அந்த காலை வேளையில், பேருந்து நிலையத்தில் நண்பருக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏழு மணிக்கெல்லாம் பரபரப்பாகிவிட்ட பேருந்து நிலையத்தில், சக மனிதர்களின் நடவடிக்கைகளை நிதானமாக மென்று தின்றுகொண்டிருந்தது, என் கவனம்.
“ ஏம்பா… நீயும் டிராஸ்ப்பருக்கு அல்லாடிட்டுகிடக்கறே.. ஏதாவது குடுக்க வேண்டியத குடுத்து வாங்கிக்கலாமுல்ல… “ அங்கிருந்த நடத்துனர்களுக்குள் நடைபெற்ற உரையாடலின் அந்த ஒற்றை வரி, கோவத்தை எனக்குள் சுரக்கச் செய்தது.
யார் ஒருவரின் பொதுபுத்தியிலும் காசு கொடுத்து தங்கள் வேலையை முடித்துக்கொள்ளுதல் தவறு என்கிற எண்ணம் இம்மியளவும் இல்லை. சரி. எதிர்முனையில், வேலையை முடித்துத்தர பணம் எதிர்பார்ப்பவர்கள், அப்படி நடந்துகொள்ளவதற்கான காரணம்? வைரஸ் காய்ச்சலின்போது, மருத்துவர் நாக்குக்கு அடியில் வைக்கும் தெர்மாமீட்டரில் எகிறிக்கொண்டுபோகும் பாதரசம் மாதிரி, ஏறிக்கொண்டுபோகும் விலைவாசி காரணமோ? இல்லை.. கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை , லஞ்சமாக கொடுத்து வேலை வாங்கியது காரணமோ? இல்லை… சமூகத்தில், தானும் ஒரு பொறுப்புள்ள உறுப்பினன் என்கிற எண்ணம் அவர்களிடம் குறைந்துகொண்டுபோவதுதான் காரணமோ? என் சிந்தனை அலையை கலைத்து, செல்போன் அலறியது. நான் எதிர்ப்பார்த்து காத்திருந்த அழைப்புதான் அது.
“ரஹ்மான்… சொல்லுப்பா. நான் பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கேன். இல்லப்பா. வழக்கமா காரைக்கால் பஸ் வந்து நிக்கிற எடத்துக்கு நேரா இருக்கேன். வா!வா!. ஓ.கே.” என்று பேசி முடித்ததும் என் மனதுக்குள் ரஹ்மானை பற்றிய கருத்தோட்டங்கள் அணிவகுத்தன.
நேர்மையான அரசு அதிகாரி. வேளாண் அலுவலராக பொறுப்பு. காரைக்காலில் நான் இரண்டாண்டு காலம் பணியாற்றியபோது ஏற்பட்ட நட்பு. என் ஒத்த சிந்தனை உள்ளவன். என்னைப்போன்றே அவனும் லஞ்சத்திற்கு எதிரானவனாக இருந்தாலும், அவனை ‘வினோதமான மனிதன்’ என்று எல்லோரும் சொல்வதற்கு தனிப்பட்ட காரணம் ஒன்று இருந்தது. அது, அரசு அலுவலக பணி சிலவற்றிக்கு, அவன் சொந்த காசை செலவழிக்கும் பழக்கம்தான்.
ஒரு முறை, வேளாண் பெருமக்களுக்கான விழப்புணர்வு முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அது நடைபெறவிருந்த முன்தினம், அம்முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்று, தலைமைச் செயலகத்திலிருந்து தகவல் வர, ‘அப்பாடா. ஆளவிடுங்க’ என்று மேலதிகாரி உள்ளிட்டோர் நிம்மதி பெருமூச்சுவிட்ட நொடிக்கு, “ சார்…! வேணாம் சார். எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டு, விடவேண்டாம் சார். விவசாயிகளுக்கு நவீன வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் சார். ஐயாயிர ரூபாதான… நான் தரேன் சார். திட்டமிட்ட படியே அத நடத்திடலாம் சார்! முடிஞ்சா அப்புறம் கிலைம் பண்ணிப்போம். இல்லாட்டியும் பரவாயில்ல சார்” . என்று சொல்லி, அதற்கு செயல் வடிவமும் கொடுத்தவன்.
