முத்து காலை ஐந்து மணிக்கு இட்லி கடையைத் திறந்து மும்முரமாக வேலையைத் தொடங்கினான். பத்து மணி வரை வியாபாரம் நடக்கும் நேரத்தில் முத்துவால் மூச்சுவிட முடியாதிருந்தாலும், சுற்றி நடப்பதில் கவனம் இருக்கும்.
அன்றும் அதே போல் முத்துவின் வேலை நடக்க, சாலையில் வாகனங்கள் பறக்க, பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் சாலையின் ஓரம் நின்று, சாலையை அங்குமிங்கும் பார்த்தவன், தன் கையிலிருந்தக் கம்பில் துணியைக் கட்டினான். அருகிலிருந்த இரு கற்களை எடுத்து, ஒரு கல்லால் சிறிது பள்ளம் தோண்டினான். கம்பை அதில் வைத்து இன்னொரு கல்லால் கம்பின் மேல் அடிக்க அடிக்கக் கம்பு நின்றது. பிறகு, மண்ணை மூடி இரு கற்களையும் அணை கொடுத்தாற் போல் வைத்துவிட்டுச் சென்றான்.
சிறுவன் செய்ததைப் பார்த்த முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எதுக்கு இந்தப் பையன் துணியைக் கட்டி கம்பை நட்டிட்டு போறான்.’ எனக் குழம்பினாலும், விளையாட்டுத் தனமா செய்திருப்பான் என்று நினைத்தான்.
மறுநாள் முத்து கடையைத் திறந்ததும், அவன் கண்கள் தானாகச் சிறுவன் நட்டு வைத்த கம்பை தேடிச் சென்றது. ஆனால், அங்கு வெற்றிடமாக இருக்க, விழிகளைச் சுற்றி சுழல விட்டான். சற்று தள்ளி கம்பு நாதியற்று கிடக்க, வாகனங்கள் அதன் மீது ஏறியதில் துணி கந்தலாகியிருந்தது. அதைக் கண்ட முத்துவுக்கு மனம் ஏனோ கனத்தது.
‘சின்னப் பையன் விளையாட்டா செய்ததுக்கு, ஏன் கஷ்டமா இருக்கு?’ என்று தலையில் அடித்தான். ஆட்கள் வரவும் அதை மறந்து வியாபாரத்தில் மூழ்கினான். இரண்டு நாட்கள் கழித்து சிறுவன் வர, நாதியற்று கிடந்த கம்பும் காணவில்லை. கந்தலான துணியும் காற்றில் பறந்திருக்க, முகம் வாடிய மலராகச் சுருங்கிப் போனது. சிறிது நேரம் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துவிட்டுச் சென்றான்.
சிறுவனின் முகம் வாடியது கண்டு, முத்துவின் முகமும் பொலிவிழந்தது. வியாபாரத்தை விட்டு அவனிடம் கேட்க முடியாமல் தவித்தான். மனதில் பல கேள்விகள் ஓடினாலும், பதில்தான் கிடைக்கவில்லை. திரும்ப வந்தால் கேட்கலாமென்று அமைதியானான்.
தினமும் சிறுவனைத் தேடுவதை வழக்கமாக்கிய முத்துவுக்கு அவனைக் காணாமல் வெறுத்துப் போனது. ‘குறும்பா ஏதோ செய்யப் போக, நானொருத்தன் பைத்தியம் மாதிரி பினாத்திட்டு அலையுறேன்.’ என்று தன்னையே நொந்தவனைச் சோதிக்க, பத்து நாட்கள் கழித்து வாலியோடு வந்தான்.
கம்பு நட்டு வைத்த அதே இடத்தில் வாலியை கவிழ்த்து தன் கையிலிருந்த கம்பியால் சுற்றி கோடு போட, அதில் சிறிது சிறிதாகப் பள்ளம் தோண்டி, அதில் வாலியை வைத்து அளவு பார்த்து அசையாமல் இருக்க மண்ணைத் தள்ளி மூடி, அதன் மேல் கல்லை வைத்தான்.
