.
அவ்வளவு நேரம் கோவில் மணியோசையை ரசித்த அவனது காதுகளில், அவளின் கொலுசு ஓசை மட்டுமே கேட்கிறது. அவள் கடந்து செல்ல செல்ல கொலுசு ஓசையின் நடுவே மீண்டும் கோவில் மணியோசை கேட்கிறது. அப்பொழுது ஒரு ஹைக்கூ கவிதை தோன்றியது அதை மூணு முணுக்கிறான் “என் காதுகள் கேட்க மறுக்கின்றன… உன் கொலுசு ஓசையின் நடுவே கோவில் மணியோசை”.
திடீரென கண்களில் தண்ணீர் துளி விழுகிறது. சட்டென்று விழித்துப் பார்க்கிறான். அவன் கண்களை மூடியதென்னவோ கோவிலில் தான், ஆனால் விழித்தது அவன் வீட்டு மொட்டை மாடியில். அவ்வளவு நேரம் அவன் கண்டது எல்லாமே கனவு. எப்பொழுதும் போல ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றான். சாரங்கனின் தற்போதைய நிலைமைக்கு முன், அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறு வயதிலிருந்தே அதிக கஷ்டத்தையே பார்த்தவன். பணத்திற்கு பஞ்சத்தை விட, அவன் ஆசைகள் நிறைவேறுவதற்கு பஞ்சமென்றே சொல்ல வேண்டும். அப்பா தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை. வீட்டிற்கு தேவையான எல்லாமே வாங்கி தந்தாலும், மண்ணிலும், பொன்னிலும் கொஞ்சம் கூட செலவழிக்கவில்லை.
டி.வி. சோபா என எல்லாம் வாங்கினார். ஆனால் விலையில் தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் அதைவிட குறைவு. அந்த வருடம் தீபாவளி வந்தது.
தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும்… புத்தாடை, இனிப்பு, பலகாரம் குறிப்பாக பட்டாசு என அதிரும் பண்டிகை. அந்த வருடம் தீபாவளிக்கு சாரங்கன் அப்பா குழந்தைகளுக்கு இனிப்பு செய்ய வீட்டிற்கே கூட்டிவந்து 20 லிட்டர் தண்ணீர் கொள்ளும் பானை நிரம்ப மைசூர் பாக்கு, லட்டு, அதிரசம் செய்ய வைத்தார்.
4 நாட்கள் வெடிக்கும் அளவுக்கு வெடிகள் வாங்கித் தந்தார். சாரங்கனின் மன மகிழ்வுக்கு அளவே இல்லாமல் போனது. ஆனால் அவனுக்கு அப்போது தெரியவில்லை, அதுதான் அவன் வாழ்நாளில் கொண்டாடப் போகும் அப்படியொரு தீபாவளி என்று. அப்பாவிற்கு அடிக்கடி கம்பெனியில் தொல்லை அதிகம், அடிக்கடி வேலையை விட்டு விட்டு வேற ஊருக்கு மாறிக்கொண்டே இருப்பார். பிள்ளைகள் படிப்பு வீணாகிவிட கூடாது என்ற எண்ணத்தில், அம்மா வழி பாட்டி வீட்டில் கொண்டுபோய் விட முடிவு செய்து விட்டுவிட்டார்.
சரியான வேலை கிடைக்கவில்லை என்பதால் முடிந்தப் பணத்தை மாதம் மாதம் அனுப்பி வைப்பார். சில மாதங்கள் தாமதம் ஆகும். சொந்த மகள்தான் என்றாலும் கூட, தன்னோட வறுமை காரணமாக 12×8 சதுர அடி அளவில் ஒரு சின்ன அறையை குடுத்து, அதற்கு வாடகையும் தர சொன்னார், சாரங்கனின் பாட்டி.
சாரங்கனின் அம்மாவிற்கு உலகம் தெரியாது, கணவர் விட்டு விட்டு சென்று விட்டார் போல என எண்ணி, அம்மா சொன்னதை கேட்டுக்கொண்டு பிள்ளைகளோடு அந்தச் சின்ன அறையில் வாடகைக்குத் தாங்கினார். சமையல் படுக்கை எல்லாமே அந்த அறையில் தான்.
