“புதுசா ஒரு கணக்கு வாத்யார் வந்திருக்காரே! அவரு யாரு பூமதி?” என்ற வசுமதியின் கேள்விக்கு, அவள் அவரைப்பற்றிய ஜாதகத்தையே சொல்லி,
“நச்சினார்ற்கினியன். அவர் பேரு.” என்றாள் பூமதி.
என்ன? பேரே வித்யாசமாயிருக்கே வசுமதியிக்கு ஆச்சர்யம். நல்ல தமிழ் பெயர்கள் எல்லாம் கேட்டதே இல்லை. “ஷ்” எழுத்தில் முடிவது தான் நாகரீகமான பெயர் என்ற காலகட்டத்தில் பிறந்த இளைஞர்கள் இவர்கள்.
சரி, என்ன ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சிருக்காருன்னு க்ரூப்ல பார்த்தேன். எதற்கு இப்போ? எல்லா பாடமும் முடிச்சாச்சு. நமக்கு என்னத்த ஸ்பெஷலா வேற சொல்லணுமாம்? வசுமதிக்கு ஒரு வித வெறுப்பு.
சிலரைப் பார்த்தாலே வரும் வெறுப்பு. சிலர் பெயரைக்கேட்டாலே வரும் வெறுப்பு. ஒருத்தர் செயலைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவங்களை எடைபோடக்கூடாதுடி. திருவள்ளுவர் கூட சொல்லியிருக்கார் என்றாள் பூமதி.
“ஆமாம் உனக்கு அந்தக் கிழவனைக் கட்டிட்டு அழலைன்னா பொழுது போகாது. எதுக்கெடுத்தாலும், இது குறள்ல இருக்குன்னு கொண்டாந்துடுவே எதையாவது” என்று அலுத்துக்கொண்டு சைக்கிளை எதிர் திசையில் திருப்பிக் கொண்டே, “இங்க பாரு, நான் மதியம் ஒரு படத்துக்குப் போறேன். வரதானா வா. இல்லன்னா, உன் இஷ்டம். நான் ஸ்பெஷல் க்ளாஸுக்கு கொஞ்சம் லேட்டா வரேன். அந்த நச்சுகிட்ட சொல்லிடு” என்று சொல்லிவிட்டு, பதிலுக்காக காத்திருக்காமல் விர்ரென்று விட்டாள் சைக்கிளை.
தெருமுனையில் நின்றிருந்த பாலனும், மாறனும், பூமதியைக் கண்டதும் இவளுக்காகவே காத்திருந்தது போல ஓடி வந்தார்கள்.
பூமதிக்கு இருவர் மீதும் பயம். சென்ற வருடம் பள்ளிப் படிப்பு முடித்து, நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். இவள் இந்த வருடம் பள்ளி இறுதி படிக்கிறாள். பாலன் அம்மா, பூமதி அம்மாவுடன் சேர்ந்துதான் மகளிர் குழுவில் இருக்கிறாள். மகளிர் குழு, அந்த பகுதியில் சேகரிக்கும் மக்காத குப்பையை மட்டும் வாங்கி, அதை ரக வாரியாகப் பிரித்து ஒரு கம்பெனிக்குக் கொடுக்கும். குழுவாகச்செய்யும் வியாபாரம். எல்லோரும் முதலாளிகள்.
பாலன், “பூமதி, உனக்கு ஒரு நோட்ஸ் குடுக்கத்தான் வந்தோம். வீடு பூட்டியிருந்தது. அம்மாவும் இல்ல போல. அதான் நின்னுட்டிருந்தோம்” என்றான்.
“ஓ அப்டியாண்ணா, நான் கொஞ்ச நேரம் வசுவோட பேசிட்டிருந்துட்டு வந்தேன். சாயந்திரம் ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சிருக்கார் நச்சு சார். அதுக்குள்ள படிச்சுட்டு போகணும். வீட்டுக்கு வாங்களேண்ணா” என்றாள்.
“இல்ல பூமதி, இந்தா நோட்ஸ். இது எங்களுக்கு நச்சு சார் தான் குடுத்தார். நீங்க படிச்சதும். படிக்கற ஆர்வம் இருக்கறவங்க யாருக்காவது குடுங்கடான்னார். உனக்குத் தரணும்னு தோணுச்சு” என்றான்.
