அந்த வீட்டின் கதவு திறந்தேதான் இருந்தது. இன்று நான்காம் நாள். எனவே துக்கம் கேட்க வருவார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். வாசலில் இரண்டு மூன்று ஜோடி செருப்புகள் மட்டுமே இருந்தன. இன்னும் பலர் வரவில்லை போலிருக்கு. சற்று தயக்கத்துடன் திறந்திருந்தக் கதவை மென்மையாகத் தட்டி ஓசை எழுப்பினான். யாரும் உடனே வந்து விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஒரு மெல்லிய சோகத்தை முகத்தில் வலிய ஏற்றிக் கொண்டான்.
ஒரு தடித்த பெண்மணி வந்து கதவருகில் நின்றாள். “பத்மினி……” என்று இழுத்தான். “உள்ளேதான் இருக்கிறாள்…” என்று சொல்லிவிட்டு அவள் வழி விடுவது போல நகர்ந்தாள். அவன் வீட்டிற்குள் நுழைந்தான். பழகிய வீடுதானே. ஆனால் மரணத்தின் வீச்சம் இன்னும் அங்கே மீதமிருந்தது. பாலாடை போல காற்றிலேயே துக்கம் புரண்டு கொண்டிருந்தது. இழப்பின் வலி, அது கொடுத்த வேதனை அந்த வீடெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. வேகமெடுத்து ஓடும் மழைநீர் வெள்ளத்தின் நடுவே உடைமைகளைத் தலைகளில் சுமந்து கொண்டு நடக்கும் பாவப் பட்ட மனிதர்களைப் போல அந்த வீட்டின் மனிதர்கள் தங்கள் மனங்களில் சோகத்தைச் சுமந்து கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தனர். யாரிடம் எதைக் கேட்டாலும் உடனே அழுது விடுவார்கள் போலவே அவனுக்குத் தென்பட்டது.
நாற்காலிகளின் முதுகுகளிலும், அங்கிருந்த ஒரே சோபாவின் நீண்ட முதுகிலும், கொடியெங்கிலும் துணிகள், துணிகள். காற்றிலேயே அதீதமான ஒரு ஈரம் தென்பட்டது. தூக்கிச் செருகிய புடவையுடன் இடுப்பில் குழந்தையை இடுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி கிண்ணத்திலிருந்து எதையோ எடுத்து குழந்தையின் வாயில் திணித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் குழந்தைக்குப் பயம் காட்டத் தன்னை அந்த பெண்மணி உபயோகித்துக் கொள்வாள் என்று அவனுக்குத் தோன்றியது.
“சொல்லிக்கக் கூடாது. கிளம்பு” என்று யாரோ யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது யாரோ விசும்பும் சப்தமும், மெல்லிய அழுகுரலும் கேட்டு கேட்டு நின்றது. “எனக்குப் பச்சத்தண்ணி ஆகாதுடி. வெந்நீர் போடு” என்று ஒரு வயதான பெண்மணி கூறுவது கூடம் வரைக்கும் கேட்டது. சமையல் அறையில் சிமினியின் பகபக சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று பெண்கள் சமையல் அறையில் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கலவையான வாசனை அவ்வப்போது வெளி வந்து அலைந்துக் கொண்டிருந்தது. சிறுவர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். “இவருக்கு காபி ஆகவே ஆகாது. பூஸ்ட்தான்” என சமையலறை வாசலில் யாரோ ஒரு அழுத்தமான வேண்டுகோளை வைத்துக் கொண்டிருந்தார்கள்.
“பத்மினி ரூம்ல இருக்கா..” என்று ஒருத்தி சொல்ல, எல்லாரையும் தாண்டிக் கொண்டு அந்த உள்ளறைக்கு எப்படி செல்வது என்று அவன் தயங்கினான். பெண்கள் சாம்ராஜ்ஜியம். எது சமைக்கலாம் எது செய்யக் கூடாது என்பதெல்லாம் இந்த பத்து நாளும் அவர்கள் கையில். அவன் உள்ளே செல்லலாம் என்பது மாதிரி ஒரு பெண் அறை வாசலில் நின்று அவனை உத்தேசமாகப் பார்த்தாள். வேறு வழியில்லை. கொடியில் தொங்கும் துணிகள் தலையில் இடித்து விடாமல் அவன் எழுந்து அறைக்குள் நுழைந்தான். ஒரு கட்டிலின் விளிம்பில் எழுதி வைத்த சித்திரமாக அமர்ந்திருந்தாள் பத்மினி. அவளைப் பார்த்த விநாடியில் அவள் சோகம் அவன் மேல் தாவிக் கொண்டது. மினி என்று அழைத்து விடப் போகிறோம் என்று அவன் சர்வ ஜாக்கிரதையாக தன் நாக்கை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவளின் அகன்ற பெரிய கண்களில் மை கரைந்து போயிருந்தது.