எப்படியெல்லாமோ வாழ வேண்டுமென்ற கற்பனைகளோடு வாழ்ந்த சாரங்கனுக்கு, அந்த நிலைமை அவனை புரட்டிப் போட்டது. சாதாரண பள்ளியில் படித்தான், நல்ல மதிப்பெண் எடுப்பான். தன்னுடைய நண்பன் சுடர் ஒரு நாள் சாரங்கனிடம், நீயும் என்னைப்போல உன்னோட அப்பா கிட்ட சைக்கிள் கேளு. இருவரும் சேர்ந்து போகலாம் என்றான்.
சாரங்கன் உடனே, இல்லடா நடந்துப் போறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. நிறைய வேடிக்கைப் பாக்கலாம்னு சொல்லி சமாளிச்சு அனுப்பிட்டான். ஆனால் அவனோட கண்ணு அந்த சைக்கிள் எவ்வளோ அழகா இருக்கு என்று அவனிடம் சொல்லுச்சு. அவன் படிக்கும் காலத்தில் 1 ரூவாய்க்கு ஒரு மணிநேரம் சின்ன சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும்.
தாத்தாவிடமோ, இல்லை மாமாவிடமோ காசு வாங்கி, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவான். இப்படியே நாட்கள் கடந்தது. சாரங்கன் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது school fees கட்ட வேண்டும்.
குடும்பத்தை மாமா தான் (தாய் மாமா) பார்த்துக்கொண்டதால், சாரங்கன் மாமா அருகில் சென்று, மாமா ஸ்கூல் பீஸ் கட்டச் சொல்லி டீச்சர் சொன்னாங்க. இல்லனா இந்த வருசம் கஷ்டம்-னு சொன்னாங்க, அப்படி-னு சாரங்கன் சொல்ல, மறுகணமே சரிடா பணம் இல்ல, உங்கப்பா பணம் தரலை. அவர் பாட்டுக்கு உங்கள இங்க விட்டுட்டு போய்ட்டாரு.
எனக்கும் சரியான வருமானம் இல்ல. என்ன பண்றது. ஏதாவது வழி யோசிப்போம் என்று சற்று வழக்கமான குரலில் இருந்து மாறுபட்டுச் சொன்னார்.
சும்மாவே சாரங்கன் யாருகிட்டயும் கையேந்த யோசிப்பான். இப்படி பேச, சரி மாமா என்று சொல்லி தலையை கவிழ்த்திக்கொண்டு அங்கிருந்துச் சென்றான். திடீரென மாமா அவனைக் கூப்பிட்டார். ஏய் சாரங்க இங்க வா, சாரங்கன் வந்தான். நான் ஒரு யோசனை சொல்றேன், பக்கத்து ஊர்ல தான் உங்க சித்தப்பா இருக்காங்க. நீ அங்கப் போய் நிலைமையை சொல்லிக் கேளு. அவங்க தருவாங்கனு சொன்னார். சாரங்கனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.
பக்கத்துக்கு வீட்டுக்காரர் அந்த ஊருக்கு தான் போறாரு. நீ அவர் கூட போயி வாங்கிட்டு வா… சரியா, என்றார். அதுவரை அந்த ஊரையே தாண்டியதில்லை. ஆனாலும் சரி மாமா என்று மெல்லிய குரலில் சொன்னான். மறுநாள் காலை விடியவே, சாரங்கன் அவர் கூட சென்று சித்தப்பாவை பார்த்தான். வரவேற்பெல்லாம் சிறப்பாய் இருந்தது. ஆனால் சாரங்கனால் எதையுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பணம் கேட்டப் பின் என்னவாகுமோ என்றே அவன் நினைத்துக் கொண்டிருந்தான். என்னப்பா திடீரென வந்திருக்க… சித்தப்பா கேட்க, சோகத்தை நிரப்பி மெதுவாய் சித்தப்பாவிடம் நிலைமையை சொன்னான். 800 ரூபாய்தான் சித்தப்பா. அடுத்த மாதம் அப்பா தந்திடுவாங்கனு சொன்னான். என்னப்பா… அப்பா தர்றது இருக்கட்டும். என்கிட்டே இப்போ அவளோ பணம் இல்லையேப்பா-னு வருத்தத்தோடு சொல்ல, சாரங்கனின் மொத்த நம்பிக்கையும் உடைந்தேப் போனது.
