சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரிகள் அரசு கல்லூரீகளா? அல்லது தனியார் கல்லூரிகளா? என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரிகள் அரசு கல்லூரீகளா? அல்லது தனியார் கல்லூரிகளா? என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம், பெருந்துறை மருத்துவ கல்லூரிகள்
அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி, ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்வி பெறுவதில் பேரின்னலை ஏற்படுத்தியிருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம் ரூபாய் கட்டணம் என்று கடந்த 12-ந் தேதி அரசு திடீரென அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மருத்துவச் சேர்க்கைக் குறிப்பேட்டில் கல்விக்கட்டணம் ரூ. 4 லட்சம் என்று தெரிவித்து விட்டு, இப்போது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் 5.44 லட்சம் ரூபாய் என்று மீண்டும் கட்டணத்தைக் கருணையற்ற முறையில் உயர்த்தியுள்ளது அரசு. மாணவர்களின் கல்விக் கனவை அதிகக் கட்டணம் என்ற பெயரில் பறிப்பதாகவே அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
அதிக கட்டணம் வசூல் ஏன்?
ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் 3.85 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளும் அரசு நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளா? அல்லது அரசு கல்லூரிகளா?
ஏனென்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13 ஆயிரத்து 670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11 ஆயிரத்து 610 ரூபாய். இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகள் என்று அறிவித்து விட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்?
குறைக்க வேண்டும்
இதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது, பல மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த வருமான வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தை ரூ.13 ஆயிரத்து 670 (மருத்துவக் கல்வி) என்றும், ரூ.11 ஆயிரத்து 610 (பல் மருத்துவக் கல்வி) என்றும் உடனடியாகக் குறைத்து அறிவித்து ஆணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.