அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ₹1,000 தரும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ராமாமிர்தம் அம்மா உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில இத்திட்டம் உதவும். மாதந்தோறும் 7ம் தேதி வங்கிக் கணக்கில் ₹1,000 செலுத்தப்படும். புதுமைப்பெண் திட்டத்திற்காக 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக 60 ஆயிரம் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: என் வாழ்வில் மகத்தான, மகிழ்ச்சியான நாள் இன்று. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்ட பெண்களே; கல்வியின் துணைக்கொண்டு உலகை வென்றிட துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளியில் தரமான கல்வி அளித்தால் மட்டுமே இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; அனைவருக்கும் இலவசமான, தரமான கல்வி கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும்” என்றார்.