ஒரு 800 ரூவாய்க்காக இப்படி அலைய வேண்டியதாயிற்றே என எண்ணி ரொம்பவே வருந்தினான். நினைத்திருந்தால் மாமாவே யாரிடமாவது கேட்டு வாங்கிக் குடுத்திருந்திருக்கலாம். ஆனால் குறையும் சொல்ல முடியாது. அவர் நிலைமை அப்படி.
அன்று முடிவு செய்தான். எப்படியாவது படித்து முன்னேற வேண்டுமென்று. ஆனால் பத்தாம் வகுப்புக் கூட படிக்காமல் முன்னேற முடியாது. எனவே அவனுக்கு தெரிந்த சின்ன சின்ன வேலை செய்தான். பரிசு சீட்டு விற்றான். ஒரு சீட்டு 10 பைசா கிழித்துப் பார்த்தால், உள்ளே எதாவது பரிசு போட்டிருக்கும். சில சீட்டில் எதுவும் இருக்காது. 10 ரூபாய்க்கு வாங்கி 14 ரூபாய்க்கு விற்றான்.
நிலைமை இன்னும் மோசமானது. பள்ளி சீருடை கிழிந்துப் போனது. வாங்க வழியில்லை. கிழிந்த சீருடையை கையால் தைத்து போட்டுகொண்டு பள்ளிக்குப் போவான். முழு பரீட்சை விடுமுறைக்கு கடைகளில் போய் வேலை பார்ப்பான். சம்பள பணம் மாமா கைக்கு நேரடியாக சென்றுவிடும். இப்படி தட்டு தடுமாறி எப்படியோ படித்து வளர்ந்தான். பலரின் உதவியால் வேலை பார்த்துக்கொண்டே படித்தான்,. இளநிலை கலைக்கல்லூரி முடித்தான். காலம் அவ்வளவு எளிதாய் வாழ விடவில்லை அவனை. படித்த சான்றிதழ்கள் கூட தொலையும் அளவிற்கு சென்றது.
அப்படி இருக்கும்போது தான், சாயங்காலம் வீடு மாடியில் படுத்திருப்பான். அப்படி ஒரு நாள் படுத்திருந்த போதுதான் அவன் அந்தக் கனவையும் கண்டான். எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தவனுக்கு, காலம் எத்தனையோ பாடம் கற்றுக் கொடுத்தது. அதிக ஆசையை கொடுத்த இறைவன், அதை நடத்தியும் வைப்பான். ஆனால் நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி நடக்காது. அப்படியே நடந்தாலும் அதில் ஒரு திருப்தி இருக்காது. வாழ்க்கையில் எல்லாமே பழகி போனது. வாழ்வும் எளிதாகி போனது. அன்பிற்கு மட்டும் ஏங்குவான். யாராவது சற்று அன்பாய் பேசினால் போதும், அளவுக்கு அதிகமாய் அன்பை கொட்டிவிடுவான். இவனுடைய வார்த்தைகள் பலருக்கும் ஆறுதலாய் இருக்கும். வருத்தத்தில் இருப்பவர் இவனிடம் 2 நிமிடம் பேசினாலே போதும். பிரச்சனை ஒண்ணுமே இல்லையென்று யோசிக்கத் தோணும். அப்படி ஒரு தனித்திறமை சாரங்கனுக்கு.
அவன் வேலை பார்க்கும் இடத்தில், அவனுக்கு ஒரு உறவு அவனிடம் அன்பை காட்டியது. நாட்கள் செல்ல செல்ல அதுவே ஆழமான அன்பாய் மாறியது. இத்தனை நாள் எதற்காக காத்திருந்தானோ அதுவே கிடைக்க, வீழ்ந்துவிட்டான் சாரங்கன். சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். விட்டு வைக்குமா காலம்? அந்த அன்பிற்கு நடுவே தீடீரென ஒரு தடை விழுந்தது.
