பள்ளிகளைத் திறக்கவே வேண்டாம் என்று அரசிடம் பல பெற்றோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர், கல்வியாளர்களிடம் அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 16-ம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அதில், பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.கருத்துக்கேட்புக் கூட்டத்தின் அறிக்கையை அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்ற முடிவுகளை அரசு தான் எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.