எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த ஒரே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலா ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
ஒரே பள்ளியில் 11 மாணவர்கள்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான மருத்துவ கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 59 அரசுப் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு அரசு உள்ஒதுக்கீடு 7.5 சதவீதத்தின் மூலம் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. மேலும், புதுக்கோட்டையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட 11 பேருக்கு எம்.பி.பி.எஸ். பயில்வதற்கான இடங்கள் கிடைத்துள்ளன.
அமைச்சர் நிதியுதவி
இந்த மாணவ, மாணவிகள் 11 பேருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாணவ, மாணவிகளை சிறப்பித்ததுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் கல்விக்கட்டணத்திற்கு உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளிலே இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பள்ளியில் இருந்து 4 மாணவிகளுக்கு சீட் கிடைத்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினரைப் பாராட்டினார்.