காரைக்கால் பேருந்து வந்து நின்றதும், ரஹ்மானை அழைத்துக்கொண்டு, ‘எங்க போனாலும், டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் போவோம்’ என்ற தீர்மானத்தோடு, அங்கிருந்து புறப்பட்டேன்.
அந்த ஓட்டலினுள் நுழையும்போதே எதிர்பட்ட சர்வர் ஒருவன், “ வணக்கம் சார், கடைசி டேபிள் காலியாயிருக்கு சார்! ” என்றான்.
“என்ன சிவா… இந்த ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமரா?”
“ அடிக்கடி இல்லன்னாலும் அப்பப்போ வருவேன். அவன் பேரு டேவிட். அவன்னு இல்ல… இங்கிருக்கிற எல்லா சர்வருக்கும் என்னைத் தெரியும். அதுக்கொரு காரணமும் இருக்கு. அத அப்புறம் சொல்றேன்.”
“என்னப்பா. . . சஸ்பென்ஸ்லாம் வைக்கிற?”
பேசிக்கொண்டேபோய், கடைசி மேசையில் அமர்ந்த நொடிக்கு, அங்கு வந்து நின்ற டேவிட், தண்ணீர் வைத்துவிட்டு, ஆர்டரை வாங்கிக்கொண்டு பறந்தான்.
குடும்ப விசாரிப்புகளை முடிப்பதற்குள் டிபன் வந்ததும் சாப்பிட தொடங்கினோம். பக்கத்திலேயே சாம்பார் வாலியோடு நின்றிருந்த டேவிட்டிடம், ‘நீங்க போங்க தம்பி. வேணும்போது கூப்பிடறேன்’ என்றான் ரஹ்மான்.
‘பரவாயில்ல சார்… நீங்க சாப்பிடுங்க’ என்று சொல்லிய டேவிட், நான்கு டேபிள் தள்ளி ஒருவரிடமிருந்து அழைப்பு வர, அங்கே சென்று பரிமாறிவிட்டு, அடுத்த நொடியில் திரும்பிவந்து நின்று கொண்டான்.
அலுவலக செய்தி முதல் அரசியல் கோமாளிகள்வரை இடையிடையே சாப்பிட்டுக் கொண்டே, பேசியும் விவாதித்தும் முடித்தபோது, பில் கொண்டு வந்து வைத்துவிட்டு, டேவிட் மறைந்தான்.
கை கழுவிக்கொண்டு, நான் பில்லை கவுன்ட்டரில் கொடுத்து, ஒரு ரூபாய் விடமால் சில்லரையை வாங்கிக்கொண்டு நகர்ந்தபோது, என்னைத் தொடராமல், அங்கேயே நின்றுகொண்டு, சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான், ரஹ்மான்.
“ரஹ்மான். . . யார தேடுற? டேவிட்டையா?”
“ஆமாம்”
“எதுக்கு.. . டிப்ஸ் குடுக்கவா?”
“ம்ம்”
“ஏன்?”
“என்னப்பா. . . புள்ள உழுந்து உழுந்து கவனிச்சான். . .”
அதெல்லாம் ஒன்னும் வேணாம், வா! அவன் அத எதிர்ப்பார்த்து நம்மல கவனிக்கல. நான் எத்தனையோ தடவ இங்க வந்திருக்கேன். ஆனா… ஒரு தடவ கூட, எந்த சர்வருக்கும் ஒரு ரூபா கூட குடுத்ததில்ல. ஏன் தெரியுமா?
வார்த்தைகளை புறக்கணித்து, தலையசைவால் ‘ஏன்’ என்று கேட்டான்.
“ நான் லஞ்சம் குடுக்கறதில்லேன்னும் சபதம் எடுத்திருக்கேன்.”
“லஞ்சமா?. . . டிப்ஸ்சா?” ஆச்சரியத்தோடு, புன்னகை கலந்து கேட்டான், ரஹ்மான் .
“பின்ன… என்னங்க சார்?, ஆபீஸ் பாஷையில, அன்பளிப்பா? ”
ரஹ்மான் அதிர்ச்சியாய் பார்த்தான்.