ஆம், உடனிருந்த மற்றோரு நட்பே காலனாய் மாறி ஏதேதோ சொல்லி அன்பை பிரித்துவிட, மனம் உடைந்துப் போனான் (நொறுங்கி போனான் என்றே சொல்லலாம்). உயிரே போனது போல அழுதான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல மாதங்களாய் அழுதான். வாழ்வில் எந்தத் துன்பத்திலும் அழாதவன், இப்பிரிவினில் ரொம்பவே அழுதுவிட்டான். காலை கண் விழித்ததிலிருந்து உறங்கும் வரை, உறக்கத்திலும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழுதான்.
அம்மா, அப்பா, உடன்பிறப்பு என ஒட்டு மொத்தக் குடும்பமும் அவனை நம்பி இருந்தது. இவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இல்லறமே கல்லறைப் போலானது. ஒரு கட்டத்தில் அழுகையை நிறுத்தினான். மனம் மாறி வாழ ஆரம்பித்தான். நிலைமை சீரானது. அவன் அன்று கற்றுக்கொண்ட பாடம், வாழ்வில் மாறாத சோகமோ, ஆறாத காயமோ கிடையாது என்பது.
சாரங்கனுக்கு திருமணம் முடிந்தது. எத்தனையோ கனவுகளோடு திருமண வாழ்வை துவங்கினான். வருபவள் நன்றாக வீட்டை பார்த்துக்கொண்டால், நாம் வெளிநாட்டிற்கு சென்று வேலைப்பார்த்து, வீடு நிலைமையினை மாற்றிவிடலாம் என்று எண்ணினான்.
கற்பனைக்குக் சொல்லவா வேணும், காலம் விட்டு வைக்கவில்லை. விழுந்தது மரண அடி. வந்தவள் இன்னொரு குழந்தைப் போல மனம் கொண்டவள். அவளையும் சேர்த்து கையில் தாங்க வேண்டியதாயிற்று.
ஒருத்தன் சம்பளத்தில் அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என எல்லோரையும் பார்த்துக்கொள்வது சற்று கடினமே. குடும்பம் பெரிது என்பதால், வாடகை வீடு கிடைப்பதே கடினமாயிற்று. பூர்வீக சொத்து எதுவுமில்லை. தான் பெற்ற துன்பம், தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றே எண்ணினான். அந்தச் சமயம் தான் ஊரெங்கும் ஒரு விளம்பரம்.
உங்கள் வாடகை பணமே தவணையானால், வீடு உங்களுக்கு சொந்தம் என்று. அந்தத் தவறான முடிவில் விழுந்து விட்டான். வீடு வாங்கியதால் மேலும் கடன் பெருகி, பிள்ளைக்கு பால் டப்பா வாங்கக்கூட விலை பார்க்கும் அளவிற்க்குப் போனான். காலங்கள் நகர சம்பளம் உயர்ந்தது. சம்பள பணம் உயர, உயர வீட்டுக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக வாங்கினான்.
வெளிநாடு சென்றால் 4 வருடத்திற்குள் எல்லா கடனையும் அடைத்து விடலாமே என்ற எண்ணமே அவனை வாட்டியது. வீட்டை தனியாக விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை. ஆனால், இவன் செய்த வேலையை பார்த்து எத்தனையோ வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது. வேண்டாம் என்று சொல்ல, எல்லா வாய்ப்புமே பிறருக்குப் போய்விடும்.
நமக்கு வெளிநாடு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தப் பின், கடன் தொல்லை தீர்க்க வேற வழி யோசித்தான். MLM, வலைதள தொழில், கமிஷன் வேலை என என்னவெல்லாமோ செய்தான். எல்லாமே இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது.
