எதிரில் அமர்ந்திருந்த என்னை ஏற இறங்கப் பார்த்தார் தலைவர். பல வருடங்களாகவே செய்திகளிலும் டிவியிலும் பார்க்கப்பட்ட, மக்களின் செல்வாக்குக் குறையாத பிரபல அரசியல் கட்சித் தலைவர் எதிரே அமர்ந்திருக்கிறேன் என்பதே, கண்களுக்கு அடங்காத பெருங்கனவாக இருந்தது எனக்கு.
அவருக்கு சற்றுத்தள்ளி, இடது, வலது புறங்களில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அமர்ந்து, எனது கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெரிய அறையில் குளிர்சாதனத்தின் மெல்லிய சத்தம், வினோத விலங்கொன்றின் உறுமல் போல கேட்டது.
“ரெண்டே நாள்ல, தமிழ்நாட்டுல ட்ரெண்டிங் ஆயிட்டே நீ?” தலைவர் என்னை பார்வையால் ஊடுறுவிப் பார்த்துக் கொண்டே கேட்டார். நான் அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல், சிரிப்பில்லாத சிரிப்பை இதழ்கள் வழியாகக் கேவலமாக வழியவிட்டேன்.
“சொல்லுய்யா. அன்னிக்கு நடந்ததை முழுசா சொல்லு” என்றார். அவர் அப்படி கேட்டதுமே கூட்டலோ குறைத்தாலோ இல்லாமல், என்ன நடந்ததோ, அதனை அப்படியே தலைவரிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
எனது பெயர் நாதமுனி, நான் ஒரு நெசவாளி. மூன்று தலைமுறைகளாக கைத்தறியில் புடவைகள், வேட்டிகள், தூவாலைகள் நெய்து தருவதுதான் எங்கள் குடும்பத் தொழில். விசைத்தறிகள் தலையெடுக்க ஆரம்பித்தப் பிறகு, எங்கள் தொழில் அழிந்து விட்டது. ஊரைச் சுற்றிக் கடன். வாழ்வதே பெரும் போராட்டம். பசிக்கும் வயிற்றுடன் குழந்தைகள், எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிக வேலை வாங்கிக் கொண்டு சொற்ப சம்பளம் தருவார்கள். வாழ்வதே பெரும் சவாலாகவும் நெருக்கடியாகவும் இருந்தது. வேறு வழி இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டேன். ஆரம்பத்தில் கழிவிரக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. போகப் போக இதில் ஈட்டிய பணம் எங்களுக்கான வாழ்க்கை உத்தரவாதத்தையும் உயிர் வாழ்வதற்காக உறுதியையும் கொடுத்தது.
ஆண்களும் பெண்களுமாக நாங்கள் இருபது பேர்கள் இருக்கிறோம். அனைவரும் நலிவடைந்த நெசவாளர்கள்தான். அதில், மீனவர்களும் விவசாயிகளும் உண்டு. கடலை ஆண்ட மீனவர்களையும் வயலை நேசித்த விவசாயிகளையும் உடைகள் நெய்த நெசவாளிகளையும் பிச்சை எடுக்கும் கீழ்மை நிலைக்கு உட்படுத்தியிருப்பது ஊழ்வினை செயலும் அல்ல… தலைவிதியும் அல்ல…. இந்தச் சமூகத்தால் இழைக்கப்பட்ட பேர் அநீதி.
எங்கள் எல்லோருக்குமே, நாற்பது, ஐம்பதுக்கும் மேல் வயதாகிறது. குழுவாகச் செயல்படுகிறோம். நான்தான் தலைவன். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர, மற்ற எல்லா நாட்களும் எங்கள் குழு ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கும். ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு ஊர் என்று ஒழுங்குப் படுத்தி வைத்திருக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் வரவு-செலவு சார்ந்தப் பணிகளைப் பார்ப்பதற்காக எல்லோரும் ஒன்று கூடுவோம். இப்படி எங்களது நிர்வாகச் செயல்களை வரையறுத்து வைத்துள்ளேன்.