இன்று எப்படியாவது கேட்கனும் என நினைத்த முத்துவுக்கு வேலை பளுவினால் முடியாமல் போக, அவன் செல்லும் திசையையே பார்த்திருக்க, “என்ன முத்து? ரொம்ப நேரமா சாம்பார் ஊத்த சொல்லிட்டு இருக்கேன். நீ எதுக்கு அந்தப் பையனையே பார்க்க?” என்றார் வாடிக்கையாளர்.
“ஒண்ணுமில்லை சார். அந்தப் பையன் தினமும்…” என நடந்ததைக் கூறினான்.
“சின்னபுள்ள விளையாட்டா செஞ்சிட்டு போனதுக்கு இவ்வளவு சீரியஸா இருக்க. அவனைப் பார்த்துட்டு வியாபாரத்தை விட்டுராதே.” என்று அவர் கிண்டலாகச் சொன்னாலும், முத்துவால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மறுநாள் கடையைத் திறக்கும் முன் வாலி இருக்கிறதா என்று பார்க்க, அதில் கல் இல்லையென்றதும் வேகமாகச் சென்று கல்லை தேடி, அதன் மீது வைத்துவிட்டு வந்த பிறகுதான், அடித்து ஓய்ந்த புயலை போல் சாதுவானான். தினமும் வந்ததும் வாலி இருக்கிறதா? என்று பார்ப்பதை தன் வேலைகளில் ஒன்றாக வைத்திருந்தான்.
ஒரு வாரம் ஓடியிருக்க, ஞாயிற்றுக் கிழமை முத்துவின் கடை விடுமுறை என்பதால் கடையை திறக்கவில்லை. மறுநாள் வந்ததும் வெறுமையாக இருந்த சாலையைதான் பார்த்தான். கல்லை மட்டும் வைத்துவிட்டு வாலியை யாரோ எடுத்து சென்றிருந்தனர்.
ஒரு வாரம் கழித்து வந்த சிறுவன் வாலியை காணாது தவித்தான். அவன் தவிப்பை உணர்ந்த முத்து பொறுமையில்லாமல், சிறுவனிடம் கேட்க ஓடினான். ஆனால், சிறுவனோ வாலியை காணுமென்று சுற்றி சுற்றி தேடியவன், விரைவு வண்டியை போல் ஓடிச் சென்றான். முத்து அருகில் வருவதற்குள் சிறுவன் பறந்திருந்தான். அவனைப் பிடிக்க முடியாமல் மூச்சு வாங்க நின்ற முத்து, ஓடுபவனைக் கண்டு தன்னைத் தானே சிரித்தான்.
ஒரு மாதமாக வராத சிறுவன், திடீரென வந்து சிறு மரப் பலகையைப் போட்டு, அதில் சிறிய பொம்மைகளை அடுக்கி வைத்தான். மரப் பலகையின் இரு பக்கமும் நிறுத்தற் குறி தாங்கிய கம்பியை வைத்துவிட்டு, குடையை விரித்து அதன் கீழ் அமர்ந்தான்.
“முத்து, பையன் கடையைப் போடுறதுக்கு முன்னாடியே இடத்தை ரிசர்வ் பண்ணி வைத்திருக்கான். நீ என்னமோ அவனுக்காகப் பரிதாப்பட்ட?” கிண்டல் செய்த அதே வாடிக்கையாளர் கேட்டார்.
“சார், சின்னப் பையனா இருந்தாலும் அறிவா நடந்திருக்கான். ஆனால், அவன் கடை போட்டிருக்கிற இடம்தான் சரியில்லை. எவ்வளவு வண்டிங்க வேகமா போகுது. குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம வரவனுங்க ஏத்திருவாங்க.”