சாரங்கன் மிகவும் திறமைசாலி. வித்தியாசமான யோசனை கொண்டவன். அவன் திறமை வெளிப்படவேயில்லை. சிகரம் தொட்ட ஓவ்வொருவரின் கதைகளை படிக்க ஆரம்பித்தான். சைக்கிளில் துணி வித்தவர், பிற்காலத்திலே பல அடுக்கு மாடி ஜவுளி கடை வைத்தது… சைக்கிளில் டீ வித்தவர், பிற்காலத்தில் பல கிளைகளோடு உணவகம் துவங்கியது… என ஆரம்பித்து யூடியூப், வாட்ஸப் வரை வளர்ந்தவர்களில் கதைகளை அறிந்துக் கொண்டான்.
நம் நாட்டில் அவ்வளவு எளிதாய் வளர்ந்துவிட முடியாது. அப்படியிருக்க எப்படி அவர்களால் மட்டும் சிகரம் தொட முடிந்தது என்று யோசித்துப் பார்க்கையில், அவன் தெரிந்துக்கொண்ட ஒரே விஷயம், தனிமை. தன்னை சார்ந்து இருக்கும் வரை அவர்களுக்காக நாம் பல தியாகங்களை செய்கிறோம். அதுவே நம் முன்னேற்றத்தை தடுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டான்.
சாரங்கனின் கதையும் அதே தான்.. குடும்பத்தால் தான் வெளிநாடு செல்ல முடியியவில்லை. தன்னை சார்ந்தவர்களுக்காக தன்னுடைய இலக்கை மாற்றாமால், தனக்காக சார்ந்தவர்களை மாற்றியவர்கள் தான் எளிதில் முன்னேறுகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் மகாகவி பாரதியார். பெண் விடுதலை, முன்னேற்றத்திற்காக போராடியவர், தன்னுடைய மனைவியினை அனுதினம் சோத்திற்கே அல்லோல பட வைத்துவிட்டார். மீண்டும் யோசித்தான். மக்களுக்கு வேண்டியதை அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தால், அதில் சிறந்த லாபம் என புரிந்துக்கொண்டான். அதே சமயம் ஒரு நிறுவனம் வீட்டிற்கே உணவை தேடி கொண்டுவந்து தந்தது. அதில் பிரம்மாண்ட வளர்ச்சியும் கண்டது.
குடும்பத்தை விட முடியாது. நேரமும் வேண்டும். என்ன செய்யலாம் என சிந்தித்தான்… ஒரு யோசனை தோன்றியது. தனது இரவு நேரத்தில் பாதியும், விடுமுறை நாட்களில் பிள்ளைகள் தூங்கும் நேரத்தையும் பயன்படுத்த முடிவு செய்தான். தன்னுடைய துறையிலேயே செய்வது எளிதென்று எண்ணி, ஒரு புதிய மொபைல் செயலி ஒன்றை உருவாக்கினான். அதில் குரல் பதிவிடப்படும் பின்பு அதற்கு பதிலளிக்கப்படும். அப்படி துவங்கிய செயலி, சிறிது சிறிதாக வளர்ச்சிக்கண்டது. ஒரு கட்டத்தில் பேசும் அளவிற்கு சென்றது. அப்போது அவனுக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. .
சில கொடியவர்களால் ஒரு பெண்ணின் துணி முற்றிலுமாக அகற்றப்படுகிறது. அதற்குப்பின் அவளால் அவள் சொந்தங்களை கூட எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் அதே சம்பவம் இன்னொரு பெண்ணிற்கு நடந்தபோது, அவளது முகம் மட்டும் மறைக்கப்படுகிறது. யாரென்று பார்க்க சுற்றியிருந்த அனைவருக்கும் ஆவல். ஆனால் முடியவில்லை. அடுத்த சிலமணி நேரங்களிலே, அவளால் அதே இடத்திற்கு வரமுடிகிறது. தைரியமாக எல்லோரிடமும் பேச முடிகிறது. தவறு மற்றவர்களின் பார்வையில் என புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் அவனை யோசிக்க வைத்தது.
