சேவலின் கூவல் ஒலிக்கும் சூரியனின் சுட்டெரிக்கும் ஒளிக்கும் ஒரு அசைவும் இல்லாமல் பாறை போல் படுத்திருந்தான் மாதவன். கூவும் சேவலும் அந்த பாறை தோள்களைப் பிராண்டி பார்த்துவிட்டு கீழே இறங்கி விட்டது.‘40 வயசுல நல்ல தூக்கம் கிடைக்காதுதான் அப்படியே கிடைச்சாலும் ஆறு மணிக்கு அப்பறம் ஆட்கள் நடமாடும் வீதியில வீட்டு வாசல்ல அசையாம படுத்து கிடந்தா ஆறடிக்குழி தயாராயிரும் அவரை எழுப்பிவிடு’ என்றாள் வசந்தா. கல்லைக் குடித்துவிட்டு கனவில் மூழ்கிப்போன மாதவனுக்கு சட்டென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. விழித்துப் பார்த்தால் சிவந்த முகத்துடன் மாதவனின் ஒரே மகள் மதி.அறைவிட்ட கைகளில் அரை சொம்பு தண்ணீருடன் அதனை இவர் முகத்தில் ஊத்தலாமா? இல்ல முதுகில் ஊத்தலாமா? என்ற யோசனையுடன் நின்று கொண்டிருந்தாள். கண்கள் இரண்டையும் தேய்த்து காலை விடியும் போதே கலவர பூமியாய்தான் இருக்கும் மாதவனின் வீடு. வீட்டை இழுத்து பூட்டிவிட்டு வீட்டுக்காரி வசந்தா வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள். மதியிடம் ‘கட்டுத்தறியில கட்டி கிடக்கிற பசுமாடு இரண்டையும் இந்த கட்டாத எருமையை புடிச்சு கொண்டு போய் வயக்காட்டுல கட்டி போட்டு வர சொல்லு. நீ அங்க இங்கனு சுத்தி தெரியாம நேரா நேரத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு போய் சேரு’ என்று கூறிவிட்டு வாசலில் வந்து நின்ற குட்டியானையில் ஏறி பக்கத்து ஊரு தோப்புக்கு நாற்று நடப்போகுது இந்த ஒரு விவசாயிகள் எல்லாம்.இரண்டு வருடமா கடுமையான பஞ்சத்தால இந்த ஊரோ இப்போ காஞ்ச மேடு தண்ணி இல்லாத பொட்டக்காடு ஆனா தண்ணி அடிக்கிற ஆளுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. நேத்து ராத்திரி அடிச்ச போதை தெளியாம திருத்திருன்னு முழிச்சுக்கிட்டே எந்திரிச்சு மூஞ்சிய கழுவிட்டு அந்த முக்கா கால் சட்டையோடு கைலிய எடுத்து கட்டிக்கிட்டு கட்டுத்தறிக்கு போனான் மாதவன். அவன் மகளோ அங்கே இங்கே அசையாமல் அவனை முறைத்துப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள். கட்டிக் கிடக்குற பசு மாடுகளுக்கு பதிலா கட்டிக் கிடக்கிற காளை மாடு இரண்டையும் அவிழ்த்துகிட்டு போவாரோன்னு ஒரு சந்தேகம்.‘ஏப்பா நீ நேரா மாட்ட அவிழ்க்க போயிட்ட முதல்ல கட்டுத்தறிய கூட்டி அள்ளி வச்சுட்டு அதையும் வயல்ல கொண்டுபோய் கொட்டிட்டு வா இதையும் சொல்லனுமா? சொல்லாம நீ எதை தான் செஞ்சிருக்க? வயிறு முட்ட குடிக்கிறத தவிர.சரி பக்கத்து ஊர்ல ஏதோ கூட்டம் நடக்குதாம் அதனால கடை எதையும் திறந்து இருக்க மாட்டாங்க. ஊரு பயலுக எல்லாம் வயக்காட்டுல தான் இருப்பாங்க நீ அவன் சொன்ன இவன் சொன்னான்னு எதையாவது குடிச்சு தொலைஞ்சுட்டு வராம மாட்ட கட்டுனோமா குப்பையை கொட்டினோமானு நேரா வீட்டுக்கு வந்து சேரு நான் அப்பதான் வீட்டு சாவி எங்க இருக்குன்னு சொல்லுவேன். இல்ல நீ சுத்தி திரிஞ்சிட்டு தான் வருவேன்னு சொன்னா இன்னைக்கு பூரா நீ பட்டினி தான் சீக்கிரம் போயிட்டு வா’ என்றாள்.‘வரவர உங்க அம்மாவ விட நீ ரொம்ப என்னைய திட்டுற குட்டி இரு வந்தற்றேன்’ என்று கூறிவிட்டு வயக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இன்று ஆடு மாடுகள் வளர்த்தாலும் போதுமான வருமானம் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் தான். மாதவன் அந்த காலத்திலேயே ஐந்தாம் வகுப்பு வரை படித்தவன் ஆனால் என்ன ஐந்தாம் வகுப்பையே ஐந்து முறை படித்ததால் அவனுடைய அப்பா அவன் படிப்பை நிறுத்திவிட்டு பண்ணை வேலையில் இணைத்துக் கொண்டார்.