மாறன், “ அந்த வசுமதியோட ரொம்ப சேராத. அவ கூட சேர்ந்திருக்கற சகவாசம் எதுவும் நல்லால்ல. படிக்கற பிள்ளைக்கு அதெல்லாம் ஒத்துவராது. சொல்லிட்டேன்” என்று கொஞ்சம் மிரட்டும் விதமாக சொல்லிவிட்டு, “வாடா பாலா” என்று அழைக்க, இருவரும் கிளம்பினார்கள்.
அம்மா வாங்கித்தந்த புதிய ஃபோன் பள பள என்று “என்னை எடு, என்னை எடு” என்று தூண்டியது பூமதியை. நிறைய வகுப்புகளை பள்ளி ஆன்லைனில் ஆக்கியதால், கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அம்மா பணம் சேர்த்து வாங்கிக்கொடுத்தாள் அந்த ஸ்மார்ட் ஃபோனை. பள்ளியில் எல்லோர் வீட்டிலும் இதே கதை தான். சிலர் பழைய ஃபோன்கள் கிடைக்குமா என்று தேடிப்பார்த்து யாரிடமாவது கெஞ்சி, அவர்களிடம், “இவங்களுக்கெல்லாம் கெட்ட கேடு” என்று காதுபட ஏசுவதை வாங்கிக்கொண்டு வலியோடு வாங்கிக்கொடுத்தார்கள் ஏறத்தாழ எல்லா பெற்றோரும்.
பூமதி கருத்தான பெண் என்பதால், அவள் பள்ளியிலிருந்து வரும் விஷயங்கள் மட்டும் தான் பார்ப்பாள். வசுமதி, அப்படி இல்லை. ஸ்டேட்டஸ் வைப்பது, அதுவும் வித விதமாக ட்ரெஸ் போட்டு, அதை ஃபோட்டோவாக வைப்பது எல்லாம் இந்த மாதிரி ஃபோன் வந்த பிறகு ஆரம்பித்தாள். நட்பு வட்டம் மிகப்பெரியது. ஆமாம். பேச்செல்லாம் சினிமாவும், இன்னும் மற்ற பொழுதுபோக்கு விஷயங்களும் தான். நண்பர்கள் தூண்டலில், தன்னையே பலவிதமாக புகைப்படங்கள், வீடியோக்கள் என்று என்னென்னவோ ஆப்பையெல்லாம் வைத்து எடுத்து, எல்லா சமூக வலைதளங்களிலும் கணக்கும் தொடங்கி, அதில் பதிந்து, அதற்கு கிடைக்கும் விருப்பக்குறியீடுகளில், தன்னை மறந்திருந்தாள். பூமதி, இதை வேண்டாம் என்று தடுத்தால் கேட்பாளில்லை.
பாலன் கொடுத்த நோட்ஸில் மூழ்கி இருந்தவள், மணி பார்க்க, நிமிர்ந்த போது, அவள் ஃபோனும், டொங்க் என்று இவளை அழைத்தது.
கை ஃபோனை எடுக்க, மேலேயே வசுமதியிடமிருந்து ஒரு வீடியோ என்று செய்தி சொன்னது.
பிரித்துப் பார்த்தாள். அதிர்ந்து போனாள். பார்க்கக்கூடாத கோலமாக இருந்தது. உண்மையில் அவள் தானா, அவளுடைய நம்பரில் இருந்து எப்படி அவளே இப்படி அனுப்ப முடியும்? ஏன் அனுப்ப வேண்டும்? எனக்கு மட்டும் அனுப்புகிறாளா? இன்னும் நிறைய பேருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாளா என்றெல்லாம் நினைத்து மண்டையே வெடித்திவிடும்போல ஆயிற்று அவளுக்கு.
ஃபோனையும், பாட புத்தகங்களையும் வாரி சுருட்டிக்கொண்டு, வீட்டைப்பூட்டிவிட்டு, பள்ளியை நோக்கி ஓடினாள். நச்சினார்க்கு இனியன், வாத்யார் மட்டுமல்ல. எல்லா மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள ஒரு நல்ல மனிதன். அவர் பெயருக்கு ஏற்ப, தன்னை நாடி வந்தவருக்கு இனியன் அவர்.