அதனால் தனது செயலியில் பேசுபவரின் எந்த ஒரு தகவலும் பதிவு செய்ய முடியாதபடி செய்தான். அது இன்னும் வளர்ச்சியை கொடுத்தது. ஆம், உண்மையிலேயே அன்பிலும், பாசத்திலும் ஏங்கி நிற்கும் நமக்கு ஒரு ஆறுதல் கிடைத்தால் எல்லைவரை செல்லுகிறோம். அன்பாய் பேசும் வார்த்தைகளையும், செய்திகளையும் பத்திரப்படுத்தி நாளை அதை வைத்தே நம்மை மிரட்டுகிறது அவ்வளவு கேவலமான உலகம் தான் இது.
சாரங்கன் தனது குரலை பதிவிட துவங்கினான். சில நாட்களிலேயே பெரிய வரவேற்பு. ஒரு கூட்டமே உருவானது. அவனுடைய குரல் சிலருக்கு ஆறுதலை தந்தது. சிலருக்கு யோசனைகளை தந்தது. நிறைய பேர் பேசத் துவங்கினர். இது சாரங்கனுக்கு பெரிய சந்தோசத்தை தந்தது. ஒரு நாள் ஒரு பெண்ணின் குரல், ரொம்பவே வருத்தத்தோடு, அழுகையோடு பேசிய அந்தப் பெண் சொன்ன வார்த்தை, நான் காதலித்தேன்… இப்பொது அது என் உயிரையே விட்டுவிட வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது. நான் கடைசியாக பேசியது, ஒரு சுயநலம் இல்லாத ஒரு நல்ல உள்ளத்துடன் பேசவேண்டும் என்று தோன்றியது. நட்பு/உறவுகளுடன் பேச எனக்கு மனம் வரவில்லை. உங்களுடைய இந்தச் செயலி எனக்குத் தெரியும். இதில் நான் யாரென்று கூட தெரியாது. ஆகையால் என்னைத் தடுக்கவும் முடியாது. அதுபோக உங்களின் குரல்… அது குரலல்ல. உங்கள் குணம். ஆகவே உங்களிடம் பேசியதே நான் கடைசியாக பேசியதாகயிருக்க வேண்டுமென்று சொன்னாள்.
சற்றும் பதறாமல் சாரங்கன் பேசத் துவங்கினான். அவனுக்கு தான் பிறரின் மனதை எளிதில் புரிந்துக்கொள்ளும் தன்மை உண்டே. அவள் கதையைச் சொல்ல வந்தவளிடம், தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அதுவரை அவன் கதையை யாரிடமும் சொன்னதில்லை. முதல் முறை மனம் திறக்கிறான் சாரங்கன்.
ஓட்டை டவுசர் போட்டுத்திரிந்த நாள்களில் ஆரம்பித்து, படித்தப் படிப்பு, அதை தொலைத்த நிலை, எல்லாவற்றிக்கும் மேல் தன் உயிரையே பிரிந்த நாட்களை சொன்னான்.
திடீரென ஓ…, சாரிங்க நீங்க பேச வந்தீங்க, நான் என்னைப் பற்றி சொல்லிட்டு இருக்கேன். என்னமோ தெரில உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தோணுச்சு. நான் சொல்லிட்டேன். அதை விடுங்க, நீங்க சொல்ல வந்தது சொல்லுங்க என்று பெருமூச்சு விட்டான். அவளுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
அந்த பெண்ணின் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது. நான் காலேஜ் படிக்கும்போது என்னோட தோழி வீட்டிற்குப் போனேன். அடிக்கடி போவேன். அன்னைக்கு ஒரு நாள் அவளோட அண்ணன் அறிமுகம் கிடைச்சது. அப்படி ஒரு நாள் அவளோட வீட்டிற்குப் போனப்போ, ஒரு குங்குமச்சிமிழ் எடுக்க வேண்டியிருந்தது. அது உயரத்துல இருந்ததால, எனக்கு எடுக்க முடியல. அப்போ அவளோட அண்ணன் வந்து எடுத்துக் கொடுத்தான்.