“அதான், அறிவாளின்னு சொன்னியே. அப்புறம் என்ன பயம்? அவனைச் சுற்றி ஸ்டாப் சைன் வச்சிட்டுதானே உட்கார்ந்திருக்கான். சின்னப் பையனா இருந்தாலும், இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.” என்று பாராட்டு சான்றிதழும் கொடுத்தார்.
ஒவ்வொரு வண்டி வரும் போதும், சிறுவனுக்குப் பயம் இருந்ததோ இல்லையோ. முத்துவுக்குப் பயத்தில் உடலே நடுங்கியது. கடையை மூடியதும் சிறுவன் அருகில் சென்று, “தம்பி, இந்த இடத்தில் கடை போடாத, அந்த மரத்தடியில் போடு. வண்டியில் வரவங்க எப்படி வருவாங்கன்னு தெரியாது?”
“மரத்தடியில் போட்டா நான் உட்கார்ந்திருக்கிறதே தெரியாது. யாரு பொம்மை வாங்குவா?” என்றான் பாவமாக. சிறுவன் சொல்வதிலும் நியாயம் இருக்க, முத்துவாலும் மேற்கொண்டு சொல்ல முடியாமல் சென்றான்.
மாலை ஏழு மணி வரை இருந்தவன், தான் கொண்டு வந்த பொம்மைகளை மூட்டை கட்டி, பலகையையும் நிறுத்தற் குறி பலகையையும் விட்டுச் சென்றான். தினமும் இதை வழக்கமாக்கியச் சிறுவனுக்கு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனத்தில் தொங்கவிடுவதற்கும் குழந்தைகளுக்கும் பொம்மைகளை வாங்க தொடங்கியிருந்தனர்.
ஒரு நாள் முத்து மாலை கடையைத் திறக்க வரும் போது, சிறுவன் கடை போட்டிருந்த இடத்தில் ஒரே கூச்சல் குழப்பம். முத்துவுக்கோ மனம் பதை பதைத்தது. தான் நினைத்தது போல் வண்டி எதுவும் ஏறிட்டோ என்று அடித்துப் பிடித்துக் கூட்டத்திற்குள் நுழைந்தான்.
ஒருவன் சிறுவனை அடிக்கப் போக, அவனைத் தடுத்து நின்றனர் சிலர். முத்து உள்ளே புகுந்து என்னவென்று கேட்க, சிறுவன் கடையில் பொம்மை வாங்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவது, மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று தினமும் அதே வழியாகச் செல்லும் வாகன ஓட்டி, சிறுவனைச் சற்று தள்ளி கடை போடுமாறு சொல்ல, அவன் முடியாதென்று சொல்ல பிரச்சனையாகிவிட்டது.
எல்லோரையும் சாமாதானம் செய்து அனுப்பிய முத்து, சிறுவனை கடைக்கு அழைத்து வந்து, “அன்னைக்கே சொன்னேன். அங்க கடை போடாத பிரச்சனையாகும்னு. ஆனால், நீ ஏன் கேட்க மாட்டேங்கிற?” என்று முத்து அதட்டலாகக் கேட்டான்.
“அண்ணா, அங்க நான் கடை போட்டதால் எல்லா வண்டியும் மெதுவா போகுது. அதனால், அங்க ரோட்டை கடக்கிறவங்க பயமில்லாம கடக்கிறாங்க.”
“நீ சொல்றது சரிதான். ஆனால், எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காதே. அவங்களுக்காக உன் உயிரை ஏன் பணயம் வைக்கிற?”
“நான் இப்படிச் செய்தால்… நானும் என் தம்பியும் அனாதையானது போல் வேற யாரும் அனாதை ஆகமாட்டாங்க.” என்றான். யாருமில்லா குழந்தையா இவன்! இவனே குழந்தை இவனுக்குத் தம்பி வேறா! முத்துவின் மனம் நிம்மதியற்றுக் கலங்கியது.
“உன் அம்மா, அப்பா…” அதற்கு மேல் எப்படிக் கேட்பதென்று நிறுத்தினான் முத்து.