“தோ…. பாரு ரஹ்மான். உன்ன மாதிரி லஞ்சம் வாங்கறது இல்லேன்னு உறுதிமொழி எடுத்கிட்ட பல பேரு, இந்த சமூகத்துல, லஞ்சம் குடுக்கறது இல்லேன்னும் உறுதிமொழி எடுத்துக்கிறதில்ல. சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கறதுலேர்ந்து, மணி ஆடர் பணம் கொடுக்கிற தபால்காரனுக்கு, பாவம் பார்த்து பத்துரூபா கொடுக்கற வரைக்கும், யாரும் எந்த தயக்கமும் காட்டாம கொடுத்துக்கிட்டுதான் வர்றீங்க. நீங்க லஞ்சம் வாங்கமாட்டீங்க. ஆனா… அடுத்தவங்களுக்கு குடுப்பீங்க.
இந்த சமூகத்துல லஞ்சத்த ஒழிக்கமுடியாததுக்கு இதுவும் ஒரு பெரிய காரணம். நாட்டுல லஞ்சம் வாங்காதவங்ககூட ஒருத்தர் ரெண்டுபேரு இருப்பாங்க. ஆனா.. லஞ்சம் குடுக்காதவங்க.. ம்கூம்… .
புற்றுநோய்க்கு மருந்துகொடுத்துட்டு இருக்கிற அதே சமயத்துல, நோய் கிருமியையும் உள்ளுக்கு குடுத்துட்டு இருந்தா அந்த நோய் குணமாக வாய்பே கிடையாது ரஹ்மான்.
அதுபோலதான். லஞ்ச பிரச்சனையை ஒழிக்க, ‘நான் வாங்கமாட்டேன்’னு நேர்மையா இருக்கிற நபர்கள் அவங்களோட காரியத்த சாதிச்சுக்க மட்டும் லஞ்சம் குடுத்துட்டு இருந்தா, எப்படிப்பா இந்த புற்றுநோய் குணமாகும்? நேர்மையானவர்கள்ல தொண்னூத்தொன்பது சதவிகிதம் பேர் இப்படியும் அப்படியுமா…. இருக்கறதாலதான் லஞ்ச ஒழிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றதா ஆயிடுது. ரஹ்மான். இல்லாதப்பட்டவங்களுக்கு கொடுத்து உதவும் ஈகை குணம் கொண்டு இருக்கிறவங்கதான் மனித உருவில் வாழும் தெய்வம். ஆனா… அத நம்ம சுயநலத்துக்காக… லஞ்சமா கொடுக்கிறது தப்பு. அதாவது… நீ பார்த்து பாவப்படற உழைப்பாளிகளுக்கு, ரம்ஜானுக்கு புதுத் துணிமணிங்க கூட எடுத்து கொடு… வேணான்னு சொல்லல. ஆனா… தன் கடமைய செய்யரவனுக்கு சம்பளத்துக்கு மேல லஞ்சமா ஒரு ரூவா கூட கொடுக்கணும்னு நெனைக்காத. ரஹ்மான்…. நான் ரொம்ப குழப்பறேனா?”
“குழப்பல சிவா. தெளியவச்சுட்டு இருக்கீங்க. நானும் இனி எதுக்காகவும் லஞ்சம் குடுக்கறதில்லேன்னு உறுதியெடுத்திட்டிருக்கேன்.”
“இல்லியேப்பா…. நீ வேற எதையோ ஆழமா யோசிக்கிற மாதிரியில்ல இருக்கு…”
“ச்ச்சீ!சீ!.அதில்ல…. நீ சொல்ற கோணத்துல பார்த்தா… லஞ்சமில்லாத சமூகம் சாத்தியம் தானோன்னு தோணுது. ரஹ்மானின் தோளைத்தட்டியபடி, “ கனவு கண்டா மட்டும் போதாது … அதை மெய்ப்பிக்க முயற்சியும் செய்யணும்” என்று சொன்னதும், ரஹ்மானுக்குள் , பாரதியின் ‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்ற மந்திர சொற்றொடர் நினைவுப் பரப்பில் ஓடி , ஒருவித அதிர்வுடன் கலந்த சிலிர்ப்பு அவர் உடலெங்கும் பரவியது