6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் நிலையில், அவர்களுக்கான பாடத்திட்டம் 40% அளவுக்கு குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழு தகவல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க வேண்டுமென்றால், தனியாக ஒரு நிரந்தர வழிகாட்டு நெறிமுறை வெளியிட வேண்டியது அவசியம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.