அவன் தலையைப் பார்த்ததும் அங்கே உட்கார்ந்திருந்த ஒரு பெரியம்மாள் மிகவும் சிரமப் பட்டு எழுந்து வெளியே சென்றாள். இருந்த ஒரே நாற்காலியில் அவன் அமர்ந்தான். அந்த அறையில் அப்போது அவர்கள் இரண்டே பேர்தான். தலை குனிந்தே இருந்தாள் பத்மினி. ஒரு வினாடி நிமிர்ந்த பொழுது அவள் கண்கள் குளங்களாகத் தென்பட்டன. “சே மினி என்ன இது? அழாதே” என்று அவள் முகத்தை உயர்த்திச் சொல்லிவிடப் போகிறோம் என்று அவன் பயந்து போய் இறுக்கமாக உட்கார்ந்திருந்தான்.
“பத்மினி” அவன் குரல் அவனுக்கேக் கேட்காத மாதிரி இருந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் சட்டென்று அவளைக் கலைத்துப் போட்டது. அந்த அழைப்பில் இருந்த நடுக்கம் அவளை கலக்கியிருக்கலாம். கண்களைத் துடைத்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். அடங்கியிருந்த துக்கம் மெல்ல மெல்ல வேகம் பிடித்து அவளுள் வெறியாய் புகுந்து கொண்டது.
“கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைமா”
அவள் முகத்தை மூடிக் கொண்டுப் பொங்கிப் பொங்கி அழுதாள். அந்த அழகான தோள்களும், முதுகும் குலுங்கின. சுற்றி இருந்த அனைத்தையும் மறந்து ஓவென்று பெருங்குரலில் வீசி அழ ஆரம்பித்தாள் பத்மினி. கூடத்தில் சட்டென்று சப்தங்கள் அடங்கிப் போக ஒவ்வொருவராக எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள். பத்மினி எழுந்து வந்து தன்னைக் கட்டிக் கொண்டு விடப் போகிறாளோ என்று அவன் பயந்தான். சிறிது நேரம் வீர்யமாக அழுதவள் மெல்ல மெல்ல அடங்க ஆரம்பித்தாள். என்ன சொல்வது அவளிடம்? எது அவளுக்குச் சமாதானத்தைத் தரும்!?
சொல்ல நினைத்ததை சொல்லி விடலாமா? இது சரியான சமயம்தானா? இந்த இடத்தில், இந்த நாளில் அப்படி சொல்லலாமா? தான் சொல்லுவது அந்த வீட்டிற்கு, அந்த சூழ்நிலைக்கு மிகவும் அந்நியமாகப் பட்டு விடாதா? துக்க வீட்டில் மங்கல விஷயமா!?…..பால் பாயசத்தில் பச்சை மிளகாயைப் போல… சொல்லலாமா?!
“இவளுக்கு வேணும் சார். அழட்டும் விடுங்கோ” என்றபடியே உள்ளே வந்தார் பத்மினியின் அப்பா. அவன் எழுந்து நின்றான்.
“உப்பைத் தின்னாத் தண்ணி குடிக்கணும்ங்கற மாதிரி, இவ அழ வேண்டியதுதான். உங்களையும் படுத்தி, அவனையும் படுத்தி….”
அவன் தலை நிமிர்ந்தான். “சார் அதெல்லாம் வேண்டாம் சார். இந்த நேரத்துல…..எதுக்கு? இப்பிடி எல்லாம் நடக்கும்னு தெரியுமா?”
“என்ன செய்யறது? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லி திடீரென அழ ஆரம்பித்து விட்டார் பெரியவர். “என் பொண்ணைப் பார்க்கவே சங்கடமா இருக்குங்க. பகவான் அவளை சோதிச்சிட்டார்” என்று சொல்லிக் கொண்டே மடேர் மடேர் என்று தலையிலடித்துக் கொண்டார். அவருடைய மிதமிஞ்சிய சோகம் அவனுக்கு ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. அவருக்கு ஏதாயினும் ஆகி விடப் போகிறதே என்று அச்சப் பட்டான்.