அவரைத் தேடிக்கொண்டு அவர் அறைக்குச் சென்றாள். அவர் அங்கு இல்லை. மின் விசிறி ஓடிக்கோண்டு இருந்தது. அவர் இல்லவே இல்லை என்றால் ஓடாது. எந்த சக்தியும் வீணாக்குவது அவருக்குப் பிடிக்காது. நாம் உபயோகிக்கலைன்னா வேற யாராவது உபயோகிப்பாங்க. அதனால வீணடிக்கக்கூடாது என்பார். அந்த அறையின் பின்புறம் இன்னொரு சிறிய அறை உண்டு. அது ஆசிரியர்கள் சாப்பிட. அங்கு இருப்பாரோ என்று எட்டிப்பார்த்தாள்.
வசுமதி உட்கார்ந்திருந்தாள். நச்சு சார் கவலையோடு உட்கார்ந்து அவளிடம் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்.
இவள் நிழலைப் பார்த்ததும், இருவரும் அதிர்ச்சி ஆகி, எழுந்து முன் அறைக்கு வந்தார்கள்.
நச்சு சார், “பூமதி, நீ பதற்றப்பட்டு ஓடி வந்த விஷயத்தைத் தான் இவகிட்ட கேட்டுட்டிருந்தேன். நீயே வந்துட்டே. எப்படி இந்த மாதிரி படம், வீடியோ வந்தது, அதுவும் இவ நம்பர்லேர்ந்துன்னு கேளு. நான் கேட்க கேட்க அழுவறா, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா” என்றார்.
பூமதி, வசுமதியின் முகத்தைப் பார்க்கக்கூட கூசியவளாய், “என்னப்பா இதெல்லாம்?” என்றாள். வசுமதி அந்த கேள்விக்காகவே காத்திருந்தவளாக, பூமதியின் கைகளைப் பிடித்து, ஓவென்று கதற ஆரம்பித்தாள்.
பூமதி, “சரி, சரி, இங்க பாரு, எனக்கு உன்னைப்பற்றி நல்லா தெரியும். யாரு என்ன சொன்னாலும், நீயே சொன்னாலும், நீ தப்பு செய்வேன்னு நான் நினைக்க மாட்டேன். துடுக்குப்பேச்சு உனக்கு இயற்கையானது. ஆனா எது சரியோ அதை மட்டும் தான் செய்வேன்னு எனக்குத் தெரியும். சொல்லு, நீ இந்த ஃபோனை எங்கெல்லாம் கொண்டு போனே? யாரெல்லாம் கூட இருந்தாங்க?” என்றாள், நம்பிக்கை தரும் விதமாக.
அதிர்ச்சியில் இருந்த வசுமதி, “பூமதி, உங்கிட்ட சொல்லிட்டு நான் சினிமாவுக்குப் போனேன்ல, அங்க போனப்போ டிக்கட் கிடைக்கலப்பா. சரின்னு நானும், நம்ம பக்கத்து தெரு ஸ்ரீமதியும், அங்கேருந்து கிளம்பிட்டோம். ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கேன்னுட்டு”
“கிளம்பி எங்க போனீங்க ரெண்டு பேரும்?” என்றார் நச்சு சார்.
“ஸ்ரீமதி அவங்க அண்ணனுக்கு பிறந்த நாள், அதுக்காக ஒரு ட்ரெஸ் வாங்கலாம்னு சொல்லி கடைக்கு கூட்டிட்டு போனா. நேரம் தான் இருக்கேன்னு போயிட்டு அப்டியே ஸ்கூலுக்கு வந்துடுவோம்னு போனேன்”
“உனக்கும் ட்ரெஸ் எடுத்தியா? ஏது காசு? நேத்து ராத்ரி உங்கம்மா வீட்டுக்கு வந்து வாடகைப்பணம் கட்டணும். காசில்ல, உன் அப்பா குடிச்சு குடிச்சு எல்லா காசையும் தீர்த்துட்டாருன்னு வந்து அழுதாங்க. நீ என்னடான்னா கொஞ்சம் கூட வருத்தம் தெரியாத இருக்கே” என்றாள் பூமதி கடுப்புடன்.