அன்று எனக்குப் பிறந்தநாள். அதற்காக நான் பொறுமை காக்கப் போவதில்லை. நான் அமைதியாக நிற்பதைப் பார்த்து, பயந்து விட்டதாக அவன் தவறாக அவதானித்தான், செயற்கையாக நெஞ்சை விடைத்து, குரலில் கூடுதலாக ஒலியைக் கூட்டி, எகிறினான், முரட்டு வார்த்தைகளைத் திரட்டியெடுத்து, வரிசைக்கிரமமாக அவன் என்னை வசைமாறி பொழிந்துக் கொண்டிருந்தான். நான் பொறுமைக்காத்தேன். எனக்குத் தெரியும். என்னை நிந்திக்கும் நோக்கத்தின் உச்சக்கட்ட நிலையைத் தொடும் போது, கடைசி வார்த்தை பிரயோகமாக அவன் எதை சொல்வான் என்பது. அதற்காகத்தான் காத்திருந்தேன். கவனிக்காமல் அவன் மீது மோதிவிட்டேன். அதற்காக எத்தனை நாசகார வார்த்தைகள் இருக்கிறதோ, அத்தனையையும் கொண்டு என்னை அவன் திட்டிக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் நான் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அவன் வெள்ளை உடை மீதும் அவன் மீதும் நான் மோதியதை பெரும் குற்றமாக நினைத்துக் கொண்டுவிட்டான். ‘ஒரு பிச்சைக்காரன் தன் மீது மோதுவதா?’ என்பதே அவனது கோபத்துக்குக் காரணமாக இருந்தது.
என்னை இப்போது அவநாகரீகமாக திட்டிக் கொண்டிருப்பவன் பெயர் குமரேசன். பிரபல கட்சியின் வளர்ந்து வரும் அரசியல்வாதி. இரவானால், குடித்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, தகராறு செய்து பணம் தராமல் வருவதை வழக்கமாக வைத்திருப்பவன். சில நாட்களுக்கு முன்பு, பிரியாணி கடையில் ஓசி பிரியாணிக்காக தகராறு செய்ததாக, அவன்மீது, போலீசில் வழக்குப் பதியப் பட்டிருக்கிறது. இப்படியான காரணங்களால் உள்ளூரில் பிரபலம் அவன், அதனாலேயே, “ஒரு பிச்சைக்காரனிடம் இவனுக்கு என்னத் தகராறு?” என்ற கேள்வியோடு ஒட்டுமொத்தக் கடை வீதியும் முகச்சுளிப்புடனும் கூடுதலான குழப்பத்துடனும் எங்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்தது.
பெருமழையின் இரைச்சலாக, கத்திக்கொண்டிருந்த அவன் மீது நங்கூரமாக நிலைக்குத்திய என் பார்வையை அங்கும் இங்கும் எங்கும் நகர்த்தவே இல்லை. கஞ்சி போட்டு மொடமொடப்பாய் இருந்த சட்டை பையில் அவன் கட்சித் தலைவர், பழைய சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தார். வேட்டியில் கட்சியின் கரை மினுமினுத்தது.
இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் வெள்ளையும் சொள்ளையுமாக உடைகளை அணிந்துக் கொண்டு, பலரும் எங்கள் தொழிலை பார்க்கிறார்கள். பிச்சையையும் கார்ப்பரேட் லெவலுக்குக் கொண்டுச் சென்று விட்டார்கள் இந்தச் சண்டாளர்கள்.
எனது கைகள் தன்னிச்சையாக, வலது தோளில் தொங்கிக் கொண்டிருந்த அழுக்கேறிய பாலிதின் கோணியை மெள்ள இறக்கி கீழே வைத்தது. எனது செயலை அவன் கவனித்தான் என்பதை நானும் கவனித்தேன். ஆனாலும் உச்சந்தலையில் கழிந்து விட்டுக் கடந்து செல்லும் காக்கையின் வேகத்தில், நான் செய்த ஒர் செயலை அவன் கவனிக்கவில்லை. எனது வலது காலை, நான் அணிந்திருந்த டயர் செருப்பிலிருந்து தீ விறகை இழுப்பது போல் பாதி வெளியே இழுத்து வைத்துக் கொண்டேன். இது போன்ற தருணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேகக் காலணி அது. ஒவ்வொன்றும் ஒரு கிலோ நிகர எடைக் கொண்டது பொறி கலங்கும் படியான அதிரடித் தாக்குதலுக்கு மாத்திரம் மட்டுமல்ல… துடைத்தழிக்க முடியாத அவமானத்தையும் எதிராளிக்குத் தரவல்ல பேராயுதம் அது. யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வல்லாயுதம் அது.
குமரேசன், கடைக்காரர்களும் பொதுமக்களும் தன்னை கவனிப்பதை அலைபாயும் கண்களால் கவனித்துவிட்டு, பெருங்குரலெடுத்து, கூடுதலான அதிகாரத் தோரணையில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். எனக்கு மட்டும்தான் தெரியும். பத்து பைசாவுக்கு பெறாத வெற்று அதிகாரம் அது என்பது.
