பொறியியல் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்து தேர்வு, நவம்பர் 26ந் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. அதேசமயம், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட தேதிகளுக்குள் நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதைதொடர்ந்து, அக்டோபர் 28-ந் தேதி முதல் நடப்பு செமஸ்டருக்கான பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

ஆனால், இணைய தள கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என்பதால், செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று, செமஸ்டர் தேர்வுகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், நடப்பு பருவத்துக்கான இறுதி வேலை நாள் நவம்பர் 13-ந் தேதியுடன் முடிவடையும், நவம்பர் 17 முதல் செய்முறைத் தேர்வுகளும், நவம்பர் 26-ந் தேதி முதல் எழுத்துத் தேர்வு தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.




