இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலம் இறுதியில் நடத்தப்பட்டது.
தேர்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலர் தேர்வு எழுதவில்லை என புகார் எழுந்தது. மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மறுதேர்வு நடத்தவும் பல தரப்பிலும் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு வரும் நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ந் தேதி வரை மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஒருமணி நேர தேர்வாக ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.