நடப்பதை எல்லாம் சற்று தூரத்தில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் அவனுடைய ஸ்மார்ட் போனில், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்தது.
“ஓடிப்போ… பிச்சைக்கார நாயே” என்று ஓங்கு தாங்கானக் குரலில் அவன் கத்தி முடித்த அடுத்த நொடியே, ஒளியின் வேகத்தில் செயல்பட்டேன். வலதுகாலை சட்டென்று மடக்கி உயர்த்தி, டயர் செருப்பை என் கைக்குக் கொண்டு வந்தேன். இடது கையால் அவனது சட்டையை கொத்தாய் பிடித்து, அவனது இரண்டு கன்னங்களிலும் மாற்றி மாற்றி விளாசினேன். கைத்தறி இழுவைக் கட்டைகளை இழுத்து உரமேறிக் கிடந்த எனது கைகள் இன்றைக்கும் வலு குறையாமல் இருந்தது. அதன் காரணமாகவே, விழுந்த செருப்படி ஒவ்வொன்றும் இடி போல் இறங்கியது. அவனின் சட்டைப் பைக்குள் சிரித்துக் கொண்டிருந்த கட்சித்தலைவர் எகிறி கீழே விழுந்து காற்றில் பறந்துச் சென்றார்.
என்னிடமிருந்து இப்படியொரு அதிரடியை, செருப்படியை எதிர்பாக்கவில்லை.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேர்களும் அதிர்ந்தார்கள். அதிலும் கடைக்காரர்கள் முகத்தில் கூடுதலான அதிர்ச்சித் தெரிந்தது. பின்னே, வாரந்தோறும் செவ்வாய்கிழமை தங்கள் கடைகளில் அமைதியாக வந்து நின்று பிச்சைக் கேட்கும் ஒருவன், அரசியல்வாதியையே செருப்பால் அடிப்பதும் அவர்களின் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத பேரதிர்ச்சியாக இருக்கக் கூடும்தானே? இப்போதும் கூட, என்னை ஒரு பிச்சைக்காரனாகத்தான் பாவித்தார்களேத் தவிர, ஒருவர் கூட நெசவாளியாகப் பார்க்கவில்லை. இது பார்வைக் கோளாறு இல்லை. சமூகக் கோளாறு.
செருப்பை காலில் அணிந்துக் கொண்டு, கோணியைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டு நடந்தேன்.
போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், எனது பக்கமாகத் திரும்பி, என்னை எடுத்துவிட்டு, குமரேசன் பக்கமாகத் திரும்பினான்.
அவன் அந்த வீடியோவை யூட்யூப்பில் உடனடியாக போடக் கூடும். லட்சக் கணக்கானோர் பார்த்து, வைரல் ஆகவும் கூடும். அப்போதும், இந்தச் சமூகம் “பிச்சைக்காரனுக்கு எவ்வளவு திமிர் பார்த்தியா… கலிகாலம்” என்று கரித்துக் கொட்டுமே தவிர, என்னை நலிவடைந்த ஒரு நெசவாளியாகப் பார்க்காது. அதனால் என்ன… இப்போதும் பிச்சைப் போட்டு எங்களை உயிர் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் இந்த சமூகம்தானே சொல்லிவிட்டுப் போகட்டும் என்று யோசித்தபடியே திரும்பி, குமரேசனைப் பார்த்தேன். அவன் எதுவும் நடக்காதது போல் எழுந்து, சட்டையிலும் வேட்டியிலும் ஒட்டியிருந்த தெருப்புழுதியை உதறிவிட்டு எதிர்திசையில் நடந்தான். அவன் ஒரு முழு அரசியல்வாதியாகி விட்டான் என்பது நடந்த நடையிலேயே எனக்குத் தெரிந்தது. அசிங்கப்படுவதற்கு அஞ்சுபவன் அரசியல்வாதியாக முடியுமா என்ற கேள்வி அந்த நடையில் தெரிந்தது.
“அறிமுகமே இல்லாத அந்த இளைஞன் எடுத்த வீடியோதான் தலைவரே, என்னை உங்க முன்னாடி உட்கார வெச்சிருக்கு” என்று நடந்ததை முழுவதுமாக சொல்லிமுடித்து விட்டு, இப்போது அவரது முகத்தை நான் ஊடுறுவிப் பார்த்தேன்.
“சரிய்யா. தேர்தர்ல உனக்கு சீட் குடுத்தா, எவ்வளவு செலவு பண்ணுவே?”