நாட்கள் செல்லச் செல்ல படிப்பில்லாத வாழ்க்கை பண்பின்றியும் போனதால் வாழ்வே நரகமானது.பண்ணை வேலை பார்த்த கைகள் இன்று சீட்டாடவும் கள்ளிறக்கவும் துடிக்கின்றது. அரச மரத்தின் நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த கிராமத்து தூண்களில் ஒருவன் ‘ஒரு கை குறையுது மாதவா நீயும் வரியா?’ என்று கேட்க ‘வரனும்னு ஆசை தான் ஆனா, நீ வந்தா தான் சாவிய குடுத்துட்டு போவேன் அப்படின்னு சொல்லி பள்ளிக்கூடத்துக்கு போகாம மதி வீட்ல உட்கார்ந்து இருக்கா நான் போகணும்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்ப முன் ‘சரி சீட்டாட தான் வரல ராமு இந்த ரெண்டு பனைலையும் குடத்த கட்டி வச்சிருக்கான் இறக்கி மட்டும் கொடுத்துட்டு போயா’ சரி என்று பனையில் இருந்து கள்ளை இறக்கி சீட்டாடி கொண்டிருந்த சிநேகிதர்களிடம் கொடுத்தான்.கள்ளை பார்த்த உடனே வீட்டின் நினைப்பு மறந்து போய் மதுவை குடிக்க தொடங்கினான். குடித்ததும் தெரியவில்லை குப்புறப்படுத்ததும் தெரியவில்லை உச்சி வெயில் நெத்தியில் அடித்ததும் தான் வீட்டின் ஞாபகம் வந்தது. வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து பார்த்தான் அப்பா சாப்பாட்டிற்காக வந்தால் சாவிக்கொத்தை கொடுக்க வேண்டுமே என்ற ஒற்றை எண்ணத்தோடு மதி வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தாள். சாவிக்கொத்தை தூக்கி மாதவனின் முகத்திலேயே எரிந்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு ஓட ஆரம்பித்தாள் அங்கும் நிம்மதி இல்லை சிக்கலான குடும்பத்தில் சிக்கிக் கொண்டு, நண்பர்கள் அவளிடம் ‘உன் அப்பா சாலைகளில் விழுந்து கிடப்பாரே நான் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லும்போதும் சரி ஆசிரியர்கள் படிப்பில் கவனம் செலுத்த சொல்லும்போதும் சரி மதியின் மனம் படும் பாடுகளுக்கு அளவே இல்லை.
இது எந்த சிந்தனையுமே அடுத்த சுற்று மது உள்ளே போகும் வரை மட்டுமே மாதவனுக்கு நினைவிருக்கும் வயிறுமுட்ட உண்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்த மாதவனின் வீட்டு வாசலில் ஒரு வாகன சத்தம்.‘ டேய் மாதவா பக்கத்து ஊர்ல நடக்குற அரசியல் கூட்டத்திற்கு கூட்டம் காட்டப்போன 200 ரூபாய் காசும் ஒரு பாட்டிலும் தர்றாங்களாம் எப்படியும் ராத்திரி அதை வாங்க அந்த ஊருக்கு தான் போகணும் வா போவோம்’ என்று கூப்பிட்டவுடன் கிளம்பிவிட்டான்.வயலில் கட்டி கிடந்த பசுமாடுகள் வராத வீட்டுக்காரனுக்காக காத்திருக்க கட்டுத்தறி காளை மாடுகள் கழனி தண்ணிக்காக காத்திருக்க பாட்டிலை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு வந்தவனோடு கிளம்பி விட்டான் மாதவன். வசந்தாவும் களையெடுத்து முடித்தவுடன் கைச்செலவுக்கு ஆகுமே என்று அவளும் அந்த கூட்டத்திற்கு வந்து விட்டாள். மதியோ மன சங்கடத்தில் போகும் இடம் தெரியாமல் அல்லாடி கொண்டிருந்தாள். வகுப்புகள் முடிந்தவுடன் அவளின் ஒரே நண்பனும் பேச்சுத் துணையுமான பள்ளிக்கூட காவலாளியிடம் தன் கவலையெல்லாம் கொட்டி விட்டு கைவீசி நடக்கத் தொடங்கினாள். ஆனால் ஆறு மணி வரை அவளை தேடி யாரும் வரவில்லையே என்று காவலாளிக்கு ஒரு ஆச்சரியம்.