அன்னைக்கு அது எனக்கு தெரியல அந்த நிகழ்வு என் வாழ்க்கையவே திருப்பி போடும்னு. சொல்லிக்கிட்டே மூக்கை உரிந்துக்கொண்டாள். சிறிது சிறிதாக நாங்கள் நெருங்கிப் பழகினோம். ஃபிரண்ட் எல்லாரும் ஏத்தி விட, அதுவே காதலானது. என்னோட குணம் ஒருவாட்டி பழகிட்டா, அவ்ளோ எளிதில் விடமாட்டேன். ஆனால் அவனுக்கு குடி பழக்கம் இருக்குறது தெரியாது. கை நீட்டி அடிப்பான்னு தெரியாது. ஒரு நல்ல வேலைகூட இல்ல. அவன் ஏதோ தொழில் பண்ணிட்டு இருந்தான். எல்லாத்தையும் மாத்திடலாம்னு நினைச்சேன். எங்களோட விஷயம் தெரிஞ்ச அப்பறம், அவனோட தங்கையே (என்னோட ஃபிரண்ட்) அவன் உனக்கு செட் ஆக மாட்டான்டி… விட்டுடுனு எவ்வளவோ சொன்னாள். நான் தான் கேட்கல. தப்புப் பண்ணிட்டேன்.
அப்படினு சொல்லும்போதே அவளோட குரல் தள தளர்த்தது, அழுததுப் போல இருந்தது. உடனேயே சாரங்கனின் குரல், உங்கத் தப்பு எதுவுமே இல்லங்க, நீங்களா வேணும்னு போகல. இந்த உறவு உங்க வயசுல எல்லாருக்கும் வரக்கூடியது தான். உங்கக் குணம் ஒரு தடவ பழகிட்டா உயிரையே குடுப்பீங்க. அந்த நல்ல குணம் தான் ரொம்ப ஆழமாக்கிடுச்சி. இந்த உறவை நான் புரிஞ்சிக்கிட்ட வரைக்கும், அந்த வயசுல உங்கக்கிட்ட நீங்க எதிர்பார்க்குற மாதிரி அன்பா பேச யாரும் இருந்திருக்க மாட்டாங்கனு தோணுது.
சொல்லி முடிக்க… ஆமாம், நீங்கப் புரிஞ்சிக்கிட்டது ரொம்ப சரி. அது எனக்குப் புதுசா இருந்துச்சி. லவ் பண்றப்போ குடி பழக்கத்தை மாத்திடலாம்னு தோணுச்சி. ஆனால் வாழ்க்கைனு வரும்போது, அந்தப் பழக்கம் மாறலைனா ரொம்பவே கஷ்டம்னு சொன்னாள், அந்தப் பெண்.
ரொம்ப சரியாய் சொன்னீங்க என்று சாரங்கன் சொன்னான். இந்த உலகமே குடிப்பழக்கத்தால அழியுது. அவனை விட்டுப் பிரியுறது ரொம்பச் சரியான முடிவு. அந்த மாதிரி ஆளுங்க நாள் ஆக ஆக உங்களையே அடிக்க ஆரம்பிச்சிருவாங்கனு சொல்லி முடிப்பதற்குள்… அதுவும் ஒரு நாள் நடந்தது. அதுவும் எல்லார் முன்னாடியும் என்று சொன்னாள்.
சாரங்கனும் ஒரு நிமிடம் அமைதியாகிப் போனான். நான் அவன் வேண்டாம்னு விலகி போனால், அவன் என் பின்னாலயே வந்துத் தொல்லை குடுக்குறான். எங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதான் செத்துப் போயீடலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு சொல்லிட்டே அழுதாள், அந்த பெண்.
அப்படியெல்லாம் யோசிக்காதிங்க. உங்க வார்த்தையிலே தெரியுது, நீங்க உங்க வீட்டுல உள்ளவங்க மேல எவளோ அன்பு வச்சிருக்கீங்கனு. ஒரு அன்பு நம்மை விட்டு பிரிந்துப்போனா, அது எவ்வளோ கஷ்டம்னு எனக்கு நல்லாவே தெரியும்னு அவனுக்கு உரித்தான மெல்லிய, வருடிய குரலில் சொன்னான்.