“நான் வாங்கலடி, ஆனா, எனக்கு இன்ஸ்டால போடறதுக்கும், எஃப் பி ல போடுறதுக்கும் கொஞ்சம் புது படம் இருந்தா நல்லா இருக்குமே ந்னு, சும்மா, கொஞ்சம் ட்ரெஸ் எடுத்துட்டு ட்ரையல் ரூம்ல போய் போட்டு பார்த்துட்டு ஃபோட்டோ எடுத்துட்டு வந்தேன்.”
“பைத்தியமா டீ நீ?” எண்றாள் பூமதி ஆற்றாமையில். “சரி, அப்ப நீ எடுத்த ஃபோட்டோ தான்னா, ஏன் இவ்வளவு ஆபாசமா இருக்கு?” என்றாள்.
“இல்ல, நான் எடுத்தது இது தான் பாரு. உங்களுகெல்லாம் வந்தது எப்படி இப்டி வந்திருக்குன்னு எனக்குத் தெரியாதுடி. சத்தியமா நானே என்னை எப்படி எல்லாம் எடுத்துக்கல. யாரு எடுத்தாங்கன்னும் தெரியல.” என்றாள்.
நச்சினார்க்கினியன், தன் நண்பர் சுகுமாரை உடனே அழைத்து, இது போன்ற தொழில்நுட்ப ரீதியான தவறுகளுக்கு என்ன காரணம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
“சரி, நீங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி எதுவும் யார்கிட்டயும் பேசாதீங்க. நான் அந்த கடை வரைக்கும் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு போனார்.
மாலை ஸ்பெஷல் க்ளாஸுக்கு வந்த மாணவர்கள், மாணவிகள் எல்லோருக்கும் விஷயம் தெரிய, சிலர், வசுமதிக்காக வருத்தமும், சிலர், அவளை கேலி செய்வதும், படங்களை வைத்து பேசிக்கொள்வதும் அவளுக்கு ஒருவித வெறுப்பையும், பயத்தையும் கொடுத்தது. பூமதி அவளை விட்டு நீங்காது இருந்தாள். பயம். ஏதாவது செய்துகொள்வாளோ என்று.
அதற்குள், வசுவின் அம்மாவும், அப்பாவும் ஸ்கூலுக்கு ஓடிவர, அங்கு வந்து அவளை அடித்து பிரட்டி, “குடும்ப மானத்தை வாங்குறியே” என்று கூச்சலும் கும்மாளமுமாக ஆனது வகுப்பறை. அவள் பெற்றோர்களை ஒரு வழியாக நச்சினார்க்கினியன் சார் வருவார். வந்ததும் பேசிக்கலாம் என்று சொல்லி பூமதி ஒரு ஓரமாக உட்கார வைத்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து வந்தார் நச்சினார்க்கினியன். இரண்டு மாணவர்கள் ஆதித்யன், சந்த்ரன், அதே வகுப்பு, மற்றும் வேறு ஒருவனும் சேர்த்து அழைத்துக் கொண்டு.
எல்லோரையும் அமர வைத்தார். அவர் நண்பர் சுகுமாரனுக்கு ஒரு இணைய வழி அழைப்பும் போட்டார். எல்லோர் முன்னும் தன் ஃபோனை வைத்தார்.
சுகுமாரன், பேச ஆரம்பித்தார். “வசுமதி, சினிமாவுக்குப் போகும்போது, ஜாலியாக நிறைய படங்கள் எடுத்து எல்லோருடனும், சந்தோஷமாக அதை ஷேர் செய்திருக்கிறாள். அந்த சமயம், இவள் ஃபோனைக் கேட்டு வாங்கிய ஆதித்யன், அதன் ஐ.பி அட்ரஸ்ஸை எடுத்துக்கொண்டுவிட்டு அவளிடம் ஒன்றும் தெரியாதது போலக் கொடுத்துவிட்டான். அவனோடு சேர்ந்த சந்த்ரனும், அவர்கள் நண்பன் ஒருவனிடம் இதைக் கொடுக்க, அவன் ஐபி அட்ரஸ்ஸை வைத்து வசுமதி ஃபோனுக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, காமெராவை ஆன் செய்து, அவள் ஃபோனைக்கொண்டே அவள் உடை மாற்றும்போது புகைப்படங்கள் எடுக்கச்செய்து, அதை அவள் நம்பரில் இருந்தே அனுப்பியும் இருக்கிறார்கள். இதைக் கண்டு பிடித்து, எந்த ஃபோன் அவளுடைய ஃபோனை ஹேக் செய்தது என்று கண்டுப்பிடித்து, இந்த பயல்கள் ரெண்டு பேரையும் உங்க நச்சு சார், கையும் களவுமா புடிச்சுக் கொணாந்திருக்கார்”
மொத்த வகுப்பறையும் அதிர்ச்சியில் உறைந்தது. பிறகு அந்த மூவரையும் மொத்தக் கிளம்பியது.