பக்கத்து ஊரில் நடைபெற்ற அந்த அரசியல் கூட்டத்தில் வழக்கம்போல் வயிறுமுட்ட குடித்துவிட்டு மது ஒழிப்பை பற்றி பேசிக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டம் கலைந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு பணத்தை வாங்க மனைவியும் பாட்டிலை வாங்க மாதவனும் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் இருவரும் பார்த்துக்கொண்ட போது தான் இவர்களுக்கு பிறந்தவள் இப்போது என்ன செய்கிறாளோ? என்று இருவரும் யோசிக்க தொடங்கினர். வசந்தா அவனை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு வந்தவர்களோடு அவசர அவசரமாக வண்டியில் ஏறிச் சென்றுவிட்டாள். மாதவனும் வாங்க வேண்டியதை வாங்கி வயிறுமுட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.அந்த அந்தி மாலை நேரத்தில் அந்த சின்ன சிறுமி மதி மட்டும் காய்ந்த வயல்களுக்கு இடையே போடப்பட்ட கருப்பு சாலையில் ஏதோ ஒரு ஏக்கத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வசந்தா விற்கோ வரும் வழியெல்லாம் மதியை பற்றிய சிந்தனை தான் திடீர் என்று ஒரு சத்தம் இவர்கள் வந்த குட்டியானை சட்டென்று நின்றதும் அனைவரும் பதறிப் போய் கீழே இறங்கினர் அடிபட்டு கிடந்தது ஒரு சிறுமி மதி. இவர்களை பின்தொடர்ந்தே வந்த மாதவனும் கூட்டத்திற்குள் நுழைய மதியை பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.
அனைவரும் அவளைத் தூக்கி வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவரோ அவர்களிடம் அதிகம் ரத்தம் போயிருப்பதாகவும் உடனே அவளுக்குப் பொருந்தும் ரத்த வகையை ஏற்ற வேண்டும் என்றார். மாதவனுக்கும் அதே வகை ரத்தம் தான் நான் கொடுக்கலாமா என்று மாதவன் கேட்டவுடனே,‘யாருங்க நீங்க வாடை இங்க வேற அடிக்குது ரத்தம் கொடுக்கவா என்று கேக்குறீங்க முதல்ல வெளியே போங்க’ இன்று கட்டத் தொடங்கினார் மருத்துவர். மாதவனுக்கு திக்கென்று ஆனது யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தான் யாரிடமும் கிடைக்கவில்லை நம்பிக்கை இழந்த அவன் ஒரு மூலையில் அமர்ந்து அழ தொடங்கினான். வசந்தாவோ அவனை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக ‘ஏன் இங்கே உட்கார்ந்து அழுகுற அதான் வாங்கி வச்சிருப்பியே அத குடிச்சிட்டு எங்கேயாவது போய் விழுந்து கிட’ என்று அவளும் கத்த தொடங்கியதால் மனமுடைந்து போனான் மாதவன்.
எதார்த்தமாக அங்கு வந்த பள்ளிக்கூட காவலாளி மதியை பற்றி கேள்விப்பட்டு உடனே தனக்கும் அதே ரத்த வகை தான் என்று சொல்லிவிட்டு சிறிதும் தாமதிக்காமல் அவசர பிரிவுக்குள் சென்றார். ஆயிரம் தான் அப்பனாக இருந்தாலும் ஒரே இரத்த வகை என்றாலும் குடித்து இருந்ததால் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் குடிகாரன் ஒரு நல்ல குடிமகனாக மாறினான். ஓரிரண்டு வாரங்களில் மதியும் நலம் பெற்று வீடு திரும்பினாள். குடியை விட்டதால் தன் பெரும் முயற்சியினால் தன் பசு மாடுகளை வைத்து பண்ணையை உருவாக்கினான் மாதவன்.இப்போது வசந்தா அவனிடம் பேசுவதில்லை என்றாலும் வசந்தா தற்போது அவனிடம் பேசவில்லை என்றாலும் மதிப்பும் மரியாதையும் வளர்ந்திருக்கிறது.
ஒரு நாள் ஊருக்குள் வந்து போக இருக்கும் ஒற்றைச் சாலையின் ஓரத்தில் ஒரு சிறிய கடையின் திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது அவ்வழியாக சென்ற மாதவன் அதில் ஒருவனை கூப்பிட்டு விசாரித்தான்.‘என்ன தம்பி வயக்காட்டுக்கு நடுவுல ஒரு இடத்தை வாங்கி திறப்பு விழா நடத்திக்கிட்டு இருக்கீங்க என்ன செய்தி?’ என்று கேட்க அவனோ ‘அது ஒன்னும் இல்லண்ணே ஊர் முன்னேற்றத்திற்காக மக்கள் அசதி தீர்க்கும் மருந்தகம் திறந்திருக்காங்க’ என்று கூற நகைத்துவிட்டு நகரத் தொடங்கினான் மாதவன்.