“பத்து லட்சம் வரை பண்ண முடியும் தலைவரே” சற்றும் யோசிக்காமல் சொன்னேன். தலைவர், எனது உடனடி பதிலால் ஈர்க்கப்பட்டார். இடம்-வலமாக அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தார்.
“பார்த்தீங்களாய்யா…. வார்டு தேர்தலுக்கு ரெண்டு லட்சத்துக்கு மேல செலவு பண்ண முடியாதுனு நம்ம கட்சிக்காரங்களே மூக்கால அழுவுறானுங்க. அதே வார்டு தேர்தலுக்கு நாதமுனி பத்து லட்சம் வரைக்கும் செலவு பண்றேன்றாப்ல. தனக்கு வர்ற வாய்ப்பு கை நழுவி போயிடாம எப்படி வளைக்குறாப்ல பாருங்க” என்றவர், எனது பக்கமாகத் திரும்பினார்.
“முப்பத்தி மூணாவது வார்டுல, நம்ம கட்சி வேட்பாளர் நீதான் நாதமுனி, நீ ஜெயிச்சடுவே. அதனால, கூடுதலான தகவல் ஒன்னையும் இப்பவே சொல்லிடுறேன். அந்த மாநகராட்சிக்கு நீதாம்பா மேயர்” என்றார். அதைக் கேட்ட வலது பக்கம் அமர்ந்திருந்த இரண்டாம் கட்டத் தலைவரான ஜனநாயகம் என்பவர், “இவனை, மெம்பராக்கினா மட்டும்போதும் எதுக்கு மேயர் பதவியெல்லாம்?” என்பதாகக் கேட்டார்.
“ஜனநாயகம் உன்னோட பேர்ல மட்டும் ஜனநாயகம் இருந்தா, பத்தாது. செயல்லேயும் இருக்கணும். அந்தக் குமரேசன் பயலால ரெண்டு நாளா கட்சி பேரு சமூக வலைத் தளங்கல்ல நாறிக் கெடக்கு. ‘பிச்சைக்காரங்ககிட்டே வாங்கித் திங்குறது கட்சித் தொண்டன் மாத்திரமா…? இல்லே, தலைவருமா?’ னு எதிர்கட்சிக்காரன் நாத்தக் கிழி கிழிக்கறான். இந்த இமேஜ், அடுத்த மாசம் நடக்கப் போற, நகர் புற உள்ளாட்சித் தேர்தல்ல எதிரொலிக்குமா.. இல்லையா?”
“கண்டிப்பா தலைவரே…”
“அதான், நாதமுனிக்கே சீட்டைக் குடுத்து, ‘மேயராகிறார் பிச்சைக்காரர்’னு செய்தியை கசிய விட்டோம்னு வெச்சுக்க… நம்ம கட்சில, பரதேசி, பண்டாரம், பிச்சைக்காரன் கூட மாநகராட்சி மெம்பர் ஆகலாம்… மேயர் ஆகலாம்னு மக்கள் பேசிக்கிடுவாங்கல்ல, கட்சி நடத்துறது பெருசு இல்லைய்யா… எப்பவும் நாம டிரெண்டிங்குலேயே இருக்கணும்” என்றபடியே என்னை பார்த்தவர்,
“மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு வரேன் நாதமுனி. நீ ஆக வேண்டியதை பாரு.” என்றபடியே எனக்கு விடைக் கொடுத்தார்.
ஊர் திரும்பியதும் வீடியோ எடுத்த அந்த இளைஞனைத் தேடிப் பிடித்து, சமூக வலைத்தளத்தில் எனக்கென்று பிரத்யேக பக்கத்தை தொடங்கினேன். அதற்கு அட்மினாக அந்த இளைஞனையே நியமித்தேன். அடுத்ததாக, குமரேசனை நேரில் சென்று சந்தித்து, அவனுக்கொரு பொன்னாடையையும் மாலையையும் போட்டு பழத்தட்டை கொடுத்து, இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். தேர்தல் பணி செய்வதற்கான தளபதியாக குமரேசனையே நியமித்தேன். மேயராக பதவி ஏற்றதும் சில டெண்டர்களை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தேன். எனது அரசியல் சதுரங்கத்தைத் தெளிவாகக் கட்டமைத்தேன்.
மின்சார கம்பியில் கால் வைத்தது போல், எப்போதும் ட்ரெண்டிங்லேயே என்னை வைத்துக் கொண்டேன். அரசியல்வாதியாக ஜொலிப்பதற்கு இன்றைய காலத்துக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது.
ஒன்று பெரும் பணம். மற்றொன்று ட்ரெண்டிங்.