நச்சினார்க்கினியன், “ஏய், நில்லுங்க. எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு அடிக்காதீங்க. ஃபோனை வசுமதி குடுத்ததால தானே ஐபி அட்ரஸ் எடுத்தாங்க? முதல்ல ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்குங்க. எப்படி கைக்குட்டையை யாருக்கும் குடுக்க மாட்டீங்களோ அப்டி தான் ஃபோனும். குடுக்காதீங்க யாருக்கும். லாக்கெல்லாம் போட்டாலும் உபயோகமில்ல. இன்னொரு விஷயம், இவங்களை எதுக்கு உங்க முன்னாடி நிறுத்தியிருக்கேன்னா, நீங்க அடிக்கறதுக்காக இல்ல. நல்லதுக்கு பயன்படற படிப்பை எப்படி கெட்டதுக்கு பயன்படுத்தியிருக்காங்க பாருங்கன்னு காட்டத்தான். இப்ப போலீஸ்ல கொண்டு ஒப்படைக்கப்போறேன். வாழ்க்கை நரகமாயிடும். இது உங்க எல்லாருக்கும் ஒரு பாடம். ரெண்டு தரப்புக்கும் தான். “ என்று சொல்லிவிட்டு, மூவரையும் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார்.
பூமதி வசுமதியைப் பார்த்து, “ஏய் இனியாவது இந்த மாதிரி சேர்க்கையெல்லாம் விட்டுட்டு படி. அது சரி, நச்சு சாருக்கும் மெசேஜ் போச்சா?” என்றாள்.
வசுமதி, “இல்ல, இப்படி ஆயிடுச்சுன்னு நானே பார்த்தேன். என்னால எந்த மெசேஜையும் டிலீட் பண்ண முடியல. நீ தானே அடிக்கடி சொல்லுவே. சார் தான் எந்த ப்ரச்சனைன்னாலும் தீர்த்து வைப்பார். நம்பி சொல்லலாம்னு, அதான் நேர, அவர்ட்ட ஓடி வந்தேன். கொஞ்சம் வெக்கமா இருந்தது. உயிர விட்டுடலாம்னு கூட தோணிச்சு, ஆனா உயிர் ரொம்ப பெரிய விஷயம், இதுக்காகல்லாம் குடுக்கறதுக்கில்லன்னும் தோணிச்சு. நான் எந்த தப்பும் செய்யலை. ஆனா யோரோ விளையாடியிருக்காங்க. அதைக் கண்டுபுடிச்சு, கழுவுல ஏத்தாம விடக்கூடாதுன்னு ஒரு வைராக்யமும் வந்துச்சு. அதான் ஓடியாந்தேன் இவர் கிட்ட.”
பூமதி, “நல்ல காரியம் பண்ணினே. நாமெல்லாம் இந்த உடல் ரீதியான விஷயங்களுக்காக பயந்துடுவோம்னுதான் நம்மை இப்படி வம்பிழுக்கறாங்க. ஒரு 30 வருஷம் முன்னால, ரோட்ல போகும்போது இழுத்தாங்க, 20 வருஷம் முன்னால நம்மைப் பற்றி புரளி கிளப்பிவிட்டு வம்பிழுத்தாங்க, 10 வருஷம் முன்னால, நமக்குத் தெரியாம நம்மளை படமெடுத்து வம்பிழுத்தாங்க. இப்ப, நம்ம கையாலயே கண்ணைக் குத்திக்க வைக்கறாங்க. விஞ்ஞான வளர்ச்சி!!! முதல்ல, தேவைக்கு மேல உபயோகிக்கறதை நிறுத்து. ஃபோனையும் சரி, உன் நட்புகளையும் சரி” என்றாள்.