“இந்த ரோடு பார்த்தீங்களா? இங்க யாரும் கிராஸ் பண்ணா, அந்தப் பக்கமிருந்து வண்டியில் வேகமா வரவங்களுக்குத் தெரியாது. ரோடு கிராஸ் பண்றவங்களுக்கும் தெரியாது. வேகமா வர வண்டியை எப்படிண்ணா உடனே நிறுத்த முடியும்? ரோடு கிராஸ் பண்றவங்களை இடிச்சு தள்ளிட்டுதானே போகும். அப்படிதான் இரண்டு மாதத்துக்கு முன்னாடி அம்மா, அப்பா இதே இடத்தில் கிராஸ் பண்ணப்போ, புதுப் பைக்கில் வேகமா வந்த இரண்டு பேர் இடிச்சதில், அம்மா, அப்பா எதிரில் வந்த லாரி சக்கரத்தில் மாட்டிகிட்டாங்க. பைக்கில் வந்த இரண்டு பேரும் குடிச்சிருப்பாங்க போல, கீழ விழுந்ததில் மண்டையில் அடிபட்டு அவங்களும் இறந்துட்டாங்க.” சிறுவனுக்கு கண்களில் நீர் தாரை தாரையாக வடிந்தது.
முத்து அவன் கண்களைத் துடைத்து, சிவப்பு துணிக் கட்டி வைத்து, சிவப்பு வாலியும் வைத்து, மற்றவர்கள் உயிரை காப்பாற்ற எடுத்த முயற்சி பலிக்கவில்லை என்றதும், தன் உயிரை பணயம் வைக்கத் துணிந்துவிட்டானென்று முத்துவிற்குப் புரிந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கியதற்கு, இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடிவிட்டு அதிவேகத்தில் வர, வண்டி வருவது தெரியாமல் சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதி, நடந்த கோர விபத்தை நினைத்தவனுக்குத் தானாகக் கைகள் நடுங்கியது. புதிய மோட்டார்சைக்கிள் நான்கு உயிர்களைக் காவு வாங்கிவிட்டு நொறுங்கிய அப்பளமாகக் கிடந்தது.
பழையதை நினைத்து பார்த்த முத்து, “நீ படிக்கலையா? தம்பியை எங்க விட்டுட்டு வர?”
“படிச்சிட்டுதான் இருந்தோம். இப்போ, தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, நான் வேலைக்கு வந்தேன்.”
“தம்பியை கூட்டிட்டு என்னுடன் வரீயா? படிக்கிற நேரம் போக, மீதி நேரம் இட்லி கடையில் வேலை பாரு.”
“நாங்க வந்தா உங்க வீட்டில் ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?”
“நானும் உங்களைப் போல் அனாதைதான். என்னைப் பெற்றவங்க யாருன்னு தெரியாது. எப்படியோ பிறந்து, வளர்ந்து இன்னைக்கு இட்லி கடையில் காலத்தை ஓட்டுறேன். இனிமே நாம அனாதை இல்லை. எனக்கு நீங்க உங்களுக்கு நான்.”
“அண்ணா, அப்போ இங்க விபத்து நடக்காம இருக்க என்ன பண்றது?”
“எனக்குத் தெரிந்த டிராபிக் போலீஸ் இருக்கார். அவரிடம் ஐடியா கேட்டு இதுக்கு ஒரு வழி பண்ணலாம். இப்ப தம்பியை கூட்டிட்டு வரலாம்.” சிறகொடிந்த பறவைகளுக்குப் சிறகு முளைத்ததில் மீண்டும் பறக்கத் தொடங்கியது.
கடையில், ‘இளைஞர்களுக்குப் போதையில் மிதக்க, வாகனத்தில் செல்வது வானத்தில் பறப்பது போலிருக்கும். ஆனால், மதுவும் அதிவேகமும் உயிரின் எமன் என்பதை உணர்ந்தவன் என்றுமே வாழ்வான்’ என்ற வாக்கியதோடு பலகை தொங்கியது.
*****