நேத்து வந்தவன், அதிலும் நல்ல குணம் இல்லாதவனுக்கே இவ்வளோ கஷ்டம்னா, உங்கள பார்த்து பார்த்து வளர்த்த உங்க அப்பா, அம்மாவுக்கு எவ்வளோ கஷ்டம் இருக்கும். உங்க முடிவு அவங்கள சரியா வளர்க்க தெரியலைனு தலைகுனிய வச்சிடும். வாழ்க்கைல என்னோட கதையை கேட்டீங்க இல்லையா. உங்கள மாதிரி ஒரு உறவு எனக்கு கிடைச்சி பிரிந்துப்போச்சி. அதுவும் ஒரு காரணமே இல்லாம, உங்களுக்கு அதுல என்ன தோணுச்சு என்று சாரங்கன் கேட்க, நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுருக்கீங்கனு தோணுச்சு என்றாள், அவள்.
ஆனால் எனக்கு ஒரு விஷயத்தை தாங்க கத்துக் கொடுத்துச்சி. வாழ்க்கைல ஆறாத காயம், மாறாத சோகம்னு ஒன்னு இல்லை. எல்லாமே மாறும். என்ன… நாட்கள் எடுக்கும். அவ்வளோ தான் என்றான்.
சாரங்கனின் இந்த வார்த்தை, அவளுக்கு ஒரு தோள் கொடுத்து அதில் சாய்ந்துக்கொள்ள சொன்னது போல் இருந்தது. தனக்கு நடந்தது ஒண்ணுமே இல்ல, கண்டிப்பா வாழ முடியும்னு தோணுச்சு. தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டாள். தைரியமாக என்னுடைய வேலையை பார்ப்பேன் என்று சொன்னாள். சாரங்கன் உடனே அவனை பார்த்துப் பயப்படாதீங்க அவனோட நம்பர் வந்தா எடுக்காதீங்க. குறிப்பா எந்தச் சமயத்திலும் தனியா மட்டும் இருக்காதீங்க. தனியா எங்கயும் போகாதீங்க. இது ரொம்ப முக்கியம்னு சொன்னான்.
ஆரம்பத்தில்தான் அவன் உங்களுக்குத் தொல்லைக் கொடுப்பான். நாள் ஆக ஆக அவனே விலகிடுவான். அதுவரை மட்டும் நான் சொன்ன மாதிரி முயற்சி செய்யுங்கள் என்றான்.
அந்த ஒரு பதிவு சாரங்கனின் செயலியை பெரிய அளவிற்கு வளர்ச்சி அடைய செய்து விட்டது. இதுப் போல பல நிகழ்வு வரவே, அவனுடைய செயலி அபரிவிதமான வளர்ச்சிக் கண்டது. இதன் வளர்ச்சியை பார்த்த ஒரு பெரிய நிறுவனம், அந்த செயலியை பெரிய தொகை (எத்ததனையோ மில்லியன் டாலர்) கொடுத்து வாங்கியது.
சாரங்கனின் பல நாள் கனவு நிறைவேறியது. கடன் எல்லாம் அடைத்துவிட்டான். மன மகிழ்வுக்கு அளவே இல்லை. காலம் இறுதியில் அவனுக்கு கை கொடுத்துவிட்டது என்று நினைத்தால், நிச்சயம் இல்லை. வேறு விதமாக தாக்கியது.
இரவு பகல் பார்க்காமல் உழைத்ததால் உடல் உபாதைகள் வந்து, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். பல லட்சங்களை செலவழித்தப் பிறகு மீண்டு வந்தான். ஆனால் பழைய மாதிரி அவன் உடல் இல்லை. இருப்பினும் சாரங்கன் இறுதியில் சாதித்துவிட்டான்.
நிச்சயம் ஒரு மனிதனின் சாதனைக்கு, அவனைச் சார்ந்து யாரும் இருக்கக்கூடாது என்பது சாரங்கனின் கதையில் புரிகிறது.
– கதைப் படிக்கலாம் – 119
இதையும் படியுங்கள் : ஜோதி