“வாழ வேண்டிய வயசுல என்னென்னமோ நடந்து போச்சே. இனிமே இவளுக்குத் துணை யாரு? என்ன ஆகும் இவ வாழ்க்கை?” மேலும் மேலும் தன் துக்கத்தின் எல்லைகளை விரிவுப் படுத்திக் கொண்டே இருந்தார் பெரியவர். அவருடைய வார்த்தைகள் அவளுக்குள் புகுந்து, கெட்டிப் பட்டுப் போயிருந்த சோகப் பனிக்கட்டிகளை உளி போல சிதைத்துக் கொண்டிருந்தன. அவர் மனதில் என்ன இருக்கும்? அவர் என்னிடம் அதைச் சொல்லிக் கேட்பாரா? நான் இங்கே வருவேன் என்பதையே அவர் எதிர்பார்த்திருப்பாரா? அல்லது பத்மினிதான் எதிர்பார்த்திருப்பாளா? ஏதாவது ஒரு வகையில் மனதைத் திறந்து காட்டிவிட வேண்டியதுதான். அந்த வார்த்தை அங்கே வேண்டியிருக்கலாம்.
என் வார்த்தை அவர்களின் சோகத்தைக் குறைத்து விடலாம் அவள் மனதில் ஒரு ஆறுதல் ஏற்படுமோ? தன் பெண்ணின் வாழ்க்கை சேதாரமாகி விடாது என்ற ஒரு புதிய நம்பிக்கை அந்தப் பெரியவரின் மனதில் விதையாக ஊன்றப் படுமோ?
எப்படி சொல்வது? எப்படி அந்தப் பேச்சை எடுப்பது. அழுது கொண்டே இருந்தப் பெரியவர் மெல்ல அடங்கினார். தரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு எழுந்து மெதுவாக நடந்து வெளியேறினார். அவருக்குப் புரிந்திருக்கலாம். அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று. அதற்காகதான் வெளியேறினாரோ? அவர் எதிரில் அவன் சொல்லத் தயங்குவான் என்று தெரிந்திருப்பாரோ?
இரண்டு நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தாள் பத்மினி. “எப்பிடி இருக்கே?” என்று கேட்டாள். எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தான் அவன். பின் ஏன் பிரிந்தோம்? பிரிந்தோம் என்பது தவறு, பிரித்தாள் என்பதுதானே சரி. அதையெல்லாம் இப்போது நினைவுப் படுத்திப் பேச முடியுமா?
“அப்பிடியே தான் இருக்கேன் பத்மினி” என்றான். அது, அந்த பதில், அவளுக்கு எதையாவது உணர்த்தியிருக்கலாம். அவன் தயார் என்பதை அவளுக்குப் புரிய வைத்திருக்கலாம் நீதிபதி வைத்தது ஒரு முற்றுப்புள்ளி அல்ல. கமா தான் என்றும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம், தொடர முடியும் என்றும் அவன் சொல்ல நினைத்தை பத்மினி புரிந்து கொண்டிருப்பாள். அவள் புத்திசாலி.
“தப்புக்கு மேல தப்பாப் பண்ணி என் வாழ்க்கையை கெடுத்துண்டுட்டேன். நான் ரொம்ப புத்திசாலின்னு நினைச்சிண்டு உன் வாழ்க்கையையும் சின்னா பின்னமாக்கிட்டேன்.”
“இருக்கட்டும். பத்மினி. அதெல்லாம் இப்போ பேச வாணாம். நீ கொஞ்சம் மனசை சமாதானப் படுத்திக்கோ. இதுவும் கடந்து போகும். போகட்டும். பிற்பாடு…..”
அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை உற்று நோக்கினாள் அந்தக் கண்களில் சில கேள்விகளும், ஒரு புதிய நம்பிக்கையும் தென்பட்டன.
அஸத்தோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர் கமய
என்ற ஸ்லோகம் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது. இருளிலிருந்து உன்னை ஒளிக்கு அழைத்துப் போவேன் பத்மினி என்று நினைத்து அவளைப் பார்த்தான் அவன். அவள் அழகிய அதரங்கள் ஒரு புன்முறுவலை உதிர்க்க நினைத்துப் பின் தயங்கி நின்றன. சுனாமியாய் பொங்கிப் பெருகும் சோகத்தின் உச்சியில் அவளுக்குள் ஒரு அழுத்தமான நம்பிக்கையை விதைத்து விட்டோம் என அவன் திருப்தி பட்டுக் கொண்டான் பத்மினி புத்திசாலி. புரிந்து கொண்டிருப்பாள்.
அதே திருப்தியோடு வெளியேறினான்.
துக்கம் கேட்க வந்தால் சொல்லிக் கொண்டுக் கிளம்பக் கூடாது என்று அவனுக்குத் தெரியும்.
******************************************