அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஓராண்டு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பான தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் இடையே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு என்பதற்கு எப்போதும் பெருத்த வரவேற்பை கொண்டுள்ளது. அதேசமயம், குறைந்த செலவில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு வாய்ப்பு கிட்டியதால், தற்போது அதற்கான மதிப்பு என்பதே வெகுவாக குறைந்துள்ளது. தரமற்ற கல்லூரிகளும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அதேசமயம், மருத்துவ படிப்பு என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கான முக்கிய காரணம் அதன் கட்டனமாகவே உள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஓராண்டிற்கு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் இளங்களலை மருத்துவ படிப்புக்கு ஓராண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், அரசு பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) ரூ.11 ஆயிரத்து 610-ம், அரசு நிரப்பும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.4 லட்சமும், ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரியில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரமும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் ரூ.1 லட்சமும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்புக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் ஓ.சி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர்களுக்கு என்று தனியாக சலுகைகளுடன் கூடிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் வரையிலும், பல் மருத்துவ இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மட்டும் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரத்து 330-ம், என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு ரூ.6 லட்சமும், என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு ரூ.9 லட்சமும் கட்டணமாக உள்ளது.