அரசுப்பள்ளிகளில் கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு மாற்றாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ என்ற புதிய பாடதிட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொழிற்கல்வி பாடதிட்டம், பாட நூல்களை சீரமைக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் படி, அடிப்படை இயந்திரவியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல், நெசவியல், ஆடை வடிவமைப்பு, செவிலியம், வேளாண் அறிவியல், அறிவியல் மேலாண்மை ஆகிய 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த பாடத்திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை வளப்படுத்தி,மாணவர்கள் படித்து முடித்தவுடன் திறன்சார்ந்த பணிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக தொழிற்சாலை திறன்களை பெற்றுள்ளனர் என்ற தகுதிச்சான்றிதழை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கணினி தொழில்நுட்பம் & கணினி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு மாறாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ என்ற புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புத்தகத்தை tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாடம் புதிது என்பதால் மாணவர்களின் நலன்கருதி முதல்பருவத்தேர்வில் முதல் பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் தயாரித்து பள்ளிகள் அளவில் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




